பனிப்பொழிவு : அழகா அவஸ்தையா?
ஸ்நோ இன்னும் முடிந்தபாடில்லை .பிப்ரவரி ஆரம்பித்ததிலிருந்து கடும் பனிப்பொழிவு கனடாவில். அதுவும் நாங்கள் இருக்கும் ஆட்டோவா வில் ஸ்நோ வும் அதிகம். குளிரும் கடுமையாக இருக்கும். இரு வாரங்களுக்கு முன்னர் 40 cm உயரத்திற்கு தரையில் படிந்திருந்த ஸ்நோவே இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. உருகவும் இல்லை. அதற்குள் நேற்று முன்தினம் முழுவதும் கடும் பனிப்பொழிவு. தொடர்ந்து பனி பொழிந்து கொண்டே இருக்க, நடைபாதை, சாலைகள் வீட்டு வெளிப்புறங்கள், என்று அனைத்து இடங்களும் பனியால் நிறைந்து காணப்பட்டது. பூட்ஸ் அணிந்து காலை வெளியே வைத்தால் முழங்காலுக்கு சற்று கீழ்வரை பனிக்குள் கால் சென்றது. ஊரே ஸ்நோவால் போர்த்தப்பட்டது போல காட்சியளித்தது.
கார் பார்க்கிங்கில் அனைத்து கார்களையும் ஸ்நோ போர்த்திக் கொண்டிருந்தது .அபார்ட்மெண்ட்களில் நிர்வாகம், அபார்ட்மெண்ட் நடைபாதைகள் ஸ்நோ அகற்றும் மெஷின் மூலம் பனியை அகற்ற, மீண்டும் சில நிமிடங்களில் பனி பொழிந்து அந்த இடங்களை ஆக்ரமித்து கொண்டது.
நான் ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். தூள் உப்பை கொட்டிவைத்தது போல் ஊரே காணப்படுகிறது. கார் எடுப்பது கஷ்டம் வெளியே செல்வது கஷ்டம். தனி வீடுகளில் இருப்போர் ஸ்நோ குவிய குவிய அதை அகற்றியாக வேண்டும் எங்கே போய் கொட்டுவது? அவரவர் அவரது வீட்டருகே குவிப்பார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பனி, மலை போல் குவிக்கப் பட்டிருக்கும் .
ஸ்நோ பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். இப்படி குவிய குவிய சிரமம் தான் கஷ்டம் தான். கார் மேலிருந்து ஸ்நோவை அகற்றுவது சுலபமான காரியமில்லை. பார்க்கிங்கில் முழவதும் ஸ்நோ, கார் மீதும் ஸ்நோ, ஸ்நோவில் நின்றுதான் ஸ்நோவை அகற்ற வேண்டும். ஸ்நோ அகற்றும் நீண்ட பிடியுள்ள பிரஷை பிடித்துக்கொண்டு அதனை அகற்றுவது பிரம்ம பிரயத்தனம். அதுவும் அந்த குளிரை தாக்குப்பிடித்தப்படி அகற்றுவது மிகவும் கடினம். கையுறை போட்டிருந்தாலும் கைகள் உறைவது போன்று இருக்கும்.
காரில் பனிமட்டும் மூடியிருந்தால் பிரஷ் வைத்து அகற்றிவிடலாம்.அனால் பனிப்பொழிவுக்கு பின் வெப்பநிலை மைன்ஸ்சில் சென்றுவிடுவதால் பல சமயங்களில் பனி ஐஸ்ஸாக உறைந்துவிடும். பிரஷை வைத்து ஐஸ்ஸை அகற்ற முடியாது. காரில் இருக்கும் டீபிராஸ்டெர் ஆன் செய்தால் கரைந்து விடும். ஐஸின் தடிமனை பொறுத்து அதற்கான நேரம் ஆகும்.
பனியை நீக்கி நாம் வெளியே கிளம்புவது என்பது பெரும் பணிதான்.
பனி பொழியும் நாட்களில்.பனி கொட்டி தீர்த்ததும் சாலைகளில் பனி அகற்றும் மாநகராட்சி வாகனங்களை அதிகம் பார்க்க முடியும். சாலைகளில் நடை பாதைகளில் இருக்கும் ஸ்நோவை வாரி சாலையின் ஓரத்தில் குவித்துவிட்டு போய்விடுவார்கள். அள்ளிக்கொண்டு போய் எங்கே கொட்டுவது . ஊரே ஸ்நோ மயமாக இருக்கும்போது என்ன செய்ய முடியும் .சிறிது நேரத்தில் உப்பு வண்டி வரும் . கல் உப்பை வாகனத்தில் நிரப்பி இருப்பார்கள். பச்சை நிறத்தில் இருக்கும் அந்த கல் உப்பு. அதனை வாகனத்தின் பின்புறத்தில் இருக்கும் சாதனம் சாலையில் உதிர்த்துக்கொண்டே போகும் . அதாவது உப்பு ஸ்நோவை சீக்கிரம் கரைக்க. அபார்ட்மெண்ட்களில் நடக்கும் இடங்களில் இந்த உப்பை தூவி இருப்பார்கள்.
சிறிது நாள்களில் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்ட ஸ்நோ வாகனங்களின் கார் புகையால் கருப்பாகி கனமாகி பாறை போல் ஆகிவிடும். அதன் மேல் உப்பை கொட்டி கொட்டி கரைப்பார்கள். அதற்குள் கோடை ஆரம்பித்துவிடும். வெயிலில் எல்லாம் கரைந்து ஓட துவங்கும். (கனடா அரசு ஸ்நோவை அகற்ற, ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்று இங்கு செய்திதாள்களில் படித்தேன் )
இங்கு கனடாவில் இருக்கும் சில இந்திய பெண்கள் நடத்தும் youtube சானெல்களை நான் சமயங்களில் பார்க்கிறேன். ஸ்நோ கொட்டுவதை, கொட்டிக்கொண்டிருப்பதை, வீடியோ போட்டு "பார்த்தீர்களா? எவ்வளவு அழகாக இருக்கிறது நாங்கள் ஸ்நோ பொழிவு பார்த்து பரவசம் அடைகிறோம் இங்கு எல்லோருமே இப்பிடித்தான், ஸ்நோ எப்போதடா வரும் என்று காத்திருப்பார்கள்" என்று ஏதோ யாருக்கும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் தங்களுக்கு கிடைத்த மாதிரி பேசுவார்கள். ஸ்நோ வை பார்ப்பதே ஆனந்தம் அற்புதம் ஆஹா ஒஹோஒ என்று அளப்பார்கள் . ஸ்நோ சமயங்களில் வெளியில் செல்வது எவ்வளவு கடினம், அதை அகற்றுவது எவ்வளவு சிரமம் என்பது பற்றி எதுவும் சொல்ல மாட்டார்கள். அந்த வீடியோக்களை பார்ப்பவர்கள் அடடா என்ன அழகு ஸ்நோ , கண்ணால் பார்க்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும் , நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றெல்லாம் கமென்டஸ் போட்டிருப்பார்கள். ஸ்நோ பார்ப்பதற்கு அழகுதான், ஆனால் அதில் இருக்கும் சிரமம்?. அதை பற்றியும் சொல்ல வேண்டாமா?!. ஒரு விஷயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் ஏன் காட்ட வேண்டும் அதற்கு மறு பக்கமும் இருக்கிறது அல்லவா. அதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள் . அழகை சொல்பவர்கள் அவஸ்தையையும் சொல்லத்தான் வேண்டும்.
குழந்தைகள் ஸ்நோ பார்த்து கூத்தாடுவார்கள், ஸ்னோமேன்.செய்து விளையாடுவார்கள். ஆனால் எவ்வளவு நேரம் . 5 நிமிடம் ஆடலாம் பாடலாம் அதன் பின். கடும் குளிரில் நின்றுதான் அதை செய்ய முடியும் அழகின் பின் அவஸ்தை இருக்கிறதே அதை மறுக்க முடியுமா.
ஜன்னலில் இருந்து பனி பொழிவதை பார்த்து ரசிக்கலாம். பனி பொழியும் போது ஏதோ விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கீழே கொட்டுவது போலிருக்கும் அதை பார்த்து ரசிக்கலாம். ஆனால் எல்லாம் ஒரு நாள் நடப்பது இரண்டு நாட்கள் நடப்பது என்றால் பார்த்து பார்த்து மகிழலாம். ஆனால் இரண்டு மூன்று மாதங்கள் அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்கிறபோது சலிப்பு தானே ஏற்படும்.. வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து விட முடியுமா
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்தானே. அழகை நினைக்க முடியாது. அவஸ்தைதான் தெரியும்.
இப்போது எனக்கு snowவும் winterயும் எப்போது முடியும் என்று காத்திருக்கிறேன். எனக்கு கல்லூரி நாளில் படித்த ஷெல்லியின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.
If winter comes can spring be far behind
If winter comes can spring be far behind
- Shelly
ITS DIFFERENT EXPERIENCE .. FOR BOTH OF YOU ..
ReplyDeleteஅருமையான சித்தரிப்பு ,அவ்விடம் எங்களை இழுத்து சென்ற பிரமிப்பு
ReplyDeleteகஷ்டம் தான் , கஷ்டத்திலும் ஒரு சுகம்
வெள்ளை மணல் குவியல் ,வானம் கீழே
இறங்கியது போல்.சந்திரா.
Thank you chandra.
Delete