Total Pageviews

Monday, 2 October 2017

வாசிப்பு ஒரு இனிய அனுபவம்




அப்புசாமியின் தோளை லேசாகத் தொட்டார். கிழவர் ஸிம்ஸிம். "மாணவரே, ஒழுங்காகக் காயிதா ஓதாமல் இங்கே இப்படிப் பார்த்துக் கொண்டிருந்தால் படிப்பு எப்படி வரும்?" என்றார்.
அப்புசாமி பல்லைக் கடித்துக் கொண்டு 'வந்துட்டானய்யா உயிரை வாங்க' என்று எண்ணிக் கொண்டார்.
ஸிம்ஸிம் அப்புசாமியின் தலையை அன்புடன் தடவியவாறு, "அன்பரே! இந்தாரும். உமக்காகச் சிறிய பரிசு வாங்கி வந்தேன். நீரே பிரித்துப் பாரும். மகிழ்ச்சி அடைவீர்," என்றார்.
அப்புசாமி, 'ஐயாவை டியூஷன் வாத்யார் காக்கா பிடிக்கிறார் டோய்!' என்று நினைத்தவாறு பரிசுப் பொருள் பொட்டலத்தைப் பார்த்தார்.
ஒரு சிறிய சிலேட்டும் நீளமான மாவுப் பலப்பம் ஒன்றுமிருந்தது. அப்புசாமிக்கு அந்த ஸ்லேட்டை ஸிம்ஸிம்மின் தலையில் போட்டு உடைக்கலாம் போல ஆத்திரமாக வந்தது. ஸிம்ஸிம் புன்முறுவலுடன், "குழந்தாய், உனக்கு நாற்பது பக்க காப்பி நோட்டே வாங்கித் தந்திருப்பேன். பேப்பர் கிடைப்பது குதிரைக் கொம்பாயிருப்பதால் கரும் பலகை வரவழைத்தேன். டிக்டேஷன் போடுகிறேன். நேற்றுக் கற்றுத் தந்த அட்சரங்களைக் கவனமாக எழுது பார்ப்போம்."


ஸிம்ஸிம் டிக்டேஷன் போடத் தொடங்கிவிட்டார். "அலீப்ஃ, பே, தே, ஸே, ஜீம்!"
1001 அப்புசாமி இரவுகள் - பாக்கியம் ராமசாமி

எனக்கொரு கெட்ட பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு புத்தகத்தை நினைத்துக் கொண்டால் அதை படிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமாகும். திடீரென்று ஒரு புத்தகத்தை நினைத்துக் கொள்வேன் . நினைத்தவுடன் புத்தகம் கைக்கு வந்து விடுமா என்ன ?. இப்போது விரல் நுனியில் எல்லாம் சாத்தியமாகி வருவதால் அதை இணையத்தில் போய் தேடுவேன். புத்தகம் படிக்க முழுவதுமாக கிடைக்கா விட்டாலும் அது பற்றிய தகவல்கள் செய்திகள் , அதன் ஆசிரியர் பற்றிய குறிப்புகள் என்று கிடைக்குமே. அதை படிப்பேன். சில புத்தகங்களை இணையத்திலேயே இலவசமாக படிக்க முடிகிறது. அந்த மாதிரி இந்த வாரம் முழுவதும் நான் சிறு வயதில் படித்த புத்தகங்கள் பற்றி நினைத்து கொண்டிருந்தேன். . இன்று காலை இணையத்தில் எதையோ தேடியபோது அப்புசாமி டாட் காம் என்கிற இணைய தளத்தை பார்க்க நேர்ந்தது. அப்புசாமி சீதா பாட்டி என்கிற அந்த கற்பனை கதா பாத்திரங்கள் என் கண் முன் வந்து சென்றார்கள்.
அப்புசாமியும் சீதா பாட்டியும் கதைகளை அவை சித்திரக் கதைகளாக வந்த காலத்திலிருந்து படித்து வந்தவள் நான். அப்புசாமி, சீதா பாட்டி , பீமா ராவ் , ரசகுண்டு , ருக்மணி பாத்திரங்களை மறக்கவே முடியாது. அதை போலவே அதன் படைப்பாளியான பாக்கியம் ராமசாமியையும் (ஜ .ரா. சுந்தரேசன் ) மறக்க முடியாது. 1001 அப்புசாமி இரவுகள், அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும், அப்புசாமி படம் எடுக்கிறார், சீதா பாட்டியின் சபதம் , அப்புசாமியின் தாலி பாக்கியம், கமான் அப்புசாமி கமான் கதைகள் என்றும் என் மனத்தில் நிற்பவை
புத்தகம் படிக்கும் , கதைகள் படிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே எனக்கும் என் உடன் பிறப்புகளுக்கும் உண்டு. ஜாவர் சீதாராமனின் பணம் பெண் பாசம், உடல் பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி ஆகிய நாவல்கள் குமுதத்தில் தொடர்கதைகளாக வந்தன .அந்த கதைகளை எங்கள் அம்மா தொகுத்து புத்தகமாக பைண்டிங் செய்து வைத்திருந்தார்கள். நானும் என் அக்கா மாலதியும் அவற்றை போட்டி போட்டுக் கொண்டுபடிப்போம். அப்போது நாங்கள் முன்றாவது அல்லது நாலாவதோதான் படித்துக்கொண்டிருந்தோம். அந்த சிறிய வயதிலேயே எங்களுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது. அந்த வயதில் அவை எங்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் வாசிக்கும் பழக்கம் வந்தது. கதைகள் தொடர்கதைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கண்ணன்,அம்புலி மாமா போன்ற குழந்தைகள் பத்திரிகைகளும் எங்களது வாசிக்கும் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. அப்போது ஆனந்த விகடனில் அட்டையில் ஜோக்குகள் போடுவார்கள். அந்த ஜோக்குகளை படித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து சிரித்து மகிழ்வோம். டிவி இணையம் என்பது இல்லாத காலம் என்பதால் கல்லூரிகளில் கூட கதைகள் கவிதைகள் பற்றித்தான் தோழிகளுடன் பேசிக்கொண்டிருப்போம். ரா..கி ரங்கராஜன் கதைகளில் பெரும்பானமை
யானவை பள்ளி கல்லூரி காலத்திலேயே படித்திருக்கிறேன் .அவரது பட்டாம் பூச்சி (ஹென்றி ஷாரியாரின் பாபபிலான் நாவலின் மொழிபெயர்ப்பு ) நாவல் பற்றி நானும் மாலதியும் அதிகம் பேசியிருக்கிறோம். கடந்த ஆண்டு பட்டாம் பூச்சி நாவலை என் மாமா வீட்டில்பார்க்க நேர்ந்தது. மீண்டும் படிக்க ஆசை ஏற்பட்டது. அதை அவரிடமிருந்து வாங்கி வந்தேன். அதை மாலதி பார்த்துவிட்டு என்னிடமிருந்து வாங்கி சென்று முழுமூச்சாக அமர்ந்து 3 நாட்களில் அதை அவள் படித்து முடித்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அதே போல் ரா.கி யின் ப்ரொபசர் மித்ரா, அழைப்பிதழ், மூவிரெண்டு ஏழு இருபத்து மூன்றாவது படி போன்றவை குமுதத்தில் தொடக்கதைகளாக வந்த போது படித்தவை. அவற்றை மீண்டும் படிக்க ஆசைப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தக கண்காட்சியில் வாங்கினேன். எந்தக் காலத்திலும் படித்து ரசிக்கக் கூடிய நாவல்கள் அவை.
வீட்டில் அனைவருக்குமே வாசிப்பு பழக்கம் இருந்ததால் நாங்கள் உடன் பிறப்புகள் அனைவரும் புத்தகங்கள் கதைகள் பத்திரிகைகள் செய்தி தாள்கள் பற்றி அதிகம் பேசுவோம். நான் கல்லூரி படிப்பு முடித்து தினமலரில் காலடி வைத்த சமயம் என்று நினைக்கிறேன். சோ வின் யாரோ இவர் யாரோ நாவல் யாரிடமிருந்தோ வாங்கி வந்திருந்தேன். வீட்டில் அனைவரும் படித்து ரசித்து சிரித்து பகிர்ந்து கொண்டு பேசி மகிழ்ந்தது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. அது நகைசுவை நாவல் . ஆயிரம் பொய் என்கிற பெயரில் அதை சினிமாவாகவும் எடுத்திருந்தார்கள்..நாவலை மீண்டும் படிக்கும் ஆசையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்கினேன். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் எங்கள்வீட்டுக்கு வந்த என் தம்பி பாலாஜி அதை படிக்க விரும்பி வாங்கி சென்றான். விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் போது அதை படித்திருக்கிறான். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. படிக்கும் போது வாய் விட்டு சிரித்திருக்கிறான். "அருகில் இருந்தவர்கள் என்னை என்ன எவன் லூசா , தானாகவே சிரித்துக்கொள்கிறான் என்று பார்த்தார்கள்" என்று பின்னர் சொன்னான். எப்போது படித்தாலும் ரசிக்கக் கூடிய நாவல் அது.
அந்தக் காலத்தில் குமுதம் விகடனில் வரும் ஒரு கதையையும் நாங்கள் விட்டு வைத்ததில்லை. சுஜாதா கதைகள் பற்றி அதிகம் பேசியிருக்கிறோம். சுஜாதாவின் பிரியா கதையை கிட்டத்தட்ட 20 முறை படித்திருப்பேன் நான். அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் எனக்கு ரொம்ப பிடித்த கதை தொகுப்பு .கனடாவுக்கும் கொண்டு வந்திருக்கிறேன் அதை. சென்னையில் வீட்டில் அலமாரியில் சுஜாதா கதைகளுக்கென்று ஒருதனி வரிசையே வைத்திருக்கிறேன். அதே போல பாலகுமாரன் கதைகள் பற்றி கல்லூரி நாட்களில் தோழிகளிடம் அதிகம் விவாதித்திருக்கிறேன். அவரது பச்சை வயல் மனது மெர்குரி பூக்கள், பனி விழும் மலர் வனம் , இரும்பு குதிரைகள் போன்ற நாவல்கள் எங்கள் பேச்சில் அதிகம் அடிபட்டவை. இவர்களுக்கு நடுவே இந்துமதியும் வாஸந்தியும் சிவசங்கரியும் எனது எழுத்தாளர் பட்டியலில் இருந்ததை நான் சொன்னாலதான் தெரியும் என்றில்லை. ஜெயகாந்தனின் டீக் கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும் , நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் சிறு கதைகள் பற்றி கல்லூரியில் மரத்திற்கு கீழே அமர்ந்து தோழிகள் நாங்கள் பேசிக்கொண்டிருந்ததும் அந்தப் பக்கமாக வந்த பேராசிரியை "இவ்வளவுதான் கத்தி பேச முடியுமா, எதுக்கு மேல் கத்த முடியாதா என்று எங்களை வந்து கடிந்து கொண்டதும் நன்றாக நினைவில் இருக்கிறது.


பணிக்கு வந்ததும் புத்தக வாசிப்பில் என்னிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டது .சிறு பத்திரிகைகள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. தி.ஜானகிராமன், லா.ச.ரா அசோகமித்திரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் பக்கம் என்பார்வை சென்றது. நவீன தமிழ் இலக்கியம் பக்கம் பார்வையை செலுத்தினேன். பத்திரிக்கை பணி என்பதால் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய படிக்க முடிந்தது. பத்திரிகையாளராக இருந்தால் ஒரு சௌகர்யம் என்ன தெரியுமா? நிறைய படிக்கலாம். தமிழ் ஆங்கிலத்தில் வரும் அனைத்து செய்தித் தாள்கள் வாராந்திர பத்திரிகைகளை அலுவலக நூலகத்தில் படிக்க முடிந்தது. ஒரு செய்தியை ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் எந்த கோணத்தில் பார்க்கிறார்கள் அலசுகிறார்கள் , எப்படி கொடுக்கிறார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது இதற்கு பத்திரிகையாளராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை . நமது உள்ளங்கையிலேயே அனைத்தும் இருக்கிறது. எல்லாவற்றையும் படித்து விடலாம்.இந்த வாசிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அச்சில் படிப்பதுடன் இணையத்திலும் அதிகம் வாசிக்கிறேன். இப்போது ஆன்மிகப் புத்தகங்களும் எனது வாசிப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
இங்கு கனடாவில் ஆட்டோவாவில் நான் தினமும் காலை வாக்கிங் போகும்போது ஒரு காட்சியை தவறாது பார்ப்பேன். ஒரு வீட்டின் முன் இருக்கும் புல்வெளியில் ஒரு பெரியவர் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருப்பார். அவருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். அந்த 70 வயதிலும் அவருக்கு வாசிப்பின் மீது இருக்கும் ஆர்வம் அதில் தெரியும். வாசிப்பின் மீது ஆர்வம் இருத்தால் வயது அதற்கு என்றுமே தடையில்லை . வாசிப்பு ஒருவனை சிந்திக்க வைக்கிறது சிந்திக்கும் திறனால் நல்லது எது கெட்டது எது என்று வேறு படுத்தி பார்க்க வைக்கிறது. மனித குணங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது . சக மனிதர்களிடம் அன்பையும் கருணையையும் காட்ட வைக்கிறது . மனித நேயத்தை வளர்க்கிறது. நாம் படிக்கும் விஷயங்களுடன் நம்மை இணைத்து பார்க்க, நம்மை தொடர்பு படுத்தி பார்க்க்க வைக்கிறது . கற்பனை சக்தியை தூண்டி விடுகிறது. புரியாத விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. மொத்தத்தில் மனிதனை சிறந்த மனிதனாக பண்பு மிக்கவனாக விஷய ஞானம் உள்ளவனாக மாற்றுகிறது வாசிப்பு பழக்கத்தினால் தினம் தினம் ஏதாவது ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
வாசிப்பு பழக்கத்திற்கு அடித்தளம் அமைப்பது கதை படிக்கும் வழக்கம் தான். இதில் பத்திரிகைகளுக்கு பெரும் பங்கு உண்டு. அந்தக் காலத்தில் பெரும்பாலும் எல்லா பத்திரிகைகளிலும் கதைகள் தொடர்கதைகள் வெளிவந்து கொண்டிருந்தன . அவை பலரிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது கதை தொடர்கதைகள் என்பது கட்டுரைகள்,செய்தி கட்டுரைகள் சரிதைகள் சுயசரிதைகள் கவிதைகள் என்று படிப்பதை விரிவு படுத்தியது. . இன்று அச்சில் மட்டுமின்றி இணையத்திலும் சென்று தேடி அதிகம் படிக்க முடிகிறது. இப்போது என் பெண் எனக்கு அமேசானின் கிண்டில் வாங்கி கொடுத்திருக்கிறாள். அதனால் இ புத்தங்கங்களாகவும் படிக்க முடிகிறது.
வாசிப்பு என்பது ஒரு இனிமையான அனுபவம் . சாம் பிட்ரோதாவின் DREAMING BIG என்கிற அவரது சுய சரிதை நான் விரும்பி படித்தது. இந்திய தொலை தொடர்பு துறையில் புரட்சியை கொண்டு வந்தவர். அதை ஒரு கதைக்கே உரிய சுவாரஸ்யத்துடன் மிக அழகாக எளிமையாக எழுதியிருக்கிறார். இன்றைய இளைஞர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். சில புத்தக்ங்கள் அது தமிழாக இருந்தாலும் சரி ஆங்கிலமாக இருந்தாலும்சரி மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.. அந்த வரிசையில் ட்ரீமிங் பிக் வரும். அதை போலவே பேநசீர் புட்டோவின் சுயசரிதையான "Daughter of the East" இப்படி சொல்லிக்கொண்டே போனால் வலை பூவை படிப்பவருக்கு போரடிக்கும் என்பதை விட இந்த புத்தகங்களை மீண்டும் படிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம் வந்துவிடும் என்பதுதான் உண்மை.

வாசிப்பு என்பது ஒரு இனிய அனுபவம் நண்பர்களே !!!!!




























Saturday, 2 September 2017

Coffee Coffee everywhere, nor any cup to drink

     என்னை காபி பிரியை என்று சொல்ல மாட்டேன். நான் காபிக்கு அடிமையானவளும் அல்ல. காபி குடிக்காவிட்டால் தலைவலி வரும் ரகமும் இல்லை. எங்கள் வீட்டில் என்  அம்மா  அக்கா தங்கை அனைவரும் பிற்பகலில் எங்காவது செல்ல வேண்டும் என்றால் கூட   காபி  குடித்துவிட்டு கிளம்பு வோம் என்பார்கள். என் முதல் தம்பிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை காபி குடித்தாக வேண்டும். ஒரு இடத்தில் இருந்தாக வேண்டும்   என்று அவசரமாக கிளம்பினாலும் காபி குடிக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டாள் என்  தங்கை. ஆனால் நான்   இந்த வகை அல்ல  
       அதற்காக நான் காபியை தொடாதவளும்  இல்லை.. நல்ல காபி குடிக்கப் பிடிக்கும். நல்ல காபி மட்டுமே குடிக்கப் பிடிக்கும். அதனால்தான் வெளியில் எங்கும் காபி குடிக்க மாட்டேன். என் அம்மா போடும் காபி பிடிக்கும் . அடுத்து என் உடன் பிறப்புகள் வீட்டில் காபி குடிப்பேன். காரணம் என் அம்மாவின் கைமணம் அதில் இருக்கும். வேறு எங்கும் காபியை தவிர்த்து விடுவேன், பயம்,  நன்றாக இல்லாவிட்டால் ? திருமணங்களுக்கு சென்றால் அங்கும் காபி குடிக்க மாட்டேன். வெளியில் ஹோட்டல்களிலும் காபி குடிக்க மாட்டேன். ருசியில்லாத காபியை குடித்துவிட்டு நொந்து கொள்வதற்கு பதிலாக அந்தக் காபியை குடிக்காமல் இருப்பது நல்லது என்பது எனது கொள்கை. . பணியில் இருந்தபோது அலுவலகத்தில் தேநீர் தான் அருந்துவேன். சக பணியாளர்கள் லஞ்ச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே மறு கையால் இண்டர்காமில்  பேன்ட்ரியை  அழைத்து காபி கொண்டு வர சொல்லும்போது ஆச்சர்யபட்டிருக்கிறேன். இப்படியெல்லாம் காபி ரசிகர்கள்  இருக்கிறார்களா என்ன !
  இப்போது என்ன திடீர்ன்னு காபி பற்றிய ஞானோதயம் என்று நினைக்க வேண்டாம். கனடாவில் எனது காபி அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும்.
   காபூசினோ, ஐஸ்டு காபி ரகங்கள் பற்றி எனக்கு ஆர்வமும் இல்லை, அதனை பருகி பார்த்ததும் இல்லை. பிளாக் காபி குடிக்கும் ரகமும் இல்லை  நான் . நான் சொல்வது எல்லாம்  நமது ஊர் பாரம்பர்ய காபி . என்னை பொறுத்தவரை காபி என்றால் பிரவுன் கலர் தான்  .பில்டரில் இறங்கும் டிகாஷனில் பால் சர்க்கரை சேர்த்து ஆற்றி நுரையுடன் குடிப்பதுதான் காபி. சிலருக்கு நுரை வந்தால் பிடிக்காது என்பார்கள். அதனால் அதிகம் ஆற்ற மாட்டார்கள். அனால் எனக்கு நுரை இருக்க வேண்டும். என்னதான் இன்ஸ்டன்ட் காபிகள் வந்தாலும் எனது மார்க் பில்டர்  காபிக்கு தான். இன்ஸ்டன்ட்  காபி குடிப்பதில்லை. காபி டே தான் வாங்குவேன். கனடாவுக்கு டிக்கெட் வாங்கியதும்  என்பெண்  முதலில் சொன்ன வார்த்தை "அம்மா பில்டர் எடுத்துக்கொண்டு வர மறந்து விடாதே" . அத்துடன் காபி டே காபி பொடியும் ஒரு அரை கிலோ வாங்கி கொண்டேன்.. சூட்கேஸ் முழுவதும் காபி பொடியாக நிரப்பிக் கொள்ள முடியாதே. தீர்ந்து போனால் இங்கே வாங்கி கொள்ளலாம் என்றாள்  அவள் . கிடைக்குமா என்று கேட்டேன். "அம்மா உலகிலேயே அதிகம்  காபி  குடிப்பவர்கள் இருக்கும் 3 வது  நாடு கனடா " என்று பதில் வந்தது அவளிடமிருந்து .அத்துடன் "வால்மார்ட்டில் ஒரு செக்க்ஷன் முழுவதும் காபி பவுடர் தான்" என்றாள்.  சரி  என்று விட்டேன்.
     கொண்டு வந்த காபி பொடி குறைந்து கொண்டே வந்தது . அது முழுவதும் காலி ஆவதற்கு முன்பாகவே என்ன பிராண்டு வாங்குவது என்பதை முடிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.
   இதற்கு நடுவில் நான் வர போகிறேன் என்பது உறுதி ஆனதும் maxwell house என்கிற காபி பொடி ஒரு கிலோ வாங்கி வைத்து விட்டாள்  என்பெண். அவள் காபி குடிக்க மாட்டாள் என்பதால்  அவளுக்கு  காபி பற்றி அதிகம் தெரியாது . காபி என்று கூகுளை அணுக  maxwell பற்றிய தகவல்கள் அவளுக்கு பிடித்திருந்தது. எனவே வாங்கி வைத்து விட்டாள் . நான் வந்ததும் "maxwell ட்ரை பண்ணும்மா. உன் ருசிக்கு .ஏற்றதாக இருக்கிறதா என்று பார்க்கிறாயா , இது இன்ஸ்டன்ட் அல்ல" என்றாள்.
     சரி , கொண்டு வந்தது தீர்ந்ததும் இது மாதிரி ஒன்றைத்தானே தேர்வு செய்தாக வேண்டும் என்று பில்டரில் மாஸ்வ்ல் காபி பொடியை போட்டு வெந்நீரை ஊற்றிய அடுத்த வினாடி பொடியில் நீர் நிற்காமல் அப்படியே  பில்டரின் அடிக்கு மிக லேசாக நிறம் மாறி வந்து சேர்ந்தது. . ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு கிலோ  பொடி போட்டால் கூட நிறம்வராது போல. ஒன்றும் புரியவில்லை. கூகுலாண்டவரிடம் சரணடைந்தேன்.  திருப்திகரமாக எதுவும் கிடைக்கவில்லை. மாறாக பலரும் maxwell  தான் உலகிலேயே சிறந்தது என்கிற ரீதியில் அனுபவித்துஎழுதியிருந்தார்கள் . சரி வந்ததும் வராததுமாக இது எதற்கு இப்போது என்று சிறிது  நாளைக்கு அதனை ஒத்தி வைத்தேன்.
   இந்த இடத்தில் கனடாவில் மக்களின் காபி ஆர்வம் பற்றி சொல்லியே ஆக  வேண்டும்.Tim Hortons Star bucks,  Second cup  என்று பிரபல காபி ஷாப்கள் கனடா முழுவதும் இருக்கிறது. காலையில் அலுவலகம் செல்பவர்கள் Tim Hortonsசில் க்யூவில் நின்று காபி  வாங்கி கொண்டு அதை கையில் ஏந்தியபடி பஸ்சில் ஏறி அமர்ந்து அதனை ரசித்து குடித்துக்கொண்டு வருவது சகஜமான காட்சி. அதேபோல் மால்களிலும்   Tim Hortons Star bucks,  Second cup காபி அவுட்லேட் இல்லாமல் இல்லை . அங்கு சென்று காபி குடிக்காவிட்டாலும்  நாடு முழுவதும் காபி சகஜமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.
         கொண்டு வந்த காபி பொடி  இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே வரும் என்கிற நிலையில் காபி பொடி தேடலை ஆரம்பித்தேன். காபி பொடி  தேடலின்போது காபி பற்றிய , எனக்கு தெரியாத பல பல தகவல்கள் எனக்கு தெரிய வந்தது. 1.நமது ஊர் போல  பாலும் காபி டிகாஷனும் கலந்ததுதான் காபி என்று நினைக்கக் கூடாது . 2. காபி என்றால் பிரவுன் நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்று எந்த மடையன் சொன்னான்? 3. வெறும் காபி டிகாஷனுக்கு பெயரும் காபி தான் .அதனை ரசித்து ரசித்து குடிக்க நிறையப் பேர் இருக்கிறார்கள்.
  கனடாவில் Tim Hortons காபி புகழ் பெற்றது. எங்கு சென்றாலும்  Tim Hortons அவுட்லெட்டை பார்க்காமல்  இருக்க முடியாது. என் பெண் "உனது காபி பொடி தேடலில் டிம் ஹார்ட்டன்ஸ்ம் இருக்கட்டும் , அங்கு காபி எப்படியிருக்கிறது என்று பார்" என சொல்லி டிம் ஹார்ட்டன்ஸ்  அழைத்து சென்றாள் . வழக்கம் போல் நீண்ட க்யூ . பொறுமையாக நின்று கொண்டிருந்தேன். க்யூ வில் நிற்கும்போது ஒவ்வொருவரும் எப்படி காபி ஆர்டர் செய்கிறார்கள் என்று கவனித்தேன். சிங்கள் , டபுள் டபுள் , ட்ரிபிள் ட்ரிபிள் ,என்றெல்லாம் சொன்னார்கள். அதாவது சிங்கள் என்றால் ஒரு க்ரீம் அல்லது பால் ஒரு சுகர். டபுள் டபுள் என்றால் 2 சுகர். 2 க்ரீம் அல்லது  2 பால் (க்ரீம்?) ட்ரிபிள் ட்ரிபிள் என்றால் 3 சுகர்.3 க்ரீம் அல்லது 3 பால். காபி என்று மட்டும் சொன்னால் நோ கிரீம் நோ மில்க் . டிகாஷன் மட்டும்  . பால் இல்லாமல் காபியா ?  க்ரீம் போட்டு காபியா ? எனக்கு ஒன்றும் புரிய வில்லை
   டபுள் டபுள்  என்று சொல்லி காபி வாங்கினோம். கப்பில்  மூடி கொடுத்துவிட்டார்கள். அது என்ன நிறத்தில் இருக்கிறது,  பால் எவ்வளவு விட்டார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வாங்கி கொண்டு நடந்துகொண்டு பேசிக்கொண்டு பஸ்ஸில் சென்றுகொண்டுதானே காபி அருந்துகிறர்கள்? , அதனால் எப்போதும் கப்பை  மூடிதான் கொடுக்கிறார்கள். எனக்கு அந்த சுவை சரிப்படவில்லை. நிறமும் இல்லை. (டிம் ஹார்ட்டன்ஸ்  காபி பிரியர்கள் என்னை மன்னிப்பார்களாக!)
       நம் மனதுக்கு பிடித்தபடி நல்ல காபி கிடைப்பது சற்று கஷ்டம்தானோ என்கிற நினைப்பு  முதல்முறையாக ஏற்பட்டது.  டொரோண்டோவில் இருக்கும் என்  அக்கா பெண்ணை  கேட்டேன். என்ன காபி பொடி வாங்குவது என்று. அவ 13 ஆண்டுகளாக கனடாவில் இருக்கிறாள். நமது பில்டர் காபியே அவளுக்கு மறந்துவிட்டது. கொலம்பியன் காபி பிபோல்கெர்ஸ் என்று சில பிராண்டுகளை சொன்னாள் . எதுவும் சரிப்படவில்லை
  வால்மார்ட் காபி பொடி பிரிவில் போய் நின்று கொண்டேன். ஏகப்பட்ட ரகங்கள். ஆனால் இவர்களது காபி வரையறை நமது பில்டர் காபிக்கு ஏதுவாக இல்லை. கடைசியில் வேறு வழியில்லை. இன்ஸ்டன்ட் காபி பொடியை வாங்கி கொண்டு வந்தேன். இன்ஸ்டன்டட் காபி எனது ருசிக்கு சரிப்படவில்லை. . .  வேறு வழியின்றி குடிக்க ஆரம்பித்தேன்.  பில்டர் காபி யை நினைத்துக்கொண்டு இன்ஸ்டன்ட் காபியை அருந்தினேன்  ஊஹும் ... எனக்கு சரிப்படவில்லை . சரி வேண்டாம் என்று நிறுத்தி விட்டேன். கேழ்வரகு கஞ்சி தான் இப்போது எனது காலை பானம் .  பில்டர் காபியை அடிக்கடி நினைத்து பார்க்கிறேன்.ஊரிலிருந்து கொண்டு வந்த பில்டர் பாவமாக கப் போர்டில் நின்று கொண்டிருக்கிறது
   ஒன்று கிடைக்கவில்லை  என்றால் அதனை ரொம்ப நினைப்போமோ?  அப்படியானால் இப்போது என்னை காபி பிரியை என்று   சொல்லி கொள்ளத்தான் வேண்டுமோ ?


Saturday, 19 August 2017

Amma Remembered... A Eulogy

Pankajam Rajaram (1932-2017)



Translated by

My daughter,Akshaya Krishnaswamy

( To Read Original post written by me, in Tamil : refer my earlier post)






2:00 AM August 15th, 2017,Canada


“Amma is very serious” said my younger sister over call. It was the wee hours of the morning. 2 am here in Ottawa, Canada. No words could describe my emotions and feelings. I kept the phone down and felt helpless as reality reminded me that we were thousands of miles away. My daughter quickly changed and suggested that we take a walk to clear our mind. We went for a walk and came back after an hour and went back for a walk again not wanting to stay in the house, feeling restless.  After few hours the worst news came.  A period of restlessness began to swamp me with my not being able to make peace with the fact that I couldn't be there in India with my mom and most importantly to share my grief with my siblings, except whom, the magnitude of my feelings cannot be shared with. Afterwards, I spoke to all my siblings in a video call and later I had to find the outstanding ability to accept the truth.


"You think the dead we loved ever truly leave us? You think that we don't recall them more clearly than ever in times of great trouble? Your father is alive in you Harry, and shows himself plainly ......" I recalled these words of Dumbledore in Harry potter.

It gave me some comfort. I couldn't agree more.

Ours is a big family. we are 8 in number. Four boys and Four girls. We were never short of cheer and laughter. We didn't belong to a prosperous family nor did we thrive in abundance. Though we never  suffered from scarcity or dearth of resources or happiness. Just like how all middle-class family functioned my father worked to earn a living. If my family were a country, My Mother (Pankajam Rajaram) was our Finance Minister, allocating budgets and reasoning redemption and benefits for all of us. She dexterously managed family expenses and managed to provide education to all eight of us, something that millennials could only dream of in today's circumstances. My parents never taught us right from wrong. They led us by example, which allowed us to experience truth and moral integrity. My parents always believed values cannot be taught, they need to be realized.



As I walked down the memory lane, an incident that I remember quite vividly even today was when a container with hot rice starch toppled over my mom's legs, while she was preparing meal for us. We conveniently took into confidence that our mom could somehow manage everything at once: Prepare us for school, run everyday chores, all at once. While we waited in the hall for my mom to come out of the kitchen to plait all our hairs, she dipped her legs in a bucket of water, to relieve her from the burning sensation she was fighting with and plaited all our hairs. She helped us to get ready for school, placing her need to tend to legs and give herself first aid, at backseat. As we stood there waiting for our turn completely oblivious, our minds perfectly escaped the thought of what could have possibly made her to dip her legs in water.



Amma has never thought of just herself, she always put others first and herself behind. In another instance, when I was doing my third grade, my dad's friend had returned from then Maleya(now : Malaysia) and got my mother a pair of red shimmering sandals. My sister Malathy and I started walking with it right since the moment he left. How is it possible for a kid to wear an elder person’s shoes, you may ask. My mom did too. We told her it perfectly fit our foot. Apparently only in our minds. She laughed and let us play with it. We started walking with it, walk the talk with it, walked with it to glory, until the slippers gave away and couldn't be used anymore. Now that I think, she never wore those slippers that were gifted to her. We never let her.



The fact that my mom made time to read despite all her daily chores all while bringing up 8 children was a wonder. She was an avid reader who enjoyed reading novels and used to discuss the narrative orthodoxly. This resulted in reading habit instilled in all of us. I’m proud that all of us have managed to pass the habit down to our children. In an age where we find people making excuses for not finding enough time to read, my mom made us realize it's not about finding time, it is about making time.



I believe reading refines and streamlines one's thoughts. If reading was a habit, writing is certainly a talent and I found her with pen and paper often, writing stories and that's something which did not stop up until a week ago. She had the habit of writing when she was happy or when she was going through a tough time. Poetry was among her latest interests. When my dad's sister passed away, she felt bad that she couldn't travel to be there for the funeral, she expressed herself in a foot long poem, showed me which I later posted in the our family WhatsApp group. As someone who could write, I always found her writing to be very mature which allowed me to glimpse into her depth of observation. She gifted another poem when my sister's daughter got married last year.



Clearly this was a trait that seem to run down the family, thanks to my mom. I used to write to weekly magazines and my passion for writing made me choose journalism as my profession. My brother Balaji ran a fortnightly handwritten magazine 'Udhayam' during his college days. My brother Kannan a.k.a Acharya Ravi entered cinema and writes dialogues and stories.



My mom had interest in many genres. During our childhood days, She used to finish all her day to day household chores and then sit to read. After we grew up, she retired from all duties which gave her plenty more time to read. She had a shelf full of favorite books in her room back in Bangalore at my brother's place. Deivathin kural, Arthamulla hindu madham and the Bible were few amongst several books ranging various genres. She wanted to read The Quran too, used to tell me that she wanted to explore everything. It was not just novels that she found her interest in, she kept herself updated about daily news and happenings. My cousin's wife (my Amma's sister's daughter in law) Usha Murali fondly remembered the times when my mom visits my perima and how all my cousins and their children used to sit around my mom excitedly listening to her talking about topics across various fields. She describes her a "walking encyclopedia"


In her early days, she liked the writings of V.M Kodhainaayagi Ammal, Vaduvoor Duraisaami Iyengar. I have seen her face lit up when she speaks of Kodhainaayagi ammal's 'Indra Mohana' and 'Vaidhegi'. During 60s to 70s She author Lakshmi’s writings happened to be her keen interest. During 80's it was Vaasanthi and Shivashankari. When Vaasanti became the Editor in India Today, Tamil Edition, (I was the Deputy copy editor in India Today Tamil) my mom wanted to speak to her about her novels, So I arranged a brief meet for my mom's that she could talk to Vaasanthi.


My mom liked yesteryear actor Bhanumathi. She was impressed by her roles that exhibited shades of arrogance. That was the reason she named me after her. Later when I was in India Today I happened to call actor Bhanumathi once for an interview during which I told her about the story behind my name and she was genuinely interested and happy and asked more about my mom.

In another instance my nephew Vinodh, who was an ardent Balakumaran fan. He had written a letter to Balakumaran requesting an appointment.He had mentioned about my mom wanting to meet him as well since she was also a fan of Balakumaran. When my nephew spoke with him over phone, Balakumarann had asked how old my mom was. After coming to know that she was 70. He graciously said that a 70 year old shouldn't come over to meet him and that he would come over himself. It was a great deal that he managed to visit our home that was on the 3rd floor without elevators especially at a time after his bypass surgery, surely, did not cease to amaze us.


My mom was quite known for her boldness courage and not to mention her sense of humour (her frequently used phrases ' Periya jilla collectora' and 'Ooorai allum maharaja va'). Her conviction on various subjects of discussion that often reflected in her bold voice, made it impossible to disagree to. Her boldness earned her great respect among relatives.


While Amma had keen interest in reading and writing, she enjoyed cooking.Her sundakaai, manathkaali vathal kuzhmabu, karunai kizhangu masiyal are noteworthy dishes that demonstrated her culinary skills. My daughter often asked me to call Amma and ask her for the milagu kuzhambu recipe as it's her favorite off all that her paati cooks. My brother Balaji's friend Ravikumar, who called me after years last year did not fail to mention the lasting impression that Amma 's veppampoo rasam had created.


Amma, even at 86, never suffered from any health complications. The last three years that led us to face three family members departing their souls, created a deep wound that's difficult to heal, although that never made her stop reading. She regularly read all my blog posts and I used to look forward to her reading my posts, followed by discussing it in length over phone.


Now, as I am about to publish this post/eulogy on her, I can't help but feel how this blog has lost its favorite visitor/commentator.


Thursday, 17 August 2017

என் அன்பான அம்மாவுக்கு ....... கண்ணீருடன் நான்



Pankajam Rajaram (1932-2017)

ஆகஸ்ட் 15 ஆம் தேதி .இரவு 2: 00 மணி, கனடா

அம்மா உடல் நிலை  கவலைக்கிடமாக இருக்கிறது என்று என் தங்கையிடமிருந்து எனக்கு தகவல் வந்தபோது இங்கு இரவு 2 மணி. பதற்றமும்   கவலையும் சேர்ந்து கொள்ள நிலை கொள்ளாமல் தவித்து போனேன். எனது பதற்றத்தை பார்த்து என் பெண் "ரிலாக்ஸ் பண்ணிக்கோம்மா, வா, சிறிது நடந்துட்டு வரலாம் " என்று என்னை அழைத்து போனாள் சில மணி நேரங்களில் அந்த மோசமான தகவல் எனக்கு வந்து சேர்ந்தது. அம்மா இந்த உலகில் இல்லை என்கிற உண்மையை ஜீரணித்துக்கொள்ள கொஞ்ச நேரம் ஆனது. அம்மாவின் இறுதி நேரத்தில் அருகில்  இருக்க முடியவில்லையே என்கிற துக்கம் என்னை வாட்டியது. ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது மனம். உடன் பிறந்தவர்களுடன் சேர்ந்து துக்கத்தை பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்கிற  ஏக்கம் அதிகமானது. அதனாலேயே என்னவென்று சொல்ல தெரியாத ஒரு உணர்விலேயே இருந்தேன். என்னை தனியே விட்டுவிட்டு அலுவலகம் செல்ல மனமில்லாமல் என் பெண் விடுப்பு எடுத்துக்கொண்டு என் அருகேயே இருந்தாள் . இறுதியில் அம்மாவை சுற்றி அமர்ந்திருந்த என் உடன் பிறப்புகளுடன் வீடியோ அழைப்பில் பேசி துக்கத்தையும் வேதனையையும் பகிர்ந்து கொண்டு வாய் விட்டு அழுதவுடன்  மனம் லேசானது.
   :"தெரிந்து கொள் ஹாரி , நம்மிடம் அன்பு கொண்டவர்கள் என்றும் நம்மை விட்டு அகல்வதில்லை . ..........நமக்கு பிரியமானவர்கள்  இறந்து விட்டால் அவர்கள் உண்மையிலேயே நம்மை விட்டு சென்றுவிடுவார்கள் என்று நம்புகிறாயா ? நமக்கு துன்பம் வரும்போது அவர்களை நாம் மிக அதிகமாக நினைக்க மாட்டோம் என்றா நீ நினைக்கிறாய்? உன் அப்பா உன்னில்தான்  இன்னும் இருக்கிறார் ......."" என்று  Harry Potter  நாவலில்  Dumbledore சொல்வார். அதை நினைத்துக் கொண்டேன். அம்மா என்னை விட்டு போகவில்லை என்கிற உணர்வு ஏற்பட்டது.
        எங்கள் குடும்பம் பெரியது. நாங்கள் 8 பேர் உடன்பிறந்த வர்கள்.  பணக்காரர்கள் இல்லை நாங்கள். ஆனால் கஷ்டப்படவில்லை. பெரிய குடும்பம் என்பதால் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். சந்தோஷத்திற்கு குறைவு இருக்காது. அம்மாவை நிதி அமைச்சர் என்பார் அப்பா. சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்துவிட, அம்மாதான் வீட்டு நிர்வாகம் முழுவதும். மிக அழகாக குடும்பம் நடத்தினார் அம்மா. எங்களுக்கு ஆடம்பரம் தெரியாது. ஆனால் அவசியமானது எதுவுமே விட்டு போனதில்லை. எங்களை உட்கார வைத்து பண்புகளை என்  பெற்றோர் சொல்லிக் கொடுத்ததில்லை .  ஆனால் அவர்கள் பண்புடன் வாழ்ந்தார்கள். நாங்கள் அதை பார்த்து கற்றுக்கொண்டோம். பொய் சொல்லக் கூடாது என்று எங்களுக்கு அம்மாவும் அப்பாவும் பாடம் புகட்டவில்லை. ஆனால் அவர்கள் பொய் சொல்லாமல் வாழ்ந்தார்கள். பொய்  சொல்லக் கூடாது என்பது எங்களுக்கு தெரிய வந்தது. நேர்மையுடன் வாழ்ந்து காட்டினார்கள். வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம். இப்பிடி ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கள் செய்கையில் எங்களுக்கு உணர்த்தினார்கள். .
       நாங்கள் சகோதரிகள் நான்கு பேர்.. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை  அல்லது அம்மாவுக்கு நேரம் இல்லை என்று ஒரு நாள் நாங்கள் பள்ளிக்கு தாமதமாக சென்றதில்லை தலை பின்னாமல்சென்றதில்லை. ஒரு ஞாயிறு எண்ணெய் தேய்த்து குளிக்காமல் இருந்ததில்லை. இடுப்பு வரை நீண்ட தலை முடி எங்கள் அனைவருக்கும். அம்மாதான் தினமும் தலை வாரி பின்னி விடுவார். தலைக்கு எண்ணெய் வைத்து சீகைக்காய் போட்டு தேய்த்து தலை அலசிவிடுவார் அந்த காலத்தில் குக்கர் கிடையாது. சாதம் சிப்பல் கொண்டு வடிக்கப்படும். ஒரு முறை சாதம் வடிக்கும்போது சாத கஞ்சி அம்மாவின் கால்  மீது கொட்டிவிட்டது. நானும் எங்கள் அக்காக்களும் பள்ளிக்கு செல்ல தலை பின்னி  கொள்வற்காக அம்மா சமயலறையிலிருந்து வெளி வருவதற்காக காத்துகொண்டு நிற்கிறோம். அம்மா காலில் கஞ்சி கொட்டிவிட்டது , அம்மாவுக்கு காலில் எரிச்சல் தாங்க முடியவில்லை என்பதை விட எங்களுக்கு பள்ளிக்கு நேரமாகிவிட்டது என்பதுதான் அம்மாவுக்கு முக்கியமாக பட்டது. ஒரு பெரிய அடுக்கில் தண்ணீர் நிரப்பி அதற்குள் காலை மூழ்க வைத்துக்கொண்டு உட்கார்ந்தபடி எங்கள் மூவருக்கும் தலை பின்னி விட்டு சாப்பாடு போட்டு பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதன் பின் தான் அம்மா மருத்துவமனைக்கு சென்றார்.ஒரு நாளும் தன்னை பற்றி கவலை படாதவர்தான் அம்மா.
  அம்மா எப்போதும் தனக்கென எதுவும் வைத்துக்கொள்ள ஆசைபட்டதில்லை. நான் 3 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயம்என்று நினைக்கிறேன். . அப்பாவின் நண்பர் தனது குடும்பத்துடன் மலேயா (அப்போது மலேசியா அல்ல, மலேயா தான் ) சென்று வந்தார். அவர்கள் அங்கிருந்து ஒரு அழகான காலணி வாங்கி வந்திருந்தார்கள். சிவப்பு நிறத்தில் ஜிகினா வார் போட்டிருக்கும். அம்மாவுக்கு அந்த காலணியை பரிசாக அளித்தார்கள். அவர்கள் கிளம்பிப் போன மறு நிமிடத்திலிருந்து நானும் என் அக்கா மாலதியும் அதை போட்டுக்கொள்ள ஆரம்பித்தோம். பெரியவர்களுக்கு வாங்கி வந்த காலணி சிறுமிகளான எங்களுக்கு எப்படி  சரியாக இருக்கும் ? இருவரும் மிக சரியாக இருக்கிறது என்போம். காலணியில் பாதி வரை தான் எங்கள் கால்  இருக்கும் . ஆனால் காலை காலணியின் நுனி வரை இழுத்துக்கொண்டு சரியாக இருக்கு என்று சாதிப்போம். அம்மாவும் சிரித்துக்கொண்டு போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார். நாங்கள் இருவரும் எங்கு போனாலும் அதை மாட்டிக்கொண்டுதான் போவோம். நாங்கள் அணிந்து கொண்டே  காலணி  பழையதாகி போய் இறுதியில் பிய்ந்தும் போனது. அம்மா ஒரு நாள் கூட அதை அணிந்து கொண்டதில்லை, நாங்கள் எங்கே அணிந்து கொள்ள விட்டோம்?
   பெரிய குடும்பத்தை வைத்து நிர்வகித்து குழந்தைகளை குறையில்லாமல் வளர்த்து வந்த அம்மாவுக்கு புத்தகம் படிக்கவும்  நேரம் இருந்தது ஆச்சர்யம். வீட்டில் வாராந்திர பத்திரிக்கைகள் செய்தித்தாள்கள் தவறாமல் வாங்கப்பட்டது. அம்மா படிப்பார்கள். நாங்களும் படித்தோம். எங்கள் உடன் பிறப்புகள் அனைவருக்கும் இதனால்  வாசிப்பு பழக்கம் வந்தது. அது மட்டுமல்ல. அவரவர் குழந்தைகளுக்கும் வாசிப்பு பழக்கத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம் என்பது பற்றி நான் பெருமை படுகிறேன் அதனால்தான் புத்தகம் படிக்க நேரமே இல்லை இன்று பலரும்  இன்று சொல்லும்போது எனக்கு அது ஆச்சரியமாக இருக்கிறது. வாசிப்பு ஒருவரை சிந்திக்க வைக்கும் என்பதை பள்ளி காலத்திலேயே நாங்கள் உணர்ந்து கொண்டோம். .
      அம்மா படித்ததுடன் நிறுத்திக்கொள்ளவில்லை . எழுதவும் செய்தார்கள். மாலை வேளைகளில் கையில் நோட்டு புத்தகத்தை வைத்துக்கொண்டு அம்மா கதை எழுதுவதை நான் பார்த்திருக்கிறேன்.நாங்கள் குழந்தைகளாக இருந்த அம்மாவின் இளமை காலத்தில் மட்டும் அல்ல. , இப்போதும் அம்மா எழுதுவார். அம்மாவுக்கு ரொம்ப துக்கமாகவும் ரொம்ப சந்தோசமாகவும் இருந்தால் எழுத வேண்டும் என்கிற உணர்வு வரும். சமீப சில ஆண்டுகளாக கவிதை எழுத ஆரம்பித்தார். என் அத்தை காலமானபோது அம்மா ரொம்பவும் வருத்தப்பட்டார். அம்மாவும் அவரும் சம வயதினர். அப்போது அம்மாவுக்கு சற்று உடல் நிலை சரியில்லை. அதனால் அம்மாவால் அத்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல முடியவில்லை. அம்மாவுக்கு அதை நினைத்து ஒரே வருத்தம். அது கவிதையாக உருவெடுத்தது. பேப்பரில் எழுதி என் கையில் கொடுத்தார்கள். எங்கள் குடும்பத்து வாட்ஸாப் குழுமத்தில் அதை போஸ்ட் செய்து பகிர்ந்து கொண்டோம். அதேபோல் என் தங்கையின் பெண் கல்யாணத்திற்கு முதல் நாள். வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. மணமகள் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அம்மாவின் சிந்தனையில் கவிதை பிறந்தது. உடனே பேப்பர் பேனா கேட்டார். . மணம் செய்து கொள்ளும் பேத்தியை வாழ்த்தி கவிதை எழுதினார்.
   அம்மாவின் இந்த படைப்பாற்றல் திறன் எங்களையும் பற்றிக்கொண்டது. அம்மா தன்னை அறியாமல் எங்களிடம் எழுதும் திறனை விதைத்தார். என் தம்பி பாலாஜி தனது பள்ளி கல்லூரி  காலத்தில்  உதயம் என்கிற கையெழுத்து பத்திரிகை எழுதி நடத்தினார். நான் பத்திரிகைகளுக்கு எழுத  ஆரம்பித்தேன். பின்னாளில் பத்திரிக்கையாளராக மாறினேன். மற்றொரு தம்பி கண்ணன் என்கிற ரவி (ஆச்சர்யா ரவி ) திரைத்துறையில் நுழைந்து படங்களுக்கு வசனமும் எழுதுகிறார்.
     அம்மாவுக்கு எல்லா துறையிலும் ஆர்வம் இருந்தது.நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் வேலைகளை முடித்துவிட்டு புத்தகம் படிப்பார். பேப்பர் படிப்பார். நாங்கள் அனைவரும் திருமணமாகி சென்று, தம்பிகளுக்கும் திருமணமானவுடன் அம்மா வீட்டு நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதனால் நேரம் அதிகம் கிடைத்தது.புத்தகங்கள் இன்னும் அதிகமாக படிக்க ஆரம்பித்தார். என் தம்பி வீட்டில் அம்மா அறையில் அலமாரியில் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  எல்லாம் அம்மா படித்த படிக்கும் புத்தகங்கள். தெய்வத்தின் குரல், அர்த்தமுள்ள இந்து மதம், ஸ்ரீ ராமானுஜர் போன்ற புத்தகங்களுக்கு நடுவில் பைபிளும் பார்த்திருக்கிறேன். அம்மாவுக்கு குரான் படித்து இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆசையும் உண்டு. "எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்" என்பார்
      காலையில் காபி குடித்ததும் அம்மாவுக்கு  பேப்பர் படித்தாக வேண்டும். அதனால்தான் நாட்டு நடப்புகளை நன்கு  அறிந்து வைத்திருந் தார். அம்மா பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும் என்கிறார் என் பெரியம்மாவின்(அம்மாவின் அக்கா)  மருமகள்களில் ஒருவரான உஷா முரளி. பெரியம்மா வீட்டுக்கு அம்மா செல்லும்போது பெரியம்மாவின் பேரன்கள் அம்மா பேசுவதை ஆர்வத்துடன் கேட்பார்கள் என்றும், சில கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றிருக்கிறோம் என்றும் அவர் சொல்கிறார்.
    அம்மாவின் இளமை காலத்தில் அம்மாவுக்கு பிடித்த நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி அம்மாள். அதே போல் வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுத்தும் அம்மாவுக்கு  பிடிக்கும். கோதைநாயகி பற்றி பேசும்போது அம்மாவின் முகத்தில் ஒரு பரவசத்தை பார்த்திருக்கிறேன். அவரது பிரபல  நாவலான "இந்திரா மோஹனா " "வைதேஹி " பற்றியெல்லாம் அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.  . 60 மற்றும் 70 களில் அம்மாவுக்கு எழுத்தாளர் லட்சுமி மீது ஆர்வம் ஏற்பட்டது. 80 களில் எழுத்தாளர்கள் வாஸந்தி,  சிவசங்கரி பிடித்து போனது. வாஸந்தி எனக்கு இந்தியாடுடேயில்  ஆசிரியரானபோது அம்மா அவரை பார்த்து அவரது நாவல்கள் பற்றி பேச ஆசைப்பட்டார். அலுவலகத்திற்கு அழைத்து சென்று வாஸந்தியை  அறிமுக படுத்தி வைத்தேன்.
   அம்மாவுக்கு திரைப்பட நடிகை பானுமதியை ரொம்பப் பிடிக்கும். அவரது திமிரான நடிப்பை  ரொம்பவே ரசித்தேன் என்பார். அதனால்தான் எனக்கு அந்த பெயரை வைத்ததாகவும் கூறியிருக்கிறார். இந்தியா டுடேயில்  இருந்த போது ஒரு முறை  ஒரு  கட்டுரைக்காக நடிகை பானுமதியுடன் டெலிபோனில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கட்டுரை சம்பந்தமாக பேசி முடித்ததும் நட்பு ரீதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் சொன்னேன் அவரிடம் "எங்க அம்மா உங்களது ரசிகை . அதனால்தான் எனக்கு உங்களது பெயர் வைத்ததாக சொல்வார்கள் " என்று. அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அதன் பின் என்னை பற்றி பேசுவதை விட்டுவிட்டு  என் அம்மாவை பற்றி கேட்க ஆரம்பித்தார்.அம்மாவிடம் டெலிபோனில் இந்த தகவலை சொன்னேன். அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்.
  அதே போல் என்  அக்கா பையன்  வினோத் எழுத்தாளர் பாலகுமாரனின் பரம ரசிகன் . அவரது புத்தகம் எதையும் அவர்  படிக்காமல் விட்டதில்லை. அம்மாவும் பாலகுமாரன் படிப்பார் ஒரு முறை பாகுமாரனை அவரது இல்லத்தில் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் வினோத். அம்மாக்கும் பாலகுமாரன் பிடிக்கும் என்பதால் அம்மாவையும் அழைத்து போக முடிவு செய்திருந்தார் அப்போது அம்மா சென்னையில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். வினோத் தனது பாட்டியையும் அழைத்து வருவதாக அவருக்கு தொலைபேசியில் சொல்ல, அவருக்கு வயது எவ்வளவு என்று பாலகுமாரன்கேட்டிருக்கிறார். அப்போது அம்மாவுக்கு 70 வயது. "70 வயதுக்காரர் என்னை பார்க்க வரக் கூடாது, நான்தான் அவரை சென்று பார்க்க வேண்டும்" என்று சொல்லி பாலகுமாரனே எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவுடன் பேசி சென்றார். இதிலென்ன முக்கியமான விஷயம் என்றால் அப்போதுதான் பாலகுமாரனுக்கு  பை பாஸ் சர்ஜரி ஆகி ஓய்வில் இருந்தார் . எங்கள் வீடு இருந்தது  3 வது மாடி. லிப்ட் இல்லை.  அம்மா பதறி விட்டார்கள். அவர் வந்ததும் அம்மா ரொம்ப சங்கடத்துடன் சொன்னார்கள். ஆனால் அவர் அதை பொருட் படுத்தவில்லை. பாலகுமாரனின் உயர்ந்த பண்பை அம்மா ரொம்ப நாட்கள் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார்.
       அம்மா கம்பீரம் மிக்கவர்.கெட்டிக்காரர். . கண்டிப்பான குரலில் ஒன்று அவர் சொன்னால் அதை யாராலும் மீற முடியாது. அம்மாவின் கம்பீரத் தோற்றமும் புத்திசாலித்தனமான பேச்சும் உறவுகளிடம் அவருக்கு மிகுந்த மரியாதை யை பெற்று கொடுத்தது. அதனால் எங்களுக்கும் உறவுகளிடம் நல்ல பெயர் உண்டு.
  அம்மா சமையல் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அம்மாவின்  சமையல் எங்கள் உறவினர்களிடம் ரொம்பவும் பெயர் பெற்றது. அம்மாவின் சுண்டைக்காய் , மணத்தக்காளி  வத்தல் குழம்பும், கருணை கிழங்கு மசியலும் ...யாராலும் அது போல் செய்ய முடியாது. அம்மாவின் மிளகுக் குழம்பு...!  "பாட்டி செய்யும் மிளகுக் குழம்பு எப்பிடி செய்வது என்று சொல்லி அதை வாட்ஸாப்ப்  ஆடியோவாக அனுப்பும்மா" என்று நான் சென்னையில் இருக்கும்போது என் பெண் கேட்டிருக்கிறாள். என்  சகோதரர் பாலாஜியின் நண்பர் ரவிக்குமார் என் அம்மா செய்யும் வேப்பம்பூ ரசத்திற்கு ரசிகர். நீண்ட ஆண்டுகள் கழித்து ஓராண்டுக்கு முன் அவருடன் தொலைபேசியில்  பேசும் வாய்ப்பு கிடைத்தது . அப்போது கூட அவர் அம்மாவின் வேப்பம்பூ ரசம் பற்றி சிலாகித்தார்.
   அம்மா அந்த காலத்து வார்த்தைகள் உவமானங்களை இன்னும் பயன்படுத்தினார். நாம் இப்போது  நீ பெரிய அப்பாடக்கரா என்று சொல்லுகிறோமே, அதனை அம்மா அந்த காலத்து வார்த்தையில் சொல்லுவார் "ஊரை ஆளுகிற மகாராஜாவா நீ " என்பார். அதே போல, "பெரிய ஜில்லா கலெக்டர் !" என்பார்.

   அம்மா தனது 86 வயதிலும் நோய் நொடிகள் ஏதும் இல்லாமல் தான்   இருந்தார்.  அப்பாவின் மறைவுக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்ட 3   உயிர் இழப்புகள் அவரை மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பலவீனமாக்கின அப்படியும் அம்மா எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார். படிப்பதை நிறுத்தவில்லை . எனது வலை பூ கட்டுரைகளை படிப்பார். அது பற்றி என்னிடம் தொலைபேசியில் உரையாடுவார்.
     இப்போது,  அம்மா உன்னை பற்றி எழுதி இருக்கிறேன். இது பற்றிய கருத்துக்களை எப்போது அம்மா சொல்லுவாய்?
   

Friday, 28 July 2017

நயாகரா ---எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது !!!

சிஎன் டவர் எப்படி என்னை பிரமிக்க வைத்ததோ அதே போல பிரமிக்க வைத்தது  நயாகரா நீர் வீழ்ச்சி.



Horseshoe falls: ஆவேசமாக கொட்டும் தண்ணீர்  



அருவியை அருகே சென்று ரசிக்க  அமெரிக்கா படகு சவாரி 
டொரொன்டோ அருகே இருக்கும் விட்பியிலிருந்து கிட்டத்தட்ட 185 கிலோ மீட்டரில் இருக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி.   உலகின் இயற்கையான அதிசயங்களில் 7 வது இடத்தை பெற்றிருக்கி றது .விட்பியில் இருக்கும் என் அக்கா பெண் மற்றும் அவர் கணவ ருடன் நாங்கள்   நயாகராவுக்கு காரில் பயணமானோம். வாரக்  கடைசியில் சென்னையிலிருந்து மஹாபலிபுரம் போய்  நாள் முழுவதும் அங்கு கழித்துவிட்டு மாலையில் திரும்புவது போல்தான் டொரோண்டோ நயாகரா பயணமும்.
  நாங்கள் காலை 9 மணிக்கு விட்பியிலிருந்து கிளம்பி இரவு 9 மணிக்கு திரும்பி வந்தோம். போகும் வழியில் நிறைய திராட்சை தோட்டங்களை பார்க்க முடிந்தது .  நயாகராவை நெருங்கும்போது சாலை இரண்டு பிரிவாக பிரிகிறது. ஒன்று அமெரிக்கா செல்வது . மற்றொன்று கனடா பக்கத்து நயாகரா செல்வது. பிரியும் இடத்தில அறிவிப்பு பலகை இருக்கிறது. பார்த்து செல்ல வேண்டும்.
நீர் வீழ்ச்சியில்  வானவில் 
  நயாகரா நதியின் மேற்கு பக்கம் இருப்பது கனடாவின் ஒண்டோரியோ  ப்ரோவின்சில இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி நகரம். கிழக்கு பக்கத்தில் இருப்பது நியூயார்க்.   நயாகரா நதி  அமெரிக்கா மற்றும் கனடாவின் சர்வதேச எல்லையாக இருக்கிறது.Horseshoe falls, American Falls, Bridal veil Falls  என்கிற மூன்று நீர்வீழ்ச்சிகள் சேர்ந்ததுதான் நயாகரா  நீர்வீழ்ச்சி. இதில் ஹார்ஸ் ஷூஸ் நீர்வீழ்ச்சி கனடா பக்கம் இருக்கிறது மற்ற இரண்டும் அமெரிக்கா பக்கம்.  நீர்வீழ்ச்சியை இரு பக்கத்திலிருந்தும் பார்க்க முடியும். சர்வதேச எல்லையை ரெயின்போ பிரிட்ஜ் என்று பெயருள்ள ஒரு பாலம் இணைக்கிறது. கனடா பக்கத்திலிருந்து  பார்ப்பவர்கள் அமெரிக்கா பக்கத்திலிருந்தும் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் பாலத்தை கடந்து செல்ல வேண்டும். அதே போல் அமெரிக்கா பக்கத்திலிருந்த்தும் பாலத்தை கடந்து வந்து பார்க்கலாம். ஆனால் இவ்வாறு இருத

ரப்பும்  மாறி சென்று  பார்ப்பதற்கு விசா தேவை. பாலத்தின் இரு பக்கத்திலும் இருக்கும் இமிகிரேஷன் அலுவலகத்தில் விசா பெற்றுத்தான் ஒரு தரப்பு அடுத்த தரப்பை ப்பார்க்க முடியும்.
  மூன்று நீர்வீழ்ச்சிகளில் மிகப் பெரியது மற்றும் நீளமானது கனடா பக்கத்தில் குதிரை லாட வடிவத்தில் இருக்கும் Horseshoe நீர்வீழ்ச்சி. ஒன்டோரியாவின் டேபிள் ராக் என்ற இடத்திலிருந்து நியூயார்க்கில் கோட் தீவு வரை  இது  நீண்டிருக்கிறது. கனடியன் பால்ஸ் என்றும் அறியப்படும் ஹார்ஸ் ஷூஸ் பால்ஸின்  உயரம் 188 அடி அஃலம் 2600 அடி . 188 அடியிலிருந்து தண்ணீர் அதிக சக்தியுடன் திறனுடன் கொட்டும்போது  கண்ணுக்கு தண்ணீர் தெரிவதில்லை புகை மண்டலமாக தெரிகிறது. வெயிலில் நிற பிரிகை ஏற்பட்டு நீரில் வானவில் தெரிவது கண்கொள்ளாக் காட்சி.
ரெயின்போ பாலம்,  கனடா  தரப்பின் படகு சவாரி 
  இரும்பு கம்பி தடுப்பு சுவர் அருகே நிற்கும் போது அருவியி லிருந்து கொட்டும் நீர் சாரலாக நம் மீது படும்போது நமக்கு உடம்பு சிலிர்க்கிறது. தண்ணீர் பச்சை நிறமாக இருக்கிறது. பல கனிமங்கள்  மற்றும் உப்புகள் நீருடன் சேர்த்து அடித்து வரப்படு வதால் நீரின் நிறம் பச்சை நிறமாக இருக்கிறது என்கி றார்கள் அருவியை மிக அருகில் பார்ப்பதற்கு Maid of the mist  என்கிற படகு சவாரி உண்டு. சாரலால் நனைந்துவிடுவோம் என்று படகு சவாரிக்கு மழை கோட்டு கொடுக்கி றார்கள். நயாகரா நதியில் கனடா பக்கத்து படகில் சிவப்பு நிற மழை கோட்டு அணிந்து கனடா தரப்பிலிருந்து செல்பவர்கள் அருவியின் அழகை ரசிப்பது போலவே அமெரிக்கா பக்கத்திலிருந்து வருபவர்கள் நீல நிற மழை கோட்டு அணிந்து அருவியின் அழகை ரசிக்கிறார்கள்.
நடைபாதை அருகே இருக்கும் புல்வெளியில் சாரல் பட்டு ஈரமாக இருக்கிறது    நம் ஊரை நினைத்துக்கொள்கிறேன். இந்த புல்வெளியைஇப்படி விட்டு வைப்பார்களா?  சுண்டல் விற்பார்கள்; பஜ்ஜி கடை போடுவார்கள். வண்டியில் ஐஸ் கிரீம் விற்பார்கள். மாங்காயை அழகாக அரை வட்டத்தில் கட்  பண்ணி விற்பார்கள். ஆனால் அது கூட நன்றாகத்தானே இருக்கும்.
  நயாகராவின் அழகை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. நேரம் ஆக ஆக சாரல் அதிகமாகிறது.தண்ணீர் கொட்டுவதில் அதிக .ஆவேசம் தெரிகிறது. இதனால் புகை மணடலம் இன்னும் பரவி  வியாபிக்கிறது. மனமின்றி கிளம்பிய பின் திரும்பி பார்த்தால் தண்ணீருக்கு பதில் நம் கண்ணுக்கு தெரிவது புகை மண்டலம் மட்டுமே

Wednesday, 26 July 2017

Sri Ramanujar - The Great Spiritual Personality-4th Part



ஸ்ரீ ராமானுஜர் பற்றி சரணாகதம் ஜூலை மாத இதழில் வெளிவநத எனது கட்டுரை(4 வதும் இறுதி பகுதியும் )




சரணாகதம் ---- கட்டுரை


ராமானுஜர் 4வது பகுதி

வாழி ராமானுஜர் வாழி எதிராசர்


எழுதியவர்: பானுமதி கிருஷ்ணஸ்வாமி சென்னை


ராமனுஜர்ஒன்பது நூல்கள் எழுதினார். அவை நவரத்தினங்கள் என்று அறியப்படுகின்றன. ஸ்ரீ பாஷ்யம் , வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதாந்த சங்க்ரஹம் , கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம் ஸ்ரீவைகுண்ட கத்யம், நித்ய க்ரந்தம் ஆகியவை அவை. இதில் ஸ்ரீ பாஷ்யம் தான் அவர் ஆளவந்தாருக்கு செய்து கொடுத்த முதல் சத்தியம். அதாவது பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதுவதாக செய்து கொடுத்த உறுதி. அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதுவதற்கு முன்பாக போதாயனர் விருத்தி நூலை படித்தால் நல்லது என்று சொல்லப்படவே அந்த நூலின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இருக்கும் காஷ்மீரத்து புத்தகசாலைக்கு செல்ல முடிவு செய்தார். அவருடன் அவரது சீடரான கூரத்தாழ்வான் சென்றார். காஷ்மீரத்தில் அங்கு இருந்த அரசரை பார்த்து அவரிடம் அனுமதி பெற்று போதாயனர் விருத்தியை அவர் வாங்கி கொண்டு வரும்போது அந்த அரசரின் சபையில் இருந்த அறிஞர்கள் அவரை துரத்தி வந்து வழியில் மடக்கி அந்த புத்தகத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் நினைவாற்றலுக்கு பெயர் பெற்ற கூரத்தாழ்வான் அந்த புத்தகத்தை தான் மனனம் செய்து விட்டதாக சொன்னார்.
     பின்னர் ஸ்ரீரங்கம் திரும்பி கூரத்தாழ்வானின் நினைவாற்றல் உதவியுடன் பிரம்ம சூத்திரத்திற்கு அவர் உரை எழுதினார். பிரம்ம சூத்திரத்திற்கு பலர் விளக்க உரை எழுதியிருந்த போதிலும் எழுதியிருந்த போதிலும் ராமானுஜரின் பாஷ்யமே சிறப்பானது என்று கருதப் பட்டு அது ஸ்ரீ பாஷ்யம் என்று போற்றப்பட்டது. அதிலிருந்து ஸ்ரீராமானுஜர் ஸ்ரீ பாஷ்யக்காரர் என்கிற திருநாமத்தை பெற்றார்.
       விஷிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்களை பரப்ப அவர் இந்தியா முழுவதும் திக்விஜயம் மேற்கொண்டார். வாதபோர்களில் கலந்து கொண்டு தனது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்களை பிரபலப்படுத்தினார். இவ்வாறு ஸ்ரீவைஷ்ணவத்தை ராமானுஜர் பரப்பி வந்தது அப்போது தஞ்சையை ஆண்ட சோழ மன்னனுக்கு பிடிக்கவில்லை. அந்த சோழ மன்னன் சைவ சமயத்தை சார்ந்தவர். மன்னனால் ராமானுஜருக்கு ஆபத்து என்பதை புரிந்து கொண்ட அவரது சீடர்கள் அவர் சிறிது காலம் ஸ்ரீரங்கத்தை விட்டு தலை மறைவாக இறுப்பது நல்லது என்று நினைத்தார்கள். அப்போதுதான் ராமானுஜர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மேலக்கோட்டை எனப்படும் திருநாராயணபுரத்திற்கு வந்து சேர்ந்தார். மேலக்கோட்டையில் அவர் 12 ஆண்டுகள் இருந்தார்.
      ராமானுஜருடன் அவரது சீடர்கள் பலரும் மேல்கோட்டைக்கு சென்றார்கள். திருநாராயணபுர கோயிலில் தனது சீடர்களுடன் சேர்ந்து பல பணிகளை ராமானுஜர் செய்தார். ஊர் மக்களுக்கு ராமானுஜரை ரொம்பவும் பிடித்து விட்டது. கோயிலின் உத்சவ மூர்த்தி ராமப்ரியன் டில்லி பாதுஷா படையெடுப்பின்போது கொள்ளையடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார் என்பதை கேள்விப்பட்ட ராமானுஜர் ராமப்பிரியனை மீட்க டில்லிக்கு சென்றார். அங்கு மன்னன் விக்ரகம் தனது பெண்னிடம் உள்ளது என்றும் அவள் கொடுத்தால் வாங்கி செல்லும்படியும் கூறிவிட்டார். இளவரசியும் இதே பதிலை சொல்ல ராமானுஜர் விக்கிரகத்தை பார்த்து 'செல்ல பிள்ளை வாராய்' என்று அழைக்க வீக்கம் ராமானுஜரின் மடியில் ஓடி வந்து அமர்ந்து கொண்டது . பின்னர் அதை எடுத்துக்கொண்டு ராமானுஜர் மேல்கோட்டைக்கு வந்தார். அன்றிலிருந்து திருநாராயணபுரத்து உத்சவர் செல்லப்பிள்ளை என்று அறியப்பட்டார் என்கிறது வைஷ்ணவ வரலாறு.
       12 ஆண்டுகள் ராமானுஜர் மேலக்கோட்டையில் இருந்தார். ஸ்ரீரங்கத்தில் சோழ மன்னன் இறந்து போய் அவரது மகன் பட்டத்துக்கு வந்து விட்டார் அவரால் வைஷ்ணவத்திற்கு ஆபத்து ஏதும் இல்லை என்கிற தகவல்களை ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்த அவரது சீடர்கள் அனுப்பினார்கள் . உடனே ராமானுஜர் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். 12 ஆண்டுகள் ராமானுஜருடன் இருந்து விட்ட மேலக்கோட்டை மக்கள் அவர் ஸ்ரீரங்கம் திரும்புவதை கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தார்கள். தங்களால் அவரது பிரிவை தாங்க முடியாது என்றார்கள் . அவரது திருமேனியை விக்ரக வடிவில் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களது விருப்பப் படியே ராமானுஜர் தனது விக்ரகம் ஒன்றை செய்ய சொன்னார். அது இன்றும் திருநாராயணபுரத்தில் 'தமர் உகந்த திருமேனி " என்று சொல்லப்படுகிறது . தமர் என்றால் பக்தர்கள் என்று பொருள். பக்தர்களுக்கான திருமேனி என்று பொருள்.
         ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் கோயிலின் நிர்வத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டார்.தினசரி உபன்யாசங்கள் செய்தார். அவரது பக்தர்கள் கூட்டம் அதிகமானது. மக்கள் அவர் காட்டிய இறை பணியை மேற்கொள்ள விரும்பினார்கள் . ராமானுஜருக்கு வயதாகி கொண்டே வந்தது. ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தை பரப்புவதற்கு 74 ஆச்சார்ய மையங்களை ஏற்படுத்தினார். மன்னர்கள் செல்வந்தர்களும் அவரை பின்பற்றினார்கள்.
          அவர் பிறந்த ஊர் ஸ்ரீபெரும்புதூர் என்றாலும் புகுந்த வீடான ஸ்ரீரங்கத்திலேயே ராமானுஜர் இருந்துவிட்டார் என்று ஸ்ரீபெரும்புதூர் பக்தர்கள் வருந்தினார்கள். அப்போது அவரது சீடரான முதலியாண்டானின் மகன் கந்தாடை ஆண்டான் ராமானுஜரிடம் வேண்டி வற்புறுத்தி அவரது விக்ரகம் ஒன்றை செய்ய அனுமதி பெற்றார். ராமானுஜர் தனது சக்தி முழுவதையும் அதில் அளிக்கும் வகையில் அந்த விக்ரகத்தை ஆரத் தழுவிக் கொண்டார். ராமானுஜரின் சக்தி அனைத்தும் அந்த விக்கிரகத்தில் ஏறியது. அந்த விக்கிரகம் அந்த ஆண்டு தை மாதம் பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜர் தனது சக்தியை இழந்து நடக்க முடியாமல் தள்ளாட ஆரம்பித்தார். இந்த விக்ரகம் தான் இன்றும் ஸ்ரீபெரும்புதூரில் "தானுகந்த திருமேனி" அதாவது அவரே விரும்பி ஏற்ற திருமேனியாய் இருக்கிறது.
      ராமானுஜருக்கு தள்ளாமை அதிகமானது. 120 வயதை அவர் எட்டிவிட்டார். . தனது வாழ்நாள் முடிய போகிறது என்பதை உணர்ந்து கொண்ட ராமானுஜர்அரங்கனிடம் சென்று தனது குற்றங்களை அவர் மன்னிக்க வேண்டும் என்றும் தனது சம்பந்தம் பெற்ற அடியவர்களுக்கு இப்போதும் வருங்காலத்திலும் முக்தி அளிக்க வேண்டும் என்றும் வேண்டினார். அரங்கன் ராமானுஜரின் பெருந்தன்மையை பார்த்து வியந்து போனார். பொதுவாக எவரும் தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் வேண்டுவார்கள் தவிர என்னை சார்ந்தவர்களுக்கும் முக்தி கொடு என்று வேண்டமாட்டார்கள். அதனால் ஆச்சரியமடைந்த நம்பெருமாள் அப்படியே ஆகட்டும் என்றார்.இந்த உலக வாழ்க்கை போதும், அடியேனுக்கு வைகுந்தத்தை அருள வேண்டும் என்று வேண்டினார்.அதனை ஏற்றுக்கொண்ட அரங்கன் இன்னும் 7 நாட்களில் அவர் உலக வாழ்வை நீத்து வைகுந்தம் அடைவார் என்று சொன்னார். மனமகிழ்ந்து ராமானுஜர் உடனே பல உபன்யாசங்கள் நடத்தினார். பல சீரிய கருத்துக்களை சீடர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியில் தனது 120 வது வயதில் தனது திருமேனியை துறந்து வைகுந்தம் சென்றார். . ராமானுஜருக்கு தன் மீது இருந்த அபிமானத்தையும் பக்தியையும் புரிந்துகொண்ட நம்பெருமாள் ராமானுஜரின் திருமேனி தனக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவரது திருமேனியை கோயில் வசந்த மண்டபத்திலேயே திருப்பள்ளி படுத்த சொன்னார். இன்று அந்த இடத்தில்தான் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் சந்நிதி இருக்கிறது. அவர் திருப்பள்ளி படுத்தப்பட்ட இடத்தில் கந்தாடை ஆண்டான் சந்தனம் குங்குமப்பூ கொண்டு ராமானுஜர் திருமேனியை எழுந்தருள பண்ணினார். அது தத்ரூபமாக ராமானுஜர் மீண்டும் வந்திருப்பது போல் இருப்பதால் "தானான திருமேனி" என்று அது கொண்டாடப் படுகிறது.
         ராமானுஜர்தனது வாழ்நாளில் பல அரிய பணிகளை செய்திருக்கிறார். வேதாந்தத்திற்கு விளக்கம் அளிக்கும் 9 நூல்களை எழுதினார். ஆழ்வார்களின் பாசுரங்களை பிரபலப்படுத்தினார். கோயில்களில் சீர்திருத்தங்களை செய்தார். முக்தி அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதி செய்தார். இறைவனின் திருவடிகளை பற்றியவர்கள் தங்களது எதிர்காலம் பற்றி அஞ்ச வேண்டாம் . பகவானுக்கும் அவரது பக்தர்களுக்கும் எப்போதும் கைங்கர்யம் செய்ய வேண்டும், ஆச்சார்யர்களுக்கும் நலிவடைந்தவர்களுக்கும் செய்யும் கைங்கர்யம் இறை பணிக்கு சமமானது என்று எளியோரும் புரிந்து கொள்ளும்படி உபதேசங்கள் செய்தார். 1017 ஆம் ஆண்டு பிறந்த ராமானுஜர் 1137 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் பிறந்து இந்த ஆண்டுடன் 1000 வருடங்கள் ஆகின்றன. 1000 ஆண்டுகள் ஆனாலும் அவரது உபதேசங்களும் தத்துவங்களும் இன்றைக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. மக்கள் நலனையே அவர் முக்கியமாக கருதினார். சமத்துவத்தின் வடிவமாக அவர் இருந்தார். கடவுள் தனது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை உணர்த்தினார். 1000 ஆண்டு காணும் ராமானுஜரின் வழி நடத்தல் நமது மனித சமூகம் உயர்வடைவதற்கான வழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
         ராமானுஜர் பற்றி நான்கு பகுதிகளாக வந்த இந்த கட்டுரைகளில் ராமானுஜர் பற்றிய பல முக்கிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் அவருடன் சம்பத்தப்பட்ட பலர் பற்றி இடமின்மை காரணமாக எழுத முடியவில்லை. ராமானுஜர் என்கிற பெருங் கடலிலிருந்து சில துளி நீரை மட்டுமே அடியேன் எடுத்து காட்டியிருக்கிறேன்.

வாழி ராமானுஜர் வாழி எதிராசன்

-----------------------------

Tuesday, 18 July 2017

கோபுர தரிசனம் ... கோடி அழகு


கடந்த வார கடைசி மிக சுவாரசியமாக கழிந்தது . கனடாவின் இரண்டு பிரமிப்புகளை பார்த்தேன். ஒன்று கனடா நேஷனல் டவர் அதாவது சி.என் .டவர். மற்றொன்று நயாகரா நீர்வீழ்ச்சி.

முதலில் சி.என் டவர் அனுபவம் பற்றி

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து தெரியும்
CN TOWER
கனடா செல்பவர் எவரும் தவறாமல் பார்த்து  பிரமிப்பதில்  CN Tower ஒன்று. டொரோண்டோ டௌன்டௌனில் ரயில்வே நிலையத்தை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடம் 1815.3 அடி அதாவது 553.3 மீட்டர் உயரமானது. கனடியன் நேஷனல் என்கிற ரயில்வே நிறுவனம் இதை 1976ல் கட்டி முடித்தபோது இதுதான் உலகின் மிக உயரமான கட்டிடம் என்கிற பெயரை பெற்றிருந்து. . ஆனால் 2010ல் துபையில் கட்டப்பட்ட பர்ஜ் கலீபா (2717 அடி ) உலகின் மிக உயரமான கட்டிடடம் என்கிற பெயரை தட்டி சென்றது.
Look out பகுதியிலிருந்து Toronto city 
டொரோண்டோ அருகே இருக்கும் ஏஜாக்ஸ் ரயில்வே நிலையத்திலிருந்து சி என் டவர் இருக்கும் டௌன்டவுன் பகுதிக்கு வர ரயில் பயணம் ஒரு மணி நேரம். நாங்கள் ரயிலில் பயணித்தோம். ரயிலே பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தது. அங்கும் மாற்று திறனாளி களுக்கென்று , குழந்தைகளை பிராமில் கூட்டிக்கொண்டு வருவோருக்கென்று தனியாக இருக்கைகள் ஒவ்வொரு பெட்டி யிலும் இருக்கிறது. ரயில், நிலையத்தில் நின்றதும் ரயில் பணியாளர் ஒரு பலகையை நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே வைக்கிறார். சக்கர நாற்காலியில் வருபவர்கள் குழந்தைகளை பிராமில் கூட்டிக்கொண்டு வருபவர்கள் முதியவர்கள் ஏறுவதற்கு  இறங்குவதற்கு இவ்வாறு வசதி செய்து தருகிறார்கள். இந்த வசதி ஒவ்வொரு ரயிலிலும் மூன்று இடங்களில் இருக்கிறது. அனைவரும் ஏறியதும் ஒரு அறிவிப்பு வருகிறது "இப்போது கதவு மூடப்படுகிறது. யாரும் கதவருகே நிற்க வேண்டாம் " . அறிவிப்பு முடிந்ததும் ரயில் கிளம்புகிறது.

SKYPAD பகுதியிலிருந்து தெரியும்
விண்ணைத்தொடும் கட்டிடங்கள்  
அழகான அந்த பயணம் ஒரு மணி நேரம் தொடர்ந்தது. ரயில் நீளமான ரோஜ் நதியை கடந்து நகரின் பல இடங்களை தாண்டி யூனியன் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. எனக்கு கனடாவின் ஒவ்வொரு பகுதி அழகையும் நேர்த்தியையும் பார்த்து அனுபவித்து ரசிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் பஸ், ரயில் நீண்ட தெருக்கள் வழியாக செல்வது என்பதையே நான் விரும்புகிறேன். சுத்தமாக இருக்கும் தெருக்களில் நடப்பதே ஒரு அனுபவம்

ரயிலில் இருந்து இறங்கியதும் ரயில் நிலை யத்தையும் சி.என் டவர் இருக்கும் பகுதியையும் இணைக்கும் SKYWALK என்கிற நடைபாதைக்கு செல்லும் வழி என்கிற அறிவுப்பு பலகையை பார்த்தாலும் அந்த வழியை திரும்பும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக சிஎன் டவர் செல்ல முடிவு செய்தோம். சாலையில் கால் வைத்ததுமே பிரமிப்பில் ஆழ்ந்து விட்டேன். யாரோ நீண்ட நீண்ட தூண்களை நட்டு வைத்து போல விண்ணை தொடும் கட்டிடங்கள். நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கிறது. பிரமிப்புடன் நடந்தோம். சில மீட்டர்கள் நடந்ததும் சிஎன் டவர் முழுமையாக தெரிந்தது. நடை பாதையில் நின்றுகொண்டு CN Tower பார்த்தால் தலை சுற்றுகிறது. டவர் லேசாக அசைவது போல் ஒரு உணர்வு வருகிறது.

அதன் பிறகு அங்கு சென்று உள்ளே செல்ல டிக்கெட் வாங்கினோம். வார கடைசி என்பதால் நல்ல கூட்டம். வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பாதுகாப்பு சோதனைகள் முடித்து Tower செல்லும் வரிசைக்கு வந்து லிப்ட் அருகே செல்லுவதற்கு மட்டும் இரண்டு மணி நேரம் ஆகிறது. Tower உள்ளே சென்று பார்க்க கண்ணாடி சுவர் கொண்ட 6 லிப்ட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு  லிப்ட்டிலும் டவர் பற்றிய தகவல்கள் சொல்ல ஒரு வழிகாட்டி நிற்கிறார். 1136 அடி அதாவது 346 மீட்டர் வரை லுக் அவுட் லெவல் . Tower வெளியே தெரியும் அழகான ரம்மியமான டொரோண்டோ நகரை அதன் வானுயர கட்டிடங்களை ஓடும் ரோஜர் நதியை, அருகே இருக்கும் உள்ளூர் சிறிய விமான நிலையத்தை, சாலைகளில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களை நதிக்கு நடுவே இருக்கும் குட்டி தீவை பார்க்கலாம். 1136வது அடியில் லிப்ட் நிற்கிறது. லிப்ட்டில் வரும்போது விமானம் கிளம்பும்போது நமக்கு காது அடைப்பு ஏற்படுவது போல காது அடைக்கிறது. லிபிட்டிலிருந்து பக்கவாட்டில்  பார்க்க  சற்று பயமாகவும் இருக்கிறது. லுக் அவுட் லெவல் வந்ததும் லிப்ட் திறந்துகொள்ள நாம் வெளி வருகிறோம். நம்மை சுற்றி கண்ணாடி சுவர்கள். சுவர்கள் அருகே நின்று அமர்ந்து பார்த்து பார்த்து ரசிக்கலாம்.மனிதன் எவ்வளவு அழகை உருவாக்கி ரசிக்க வைக்கிறான் என்று பிரமித்து போகலாம் . கண்ணாடி சுவர் வழியே வாகனங்கள் தீப்பெட்டி தீப்பெட்டிகளாக தெரிகின்றன. விமான நிலையத்தில் நிற்கும் விமானங்கள் குழந்தைகள் விளையாடும் விமான பொம்மைகள் போல் காட்சி அளிக்கின்றன. சுவர் அருகே சென்று பார்க்கும்போது கால்களில் நடுக்கம் வருகிறது. நமது ஊர் தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவர்கள் தேவையே இல்லாமல் அடிக்கடி பயன் படுத்துவார்களே , "mind blowing " என்று, அந்த mind blowing கின் உண்மையான அர்த்தம் இங்குதான் உணரப்படுகிறது. லிப்ட் மூலமாக லுக் அவுட் பகுதி செல்வதற்கு 58 வினாடிகள் ஆகின்றன.

ஒவ்வொரு கண்ணாடி சுவரின் எடையும் 448 கிலோ . ஏழு சுவர்கள் இருக்கின்றன. அங்கிருந்து ஒரு 10 படிகள் ஏறி சென்றால் கண்ணாடி தரை (glass floor ) இருக்கிறது அதாவது 256 சதுர அடிக்கு கண்ணாடியால் ஆனது 342 வது மீட்டரில் அதாவது 1122 வது அடியில். இருக்கிறது கண்ணாடி தரை. கண்ணாடி தரை மீது நின்று குனிந்து பார்ப்பதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். நான் பயந்து நடுங்கினேன். கண்ணாடி மீது கால் வைக்கவே பயமாக இருந்தது. சிறுவர்கள் இளம் வயதினருக்கு பயம் தெரியவில்லை. என் பெண் அதில் படுத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டாள் ,. சிறுவர்கள் குதித்தார்கள். சிலர் குழந்தைகளை அதில் விட்டு தவழ்ந்து வர வைத்தார்கள். கண்ணாடிக்கு கீழ் குனிந்து பார்த்தால் கட்டிடங்கள் சாலை, வாகனங்கள் நன்கு தெரிகிறது. சிலிகா அல்லது சிலிக்கன் dioxide இல் செய்யப்பட்ட கண்ணாடி என்பதால் அது அதிக வலுவானது: கட மான் என்று தமிழில் சொல்லப்படும் 35 moose விலங்குகள்   ஒரே நேரத்தில் ஏறி நின்றால் கூட அது தாங்கும் என்று இந்த கண்ணாடி தரை பற்றி அங்கு எழுதி போடப்பட்டிருக்கும் விளக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கண்ணாடி தரை பிரமிப்புடன் நின்று விடவில்லை சிஎன் டவர். அடுத்தது அதற்க்கு மேல் இருக்கும் skypod . 447 வது மீட்டரில் அதாவது 1465 வது அடியில் நின்று கொண்டு பார்க்கலாம் டொரோண்டோ நகரை. அது மட்டுமல்ல , வானிலை மோசமாக இல்லாவிட்டால் அங்கிருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நயாகரா நீர் வீழ்ச்சியையும் பார்க்கலாம் என்று சொன்னார்  அந்த வழிகாட்டி.. skypod செல்வதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கண்ணாடி தரை பார்த்தபின் அங்கிருந்து வேறொரு லிப்ட் மூலமாக skypod செல்ல வேண்டும். அங்கு இன்னும் சாய்வாக நின்று பார்க்கும்படி இருக்கிறது. கால்கள் இன்னும் நடுங்குகிறது.


GLASS FLOOR பகுதியில்
குழந்தைகள் ஜாலி 
சி என் டவர் என்றால் பல மாடிகள் கொண்ட கட்டிடம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன் . மாடிகள் அல்ல. தனி தனியாக மாடிகள் என்பது கிடையாது. எத்தனை மாடிக் கட்டிடம் என்று அதனை சொல்ல முடியாது. தனியாக தளங்கள் இல்லை. சி என் டவர் என்பது ஒரு structure , அதாவது வடிவம். அமைப்பு.உச்சிக்கு செல்ல படிகள் இருக்கின்றன. 1776 படிகள். லிப்ட் இல்லாமல் படிகளில் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும். லுக் அவுட் , கண்ணாடி தரை,  skypod பார்த்து மீண்டும் கீழே இறங்கி வருவதற்கு மொத்தம் 2 மணி நேரம் ஆகிறது. டவர் பார்த்துவிட்டு கீழே வந்து மீண்டும் மேலே அண்ணாந்து பார்த்தால் பிரமிப்பு கூடுகிறதே தவிர குறையவில்லை.

 அடுத்து நாயகராவில் சந்திப்போம்





Tuesday, 4 July 2017

Sri Ramanujar - The Great Spiritual Personality-




ஸ்ரீ ராமானுஜர் பற்றி சரணாகதம் ஜூன் மாத இதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை (3 வது பகுதி)






சரணாகதம் ---- கட்டுரை


ராமானுஜர் 3 வது பகுதி


வாழி ராமானுஜர் வாழி எதிராசர்


எழுதியவர்: பானுமதி கிருஷ்ணஸ்வாமி சென்னை


ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்ததையும் அரங்கன் அவரை கோவிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள சொன்னதையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.


ராமானுஜரை ஒரு சிறிய வட்டத்தில் அடக்க முடியாது. பன்முகம் கொண்டவர். அவர் ஒரு சிறந்த பக்தர், உயர்ந்த ஆச்சார்யர், சிறந்த நிர்வாகி. பேரறிஞர். தத்துவவாதி. சிறந்த வாதத்திறன் கொண்டவர். ஆன்மிக குரு. மக்களை தன் பக்கம் இழுக்கும் வசீகரமிக்க தலைவர். கருணையின் வடிவம். சிறந்த சமூகப் பணியாளர். சிறந்த சீர்திருத்த வாதி


இன்று சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றால் அவர் மேலாண்மை கல்லூரியில் படித்தவராக இருக்க வேண்டும். ஆனால் ராமானுஜர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே மிகப் பெரிய கோவிலை சிறப்பாக நிர்வகித்தார். அவர் கோயில் நிர்வாகத்தை எப்படி நடத்தினார் என்பது மிகவும் சுவாரசியமானது.

சாதி வேறுபாடுகள் பார்க்காத ராமானுஜர் அணைத்து சமுதாயத்தினரையும் கோயில் நிர்வாகத்தில் ஈடுபட வைத்தார். அது வரை கோயில் நிர்வாகம் திருவரங்கத்து அமுதனார் என்பவரிடம் இருந்து வந்தது. அவர்தான் பின்னர் ராமானுஜர் நூற்றந்தாதி இயற்றியவர். {அவருக்கு ஸ்ரீரங்கம் கோயிலின் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குள் சந்நிதி இருக்கிறது}. முதலில் ராமானுஜர் அணைத்து வேலைகளையும் மேற்பார்வையிட அகலங்கநாட் டாழ்வான் என்பவரை நியமனம் செய்தார். அவர் அந்தணர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து பத்து குழுக்களை அமைத்தார். இந்த குழுக்கள் கோயிலின் பல்வேறு பணிகளை நேரிடையாக கவனித்தது.


அர்ச்சகர்கள், விண்ணப்பம் செய்வார், ஆராதனத்திற்கு புனித நீர் கொண்டு வருவோர், பாராயணம் செய்வோர், பல்லக்கு எழுந்தருள செய்வோர், மாலை தொடுப்பவர், மடக் பள்ளியில் சமையல் செய்வோர்கள், வாத்தியம் வாசிப்பவர்கள், சமைப்பதற்கு மண்பானை செய்பவர்கள் துப்புரவு பணியாளர்கள், பெருமாளுக்கான ஆடைகள் தைப்பவர்கள் ஆடைகள் துவைப்போர், படகோட்டுபவர்கள் , சிற்பிகள், வாகனங்கள் பழுது பார்ப்பவர்கள், என்று பலரும் அந்த பத்து குழுக்களில் அடங்கினார்கள்.

அந்த காலத்தில் கடவுளுக்கு என்று பலரும் தங்களது நிலங்களை எழுதி வைப்பார்கள். அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து கோயில் நிர்வகிக்கப் படும் , நிலங்களிலிருந்து வரும் தானியங்கள் மிகப் பெரிய தானியக் களஞ்சியங்களில் கொட்டிவைக்கப் பட்டன. இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் கொட்டாரம் என்கிற பகுதியில் அந்த பிரமாண்ட களஞ்சியங்கள் இருப்பதை காண முடிகிறது. ராமானுஜர் நிர்வாக ப் பணிகளில் தனக்கு உதவ முதலியாண்டான் (அவரது சகோதரி புத்திரனான தாசரதிதான் முதலியாண்டான்} மற்றும் மற்றொரு சீடரான கூரத்தாழ்வானை அவர் வைத்துக் கொண்டார்


பெருமாளை காண வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் முறை இருந்தது. அதனால் உணவு தானியங்கள் சப்ளைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. . அரங்கனின் பெருமை பாட, ஆழ்வார் பாசுரங்கள் இசைக்க அவற்றிக்கு விளக்கம் அளிக்க , உபன்யாசங்கள் நடத்த பெரிய கூடங்கள் கட்டப்பட்டன. அதேபோல் பெருமாளுக்கு மாலை சாத்துவதற்கு பூந்தோட்டங்கள் அமைக்கப் பட்டன. கோயிலுக்கான பாலுக்காக கோ சாலைகள் அமைக்கப் பட்டன.

அனைத்து சமுதாயத்தினருக்கும் கோயில் நிர்வாகத்தில் பங்களித்து சாதி வேறுபாடுகளை களைந்தார் ராமானுஜர். அவர் அன்று எப்படி கோயிலை நிர்வகித்தாரோ அதே தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் பி ன்பற்றப்படுகிறது. இன்று நிர்வாகத்தை பகிர்ந்தளித்து சிறப்பான மேலாண்மை அதிகாரியாக திகழ்வது எப்படி என்று பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன ஆனால் ராமானுஜர் எந்த பயிற்சி வகுப்புக்கும் போகவில்லை மேலாண்மையில் பட்டம் பெறவில்லை . அவரது தலைமை பண்புகளும் மேலாண்மை சிறப்பும் இன்று அனைவரையும் ஆச்சர்யப் படுத்துகிறது. அது மட்டுமல்ல, மதம் என்பது பிரிக்கும் அம்சம் அல்ல அது அனைத்து சமுதாயத்தினரையும் இணைத்து வைத்திருக்கும் சக்தி என்பதையும் அவர் காட்டினார். பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவும் எந்த நேரத்திலும் அவர்களை அணுகவும் அவர்களுக்கு கோயில் அருகிலேயே வீடுகள் அளிக்கப் பட்டன. கோயில்களில் தினமும் ஆழ்வார் பாசுரங்கள் இசைக்கப் பட வேண்டும் என்று கொண்டு வந்தார் ராமானுஜர். . இதன் மூலம் வேதங்களின் சாரமான தமிழ் பாசுரங்களை சாமானியர்களாலும் எட்ட முடிந்தது. இன்றும் வைணவக கோயில்களில் தினமும் ஆழ்வார் பாசுரங்கள் இசைக்கப்படுகின்றன

இவ்வாறாக ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தை கவனித்து வந்தார். ஆளவந்தாரின் விருப்பத்தின் படி பெரிய நம்பி அவருக்கு த்வய மஹாமந்திரத்தை உபதேசித்தார். எட்டெழுத்து திருமந்திரத்தின் ஆழ்ந்த அர்த்தத்தை அவர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கேட்டரிய வேண்டும். அதற்காக அவர் திருக்கோஷ்டியூர் சென்றபோது நம்பிகள் அவர் மந்திரத்தை உபதேசமாக பெரும் தகுதியை பெற்றுக்கொண்டு வருமாறு சொல்லிவிட்டார். ஒரு முறை இரு முறை அல்ல. பதினேழு முறை ராமானுஜர் திருக்கோஷ்டியூர் சென்றார். ஒவ்வொரு முறையும் நம்பிகள் அவரை திருப்பி அனுப்பிவிட்டார். மனம் தளரவில்லை ராமானுஜர். இன்று போல் அந்த காலத்தில் பேருந்து வசதிகள் கிடையாது. எந்த இடத்திற்கும் நடந்தே செல்ல வேண்டும். அப்படியும் மனம் தளராமல் சலித்துக்கொள்ளாமல் திருக்கோஷ்டியூருக்கு நடையாய் நடந்தார் ராமானுஜர். கடைசியில் பதினெட்டாவது முறை திருக்கோஷ்டியூர் நம்பிகள் . ஓம் நமோ நாராயணா என்கிற எட்டெழுத்து மந்திரத்தையும் அதன் உட் பொருளையும் உபதேசித்தார். அத்துடன் அந்த மந்திரத்தை யாருக்கும் எளிதில் உபதேசிக்க கூடாது என்கிற நிபந்தனையும் விதித்தார்.


இறைவன் திருவடியை பற்றிக்கொண்ட சாதாரண தொண்டனும் முக்தி பெற வேண்டும் என்பது ராமானுஜரின் ஆசை. .நம்பிகளிடம் திருமந்திரம் உபதேசம் பெற்று திரும்பி வரும்போது அவர் திருமந்திரத்தின் வலிமை பற்றி நினைத்துக்கொண்டே நடந்து வந்தார். இந்த உலகில் இருக்கும் மக்களின் கஷ்டங்கள் பற்றி நினைத்தார். அப்போது அவருக்கு அவர்கள் மீது கருணை பெருகியது. உடனே மக்களுக்கு திருமந்திரத்தை உபதேசம் செய்து அவர்கள் பெருமாளின் கருணையையும் ஆசியையும் பெற வேண்டும் என்று ஆசை பட்டார் . உடனே அனைவரையும் கோயில் வளாகத்திற்குள் கூடுமாறு சொன்னார். ராமானுஜரை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த கூட்டம் பரவசம் அடைந்தது. தான் கூறுவது அனைவரின் காதுகளிலும் விழ வேண்டும் என்று விரும்பி ராமானுஜர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டார். "எனது உயிரை விட மேலானவர்களாக உங்களை கருதுகிறேன் . இந்த உலகின் துன்பங்கள் மற்றும் கஷ்டங்களிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். பெருமாளின் கருணையும் ஆசியும் உங்கள் மீது பட வேண்டும் என்று ஆசை படுகிறேன். நான் இப்போது திருமந்திரத்தை உங்களுக்கு உபதேசிக்க போகிறேன். நான் சொல்ல சொல்ல அதை நீங்கள் சொல்ல வேண்டும் " என்று முழங்கினார். பதினேழு முறை நடையாய் நடந்து பதினெட்டாவது முறையாக வந்து திருக்கோஷ்டி நம்பிகளிடம் தான் பெற்ற திரு மந்திர உபதேசத்தை அவர் மக்களுக்கு உபதேசித்தார். திருமந்திரம் அவர்களை அவர்களது கர்மாவிலிருந்து மீட்டு சொர்க்கத்திற்கு வழி காட்டும் என்றார். பரவசத்தில் திக்குமுக்காடிய மக்கள் அவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். கோயிலுக்கு வெளியே திருமந்திர உபதேசம் நடந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்கு கடும் சினம் ஏற்பட்டது . யாரிடமும் சொல்லக் கூடாது என்று தான் சொன்ன வார்த்தையை ராமானுஜர் மீறி விட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை


திருமந்திரம் உபதேசித்த குரு கடும் கோபத்தில் இருப்பதை அறிந்த ராமானுஜர் அவரை சென்று பார்த்தபோது தன கண் முன்னே நிற்க வேண்டாம் என்று நம்பிகள் அவரை பார்த்து சீறினார். "குருவின் வார்த்தைகளை மீறயதற்கு எனக்கு நரகம் தான் கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் தாங்கள் உபதேசித்த திருமந்திரம் இந்த மக்களுக்கு முக்தி பெற்று கொடுக்கும் . அது போதும் அடியேனுக்கு" என்று பதிலளித்தார். இதை கேட்டு நெகிழ்ந்து போன நம்பிகள் ராமானுஜரை "இப்படிப்பட்ட பரந்த நோக்கம் கொண்ட நீரே எம்பெருமானார்" என்று சொல்லி ராமானுஜருக்கு எம்பெருமானார் என்கிற பட்டத்தை வழங்கினார்.


திருமந்திரத்தை சாமானியருக்கும் உபதேசம் செய்ததன் மூலம் ராமானுஜர் இறை பக்தி இருந்தாலே ஆச்சார்யாரிடம் உபதேசம் பெறுவதற்கு அது தகுதியாகும் என்கிற புதிய வரம்பை ஏற்படுத்தினார். -

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதன் தொடர்ச்சி சரணாகதம் ஜூலை மாத இதழில் வெளிவரும் . அது வெளிவந்ததும் அதை பதிவு செய்கிறேன்















Thursday, 29 June 2017

கற்றுக்கொள்ள நிறையவே இருக்கு .......

கடந்த வாரம் ஆட்டோவா பேங்க் தெருவில் இருக்கும் துர்க்கை கோவிலுக்கு போயிருந்தோம். வட இந்தியர்கள் நிர்வாகத்தில் இருக்கும் கோவில். வீட்டை கோவிலாக மாற்றியிருக்கிறார்கள். பெரிய ஹால் ஒன்றில் பிராதன கடவுளாக  துர்க்கை , அருகில் கண்ணன் ருக்மிணி, சிவன் பார்வதி, ஆஞ்சநேயர் என்று கடவுள்கள். உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்து முடிந்ததும் கோவிலில் இருக்கும் வட  இந்திய நிர்வாகி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் , இங்கு எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டுவிட்டு என் பெண்ணை பார்த்து படிக்கிறாயா என்று கேட்டார். இல்லை , வேலை பார்க்கிறேன் என்றாள் அவள்.எங்கு படித்தாய் , என்ன படித்தாய்  என்று விபரங்கள் கேட்ட அவர் , கனடாவுக்கு நீ  வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன , நீ இந்த 2 ஆண்டுகளில் இந்த மக்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டாய் என்று கேட்டார். பதிலுக்கு காத்திராமல் அவர் சொன்னார், "சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் இவர்களிடம்"
       உண்மைதான். சிரிக்க மட்டுமல்ல , இங்குள்ளவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. முதலில் நட்புணர்வு.  சாலைகளில் நடக்கும்போது எதிரில் வருபவர் நம்மை கடக்கும்  போது ஹாய் சொல்லி புன் முறுவல் பூக்கிறார்கள் . முதலில் எனக்கு புரியவில்லை. அதன் பின் என்  பெண் விளக்கினாள் , நட்பு காட்ட அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதை அழகாக வலியுறுத்துகிறார்கள். அதேபோல் தான் கடைகளுக்கு சென்றாலும். அங்கு நிற்கும் விற்பனை பிரதிநிதிகள் அனைவரும் ஹாய் , குட் டே ,ஹொவ் ஆர் யு என்கிறார்கள். கடைக்குள் நுழைபவர்கள் எல்லோருமே அவர்களது வணக்கங்களை ஏற்று கொண்டு பதிலளிக்கிறார்கள்.
  இந்த இடத்தில் நம்மூர்  பற்றி சொல்லியே தீர வேண்டும். சென்னையில் தி நகரில் சரவணா ஸ்டோர்ஸ் சென்னை சில்க்ஸ் ஷோரூம்களில் நுழைவிடம் அருகே கடை விற்பனை  பிரதிநிதிகள் நின்று கொண்டிருப்பார்கள். "வாங்க மேடம், வணக்கம்  மேடம், என்ன பார்க்கப் போகிறீர்கள் மேடம்" என்று பவ்யமாக கேட்பார்கள். அவர்களுக்கு எத்தனை பேர் நின்று பதில் சொல்லியிருக்கிறோம்? பதில் சொல்ல வேண்டாம், ஒரு புன்முறுவல்? பெரும்பாலும் ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு என்ன வாங்கப் போறேன்னு உன்கிட்டே சொல்லனுமா, எனக்கு தெரியும் எங்கு எது இருக்கும்னு என்று சொல்லுவது போல ஒரு லுக் விட்டு செல்லுவோம். அப்பிடி யாராவது நின்று பதிலளித்தால் , "நின்னு பதில் சொல்றியா அவர்களுக்கு,  நீ பதிலுக்கு விஷ் பண்றியா, ரொம்ப முக்கியம்" என்று பெரும்பாலும் பலர் சொல்லி  கிண்டலடிப்பார்கள். அலுவலகங்களிலேயே கூட  ஒருவர் விஷ்  பண்ணினால் , பதிலுக்கு சிலர் விஷ்  பண்ண மாட்டார்கள். மேலதிகாரிகளில் பலர் இப்படி இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு இங்கு இது  ஆச்சர்யமாக இருந்தது.
  சாலைகள் கடைகள் மட்டுமல்ல; அபார்ட்மெண்ட்களிலும்இதை  பார்க்கிறேன்.  நாங்கள் இருக்கும் அபார்ட்மெண்டில் பல நாட்டை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். லிப்ட்டிலோ அல்லது லாபி கதவு அருகிலோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள நேர்ந்தால்,  ஹாய் என்று  சொல்லி ஒரு புன்முறுவல் அவர்களிடமிருந்து நிச்சயம் வரும்.
  அடுத்தது வரிசை . எங்கு சென்றாலும் வரிசைதான். இடித்துக்கொண்டு முன்னால் செல்வது என்பது அறவே கிடையாது.ஆட்டோவாவில் எனது பஸ் பயணங்கள் பற்றி ஆரம்ப பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.   பஸ் நிறுத்தத்தில் பஸ் வரும் வரை நின்றுகொண்டு , அங்கிருக்கும் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு இருப்பவர்கள் பஸ் வந்து நிறுத்தத்தில் நின்றதும் ஒரு வினாடியில் வரிசையாக நின்றுவிடுகிறார்கள் பஸ்ஸில் ஏறுவதற்கு, இறங்குபவர்கள் இறங்கும் வரை பொறுமையாக வரிசையில் நின்று கொண்டிருந்துவிட்டு அதன் பின் ஒருவர் பின் ஒருவராக ஏறி டிக்கெட் மிஷினில் கார்டை பன்ச் செய்து அல்லது காசு போடும் மிஷினில் காசு போட்டு டிக்கெட் கிழித்து எடுத்துக்கொண்டு இருக்கையில் சென்று அமர்கிறார்கள்.
   இந்த இடத்திலும் நமது ஊர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது. சென்னையாக இருந்தாலும் சரி, பிற ஊர்களாக இருந்தாலும் சரி . பஸ்சில் ஏறுவதற்கென்று ஒரு தனி சாமர்த்தியம் தேவை. எனக்கு அந்த சாமர்த்தியம் இல்லை என்பதால்தான் எப்போதும் ஆட்டோவில் பயணிப்பேன். அதுவும் திருச்சியில் நான் இருந்த ஒரு ஆண்டில் பஸ்சை பார்த்து பயந்தே இருக்கிறேன். திருவானைகாவலிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பயணிக்கும், பின் அங்கிருந்து திரும்பி வரும் பயணம் எனக்கு மிகுந்த சோதனை மிகுந்ததாக அமைந்ததால் சென்னையை போலவே ஆட்டோவையே அங்கும் பயன்படுத்திக்கொண்டேன். பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், ஏறுபவர்கள் பஸ் படிக்கட்டை சூழ்ந்து கொள்வார்கள். இறங்குபவர்கள் "இறங்க விடுங்க, தள்ளி நில்லுங்க" என்று குரல் கொடுப்பார்கள் . ஏறுபவர்களில் சிலர், "இறங்கறதுக்கெல்லாம் காத்துகொண்டு இருக்க முடியாது, ஏறு ஏறு  என்று தன்னுடன் சேர்ந்து ஏறுபவர்களை அவசர படுத்துவார்கள். ஆக ஏறுவதும் இறங்குவதும் ஒரே சமயத்தில் அந்த குறுகிய இடத்துக்குள் நடக்கும். விழுந்து விடாமல், தடுமாறாமல் ஏறி இறங்கி விட்டால் நீங்கள் சாமர்த்திய சாலிகள்தான். அதற்குள் பஸ் நடத்துனர் விசில் ஊதிவிட்டால் அவ்வளவுதான்,
     இதேபோல்தான் திருவண்ணாமலை ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களிலும் நான் பஸ் ஏறுவதில் அவதி பட்டிருக்கிறேன். திருவண்ணாமலைக்கு பகவான் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமம் செல்லும்போது கோயம்பேட்டில் பிரச்னை இருக்காது. சென்னைக்கு திரும்பும்போது திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் சென்னை  பஸ்களில் ஏறுவதற்கு போட்டியே நடக்கும். அதனால் டோக்கன்  வாங்கும் முறையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். அப்படியும் போட்டா போட்டி இல்லாமல் இல்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிடும் ஸ்ரீபெரும்புதூர். . ஸ்ரீ ராமா நுஜரையும்  ஆதிகேசவ பெருமாளையும் சேவித்துவிட்டு   ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிறுத்தம் வந்தால் ஒரு பெரும் ஓட்டப்  பந்தயத்தையே பார்க்கலாம். அதுவும் பள்ளிக்கூடம் விடும் சமயமாக இருந்துவிட்டால் அதாவது பிற்பகல் 4 மணிக்கு மேல் என்றால் பஸ்ஸில் ஏறும்  சாமர்த்தியம் இல்லாதவர்கள் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இதனை வேடிக்கை பார்க்கலாம். பள்ளி மாணவர்கள் பஸ்சை பார்த்ததும் அது நிற்பதற்குள் ஓடி வந்து முண்டியடித்துக்கொண்டு ஏறுவதும் பல  மாணவர்கள் படிக்கட்டில் அனாயசமாக தொங்கிக்கொண்டு நிற்பதும், சிலர் வெளியில் இருந்துகொண்டே பஸ் ஜன்னல் மூலம் பையை இருக்கையில் தூக்கி போட்டு இருக்கையை "புக்" செய்து கொள்வதும் கண்கொள்ளா காட்சி. இதையெல்லாம் பார்த்து பழக்கப் பட்டதால் தான் கனடாவின் வரிசை கலாசாரம் எனக்கு ரொம்ப பிடித்துப்போனது. ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. ஏன் நம்மாலும் வரிசையாக நின்று ஏற முடியாதா?  ஏன் முடியாது? ஆனால் நமக்கு மனமில்லை.
    வரிசை கலாசாரம் என்பது கனடாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. பல்பொருள் அங்காடிகளில்   வாடிக்கையாளர்கள் அவரவர் வாங்கும் சாமான்களுக்கான பில்லை  அவர்களேதான்  போட்டுக்கொள்ள வேண்டும்.  எல்லோருமே கார்டு வைத்திருக்கிறார்கள். ஒரு வாடிக்கையாளர் அவர் வாங்கிய சாமான்களுக்கு  பில் போடுகிறார் என்றால், அவர் சாமான்களை ஸ்கேனில் காட்டி கம்ப்யூட்டரில் விலை வந்து மொத்தம் எவ்வளவு பணம் என்று வந்ததும், அருகில் இருக்கும் மிஷினில் கார்டு சொருகி பணம் எடுக்கப்பட்டதும், சாமான்களை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி அந்த இடத்தை விட்டு நகர ஆரபித்ததும் தான் வரிசையில் இருக்கும் அடுத்த வாடிக்கையாளர் அங்கு வருகிறார். வரிசையில் நில்லுங்கள் என்று யாரும் அங்கு நின்று யாருக்கும் சொல்வதில்லை .  நேரம் ஆகிவிட்டது, எவ்வளவு  நேரமாக பில் போடுகிறீர்கள் என்று நிறைய சாமான் வாங்கி பில் போடுபவரை பார்த்து யாரும்  முகம் சுளிப்பதில்லை. பொறுமை .பொறுமை காட்டுகிறார்கள்.
  அதே போல் தான் சிக்னல்களிலும். ஒரு போக்குவரத்து விதி மீறல்கள் இல்லை. எந்த சிக்னல்களிலும் போலீஸ்காரர்கள் இல்லை. சிக்னலுக்கு அருகில் போலீசும் நிற்கும் ஒரே இடம் சென்னை  மட்டும்தான் என்று நினைக்கிறேன். அப்படியும் எத்தனை விதி மீறல்கள் ; எத்தனை "சாவுகிராக்கி, வீட்டுல சொல்லுகினு வந்துட்டியா " என்கிற வசைகள் திட்டுக்கள்.
   ஒருவரை நட்புடன் பார்ப்பதும்  பொறுமை காப்பதும் வரிசை கலாசாரத்தை  பின்பற்றுவதும் ராக்கெட் அறிவியல் அல்ல. இதற்கு மனம் இருந்தால் மட்டும் போதும் . பின்பற்றலாம்.

   . 

Tuesday, 20 June 2017

இந்தியர்கள் என்றாலே பெருமைதான் !

இன்று ஆட்டோவா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாண்டு பட்ட மேற்படிப்பை ஒன்றரை ஆண்டிலேயே ( இங்குள்ள பல்கலைக்கழகங்களில் இந்த மாதிரி முடிக்க முடியும்)  என் பெண் முடித்து விட்டாள் . அதாவத ஒரு செமஸ்டர் பேப்பர்களை முந்தைய செமஸ்டரியியே கூடுதலாக எடுத்து படித்து தேர்வு எழுதலாம். அதனால் கடந்த ஆண்டே அவள்   முடித்து .பட்டம் பெற்று விட்டாள் . ஆனால் அவள் பட்டம் பெறுவதை பார்க்க என்னால் வர இயலவில்லை. இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவளது தோழிகள் பட்டம் பெற்றார்கள். விழாவுக்கு வரவேண்டும் என்று அவளது தோழிகள் நுழைவு சீட்டு கொண்டு வந்து கொடுத்து போயிருந்தார்கள். அதனால் நானும் என்  பெண்ணும்  சென்றோம். .        கடந்த ஆண்டு என் பெண் பட்டம் வாங்கியதை பார்க்க முடியாமல் போய்விட்டது என்கிற மனக் குறை எனக்கு இருந்தது. இன்று சென்ற போது கடந்த ஆண்டு விழா எங்கெல்லாம் நடந்தது என்று என்  பெண் எனக்கு ஒவ்வொரு இடங்களையும் காட்டி விளக்கினாள் . இந்திய மாணவர்களுக்கு பெரும்பாலும் அவர்களது பெற்றோர்கள் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருதார்கள் என்பது தெரிந்தது.  இன்று  Master of engineering , master of computer science, மற்றும் என்ஜினீரிங்கில் ஆராய்ச்சி பட்ட படிப்பு    மு டித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ஒரு நாளைக்கு நான்கைந்து துறைகளுக்கு என்று பட்டமளிப்பு விழா நான்கு நாட்களுக்கு மேல் நடக்கிறது. இன்றைய பட்டமளிப்பு விழாவில் அதிக இந்திய மாணவ ,மாணவியர்கள் இருந்தது தெரிந்தது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம். அடுத்து ஆந்திர மாணவர்கள். தமிழ் ஒரு 10 பேர் இருப்பார்கள். வந்திருந்த பெற்றோர்களில் சிலர் புடவை அணிந்து இருந்ததை வைத்து அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்ததது.
  என்  பெண் அவளது தோழிகளுக்கு என்னை அறிமுகப் படுத்தி வைத்தாள் . அவர்களது பெற்றோர்களும் அறிமுகமாக ,கை  குலுக்கல்கள், வாழ்த்துக்கள் புகைப்படங்கள் என்று அரங்கத்திற்கு வெளியே ஒரே கலகலப்பு. அவளுடன்  ஒன்றாக படித்த மாணவர்கள் என்னை அறிமுகப் படுத்தியதும் கை குலுக்கியதும் தடக் தடக்கென்று குனிந்து  என் காலைத்தொட்டு வணங்கியது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது . வயதில் பெரியவர்களை சிறியவர்கள் காலை தொட்டு வணங்கி ஆசி பெறுவது சகஜம்தான். ஆனால் இந்த மாதிரி பலரும் கூடியிருக்கும் இடத்தில்கல்வி நிறுவனத்தில்  தயக்கமின்றி அவர்கள் மரியாதை காட்டியது , வெளிநாட்டில் படித்தாலும் நமது கலாச்சாரத்தை  அவர்கள் மறக்கவில்லை என்பதை காட்டியது. எனக்கு நம் இந்தியாவை நினைத்து பெருமையாக இருந்தது. என் பெண்ணின் தோழிகளில் ஒருத்தி  நான் எனது பெண்ணின் பட்டமளிப்பு விழாவிற்கு வர முடியாததால் அங்கி அணிந்து அவளை நான் பார்க்கவில்லையே என்று தான் அணிந்திருந்த அங்கியை என்  பெண்ணுக்கு அணிவித்து "ஆன்டி இப்படித்தான் போன வருடம் அக்ஷ்யா அணிந்து பட்டம் பெற்றாள்  என்று சொல்லி எங்கள் இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்து தள்ளி விட்டார்கள்.பின் சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு நாங்கள் கிளம்பினோம்.
  லிப்ட்டில் நாங்கள் உள்ளே நுழைந்தபோது பல்கலைக்கழக டீனும் அங்கிருந்தார். .ஹய்  என்றவர் , என்னை பார்த்து நீங்கள் இவளது அம்மாவா என்றார். ஆம் என்றேன். எப்பிடி இருந்தது  விழா /என்று கேட்டவர் நீ எந்த துறையில் பட்டம் பெற்றாய் என்று ஏன் மகளிடம்  கேட்டார்.. "அவள் நான் சென்ற ஆண்டே பட்டம் பெற்று விட்டேன், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்றாள் . அப்படியா, இப்போது வேலை பார்க்கிறாயா, குட்  என்றவர், என்னை பார்த்து நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா என்று கேட்டார். ஆம் என்றேன். எந்த கூட்டத்திலும் நம்மை எளிதில் கண்டு பிடித்துவிட முடியும் !!!!
  

Thursday, 15 June 2017

cooking is fun

கனடாவில் எனது குக்கிங் அனுபவங்களை பற்றி சொல்லியே தீர வேண்டும். சமையல் அனுபவம் வேடிக்கையானதாக இருக்கிறது இங்கு. அபார்ட்மெண்ட்களில் எல்லா வீடுகளிலும்  மேல் கூரையில் தீ எச்சரிக்கை மணி எனப்படும் Alarm இருக்கிறது. அடுப்பு மின்சார அடுப்பு . அடுப்பில் வைத்திருக்கும் பாத்திரத்திலிருந்து கொஞ்சம் புகை வந்தால் போதும் , அலாரம் அடித்துவிடும். வீட்டிலிருக்கும் அலாரம் அபார்ட்மெண்ட் கட்டுப்பாடு அறையுடன் இணைக்கப் பட்டிருக்கும். நாம் அடுப்பை அணைக்காமல் (அல்லது அலாரம் அருகே சென்று  ஒரு துண்டை  வைத்து அதற்க்கு வீசி விடுவது போல் வீசினால் அது அடிப்பதை நிறுத்தி விடும் . சில நிமிடங்கள் கழித்து அடுப்பில் நமது வேலையை மீண்டும் தொடரலாம்).  தொடர்ந்து பாத்திரத்திலிருந்து புகையோ ஆவியோ வந்து கொண்டிருந்தால் அலாரம் தொடர்ந்து அடிக்கும் அபார்ட்மெண்ட்டிலிருந்து தீ அணைக்கும் மைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுவிட்டால் அடுத்த  ஐந்தாவது நிமிடத்தில் டிங் டிங் என்று மணி அடித்தவாறு 3 தீ அணைக்கும் வாகனங்கள் தீ அணைப்பு வீரர்களுடன் வந்து விடும் . இதை என்  பெண் முதலிலேயே சொல்லியிருந்தாள் . பல்கலை கழக மாணவியாக இருந்த சமயத்தில் பிற மாணவிகளுடன் வீட்டை பகிர்ந்துகொண்ட காலத்தில் ஒருவர் சமைக்கும்போது மற்றொருவர் அலாரத்தை கவனித்து கொள்வார்கள் ;அதற்கு வீசி சிச்ருஷை செய்வார்கள் என்பதை என்  பெண் சொல்லியிருந்தாள் .
   இருந்தாலும் நேரிடை அனுபவம் இப்போதுதான்.  என் பெண்  அலுவலகம் சென்ற பின் நான்  சமைக்க ஆரம்பித்த போது தான் சிரமம் தெரிந்தது. இப்போது இந்த சிரமம் வேடிக்கையாகிவிட்டது. குழம்பு நன்கு கொதிக்கட்டும் என்று விட்டால் நல்ல வாசனையுடன் கொதிக்கும்போது "பிங்   பிங் " என்று அலாரம் அடித்து விடும். இத்தனைக்கும் புகைபோக்கி எனப்படும் சிம்னியை "ஆன்" செய்துவிட்டுத்தான் சமையல் ஆரம்பிக்கிறேன்.துண்டை எடுத்து அதற்கு  வீசி விட்டால் அலாரம் நின்று விடும். இருந்தாலும் அந்த பிங்  பிங்  சப்தம் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துவது உண்மைதான். அதிலும் குறிப்பாக கடுகு தாளித்து விடுவது ஒரு பெரிய காமெடி. கடாயை காய விட்டு அடுப்பை அணைத்து பின் எண்ணெய் விட்டு சில வினாடிகள் கழித்து அடுப்பை அணைத்து அதன் பின் கடுகு , இன்ன பிற சாமான்கள் போட்டு அது சரியாக வெடிக்காவிட்டால் மீண்டும் அடுப்பை ஆன் செய்து ... முதலில் சலிப்பாக இருத்தது இப்போது வேடிக்கையாகிவிட்டது. இதே போல்தான் தோசை வார்த்தலும் . இரண்டு தோசை வார்த்து முடிக்கும்போது பிங் ..பிங் அடித்துவிடும். அடுப்பை அணைத்துவிட்டு ஒரு நிமிடம் கழித்து மீண்டும்  அடுப்பை ஆன் செய்து அடுத்த 2 தோசைகளை வார்க்க வேண்டும்.அதற்கு  பேசாமல் இட்லி செய்து விடலாம் என்று தோன்றும். சப்பாத்தி கேட்கவே வேண்டாம். ஒருவர் சப்பாத்தி பண்ணவேண்டும், மற்றொருவர் அலாரம் பக்கத்தில் அதற்கு "சிச்ருஷை" செய்ய தயாராக நிற்க வேண்டும்.
     இந்த இடத்தில் அரசாங்கத்தின் பொறுப்புணர்வு எச்சரிக்கை உணர்வை சொல்லியே ஆக வேண்டும் கட்டிட கட்டுமாணத்தில் அதிகம் மரங்கள் பயன்படுத்தப்படுவதால்  கட்டிடங்களில் தீ பிடித்துவிடக் கூடாது என்பதில் அரசு ரொம்ப கவனமாக இருக்கிறது. அனைத்து வீடுகளிலும் தீ எச்சரிக்கை மணி பொறுத்த வேண்டும் என்பது கட்டாயம். 5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து தீ எச்சரிக்கை மணி அடித்தால் உடனே தீயணைப்பு வண்டிகள் தீயணைப்பு வீரர்களுடன் வந்து   விடுகிறது என்பது அரசாங்கம் எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த இடத்தில் நம்மூர் சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்து பற்றி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
  வீடுகளில் புகை வரக் கூடாது என்பதால் வீட்டுக்குள் யாரும் சிகரெட் புகைக்க முடியாது. புகை பிடிப்பவர்கள் பால்கனியில் அல்லது கட்டிடத்திற்கு வெளியேதான் வந்துதான் புகைக்க முடியும்.
   வீடுகளில் கடவுள் படங்களுக்கு முன் ஊதுபத்தி தசாங்கம் ஏற்ற முடியாது. ஏற்றினால் பிங் .. பிங்  தான். ஆனால் விளக்கு ஏற்ற முடிகிறது. வசந்த காலம் ,கோடை காலத்தில் சாலையோரங்களில், அபார்ட்மெண்ட் களுக்கு வெளியே பசுமை பசுமை அப்படியொரு பசுமை. பல நிறங்களில் இலைகள் இருக்கும் செடிகளையும் பார்க்க முடிகிறது. அதை தவிர பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சாலைகளில் அரசாங்கமும்  அபார்ட்மெண்ட்களில் ரெண்டல் நிர்வாகமும் இந்த செடிகள் பூக்கள் வளர்ப்பு பணியை செய்கின்றன. அழகுக்காக வளர்க்கப்படும் பராமரிக்கப்படும் செடிகள் ,பூக்கள்.  பூக்களை  பறிக்கக் கூடாது என்பது விதி .பூக்களை பறிக்காதீர்கள்  என்றெல்லாம் எழுதி போடவில்லை . எல்லோரும் விதிமுறைகளை மதிக்கிறார்கள்.
 பல வண்ண இலைகளுடன் கூடிய  சாலையோர செடிகள் 

      வீட்டில் கடவுள் படங்களுக்கு  பூக்கள் வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை  .அபார்ட்மென்ட்டாக இல்லாமல் தனி வீடாக இருந்தால் நாமே  வீட்டுக்கு வெளியே  செடி வளர்த்துக்கொள்ளலாம். .அபார்ட்மெண்டில் அது  முடியவில்லை. வீட்டை சுற்றி எங்கும் பூக்கள் . ஆனால் அந்த பூக்களை தொட முடியாது. இதை பார்க்கையில் எனக்கு ஆங்கில கவிஞர் சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ்ஜின் "The Rime of the Ancient Mariner"   செய்யுளில்  வரும் "water water everywhere, nor any drop to drink" என்கிற வரிகள் தான்  நினைவுக்கு வருகிறது!!!!!!