Total Pageviews

Sunday, 11 June 2017

Visit to the university----ஆட்டோவா(வ்) !!!

பள்ளிக்கூடமோ, கல்லூரியோ பல்கலைக்கழகமோ - கல்வி நிறுவனங்களுக்கு செல்ல எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் நாம் படித்த கல்வி நிறுவனம் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படிதான் ஒரு முறை தேவகோட்டை சென்றபோது நான் படித்த பெத்தாள் ஆச்சி பெண்கள் உயர் நிலை  பள்ளிக்கு சென்றேன். நான் படித்தபோது எனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் அங்கு இருக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் இன்று நான் நல்ல  நிலையில் இருக்க எனக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த அந்த பள்ளியை பார்க்க வேண்டும் , என் பெண் மற்றும் கணவரிடம் அந்த பள்ளியை  காட்ட வேண்டும் என்கிற ஆசையில் அங்கு   சென்றேன். பள்ளி ரொம்பவும் மாறிஇருந்தது. இருந்தாலும் அவர்களுக்கு காட்டினேன், இங்குதான் எங்கள் வகுப்பு இருத்தது, இங்குதான் கணித வகுப்பு நடக்கும், இங்குதான் ஆண்டுவிழாவுக்கு நடன பயிற்சி செய்வோம்  என்று எல்லா இடங்களையும் சுற்றி காட்டினேன். அதுபோல இங்கு கனடாவில்  என் பெண் தான் படித்த கல்லூரியை எனக்கு காட்ட என்னை ஆட்டோவா பல்கலைக்கழகத்திற்கு அழைத்து  சென்றாள் .
   ஆட்டோவா பல்கலைக்கழகம் பற்றி அவள் சென்னையில் இருக்கும்போது விண்ணப்பிக்கும்போது அவர்களது இணைய தளத்தில் பார்த்தது. நேரில் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. பல்கலைக்கழகம் பெரியது . பரந்து விரிந்து காணப்படும் பல்கலைக்கழக வளாகத்தில் கிட்டத்தட்ட 40 கட்டிடங்களுக்கு மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட 40000 மாணவர்கள் படிக்கிறார்கள். அவள் சேர்க்கைக்காக விண்ணப்பித்த போது இணையத்தில் அந்த பல்கலைக்கழகத்தை நாங்கள் பார்த்திருந்தோம். இப்போது  நே ரில் பார்த்த போது வியந்து நின்றேன். முதலில் அவள் படித்த வகுப்புகளுக்கு கூட்டி கொண்டு போய்  காட்டினாள். ஒவ்வொரு தளத்திலும் வகுப்புகளுக்கு வெளியே வராண்டாவில் நான்கு இடங்களில் காசு போட்டால் கோக் பெப்சி போன்ற குளிர் பானங்கள் வரும் மிஷின் நான்கு இடங்களில் இருக்கிறது அதேபோல் சாப்பாடு கையில் கொண்டு வருபவர்கள்  சாப்பிடுவதற்கு ஓரத்தில் வரிசையாக நீண்ட மேசை நாற்காலி போடப்பட்டிருக்கிறது. அமைதியாக படிக்க வெளியே இயற்கை சூழலில் ஸ்டோன் பெஞ்சுகள் இருந்தாலும் உள்ளே வராண்டா அருகே அறைகள் இருக்கின்றன. ஆனால்  முதலிலேயே பதிவு செய்து கொள்ள வேண்டும். இரண்டரை மணி நேரம் வரை எந்த  கவன சிதறலும் இல்லாமல் படிக்கலாம். நூலகம் இருக்கும் கட்டிடத்தில் 24x 7 ஹால் என்று ஒன்று இருக்கிறது. அங்கு இரவு பகல் முழுவதும் அமர்ந்து படிக்கலாம்.
ஆட்டோவா பல்கலைக்கழகம் 

  குளிர் காலத்தில் தேர்வுகள் நெருங்கும் சமயத்தில்  என்  பெண் சொல்லுவாள் , "இன்று பல்கலைக்கழகத்தில் 24x 7 ல் இரவு தங்கி படிக்கப் போகிறேன் "என்று. இது  பாதுகாப்பான இடம், பலரும் இரவு இங்கு தங்கி படிப்பார்கள்  என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அதனால் ஆரம்பத்தில் "வேண்டாம்மா, இரவு எதற்கு தங்க வேண்டும், வீட்டுக்கு போய்விடு என்று சொல்லுவோம். பின் அவள் அந்த இடம் பற்றி விளக்கி எங்களுக்கு புரிய வைத்தாள் .அதன் பின் தான் சரி இங்கே இரவு தங்கி படி என்றோம். அந்த இடத்தை என் பெண் எனக்கு காட்டி "அம்மா இ ங்கு நான் தங்க  நீயும் அப்பாவும்  பயந்தீர்கள் " என்று காட்டி  சிரித்தாள்.
  பல்கலைக்கழகத்தில் 24X 7 சாப்பாட்டு அறை  இருக்கிறது. அங்கு இந்தியா உள்பட உலக  நாடுகளின் உணவு வகைகள் கிடைக்கும். ஒருதடவை 9 டாலர் கொடுத்து உள்ளே போய்விட்டால் எந்த நாட்டு உணவையும் சாப்பிடலாம். சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் .ஆனால் ஒரு தடவை வெளியே வந்து விட்டால் இந்த 9 டாலர் முடிந்துவிடும் . மீண்டும் உள்ளேபோய் சாப்பிட  மற்றொரு 9 டாலர் கொடுக்க வேண்டும். very interesting place.
  பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவ மாணவிகளின் வாழ்க்கை ஒன்றும் எளிதல்ல. இந்தியா அதிலும் தமிழ் நாடு வாழ்க்கை சூழலில் வளர்ந்த மாணவிகள் அதாவது காலையில் வீட்டில் அம்மா சாப்பாடு செய்து கையில் காட்டிக்கொடுத்து, மீண்டும் மாலை கல்லூரியில் இருந்து வந்தவுடன் சாப்பாடு கொடுத்து, படிக்கும் பெண்ணை ஒரு வேலையும் செய்ய சொல்லாமல் சொகுசாக வளர்த்து விடுகிறார்கள். இங்கு வந்ததும் முதலில் தங்குமிடம், மூன்று அல்லது நான்கு மாணவிகளுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்க வேண்டும். அட்ஜஸ்ட்மென்ட் மிக அவசியம் அவரவரே சமைத்து கொள்ள வேண்டும். வேலைக்கு ஆட்கள் என்பதே இல்லாத நாடு .கடையில் சாமான் வாங்கினால் எவ்வளவு சுமையாக இருந்தாலும் கையில் தூக்கிக்கொண்டுதான் வரவேண்டும். வீட்டில் வந்து டெலிவெரி செய்வது என்பது இல்லை. பெரும்பாலும் பகுதி நேர வேலை பார்க்கிறார்கள் மாணவிகள். பீசா கடைகள் , பல்பொருள் அங்காடிகளில் வேலை . தேர்வு சமயமாக இருந்தாலும் தானே சமைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தது குளிர்.  குளிர்காலத்தில் மைனஸ்  40 வரை தட்பவெப்பம் போகிறது. ஆட்டோ கிடையாது. பஸ் ஸ்டாப் எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்துதான் போக வேண்டும். சாலையெங்கும் ஸ்நோவாக இருக்கும். பனிப்பொழிவு இருந்துகொண்டே இருக்கும். பஸ் நிறுத்தம் உள்ளே ஹீட்டர் இருந்தாலும் பஸ் நிறுத்தம் வரை நடந்துதான் போக வேண்டும். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு படிக்கிறார்கள். கஷ்டப்பட்டுதான் எல்லா மாணவ மாணவிகளும் படிக்கிறார்கள் .பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் மீது எனக்கு அதிக மரியாதை வருகிறது
  பல்கலைக்கழகத்தில் இரவு 11 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன என்பது மற்றொரு சுவாரசியமான விஷயம். சில வகுப்புகள் இரவு எட்டிலிருந்து 11 மணி வரை நடக்கிறது. அதன் பின் மாணவ மாணவிகள் பஸ் பிடித்து வீடு திரும்புகிறார்கள். எந்த பயமும் இல்லை.
  ஆட்டோவா பல்கலைக்கழகத்தை  சுற்றி பார்த்தபோது அதுவும் அந்த வகுப்புகளை பார்த்தபோது எனக்கு இந்த பல்கலைக்கழகத்தில்  படிக்க வேண்டும் என்பதை விட ஆசிரியராக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று ஆசை வந்தது உண்மை. 

No comments:

Post a Comment