Total Pageviews

Sunday, 28 February 2021

பனிக்குவியல் நடுவே

                                                                                பனிக்குவியல் நடுவே


நீண்ட நாட்களுக்குப் பின் எனது வலைப்பூ பக்கம் வந்திருக்கிறேன் கனடாவில் தான் வாசம்.

இந்த முறை டிசம்பரில் இந்தியா  வரமுடியவில்லை. இன்னும் இங்கு பயண நிபந்தனைகள் இருக்கின்றன. அதனால் இந்த முறை கனடாவின் கடும் குளிர் பருவத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

குளிர் என்றால் சாதாரணக் குளிர் அல்ல. மைனஸ் 22 டிகிரி வரை இந்த முறை சென்றது.  மைனஸ் 40 வரை சென்ற குளிர் பருவத்தை தான் சந்தித்திருப்பதாக என் பெண் சொன்னாள் .

என்ன, வெளியில் செல்வது கஷ்டம். இருந்தாலும் பால் காய்கறிகள் வாங்க வெளியில் செல்லத்தானே வேண்டும்? ஜாக்கெட் ஷூ க்ளவ்ஸ் அத்துடன் இன்றைய தேவையான மாஸ்க் அணிந்து செல்லும்போது நம்மை பார்த்தால் நிலவுக்கு போகும் மனிதன் போலவேதான் இருக்கும்.

அத்துடன் அடிக்கடி பனிப்பொழிவு வேறு.


பனிப்பொழிவு தீவிரமாவதும் உண்டு. தூறல் மாதிரி விழும் பனி அடித்து முடிக்கும்போது பூமியில் 5 சென்டிமீட்டரிலிருந்து 25 சென்டிமீட்டர்வரை படிந்து விடும். தெருக்களும் வீதிகளும் பால் கடல் போல் காணப்படும். வீட்டின் வெளிப்புற மேல்புறங்களை பார்த்தால் ஏதோ தெர்மாகோல் பொருத்தப்பட்டது போல் இருக்கும். indoor பார்க்கிங் அபார்ட்மெண்ட்களில் indoor பார்க்கிங் இருந்தால் கார் தப்பிக்கும். outdoor பார்க்கிங் என்றால் கார் முழுவதும் பனி மூடிவிடும். காரை எடுக்கும்போது அனைத்தையும் ப்ருஷ்  கொண்டு நீக்க வேண்டும். பெரும்பாடு. அதுமட்டுமல்ல. சாலைகளில் இருக்கும் பனியை  மாநகராட்சி மறுநாள் வந்து வாரி எடுத்து தெருவோரத்தில் குமித்து வைத்து போய்விடுவார்கள். சாலைகள் வாகனங்கள் போகும் அளவுக்கு சுத்தமாகி விடும்.  குமித்து வைக்கப்பட்ட பனிக் குவியல் வெப்பநிலை அதிகமாகும்போது உருகி நீராய் மாறும். வெப்பநிலை  அதிகரிக்காவிட்டால் snow  அப்படியே இறுகி கல்லுமாதிரி ஆகிவிடும். வீட்டு வாசலில் கொட்டிக்கிடக்கும் பனியை அந்தந்த வீட்டினர் அப்புறப்படுத்தவேண்டும். அதனால் தனிவீடுகளில் இருப்பவர்கள் அனைவரும் வீட்டில் snow அப்புறப்படுத்தும் கருவிகளை வைத்திருப்பார்கள். அபார்ட்மெண்ட்களில் நிர்வாகம் கவனித்துக்கொண்டுவிடும்.    தனி வீடாக இருந்தால் கஷ்டம்தான்.


வீடுகளில் வேலைக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடியாது என்பதால் அனைத்தையும் நாம்தான் செய்ய வேண்டும். snow கொட்டும் தினத்திற்கு மறுநாள் சொந்த மற்றும் தனிவீடுகளில் இருப்பவர்கள் snow வை கஷ்டப்பட்டு அகற்றுவதை நான் பார்த்திருக்கிறேன். நம்மை போன்ற அதிக வெப்பநிலை கொண்ட நாட்டிலிருந்து வருபவர்களுக்கு snow  கொட்டுவதை பார்ப்பது அழகாக இருக்கலாம் (அதுவும் சில தினங்கள்தான். அதன்பின் சலிப்பாகிவிடும். வெளியில் போக முடியாமல் கஷ்டப்படும் போது கடுப்பாகிவிடும். ) ஆனால் இந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு அது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா? குளிர் காலம் ஆரம்பித்துவிட்டாலே எப்போதுடா வசந்த காலமும் கோடை காலமும் வரும் என்று ஏங்குவார்கள். என் பெண்ணின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் கனடியர்கள் இவ்வாறு ஏங்குவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நேற்று கடும் பனி பொழிவு. இன்று காலை நானும் என் பெண்ணும் ஒரு டிரைவ் சென்று புகைப்படங்களும் வீடியோவும் எடுத்தோம். அவைதான் இந்த புகைப்படங்கள்.










No comments:

Post a Comment