'மீண்டும் உன்னை எப்போது பார்ப்பேன் கண்ணா?!'
எங்களுக்கு கண்ணன்
என், அக்கா, என் தங்கை குழந்தைகளுக்கு கண்ணா மாமா
தம்பி குழந்தைகளுக்கு கண்ணன் பெரியப்பா
திரைத்துறையினருக்கு 'ஆச்சார்யா' ரவி.
நிறைய பேசுவோம் நாங்கள். நாங்கள் எட்டு பேர் உடன்பிறந்தவர்கள். அனைவரும் சந்தித்துக் கொண்டால் சிரிப்பு, பேச்சு, கிண்டல், கேலி என்று இடமே களைகட்டும். சினிமா பற்றி அவன் வாயைக் கிண்டுவோம்.அந்த கிசுகிசு உண்மையா? இந்த செய்தி உண்மையா என்று கேட்டு கேட்டு சலித்துப் போவோம். ஒரு வார்த்தை கூட அவன் வாயிலிருந்து வராது சினிமா பற்றியோ, சினிமாதுறையினர் பற்றியோ குறையாக அவன் பேசியது இல்லை. எப்போதும் பாசிட்டிவான பேச்சு; யாரையும் குறை பேசியதில்லை, குற்றம் சாட்டியதில்லை.
சினிமா அவன் மூச்சு. பெரிய இயக்குனராக வரவேண்டும் என்பது அவன் கனவு. இயக்குனர் ஆனான். பெரிய இயக்குனர் ஆகவில்லை. முதல் படத்தின் மூலம் ஆச்சார்யா என்ற அவன் படத்தின் தலைப்பு அவன் பெயருடன் ஒட்டிக் கொண்டது. அடுத்த படம் வியாபாரம் ஆகாமல் முடங்கிய போது வருந்தினான், அனால் சலித்துக் கொள்ளவில்லை. அவன் விரும்பிய சினிமாதுறை அவனை கைதூக்கி விடும் என்ற நம்பிக்கை அவனுக்கு அதிகமாகவே இருந்தது.
சினிமாவில் அவன் பெரிதாக பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நிறைய நண்பர்களை சம்பாதித்தான். நற்பெயரை சம்பாதித்தான். குடும்பத்தில் யாருக்கு என்ன கஷ்டம் என்றாலும் உதவுவதற்கு முதல் ஆளாக நிற்பான். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் சாலை விபத்தில் இறந்ததிலிருந்து என் குடும்பத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தான்.
கனடாவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் பெண்ணை பார்க்க வரும் நான் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் சென்னையில் இருப்பேன். மற்ற மாதங்கள் இங்குதான் வாசம். ஒவ்வொரு முறை நான் கனடா கிளம்பும்போதும் சென்னை வரும்போதும் என்னை வழிஅனுப்புவதும் அவன்தான். சென்னையில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து சென்று விடுவதும் அவன்தான். சென்னையில் இருக்கும்போது, திடிரென்று மனம் சரியில்லை என்றால், இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் ஒரு போன் தான். "கண்ணா என்னவோ தெரியவில்லை, மனதே சரியில்லை" என்றால் உடனே வருவான்.
கடல் கடந்து இருப்பதில் பல சிரமங்கள், கஷ்டங்கள், வேதனைகள் இருக்கிறது. ரத்த உறவுகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனம் பதறுகிறது.அருகில் இருக்க முடியவில்லை என்று மனம் வேதனை படுகிறது . ஒரு நாள் கூட உடல்நிலை சரியில்லை என்று கண்ணன் சொன்னதில்லை; உடம்பு சரியில்லை டாக்டரை பார்த்து வந்தேன் என்று சொல்லியதில்லை. அப்படிப்பட்ட கண்ணனுக்கு கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் போனது. Gall bladder problem என்று டாக்டர் surgery என்று சொன்னபோது முழுக்குடும்பமும் ஆடிப்போனது. major surgery தான், இருந்தாலும் problem இருக்காது என்று சொல்லப்பட்டபோது மனம் சற்று நிம்மதி அடைந்தாலும், மனதிற்குள் பதட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.
கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை என்கிற பதட்டத்துடன் தொலைதூரத்தில் இருப்பதில் உடனடியாக சென்று பார்க்கக்கூட முடியவில்லை என்கிற யதார்த்தமும் மனதை அமைதி இழக்க வைத்தது உடன் பிறந்தவர்களில் யாருக்கு உடல் நலப் பிரச்சனை ஏற்பட்டாலும் அருகில் இருந்தோமேயானால் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வதே மனதுக்கு பெரிய ஆறுதல்த்தரும்... தொலைபேசியில் எவ்வளவு பேசுவது; நேரில் பேசும் திருப்தி எப்படி கிடைக்கும்?
விதி அவனது வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது. சர்க்கரை, பீபி என்று எந்த சிக்கலும் அவனுக்கு கிடையாது. அறுவை சிகிச்சையும் நன்கு முடிந்தது. சற்று குணம் தெரிய ஆரம்பித்தது . ஆனால் ஒரு ஓரத்தில் நின்று விதி எங்களை பார்த்து பரிதாப பட்டுக்கொண்டிருந்தது எங்களுக்கு தெரியவில்லை. மறுநாள் தனது கோரத்தாண்டவத்தை விதி ஆரம்பித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக குணம் தெரிய ஆரம்பித்த நிலையில் திடிரென்று மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. அடுத்தடுத்து சில பிரச்சனைகளும் முளைத்தன. மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை. ஒரே வாரத்தில் இரண்டு அறுவை சிகிச்சைகள். இறுதியில் விதி வென்றது. தகவல் வந்தபோது இங்கு கனடாவில் இரவு நேரம்.அதிர்ச்சி, பதட்டம், வருத்தம், வேதனை, அழுகை. கிளம்பமுடியவில்லை என்கிற விரக்தி - எல்லாம் சேர்ந்து கொள்கிறது... உடன்பிறந்தவர்களுடன் பேச வேண்டும், துக்கத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று மனம் துடிக்கிறது.என்ன செய்வது என்று புரியவில்லை. வீட்டிற்குள் அமர்திருக்க பிடிக்கவில்லை. என் பெண் பெருகி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு என்னை சமாதானம் செய்ய முயல்கிறாள். ஸ்தம்பித்து போய் அமர்திருக்கிறேன்.
"கண்ணா, நம்பமுடியவில்லை கண்ணா நீ இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உன்னை கடைசியில் கூட பார்க்க முடியவில்லை என்று வேதனையில் புழுங்குகிறேன் . இளம் வயதில், வீட்டில் நாம் அனைவரும் ஒன்றாய் வளர்ந்த காலத்தில் நமக்குள் ஏற்பட்ட சின்ன சின்ன சண்டைகள், பத்திரிகை செய்திகள் பற்றி, அரசியல் பற்றி, சினிமா பற்றி நாம் எல்லாரும் அரட்டை அடித்தது , விவாதித்தது கிண்டல் கேலி செய்து கொண்டது எல்லாம் நினைவுக்கு வருகிறது கண்ணா". பின் ஒவ்வருவராக திருமணமாகி சென்றுவிட, விசேஷதினங்களில் நாங்கள் அனைவரும் ஒன்று சேருவது, அரட்டை அடிப்பது, கிண்டல், கேலி என்று இரவு நீண்டநேரம் பேசிக் கொண்டிருப்பது, என்று அனைத்தும் மனதில் வந்து போகிறது.
வாழ்க்கை நிலையற்றதுதான். எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நமது வாழ்க்கை பயணத்தின் பாதையை, எங்கே நாம் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயம் செய்பவர் கடவுள்தான். அவர்தான் வாகன ஓட்டுனர். நாம் அனைவரும் பயணிகள் எந்த பயணி எங்கு இறங்க வேண்டும் என்று முடிவு செய்பவரும் அவரே.
இந்த தத்துவ மெல்லாம் அவரவருக்கு துக்கமும் வேதனையும் வரும்போது, அவரவர் இழப்பை சந்திக்கும்போது, எடுபடாதவை. உணரமுடியாதவை. கடவுள் போடும் கணக்கு வேறு. இழப்பு என்பது தவிர்க்கமுடியாது. இழப்பின் சோகத்தை, வேதனையை சுமந்துதான் ஆகவேண்டும்.
தகவல் கேள்விப்பட்டு, மறுநாள் செய்தித்தாளில் செய்தி பார்த்துவிட்டு, கல்லூரிக் கால தோழிகள், இளம்வயதில் மதுரையில் எங்கள் வீட்டிற்கு அருகே இருந்தவர்கள் எப்படி எப்படியோ, யார் யாரிடமோ எனது தொடர்பு எண்ணை வாங்கி எனக்கு போன் செய்து தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டபோது, எங்களது இளம் வயது நாட்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து படுத்தி எடுத்தது.
இளம் வயதில் நாங்கள் மதுரையில் இருந்த காலம் மிகவும் சுவாரஸ்யமானது. அப்போது இரண்டு அக்காக்களுக்கு திருமணமாகி விட்டது. நாங்கள் ஆறு பேர் வீட்டில். கலகலப்பு அதிகம் இருக்கும். ஒரு விடுமுறை நாள் மதியம். கரண்ட்கட். வேர்த்துக் கொட்டுகிறது. நான் என் தங்கை சுஜியிடம் (சுஜாதா) எனக்கு விசிறி எடுத்து வீசு, உனக்கு 5 பைசா தருகிறேன் என்கிறேன். அவள் விசிறியை எடுத்து வீச ஆரம்பிக்கிறாள். உடனே கண்ணன், பானுக்கு வீசாவிட்டால் 10 காசு என்றான். உடனே என்தங்கை விசிறியை தூக்கிபோட்டுவிட்டு அவனுடன் சேர்ந்து கொண்டு விடுகிறாள். வீடே என்னை கிண்டல் செய்கிறது. இந்த சம்பவத்தை நாங்கள் அனைவரும் ஒன்று கூடும் சமயத்தில் சொல்லி சொல்லி சிரிப்போம்.
கண்ணனுக்கு கண்ணன் என்று பெயர் வைத்த காரணம் ரொம்ப சுவையானது. எனக்கு அடுத்தவன் கண்ணன். நாங்கள் அப்போது தேவகோட்டையில் இருந்தோம். அப்போதெல்லாம் பால்க்கார அம்மாதான் தயிரும் விற்பனை செய்வார்கள். வீட்டில் தான் குழந்தைகள் பிறக்கும். மருத்துவ மனையில் அல்ல. எங்கள் தயிர்க்கார அம்மா எங்களுக்கு தயிர் கொடுத்துவிட்டு கேட்டை தாண்டும்போது கால் தடுக்கி தலையில் அவர் வைத்திருந்த தயிர் பானை கீழே விழுந்துவிட்டது. பானை உடைந்து தயிர் முழுவதும் கீழே கொட்ட, அந்த வினாடி அவன் பிறக்கிறான்."கண்ணன் பிறந்திருக்கான் . பாரேன், பிறந்ததும் தயிரை கொட்டி விட்டான்" என்று அங்கு கூடியிருந்த உறவினர்கள் சொல்ல அந்த நிமிடமே அவன் பெயர் கண்ணன் ஆயிற்று . அந்தக் காட்சி எனக்கு நன்கு நினைவிருக்கிறது.
பிரிவு கொடுமையானது;
கொடுமையிலும் கொடுமை நிரந்தரப் பிரிவு. அதிலும் பெரும் கொடுமை, பிரிந்த என் அன்புக்குரிய தம்பியை கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போனது.
எப்போதும் நான் சென்னை திரும்பும் போது விமான நிலையத்திற்கு வந்திருப்பாய்! நான் சென்னையில் முதலில் பார்ப்பது உன்னைத்தான். எங்கு நிற்கிறாய் என்று எனது கண்கள் உன்னை தேடும்போது" இதோ இருக்கிறேன்" என்று கைகாட்டுவாயே... இதெல்லாம் மீண்டும் வராதா? இனி உன்னை எப்போது பார்ப்பேன்?
மனம் கனத்து போயிருக்கிறது கண்ணா...
கண்கள் குளமாகி ஏதும் பதில் எழுத மறுக்கிறது
ReplyDelete😔😔😔
ReplyDeleteநானும் ஒரு நல்ல நண்பனை இழந்து நிற்கிறேன்...கூடிய சீக்கிரம் ஒரு நல்ல செய்தி சொல்வேன் என்றார் போன மாதம் போனில். ஆனால் அவரே இல்லை என்கிற கெட்ட செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. திசைகள் ஆரம்பித்தபோது நான் மதுரைக்கு வந்தபோது உங்கள் சார்பில் ரவியை நான் சந்தித்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கிறது...
ReplyDeleteகருவிழி குளமாக கண் இமைகள் நடுங்க பார்த்திருத்த விழி என்றும் உன் நினைவலைகளோடு விண்ணவெளியில் நீ வளம்வர சித்திரம் வரைகின்றன.
ReplyDeleteஎன்றும் நீ இருப்பாய் கண்ணா மணிவண்ணா!
I miss my director ravi anna..
ReplyDeleteMy kuru.
அக்கா! நான் சங்கரன் ( கார்த்திக் பிரண்ட் ) அண்ணாவை surgery க்கு ரெண்டு நாள் முன்னாடி பார்த்திட்டு வந்தேன்! அத்தனை சகஜமா, positiva பேசிகிட்டு இருந்தார்! அடுத்த ஆறு நாளில் அண்ணா இல்லை! உண்மை கசக்கும் என்று ஆசால்ட்டா சொல்லிட்டு போயிற்றோம் ! இத்தனை கசப்பு என்று இப்போ தான் தெரியுது! இன்னமும் உண்மையை ஏற்க மறுக்குது மனம்!
ReplyDeleteஅக்கா,கார்த்தி அண்ணாவின் நண்பனின்(ஐயப்பன்@ராஜேஷ்) தம்பி நான்.எனக்கு நேரிடையாக அண்ணனை தெரியாது.ஆழ்ந்த இரங்கல் அக்கா.தங்களின் பதிவு இரக்கமே இல்லாதவர்களையும் உருக செய்து விடும்.அண்ணாவின் ஆன்மா இறையருள் பெற வேண்டுகிறேன்."படைப்பாளி படைத்தவனிடம்"
ReplyDeleteNo words to share
ReplyDeleteDrops in eyes
Thank you everyone for sharing our grief.
ReplyDeleteதுக்கத்தை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.