Total Pageviews

Tuesday, 4 July 2017

Sri Ramanujar - The Great Spiritual Personality-




ஸ்ரீ ராமானுஜர் பற்றி சரணாகதம் ஜூன் மாத இதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை (3 வது பகுதி)






சரணாகதம் ---- கட்டுரை


ராமானுஜர் 3 வது பகுதி


வாழி ராமானுஜர் வாழி எதிராசர்


எழுதியவர்: பானுமதி கிருஷ்ணஸ்வாமி சென்னை


ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்ததையும் அரங்கன் அவரை கோவிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள சொன்னதையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.


ராமானுஜரை ஒரு சிறிய வட்டத்தில் அடக்க முடியாது. பன்முகம் கொண்டவர். அவர் ஒரு சிறந்த பக்தர், உயர்ந்த ஆச்சார்யர், சிறந்த நிர்வாகி. பேரறிஞர். தத்துவவாதி. சிறந்த வாதத்திறன் கொண்டவர். ஆன்மிக குரு. மக்களை தன் பக்கம் இழுக்கும் வசீகரமிக்க தலைவர். கருணையின் வடிவம். சிறந்த சமூகப் பணியாளர். சிறந்த சீர்திருத்த வாதி


இன்று சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றால் அவர் மேலாண்மை கல்லூரியில் படித்தவராக இருக்க வேண்டும். ஆனால் ராமானுஜர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே மிகப் பெரிய கோவிலை சிறப்பாக நிர்வகித்தார். அவர் கோயில் நிர்வாகத்தை எப்படி நடத்தினார் என்பது மிகவும் சுவாரசியமானது.

சாதி வேறுபாடுகள் பார்க்காத ராமானுஜர் அணைத்து சமுதாயத்தினரையும் கோயில் நிர்வாகத்தில் ஈடுபட வைத்தார். அது வரை கோயில் நிர்வாகம் திருவரங்கத்து அமுதனார் என்பவரிடம் இருந்து வந்தது. அவர்தான் பின்னர் ராமானுஜர் நூற்றந்தாதி இயற்றியவர். {அவருக்கு ஸ்ரீரங்கம் கோயிலின் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குள் சந்நிதி இருக்கிறது}. முதலில் ராமானுஜர் அணைத்து வேலைகளையும் மேற்பார்வையிட அகலங்கநாட் டாழ்வான் என்பவரை நியமனம் செய்தார். அவர் அந்தணர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து பத்து குழுக்களை அமைத்தார். இந்த குழுக்கள் கோயிலின் பல்வேறு பணிகளை நேரிடையாக கவனித்தது.


அர்ச்சகர்கள், விண்ணப்பம் செய்வார், ஆராதனத்திற்கு புனித நீர் கொண்டு வருவோர், பாராயணம் செய்வோர், பல்லக்கு எழுந்தருள செய்வோர், மாலை தொடுப்பவர், மடக் பள்ளியில் சமையல் செய்வோர்கள், வாத்தியம் வாசிப்பவர்கள், சமைப்பதற்கு மண்பானை செய்பவர்கள் துப்புரவு பணியாளர்கள், பெருமாளுக்கான ஆடைகள் தைப்பவர்கள் ஆடைகள் துவைப்போர், படகோட்டுபவர்கள் , சிற்பிகள், வாகனங்கள் பழுது பார்ப்பவர்கள், என்று பலரும் அந்த பத்து குழுக்களில் அடங்கினார்கள்.

அந்த காலத்தில் கடவுளுக்கு என்று பலரும் தங்களது நிலங்களை எழுதி வைப்பார்கள். அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து கோயில் நிர்வகிக்கப் படும் , நிலங்களிலிருந்து வரும் தானியங்கள் மிகப் பெரிய தானியக் களஞ்சியங்களில் கொட்டிவைக்கப் பட்டன. இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் கொட்டாரம் என்கிற பகுதியில் அந்த பிரமாண்ட களஞ்சியங்கள் இருப்பதை காண முடிகிறது. ராமானுஜர் நிர்வாக ப் பணிகளில் தனக்கு உதவ முதலியாண்டான் (அவரது சகோதரி புத்திரனான தாசரதிதான் முதலியாண்டான்} மற்றும் மற்றொரு சீடரான கூரத்தாழ்வானை அவர் வைத்துக் கொண்டார்


பெருமாளை காண வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் முறை இருந்தது. அதனால் உணவு தானியங்கள் சப்ளைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. . அரங்கனின் பெருமை பாட, ஆழ்வார் பாசுரங்கள் இசைக்க அவற்றிக்கு விளக்கம் அளிக்க , உபன்யாசங்கள் நடத்த பெரிய கூடங்கள் கட்டப்பட்டன. அதேபோல் பெருமாளுக்கு மாலை சாத்துவதற்கு பூந்தோட்டங்கள் அமைக்கப் பட்டன. கோயிலுக்கான பாலுக்காக கோ சாலைகள் அமைக்கப் பட்டன.

அனைத்து சமுதாயத்தினருக்கும் கோயில் நிர்வாகத்தில் பங்களித்து சாதி வேறுபாடுகளை களைந்தார் ராமானுஜர். அவர் அன்று எப்படி கோயிலை நிர்வகித்தாரோ அதே தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் பி ன்பற்றப்படுகிறது. இன்று நிர்வாகத்தை பகிர்ந்தளித்து சிறப்பான மேலாண்மை அதிகாரியாக திகழ்வது எப்படி என்று பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன ஆனால் ராமானுஜர் எந்த பயிற்சி வகுப்புக்கும் போகவில்லை மேலாண்மையில் பட்டம் பெறவில்லை . அவரது தலைமை பண்புகளும் மேலாண்மை சிறப்பும் இன்று அனைவரையும் ஆச்சர்யப் படுத்துகிறது. அது மட்டுமல்ல, மதம் என்பது பிரிக்கும் அம்சம் அல்ல அது அனைத்து சமுதாயத்தினரையும் இணைத்து வைத்திருக்கும் சக்தி என்பதையும் அவர் காட்டினார். பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவும் எந்த நேரத்திலும் அவர்களை அணுகவும் அவர்களுக்கு கோயில் அருகிலேயே வீடுகள் அளிக்கப் பட்டன. கோயில்களில் தினமும் ஆழ்வார் பாசுரங்கள் இசைக்கப் பட வேண்டும் என்று கொண்டு வந்தார் ராமானுஜர். . இதன் மூலம் வேதங்களின் சாரமான தமிழ் பாசுரங்களை சாமானியர்களாலும் எட்ட முடிந்தது. இன்றும் வைணவக கோயில்களில் தினமும் ஆழ்வார் பாசுரங்கள் இசைக்கப்படுகின்றன

இவ்வாறாக ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தை கவனித்து வந்தார். ஆளவந்தாரின் விருப்பத்தின் படி பெரிய நம்பி அவருக்கு த்வய மஹாமந்திரத்தை உபதேசித்தார். எட்டெழுத்து திருமந்திரத்தின் ஆழ்ந்த அர்த்தத்தை அவர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கேட்டரிய வேண்டும். அதற்காக அவர் திருக்கோஷ்டியூர் சென்றபோது நம்பிகள் அவர் மந்திரத்தை உபதேசமாக பெரும் தகுதியை பெற்றுக்கொண்டு வருமாறு சொல்லிவிட்டார். ஒரு முறை இரு முறை அல்ல. பதினேழு முறை ராமானுஜர் திருக்கோஷ்டியூர் சென்றார். ஒவ்வொரு முறையும் நம்பிகள் அவரை திருப்பி அனுப்பிவிட்டார். மனம் தளரவில்லை ராமானுஜர். இன்று போல் அந்த காலத்தில் பேருந்து வசதிகள் கிடையாது. எந்த இடத்திற்கும் நடந்தே செல்ல வேண்டும். அப்படியும் மனம் தளராமல் சலித்துக்கொள்ளாமல் திருக்கோஷ்டியூருக்கு நடையாய் நடந்தார் ராமானுஜர். கடைசியில் பதினெட்டாவது முறை திருக்கோஷ்டியூர் நம்பிகள் . ஓம் நமோ நாராயணா என்கிற எட்டெழுத்து மந்திரத்தையும் அதன் உட் பொருளையும் உபதேசித்தார். அத்துடன் அந்த மந்திரத்தை யாருக்கும் எளிதில் உபதேசிக்க கூடாது என்கிற நிபந்தனையும் விதித்தார்.


இறைவன் திருவடியை பற்றிக்கொண்ட சாதாரண தொண்டனும் முக்தி பெற வேண்டும் என்பது ராமானுஜரின் ஆசை. .நம்பிகளிடம் திருமந்திரம் உபதேசம் பெற்று திரும்பி வரும்போது அவர் திருமந்திரத்தின் வலிமை பற்றி நினைத்துக்கொண்டே நடந்து வந்தார். இந்த உலகில் இருக்கும் மக்களின் கஷ்டங்கள் பற்றி நினைத்தார். அப்போது அவருக்கு அவர்கள் மீது கருணை பெருகியது. உடனே மக்களுக்கு திருமந்திரத்தை உபதேசம் செய்து அவர்கள் பெருமாளின் கருணையையும் ஆசியையும் பெற வேண்டும் என்று ஆசை பட்டார் . உடனே அனைவரையும் கோயில் வளாகத்திற்குள் கூடுமாறு சொன்னார். ராமானுஜரை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த கூட்டம் பரவசம் அடைந்தது. தான் கூறுவது அனைவரின் காதுகளிலும் விழ வேண்டும் என்று விரும்பி ராமானுஜர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டார். "எனது உயிரை விட மேலானவர்களாக உங்களை கருதுகிறேன் . இந்த உலகின் துன்பங்கள் மற்றும் கஷ்டங்களிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். பெருமாளின் கருணையும் ஆசியும் உங்கள் மீது பட வேண்டும் என்று ஆசை படுகிறேன். நான் இப்போது திருமந்திரத்தை உங்களுக்கு உபதேசிக்க போகிறேன். நான் சொல்ல சொல்ல அதை நீங்கள் சொல்ல வேண்டும் " என்று முழங்கினார். பதினேழு முறை நடையாய் நடந்து பதினெட்டாவது முறையாக வந்து திருக்கோஷ்டி நம்பிகளிடம் தான் பெற்ற திரு மந்திர உபதேசத்தை அவர் மக்களுக்கு உபதேசித்தார். திருமந்திரம் அவர்களை அவர்களது கர்மாவிலிருந்து மீட்டு சொர்க்கத்திற்கு வழி காட்டும் என்றார். பரவசத்தில் திக்குமுக்காடிய மக்கள் அவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். கோயிலுக்கு வெளியே திருமந்திர உபதேசம் நடந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்கு கடும் சினம் ஏற்பட்டது . யாரிடமும் சொல்லக் கூடாது என்று தான் சொன்ன வார்த்தையை ராமானுஜர் மீறி விட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை


திருமந்திரம் உபதேசித்த குரு கடும் கோபத்தில் இருப்பதை அறிந்த ராமானுஜர் அவரை சென்று பார்த்தபோது தன கண் முன்னே நிற்க வேண்டாம் என்று நம்பிகள் அவரை பார்த்து சீறினார். "குருவின் வார்த்தைகளை மீறயதற்கு எனக்கு நரகம் தான் கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் தாங்கள் உபதேசித்த திருமந்திரம் இந்த மக்களுக்கு முக்தி பெற்று கொடுக்கும் . அது போதும் அடியேனுக்கு" என்று பதிலளித்தார். இதை கேட்டு நெகிழ்ந்து போன நம்பிகள் ராமானுஜரை "இப்படிப்பட்ட பரந்த நோக்கம் கொண்ட நீரே எம்பெருமானார்" என்று சொல்லி ராமானுஜருக்கு எம்பெருமானார் என்கிற பட்டத்தை வழங்கினார்.


திருமந்திரத்தை சாமானியருக்கும் உபதேசம் செய்ததன் மூலம் ராமானுஜர் இறை பக்தி இருந்தாலே ஆச்சார்யாரிடம் உபதேசம் பெறுவதற்கு அது தகுதியாகும் என்கிற புதிய வரம்பை ஏற்படுத்தினார். -

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதன் தொடர்ச்சி சரணாகதம் ஜூலை மாத இதழில் வெளிவரும் . அது வெளிவந்ததும் அதை பதிவு செய்கிறேன்















1 comment:

  1. MBA படிச்சவன் இவர்ட்ட பிச்சை வாங்கணும்.இவர் சமத்துவம் பிடித்த ஒன்று, அதை மிகவும் நம்புவவள்.பரந்த மனப்பான்மை எல்லோருக்கும் முக்தி கிடைக்க ஏற்று கொண்ட வழி.பொதுநலவாதி என பல விஷயங்கள் விவரித்த விதம் அற்புதம்.பணி தொடர வாழ்த்துக்கள்.சந்திரா.

    ReplyDelete