Total Pageviews

Thursday, 29 June 2017

கற்றுக்கொள்ள நிறையவே இருக்கு .......

கடந்த வாரம் ஆட்டோவா பேங்க் தெருவில் இருக்கும் துர்க்கை கோவிலுக்கு போயிருந்தோம். வட இந்தியர்கள் நிர்வாகத்தில் இருக்கும் கோவில். வீட்டை கோவிலாக மாற்றியிருக்கிறார்கள். பெரிய ஹால் ஒன்றில் பிராதன கடவுளாக  துர்க்கை , அருகில் கண்ணன் ருக்மிணி, சிவன் பார்வதி, ஆஞ்சநேயர் என்று கடவுள்கள். உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்து முடிந்ததும் கோவிலில் இருக்கும் வட  இந்திய நிர்வாகி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் , இங்கு எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டுவிட்டு என் பெண்ணை பார்த்து படிக்கிறாயா என்று கேட்டார். இல்லை , வேலை பார்க்கிறேன் என்றாள் அவள்.எங்கு படித்தாய் , என்ன படித்தாய்  என்று விபரங்கள் கேட்ட அவர் , கனடாவுக்கு நீ  வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன , நீ இந்த 2 ஆண்டுகளில் இந்த மக்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டாய் என்று கேட்டார். பதிலுக்கு காத்திராமல் அவர் சொன்னார், "சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் இவர்களிடம்"
       உண்மைதான். சிரிக்க மட்டுமல்ல , இங்குள்ளவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. முதலில் நட்புணர்வு.  சாலைகளில் நடக்கும்போது எதிரில் வருபவர் நம்மை கடக்கும்  போது ஹாய் சொல்லி புன் முறுவல் பூக்கிறார்கள் . முதலில் எனக்கு புரியவில்லை. அதன் பின் என்  பெண் விளக்கினாள் , நட்பு காட்ட அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதை அழகாக வலியுறுத்துகிறார்கள். அதேபோல் தான் கடைகளுக்கு சென்றாலும். அங்கு நிற்கும் விற்பனை பிரதிநிதிகள் அனைவரும் ஹாய் , குட் டே ,ஹொவ் ஆர் யு என்கிறார்கள். கடைக்குள் நுழைபவர்கள் எல்லோருமே அவர்களது வணக்கங்களை ஏற்று கொண்டு பதிலளிக்கிறார்கள்.
  இந்த இடத்தில் நம்மூர்  பற்றி சொல்லியே தீர வேண்டும். சென்னையில் தி நகரில் சரவணா ஸ்டோர்ஸ் சென்னை சில்க்ஸ் ஷோரூம்களில் நுழைவிடம் அருகே கடை விற்பனை  பிரதிநிதிகள் நின்று கொண்டிருப்பார்கள். "வாங்க மேடம், வணக்கம்  மேடம், என்ன பார்க்கப் போகிறீர்கள் மேடம்" என்று பவ்யமாக கேட்பார்கள். அவர்களுக்கு எத்தனை பேர் நின்று பதில் சொல்லியிருக்கிறோம்? பதில் சொல்ல வேண்டாம், ஒரு புன்முறுவல்? பெரும்பாலும் ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு என்ன வாங்கப் போறேன்னு உன்கிட்டே சொல்லனுமா, எனக்கு தெரியும் எங்கு எது இருக்கும்னு என்று சொல்லுவது போல ஒரு லுக் விட்டு செல்லுவோம். அப்பிடி யாராவது நின்று பதிலளித்தால் , "நின்னு பதில் சொல்றியா அவர்களுக்கு,  நீ பதிலுக்கு விஷ் பண்றியா, ரொம்ப முக்கியம்" என்று பெரும்பாலும் பலர் சொல்லி  கிண்டலடிப்பார்கள். அலுவலகங்களிலேயே கூட  ஒருவர் விஷ்  பண்ணினால் , பதிலுக்கு சிலர் விஷ்  பண்ண மாட்டார்கள். மேலதிகாரிகளில் பலர் இப்படி இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு இங்கு இது  ஆச்சர்யமாக இருந்தது.
  சாலைகள் கடைகள் மட்டுமல்ல; அபார்ட்மெண்ட்களிலும்இதை  பார்க்கிறேன்.  நாங்கள் இருக்கும் அபார்ட்மெண்டில் பல நாட்டை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். லிப்ட்டிலோ அல்லது லாபி கதவு அருகிலோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள நேர்ந்தால்,  ஹாய் என்று  சொல்லி ஒரு புன்முறுவல் அவர்களிடமிருந்து நிச்சயம் வரும்.
  அடுத்தது வரிசை . எங்கு சென்றாலும் வரிசைதான். இடித்துக்கொண்டு முன்னால் செல்வது என்பது அறவே கிடையாது.ஆட்டோவாவில் எனது பஸ் பயணங்கள் பற்றி ஆரம்ப பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.   பஸ் நிறுத்தத்தில் பஸ் வரும் வரை நின்றுகொண்டு , அங்கிருக்கும் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு இருப்பவர்கள் பஸ் வந்து நிறுத்தத்தில் நின்றதும் ஒரு வினாடியில் வரிசையாக நின்றுவிடுகிறார்கள் பஸ்ஸில் ஏறுவதற்கு, இறங்குபவர்கள் இறங்கும் வரை பொறுமையாக வரிசையில் நின்று கொண்டிருந்துவிட்டு அதன் பின் ஒருவர் பின் ஒருவராக ஏறி டிக்கெட் மிஷினில் கார்டை பன்ச் செய்து அல்லது காசு போடும் மிஷினில் காசு போட்டு டிக்கெட் கிழித்து எடுத்துக்கொண்டு இருக்கையில் சென்று அமர்கிறார்கள்.
   இந்த இடத்திலும் நமது ஊர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது. சென்னையாக இருந்தாலும் சரி, பிற ஊர்களாக இருந்தாலும் சரி . பஸ்சில் ஏறுவதற்கென்று ஒரு தனி சாமர்த்தியம் தேவை. எனக்கு அந்த சாமர்த்தியம் இல்லை என்பதால்தான் எப்போதும் ஆட்டோவில் பயணிப்பேன். அதுவும் திருச்சியில் நான் இருந்த ஒரு ஆண்டில் பஸ்சை பார்த்து பயந்தே இருக்கிறேன். திருவானைகாவலிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பயணிக்கும், பின் அங்கிருந்து திரும்பி வரும் பயணம் எனக்கு மிகுந்த சோதனை மிகுந்ததாக அமைந்ததால் சென்னையை போலவே ஆட்டோவையே அங்கும் பயன்படுத்திக்கொண்டேன். பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், ஏறுபவர்கள் பஸ் படிக்கட்டை சூழ்ந்து கொள்வார்கள். இறங்குபவர்கள் "இறங்க விடுங்க, தள்ளி நில்லுங்க" என்று குரல் கொடுப்பார்கள் . ஏறுபவர்களில் சிலர், "இறங்கறதுக்கெல்லாம் காத்துகொண்டு இருக்க முடியாது, ஏறு ஏறு  என்று தன்னுடன் சேர்ந்து ஏறுபவர்களை அவசர படுத்துவார்கள். ஆக ஏறுவதும் இறங்குவதும் ஒரே சமயத்தில் அந்த குறுகிய இடத்துக்குள் நடக்கும். விழுந்து விடாமல், தடுமாறாமல் ஏறி இறங்கி விட்டால் நீங்கள் சாமர்த்திய சாலிகள்தான். அதற்குள் பஸ் நடத்துனர் விசில் ஊதிவிட்டால் அவ்வளவுதான்,
     இதேபோல்தான் திருவண்ணாமலை ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களிலும் நான் பஸ் ஏறுவதில் அவதி பட்டிருக்கிறேன். திருவண்ணாமலைக்கு பகவான் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமம் செல்லும்போது கோயம்பேட்டில் பிரச்னை இருக்காது. சென்னைக்கு திரும்பும்போது திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் சென்னை  பஸ்களில் ஏறுவதற்கு போட்டியே நடக்கும். அதனால் டோக்கன்  வாங்கும் முறையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். அப்படியும் போட்டா போட்டி இல்லாமல் இல்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிடும் ஸ்ரீபெரும்புதூர். . ஸ்ரீ ராமா நுஜரையும்  ஆதிகேசவ பெருமாளையும் சேவித்துவிட்டு   ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிறுத்தம் வந்தால் ஒரு பெரும் ஓட்டப்  பந்தயத்தையே பார்க்கலாம். அதுவும் பள்ளிக்கூடம் விடும் சமயமாக இருந்துவிட்டால் அதாவது பிற்பகல் 4 மணிக்கு மேல் என்றால் பஸ்ஸில் ஏறும்  சாமர்த்தியம் இல்லாதவர்கள் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இதனை வேடிக்கை பார்க்கலாம். பள்ளி மாணவர்கள் பஸ்சை பார்த்ததும் அது நிற்பதற்குள் ஓடி வந்து முண்டியடித்துக்கொண்டு ஏறுவதும் பல  மாணவர்கள் படிக்கட்டில் அனாயசமாக தொங்கிக்கொண்டு நிற்பதும், சிலர் வெளியில் இருந்துகொண்டே பஸ் ஜன்னல் மூலம் பையை இருக்கையில் தூக்கி போட்டு இருக்கையை "புக்" செய்து கொள்வதும் கண்கொள்ளா காட்சி. இதையெல்லாம் பார்த்து பழக்கப் பட்டதால் தான் கனடாவின் வரிசை கலாசாரம் எனக்கு ரொம்ப பிடித்துப்போனது. ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. ஏன் நம்மாலும் வரிசையாக நின்று ஏற முடியாதா?  ஏன் முடியாது? ஆனால் நமக்கு மனமில்லை.
    வரிசை கலாசாரம் என்பது கனடாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. பல்பொருள் அங்காடிகளில்   வாடிக்கையாளர்கள் அவரவர் வாங்கும் சாமான்களுக்கான பில்லை  அவர்களேதான்  போட்டுக்கொள்ள வேண்டும்.  எல்லோருமே கார்டு வைத்திருக்கிறார்கள். ஒரு வாடிக்கையாளர் அவர் வாங்கிய சாமான்களுக்கு  பில் போடுகிறார் என்றால், அவர் சாமான்களை ஸ்கேனில் காட்டி கம்ப்யூட்டரில் விலை வந்து மொத்தம் எவ்வளவு பணம் என்று வந்ததும், அருகில் இருக்கும் மிஷினில் கார்டு சொருகி பணம் எடுக்கப்பட்டதும், சாமான்களை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி அந்த இடத்தை விட்டு நகர ஆரபித்ததும் தான் வரிசையில் இருக்கும் அடுத்த வாடிக்கையாளர் அங்கு வருகிறார். வரிசையில் நில்லுங்கள் என்று யாரும் அங்கு நின்று யாருக்கும் சொல்வதில்லை .  நேரம் ஆகிவிட்டது, எவ்வளவு  நேரமாக பில் போடுகிறீர்கள் என்று நிறைய சாமான் வாங்கி பில் போடுபவரை பார்த்து யாரும்  முகம் சுளிப்பதில்லை. பொறுமை .பொறுமை காட்டுகிறார்கள்.
  அதே போல் தான் சிக்னல்களிலும். ஒரு போக்குவரத்து விதி மீறல்கள் இல்லை. எந்த சிக்னல்களிலும் போலீஸ்காரர்கள் இல்லை. சிக்னலுக்கு அருகில் போலீசும் நிற்கும் ஒரே இடம் சென்னை  மட்டும்தான் என்று நினைக்கிறேன். அப்படியும் எத்தனை விதி மீறல்கள் ; எத்தனை "சாவுகிராக்கி, வீட்டுல சொல்லுகினு வந்துட்டியா " என்கிற வசைகள் திட்டுக்கள்.
   ஒருவரை நட்புடன் பார்ப்பதும்  பொறுமை காப்பதும் வரிசை கலாசாரத்தை  பின்பற்றுவதும் ராக்கெட் அறிவியல் அல்ல. இதற்கு மனம் இருந்தால் மட்டும் போதும் . பின்பற்றலாம்.

   . 

No comments:

Post a Comment