அப்புசாமி பல்லைக் கடித்துக் கொண்டு 'வந்துட்டானய்யா உயிரை வாங்க' என்று எண்ணிக் கொண்டார்.
ஸிம்ஸிம் அப்புசாமியின் தலையை அன்புடன் தடவியவாறு, "அன்பரே! இந்தாரும். உமக்காகச் சிறிய பரிசு வாங்கி வந்தேன். நீரே பிரித்துப் பாரும். மகிழ்ச்சி அடைவீர்," என்றார்.
அப்புசாமி, 'ஐயாவை டியூஷன் வாத்யார் காக்கா பிடிக்கிறார் டோய்!' என்று நினைத்தவாறு பரிசுப் பொருள் பொட்டலத்தைப் பார்த்தார்.
ஒரு சிறிய சிலேட்டும் நீளமான மாவுப் பலப்பம் ஒன்றுமிருந்தது. அப்புசாமிக்கு அந்த ஸ்லேட்டை ஸிம்ஸிம்மின் தலையில் போட்டு உடைக்கலாம் போல ஆத்திரமாக வந்தது. ஸிம்ஸிம் புன்முறுவலுடன், "குழந்தாய், உனக்கு நாற்பது பக்க காப்பி நோட்டே வாங்கித் தந்திருப்பேன். பேப்பர் கிடைப்பது குதிரைக் கொம்பாயிருப்பதால் கரும் பலகை வரவழைத்தேன். டிக்டேஷன் போடுகிறேன். நேற்றுக் கற்றுத் தந்த அட்சரங்களைக் கவனமாக எழுது பார்ப்போம்."
ஸிம்ஸிம் டிக்டேஷன் போடத் தொடங்கிவிட்டார். "அலீப்ஃ, பே, தே, ஸே, ஜீம்!"
1001 அப்புசாமி இரவுகள் - பாக்கியம் ராமசாமி
எனக்கொரு கெட்ட பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு புத்தகத்தை நினைத்துக் கொண்டால் அதை படிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமாகும். திடீரென்று ஒரு புத்தகத்தை நினைத்துக் கொள்வேன் . நினைத்தவுடன் புத்தகம் கைக்கு வந்து விடுமா என்ன ?. இப்போது விரல் நுனியில் எல்லாம் சாத்தியமாகி வருவதால் அதை இணையத்தில் போய் தேடுவேன். புத்தகம் படிக்க முழுவதுமாக கிடைக்கா விட்டாலும் அது பற்றிய தகவல்கள் செய்திகள் , அதன் ஆசிரியர் பற்றிய குறிப்புகள் என்று கிடைக்குமே. அதை படிப்பேன். சில புத்தகங்களை இணையத்திலேயே இலவசமாக படிக்க முடிகிறது. அந்த மாதிரி இந்த வாரம் முழுவதும் நான் சிறு வயதில் படித்த புத்தகங்கள் பற்றி நினைத்து கொண்டிருந்தேன். . இன்று காலை இணையத்தில் எதையோ தேடியபோது அப்புசாமி டாட் காம் என்கிற இணைய தளத்தை பார்க்க நேர்ந்தது. அப்புசாமி சீதா பாட்டி என்கிற அந்த கற்பனை கதா பாத்திரங்கள் என் கண் முன் வந்து சென்றார்கள்.
அப்புசாமியும் சீதா பாட்டியும் கதைகளை அவை சித்திரக் கதைகளாக வந்த காலத்திலிருந்து படித்து வந்தவள் நான். அப்புசாமி, சீதா பாட்டி , பீமா ராவ் , ரசகுண்டு , ருக்மணி பாத்திரங்களை மறக்கவே முடியாது. அதை போலவே அதன் படைப்பாளியான பாக்கியம் ராமசாமியையும் (ஜ .ரா. சுந்தரேசன் ) மறக்க முடியாது. 1001 அப்புசாமி இரவுகள், அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும், அப்புசாமி படம் எடுக்கிறார், சீதா பாட்டியின் சபதம் , அப்புசாமியின் தாலி பாக்கியம், கமான் அப்புசாமி கமான் கதைகள் என்றும் என் மனத்தில் நிற்பவை

யானவை பள்ளி கல்லூரி காலத்திலேயே படித்திருக்கிறேன் .அவரது பட்டாம் பூச்சி (ஹென்றி ஷாரியாரின் பாபபிலான் நாவலின் மொழிபெயர்ப்பு ) நாவல் பற்றி நானும் மாலதியும் அதிகம் பேசியிருக்கிறோம். கடந்த ஆண்டு பட்டாம் பூச்சி நாவலை என் மாமா வீட்டில்பார்க்க நேர்ந்தது. மீண்டும் படிக்க ஆசை ஏற்பட்டது. அதை அவரிடமிருந்து வாங்கி வந்தேன். அதை மாலதி பார்த்துவிட்டு என்னிடமிருந்து வாங்கி சென்று முழுமூச்சாக அமர்ந்து 3 நாட்களில் அதை அவள் படித்து முடித்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அதே போல் ரா.கி யின் ப்ரொபசர் மித்ரா, அழைப்பிதழ், மூவிரெண்டு ஏழு இருபத்து மூன்றாவது படி போன்றவை குமுதத்தில் தொடக்கதைகளாக வந்த போது படித்தவை. அவற்றை மீண்டும் படிக்க ஆசைப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தக கண்காட்சியில் வாங்கினேன். எந்தக் காலத்திலும் படித்து ரசிக்கக் கூடிய நாவல்கள் அவை.


பணிக்கு வந்ததும் புத்தக வாசிப்பில் என்னிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டது .சிறு பத்திரிகைகள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. தி.ஜானகிராமன், லா.ச.ரா அசோகமித்திரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் பக்கம் என்பார்வை சென்றது. நவீன தமிழ் இலக்கியம் பக்கம் பார்வையை செலுத்தினேன். பத்திரிக்கை பணி என்பதால் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய படிக்க முடிந்தது. பத்திரிகையாளராக இருந்தால் ஒரு சௌகர்யம் என்ன தெரியுமா? நிறைய படிக்கலாம். தமிழ் ஆங்கிலத்தில் வரும் அனைத்து செய்தித் தாள்கள் வாராந்திர பத்திரிகைகளை அலுவலக நூலகத்தில் படிக்க முடிந்தது. ஒரு செய்தியை ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் எந்த கோணத்தில் பார்க்கிறார்கள் அலசுகிறார்கள் , எப்படி கொடுக்கிறார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்போது இதற்கு பத்திரிகையாளராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை . நமது உள்ளங்கையிலேயே அனைத்தும் இருக்கிறது. எல்லாவற்றையும் படித்து விடலாம்.இந்த வாசிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அச்சில் படிப்பதுடன் இணையத்திலும் அதிகம் வாசிக்கிறேன். இப்போது ஆன்மிகப் புத்தகங்களும் எனது வாசிப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
இங்கு கனடாவில் ஆட்டோவாவில் நான் தினமும் காலை வாக்கிங் போகும்போது ஒரு காட்சியை தவறாது பார்ப்பேன். ஒரு வீட்டின் முன் இருக்கும் புல்வெளியில் ஒரு பெரியவர் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருப்பார். அவருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். அந்த 70 வயதிலும் அவருக்கு வாசிப்பின் மீது இருக்கும் ஆர்வம் அதில் தெரியும். வாசிப்பின் மீது ஆர்வம் இருத்தால் வயது அதற்கு என்றுமே தடையில்லை . வாசிப்பு ஒருவனை சிந்திக்க வைக்கிறது சிந்திக்கும் திறனால் நல்லது எது கெட்டது எது என்று வேறு படுத்தி பார்க்க வைக்கிறது. மனித குணங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது . சக மனிதர்களிடம் அன்பையும் கருணையையும் காட்ட வைக்கிறது . மனித நேயத்தை வளர்க்கிறது. நாம் படிக்கும் விஷயங்களுடன் நம்மை இணைத்து பார்க்க, நம்மை தொடர்பு படுத்தி பார்க்க்க வைக்கிறது . கற்பனை சக்தியை தூண்டி விடுகிறது. புரியாத விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. மொத்தத்தில் மனிதனை சிறந்த மனிதனாக பண்பு மிக்கவனாக விஷய ஞானம் உள்ளவனாக மாற்றுகிறது வாசிப்பு பழக்கத்தினால் தினம் தினம் ஏதாவது ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

வாசிப்பு என்பது ஒரு இனிமையான அனுபவம் . சாம் பிட்ரோதாவின் DREAMING BIG என்கிற அவரது சுய சரிதை நான் விரும்பி படித்தது. இந்திய தொலை தொடர்பு துறையில் புரட்சியை கொண்டு வந்தவர். அதை ஒரு கதைக்கே உரிய சுவாரஸ்யத்துடன் மிக அழகாக எளிமையாக எழுதியிருக்கிறார். இன்றைய இளைஞர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். சில புத்தக்ங்கள் அது தமிழாக இருந்தாலும் சரி ஆங்கிலமாக இருந்தாலும்சரி மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.. அந்த வரிசையில் ட்ரீமிங் பிக் வரும். அதை போலவே பேநசீர் புட்டோவின் சுயசரிதையான "Daughter of the East" இப்படி சொல்லிக்கொண்டே போனால் வலை பூவை படிப்பவருக்கு போரடிக்கும் என்பதை விட இந்த புத்தகங்களை மீண்டும் படிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம் வந்துவிடும் என்பதுதான் உண்மை.
வாசிப்பு என்பது ஒரு இனிய அனுபவம் நண்பர்களே !!!!!
படிப்பதற்கு போரடிக்கும், நிச்சயமாக இல்லை என்றே நினைக்கிறேன். உன்னுள் இருக்கும் ஆர்வம் என்னையும் தொற்றி கொண்டது இதுவே உண்மை.குறிப்பிட்ட புத்தகங்களில் அப்புசாமி சீதாபாட்டி கொஞ்சம் நினைவில் உள்ளது.மற்றவை காலப்போக்கில் என் நினைவை விட்டு போய் விட்டது.புத்தகங்களின் பட்டியலில் சிலவற்றை குறித்து கொள்கிறேன்.அவகாசம் கிடைக்காமலா
ReplyDeleteபோய் விடும்?வாசிப்பு இனிய அனுபவம் நூற்றுக்கு நூறு உண்மை.நதி போல் எழுத்து நடை சலசலவென அழகாக ஓடுகிறது.உங்கள் பகிர்வில் வாசிப்பின் அருமையை வாசித்து புரிந்து கொண்டேன்.பணி தொடர வாழ்த்துக்கள்.சந்திரா.
நான் படித்தவைகளில் பல நீயும் படித்து இருக்கிறாய் என்பது மிக மகிழ்ச்சியான செய்தி. புத்தகங்கள் போல சிறந்த நண்பன் வேறு எதுவும் இல்லை.
Deleteசிறந்த விமர்சனம். மிக்க நன்றி சந்திரா. நாம் பேசும்போது மேலும் பேசுவோம்