Total Pageviews

Tuesday, 18 July 2017

கோபுர தரிசனம் ... கோடி அழகு


கடந்த வார கடைசி மிக சுவாரசியமாக கழிந்தது . கனடாவின் இரண்டு பிரமிப்புகளை பார்த்தேன். ஒன்று கனடா நேஷனல் டவர் அதாவது சி.என் .டவர். மற்றொன்று நயாகரா நீர்வீழ்ச்சி.

முதலில் சி.என் டவர் அனுபவம் பற்றி

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து தெரியும்
CN TOWER
கனடா செல்பவர் எவரும் தவறாமல் பார்த்து  பிரமிப்பதில்  CN Tower ஒன்று. டொரோண்டோ டௌன்டௌனில் ரயில்வே நிலையத்தை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடம் 1815.3 அடி அதாவது 553.3 மீட்டர் உயரமானது. கனடியன் நேஷனல் என்கிற ரயில்வே நிறுவனம் இதை 1976ல் கட்டி முடித்தபோது இதுதான் உலகின் மிக உயரமான கட்டிடம் என்கிற பெயரை பெற்றிருந்து. . ஆனால் 2010ல் துபையில் கட்டப்பட்ட பர்ஜ் கலீபா (2717 அடி ) உலகின் மிக உயரமான கட்டிடடம் என்கிற பெயரை தட்டி சென்றது.
Look out பகுதியிலிருந்து Toronto city 
டொரோண்டோ அருகே இருக்கும் ஏஜாக்ஸ் ரயில்வே நிலையத்திலிருந்து சி என் டவர் இருக்கும் டௌன்டவுன் பகுதிக்கு வர ரயில் பயணம் ஒரு மணி நேரம். நாங்கள் ரயிலில் பயணித்தோம். ரயிலே பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தது. அங்கும் மாற்று திறனாளி களுக்கென்று , குழந்தைகளை பிராமில் கூட்டிக்கொண்டு வருவோருக்கென்று தனியாக இருக்கைகள் ஒவ்வொரு பெட்டி யிலும் இருக்கிறது. ரயில், நிலையத்தில் நின்றதும் ரயில் பணியாளர் ஒரு பலகையை நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே வைக்கிறார். சக்கர நாற்காலியில் வருபவர்கள் குழந்தைகளை பிராமில் கூட்டிக்கொண்டு வருபவர்கள் முதியவர்கள் ஏறுவதற்கு  இறங்குவதற்கு இவ்வாறு வசதி செய்து தருகிறார்கள். இந்த வசதி ஒவ்வொரு ரயிலிலும் மூன்று இடங்களில் இருக்கிறது. அனைவரும் ஏறியதும் ஒரு அறிவிப்பு வருகிறது "இப்போது கதவு மூடப்படுகிறது. யாரும் கதவருகே நிற்க வேண்டாம் " . அறிவிப்பு முடிந்ததும் ரயில் கிளம்புகிறது.

SKYPAD பகுதியிலிருந்து தெரியும்
விண்ணைத்தொடும் கட்டிடங்கள்  
அழகான அந்த பயணம் ஒரு மணி நேரம் தொடர்ந்தது. ரயில் நீளமான ரோஜ் நதியை கடந்து நகரின் பல இடங்களை தாண்டி யூனியன் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. எனக்கு கனடாவின் ஒவ்வொரு பகுதி அழகையும் நேர்த்தியையும் பார்த்து அனுபவித்து ரசிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் பஸ், ரயில் நீண்ட தெருக்கள் வழியாக செல்வது என்பதையே நான் விரும்புகிறேன். சுத்தமாக இருக்கும் தெருக்களில் நடப்பதே ஒரு அனுபவம்

ரயிலில் இருந்து இறங்கியதும் ரயில் நிலை யத்தையும் சி.என் டவர் இருக்கும் பகுதியையும் இணைக்கும் SKYWALK என்கிற நடைபாதைக்கு செல்லும் வழி என்கிற அறிவுப்பு பலகையை பார்த்தாலும் அந்த வழியை திரும்பும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக சிஎன் டவர் செல்ல முடிவு செய்தோம். சாலையில் கால் வைத்ததுமே பிரமிப்பில் ஆழ்ந்து விட்டேன். யாரோ நீண்ட நீண்ட தூண்களை நட்டு வைத்து போல விண்ணை தொடும் கட்டிடங்கள். நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கிறது. பிரமிப்புடன் நடந்தோம். சில மீட்டர்கள் நடந்ததும் சிஎன் டவர் முழுமையாக தெரிந்தது. நடை பாதையில் நின்றுகொண்டு CN Tower பார்த்தால் தலை சுற்றுகிறது. டவர் லேசாக அசைவது போல் ஒரு உணர்வு வருகிறது.

அதன் பிறகு அங்கு சென்று உள்ளே செல்ல டிக்கெட் வாங்கினோம். வார கடைசி என்பதால் நல்ல கூட்டம். வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பாதுகாப்பு சோதனைகள் முடித்து Tower செல்லும் வரிசைக்கு வந்து லிப்ட் அருகே செல்லுவதற்கு மட்டும் இரண்டு மணி நேரம் ஆகிறது. Tower உள்ளே சென்று பார்க்க கண்ணாடி சுவர் கொண்ட 6 லிப்ட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு  லிப்ட்டிலும் டவர் பற்றிய தகவல்கள் சொல்ல ஒரு வழிகாட்டி நிற்கிறார். 1136 அடி அதாவது 346 மீட்டர் வரை லுக் அவுட் லெவல் . Tower வெளியே தெரியும் அழகான ரம்மியமான டொரோண்டோ நகரை அதன் வானுயர கட்டிடங்களை ஓடும் ரோஜர் நதியை, அருகே இருக்கும் உள்ளூர் சிறிய விமான நிலையத்தை, சாலைகளில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களை நதிக்கு நடுவே இருக்கும் குட்டி தீவை பார்க்கலாம். 1136வது அடியில் லிப்ட் நிற்கிறது. லிப்ட்டில் வரும்போது விமானம் கிளம்பும்போது நமக்கு காது அடைப்பு ஏற்படுவது போல காது அடைக்கிறது. லிபிட்டிலிருந்து பக்கவாட்டில்  பார்க்க  சற்று பயமாகவும் இருக்கிறது. லுக் அவுட் லெவல் வந்ததும் லிப்ட் திறந்துகொள்ள நாம் வெளி வருகிறோம். நம்மை சுற்றி கண்ணாடி சுவர்கள். சுவர்கள் அருகே நின்று அமர்ந்து பார்த்து பார்த்து ரசிக்கலாம்.மனிதன் எவ்வளவு அழகை உருவாக்கி ரசிக்க வைக்கிறான் என்று பிரமித்து போகலாம் . கண்ணாடி சுவர் வழியே வாகனங்கள் தீப்பெட்டி தீப்பெட்டிகளாக தெரிகின்றன. விமான நிலையத்தில் நிற்கும் விமானங்கள் குழந்தைகள் விளையாடும் விமான பொம்மைகள் போல் காட்சி அளிக்கின்றன. சுவர் அருகே சென்று பார்க்கும்போது கால்களில் நடுக்கம் வருகிறது. நமது ஊர் தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவர்கள் தேவையே இல்லாமல் அடிக்கடி பயன் படுத்துவார்களே , "mind blowing " என்று, அந்த mind blowing கின் உண்மையான அர்த்தம் இங்குதான் உணரப்படுகிறது. லிப்ட் மூலமாக லுக் அவுட் பகுதி செல்வதற்கு 58 வினாடிகள் ஆகின்றன.

ஒவ்வொரு கண்ணாடி சுவரின் எடையும் 448 கிலோ . ஏழு சுவர்கள் இருக்கின்றன. அங்கிருந்து ஒரு 10 படிகள் ஏறி சென்றால் கண்ணாடி தரை (glass floor ) இருக்கிறது அதாவது 256 சதுர அடிக்கு கண்ணாடியால் ஆனது 342 வது மீட்டரில் அதாவது 1122 வது அடியில். இருக்கிறது கண்ணாடி தரை. கண்ணாடி தரை மீது நின்று குனிந்து பார்ப்பதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். நான் பயந்து நடுங்கினேன். கண்ணாடி மீது கால் வைக்கவே பயமாக இருந்தது. சிறுவர்கள் இளம் வயதினருக்கு பயம் தெரியவில்லை. என் பெண் அதில் படுத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டாள் ,. சிறுவர்கள் குதித்தார்கள். சிலர் குழந்தைகளை அதில் விட்டு தவழ்ந்து வர வைத்தார்கள். கண்ணாடிக்கு கீழ் குனிந்து பார்த்தால் கட்டிடங்கள் சாலை, வாகனங்கள் நன்கு தெரிகிறது. சிலிகா அல்லது சிலிக்கன் dioxide இல் செய்யப்பட்ட கண்ணாடி என்பதால் அது அதிக வலுவானது: கட மான் என்று தமிழில் சொல்லப்படும் 35 moose விலங்குகள்   ஒரே நேரத்தில் ஏறி நின்றால் கூட அது தாங்கும் என்று இந்த கண்ணாடி தரை பற்றி அங்கு எழுதி போடப்பட்டிருக்கும் விளக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கண்ணாடி தரை பிரமிப்புடன் நின்று விடவில்லை சிஎன் டவர். அடுத்தது அதற்க்கு மேல் இருக்கும் skypod . 447 வது மீட்டரில் அதாவது 1465 வது அடியில் நின்று கொண்டு பார்க்கலாம் டொரோண்டோ நகரை. அது மட்டுமல்ல , வானிலை மோசமாக இல்லாவிட்டால் அங்கிருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நயாகரா நீர் வீழ்ச்சியையும் பார்க்கலாம் என்று சொன்னார்  அந்த வழிகாட்டி.. skypod செல்வதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கண்ணாடி தரை பார்த்தபின் அங்கிருந்து வேறொரு லிப்ட் மூலமாக skypod செல்ல வேண்டும். அங்கு இன்னும் சாய்வாக நின்று பார்க்கும்படி இருக்கிறது. கால்கள் இன்னும் நடுங்குகிறது.


GLASS FLOOR பகுதியில்
குழந்தைகள் ஜாலி 
சி என் டவர் என்றால் பல மாடிகள் கொண்ட கட்டிடம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன் . மாடிகள் அல்ல. தனி தனியாக மாடிகள் என்பது கிடையாது. எத்தனை மாடிக் கட்டிடம் என்று அதனை சொல்ல முடியாது. தனியாக தளங்கள் இல்லை. சி என் டவர் என்பது ஒரு structure , அதாவது வடிவம். அமைப்பு.உச்சிக்கு செல்ல படிகள் இருக்கின்றன. 1776 படிகள். லிப்ட் இல்லாமல் படிகளில் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும். லுக் அவுட் , கண்ணாடி தரை,  skypod பார்த்து மீண்டும் கீழே இறங்கி வருவதற்கு மொத்தம் 2 மணி நேரம் ஆகிறது. டவர் பார்த்துவிட்டு கீழே வந்து மீண்டும் மேலே அண்ணாந்து பார்த்தால் பிரமிப்பு கூடுகிறதே தவிர குறையவில்லை.

 அடுத்து நாயகராவில் சந்திப்போம்





No comments:

Post a Comment