![]() |
Pankajam Rajaram (1932-2017) |
ஆகஸ்ட் 15 ஆம் தேதி .இரவு 2: 00 மணி, கனடா
அம்மா உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று என் தங்கையிடமிருந்து எனக்கு தகவல் வந்தபோது இங்கு இரவு 2 மணி. பதற்றமும் கவலையும் சேர்ந்து கொள்ள நிலை கொள்ளாமல் தவித்து போனேன். எனது பதற்றத்தை பார்த்து என் பெண் "ரிலாக்ஸ் பண்ணிக்கோம்மா, வா, சிறிது நடந்துட்டு வரலாம் " என்று என்னை அழைத்து போனாள் சில மணி நேரங்களில் அந்த மோசமான தகவல் எனக்கு வந்து சேர்ந்தது. அம்மா இந்த உலகில் இல்லை என்கிற உண்மையை ஜீரணித்துக்கொள்ள கொஞ்ச நேரம் ஆனது. அம்மாவின் இறுதி நேரத்தில் அருகில் இருக்க முடியவில்லையே என்கிற துக்கம் என்னை வாட்டியது. ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது மனம். உடன் பிறந்தவர்களுடன் சேர்ந்து துக்கத்தை பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கம் அதிகமானது. அதனாலேயே என்னவென்று சொல்ல தெரியாத ஒரு உணர்விலேயே இருந்தேன். என்னை தனியே விட்டுவிட்டு அலுவலகம் செல்ல மனமில்லாமல் என் பெண் விடுப்பு எடுத்துக்கொண்டு என் அருகேயே இருந்தாள் . இறுதியில் அம்மாவை சுற்றி அமர்ந்திருந்த என் உடன் பிறப்புகளுடன் வீடியோ அழைப்பில் பேசி துக்கத்தையும் வேதனையையும் பகிர்ந்து கொண்டு வாய் விட்டு அழுதவுடன் மனம் லேசானது.
:"தெரிந்து கொள் ஹாரி , நம்மிடம் அன்பு கொண்டவர்கள் என்றும் நம்மை விட்டு அகல்வதில்லை . ..........நமக்கு பிரியமானவர்கள் இறந்து விட்டால் அவர்கள் உண்மையிலேயே நம்மை விட்டு சென்றுவிடுவார்கள் என்று நம்புகிறாயா ? நமக்கு துன்பம் வரும்போது அவர்களை நாம் மிக அதிகமாக நினைக்க மாட்டோம் என்றா நீ நினைக்கிறாய்? உன் அப்பா உன்னில்தான் இன்னும் இருக்கிறார் ......."" என்று Harry Potter நாவலில் Dumbledore சொல்வார். அதை நினைத்துக் கொண்டேன். அம்மா என்னை விட்டு போகவில்லை என்கிற உணர்வு ஏற்பட்டது.
எங்கள் குடும்பம் பெரியது. நாங்கள் 8 பேர் உடன்பிறந்த வர்கள். பணக்காரர்கள் இல்லை நாங்கள். ஆனால் கஷ்டப்படவில்லை. பெரிய குடும்பம் என்பதால் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். சந்தோஷத்திற்கு குறைவு இருக்காது. அம்மாவை நிதி அமைச்சர் என்பார் அப்பா. சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்துவிட, அம்மாதான் வீட்டு நிர்வாகம் முழுவதும். மிக அழகாக குடும்பம் நடத்தினார் அம்மா. எங்களுக்கு ஆடம்பரம் தெரியாது. ஆனால் அவசியமானது எதுவுமே விட்டு போனதில்லை. எங்களை உட்கார வைத்து பண்புகளை என் பெற்றோர் சொல்லிக் கொடுத்ததில்லை . ஆனால் அவர்கள் பண்புடன் வாழ்ந்தார்கள். நாங்கள் அதை பார்த்து கற்றுக்கொண்டோம். பொய் சொல்லக் கூடாது என்று எங்களுக்கு அம்மாவும் அப்பாவும் பாடம் புகட்டவில்லை. ஆனால் அவர்கள் பொய் சொல்லாமல் வாழ்ந்தார்கள். பொய் சொல்லக் கூடாது என்பது எங்களுக்கு தெரிய வந்தது. நேர்மையுடன் வாழ்ந்து காட்டினார்கள். வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம். இப்பிடி ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கள் செய்கையில் எங்களுக்கு உணர்த்தினார்கள். .
நாங்கள் சகோதரிகள் நான்கு பேர்.. அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை அல்லது அம்மாவுக்கு நேரம் இல்லை என்று ஒரு நாள் நாங்கள் பள்ளிக்கு தாமதமாக சென்றதில்லை தலை பின்னாமல்சென்றதில்லை. ஒரு ஞாயிறு எண்ணெய் தேய்த்து குளிக்காமல் இருந்ததில்லை. இடுப்பு வரை நீண்ட தலை முடி எங்கள் அனைவருக்கும். அம்மாதான் தினமும் தலை வாரி பின்னி விடுவார். தலைக்கு எண்ணெய் வைத்து சீகைக்காய் போட்டு தேய்த்து தலை அலசிவிடுவார் அந்த காலத்தில் குக்கர் கிடையாது. சாதம் சிப்பல் கொண்டு வடிக்கப்படும். ஒரு முறை சாதம் வடிக்கும்போது சாத கஞ்சி அம்மாவின் கால் மீது கொட்டிவிட்டது. நானும் எங்கள் அக்காக்களும் பள்ளிக்கு செல்ல தலை பின்னி கொள்வற்காக அம்மா சமயலறையிலிருந்து வெளி வருவதற்காக காத்துகொண்டு நிற்கிறோம். அம்மா காலில் கஞ்சி கொட்டிவிட்டது , அம்மாவுக்கு காலில் எரிச்சல் தாங்க முடியவில்லை என்பதை விட எங்களுக்கு பள்ளிக்கு நேரமாகிவிட்டது என்பதுதான் அம்மாவுக்கு முக்கியமாக பட்டது. ஒரு பெரிய அடுக்கில் தண்ணீர் நிரப்பி அதற்குள் காலை மூழ்க வைத்துக்கொண்டு உட்கார்ந்தபடி எங்கள் மூவருக்கும் தலை பின்னி விட்டு சாப்பாடு போட்டு பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதன் பின் தான் அம்மா மருத்துவமனைக்கு சென்றார்.ஒரு நாளும் தன்னை பற்றி கவலை படாதவர்தான் அம்மா.
அம்மா எப்போதும் தனக்கென எதுவும் வைத்துக்கொள்ள ஆசைபட்டதில்லை. நான் 3 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயம்என்று நினைக்கிறேன். . அப்பாவின் நண்பர் தனது குடும்பத்துடன் மலேயா (அப்போது மலேசியா அல்ல, மலேயா தான் ) சென்று வந்தார். அவர்கள் அங்கிருந்து ஒரு அழகான காலணி வாங்கி வந்திருந்தார்கள். சிவப்பு நிறத்தில் ஜிகினா வார் போட்டிருக்கும். அம்மாவுக்கு அந்த காலணியை பரிசாக அளித்தார்கள். அவர்கள் கிளம்பிப் போன மறு நிமிடத்திலிருந்து நானும் என் அக்கா மாலதியும் அதை போட்டுக்கொள்ள ஆரம்பித்தோம். பெரியவர்களுக்கு வாங்கி வந்த காலணி சிறுமிகளான எங்களுக்கு எப்படி சரியாக இருக்கும் ? இருவரும் மிக சரியாக இருக்கிறது என்போம். காலணியில் பாதி வரை தான் எங்கள் கால் இருக்கும் . ஆனால் காலை காலணியின் நுனி வரை இழுத்துக்கொண்டு சரியாக இருக்கு என்று சாதிப்போம். அம்மாவும் சிரித்துக்கொண்டு போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார். நாங்கள் இருவரும் எங்கு போனாலும் அதை மாட்டிக்கொண்டுதான் போவோம். நாங்கள் அணிந்து கொண்டே காலணி பழையதாகி போய் இறுதியில் பிய்ந்தும் போனது. அம்மா ஒரு நாள் கூட அதை அணிந்து கொண்டதில்லை, நாங்கள் எங்கே அணிந்து கொள்ள விட்டோம்?
பெரிய குடும்பத்தை வைத்து நிர்வகித்து குழந்தைகளை குறையில்லாமல் வளர்த்து வந்த அம்மாவுக்கு புத்தகம் படிக்கவும் நேரம் இருந்தது ஆச்சர்யம். வீட்டில் வாராந்திர பத்திரிக்கைகள் செய்தித்தாள்கள் தவறாமல் வாங்கப்பட்டது. அம்மா படிப்பார்கள். நாங்களும் படித்தோம். எங்கள் உடன் பிறப்புகள் அனைவருக்கும் இதனால் வாசிப்பு பழக்கம் வந்தது. அது மட்டுமல்ல. அவரவர் குழந்தைகளுக்கும் வாசிப்பு பழக்கத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம் என்பது பற்றி நான் பெருமை படுகிறேன் அதனால்தான் புத்தகம் படிக்க நேரமே இல்லை இன்று பலரும் இன்று சொல்லும்போது எனக்கு அது ஆச்சரியமாக இருக்கிறது. வாசிப்பு ஒருவரை சிந்திக்க வைக்கும் என்பதை பள்ளி காலத்திலேயே நாங்கள் உணர்ந்து கொண்டோம். .
அம்மா படித்ததுடன் நிறுத்திக்கொள்ளவில்லை . எழுதவும் செய்தார்கள். மாலை வேளைகளில் கையில் நோட்டு புத்தகத்தை வைத்துக்கொண்டு அம்மா கதை எழுதுவதை நான் பார்த்திருக்கிறேன்.நாங்கள் குழந்தைகளாக இருந்த அம்மாவின் இளமை காலத்தில் மட்டும் அல்ல. , இப்போதும் அம்மா எழுதுவார். அம்மாவுக்கு ரொம்ப துக்கமாகவும் ரொம்ப சந்தோசமாகவும் இருந்தால் எழுத வேண்டும் என்கிற உணர்வு வரும். சமீப சில ஆண்டுகளாக கவிதை எழுத ஆரம்பித்தார். என் அத்தை காலமானபோது அம்மா ரொம்பவும் வருத்தப்பட்டார். அம்மாவும் அவரும் சம வயதினர். அப்போது அம்மாவுக்கு சற்று உடல் நிலை சரியில்லை. அதனால் அம்மாவால் அத்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல முடியவில்லை. அம்மாவுக்கு அதை நினைத்து ஒரே வருத்தம். அது கவிதையாக உருவெடுத்தது. பேப்பரில் எழுதி என் கையில் கொடுத்தார்கள். எங்கள் குடும்பத்து வாட்ஸாப் குழுமத்தில் அதை போஸ்ட் செய்து பகிர்ந்து கொண்டோம். அதேபோல் என் தங்கையின் பெண் கல்யாணத்திற்கு முதல் நாள். வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. மணமகள் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அம்மாவின் சிந்தனையில் கவிதை பிறந்தது. உடனே பேப்பர் பேனா கேட்டார். . மணம் செய்து கொள்ளும் பேத்தியை வாழ்த்தி கவிதை எழுதினார்.
அம்மாவின் இந்த படைப்பாற்றல் திறன் எங்களையும் பற்றிக்கொண்டது. அம்மா தன்னை அறியாமல் எங்களிடம் எழுதும் திறனை விதைத்தார். என் தம்பி பாலாஜி தனது பள்ளி கல்லூரி காலத்தில் உதயம் என்கிற கையெழுத்து பத்திரிகை எழுதி நடத்தினார். நான் பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். பின்னாளில் பத்திரிக்கையாளராக மாறினேன். மற்றொரு தம்பி கண்ணன் என்கிற ரவி (ஆச்சர்யா ரவி ) திரைத்துறையில் நுழைந்து படங்களுக்கு வசனமும் எழுதுகிறார்.
அம்மாவுக்கு எல்லா துறையிலும் ஆர்வம் இருந்தது.நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் வேலைகளை முடித்துவிட்டு புத்தகம் படிப்பார். பேப்பர் படிப்பார். நாங்கள் அனைவரும் திருமணமாகி சென்று, தம்பிகளுக்கும் திருமணமானவுடன் அம்மா வீட்டு நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதனால் நேரம் அதிகம் கிடைத்தது.புத்தகங்கள் இன்னும் அதிகமாக படிக்க ஆரம்பித்தார். என் தம்பி வீட்டில் அம்மா அறையில் அலமாரியில் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எல்லாம் அம்மா படித்த படிக்கும் புத்தகங்கள். தெய்வத்தின் குரல், அர்த்தமுள்ள இந்து மதம், ஸ்ரீ ராமானுஜர் போன்ற புத்தகங்களுக்கு நடுவில் பைபிளும் பார்த்திருக்கிறேன். அம்மாவுக்கு குரான் படித்து இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆசையும் உண்டு. "எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும்" என்பார்
காலையில் காபி குடித்ததும் அம்மாவுக்கு பேப்பர் படித்தாக வேண்டும். அதனால்தான் நாட்டு நடப்புகளை நன்கு அறிந்து வைத்திருந் தார். அம்மா பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும் என்கிறார் என் பெரியம்மாவின்(அம்மாவின் அக்கா) மருமகள்களில் ஒருவரான உஷா முரளி. பெரியம்மா வீட்டுக்கு அம்மா செல்லும்போது பெரியம்மாவின் பேரன்கள் அம்மா பேசுவதை ஆர்வத்துடன் கேட்பார்கள் என்றும், சில கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றிருக்கிறோம் என்றும் அவர் சொல்கிறார்.
அம்மாவின் இளமை காலத்தில் அம்மாவுக்கு பிடித்த நாவலாசிரியை வை.மு. கோதைநாயகி அம்மாள். அதே போல் வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுத்தும் அம்மாவுக்கு பிடிக்கும். கோதைநாயகி பற்றி பேசும்போது அம்மாவின் முகத்தில் ஒரு பரவசத்தை பார்த்திருக்கிறேன். அவரது பிரபல நாவலான "இந்திரா மோஹனா " "வைதேஹி " பற்றியெல்லாம் அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். . 60 மற்றும் 70 களில் அம்மாவுக்கு எழுத்தாளர் லட்சுமி மீது ஆர்வம் ஏற்பட்டது. 80 களில் எழுத்தாளர்கள் வாஸந்தி, சிவசங்கரி பிடித்து போனது. வாஸந்தி எனக்கு இந்தியாடுடேயில் ஆசிரியரானபோது அம்மா அவரை பார்த்து அவரது நாவல்கள் பற்றி பேச ஆசைப்பட்டார். அலுவலகத்திற்கு அழைத்து சென்று வாஸந்தியை அறிமுக படுத்தி வைத்தேன்.
அம்மாவுக்கு திரைப்பட நடிகை பானுமதியை ரொம்பப் பிடிக்கும். அவரது திமிரான நடிப்பை ரொம்பவே ரசித்தேன் என்பார். அதனால்தான் எனக்கு அந்த பெயரை வைத்ததாகவும் கூறியிருக்கிறார். இந்தியா டுடேயில் இருந்த போது ஒரு முறை ஒரு கட்டுரைக்காக நடிகை பானுமதியுடன் டெலிபோனில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. கட்டுரை சம்பந்தமாக பேசி முடித்ததும் நட்பு ரீதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் சொன்னேன் அவரிடம் "எங்க அம்மா உங்களது ரசிகை . அதனால்தான் எனக்கு உங்களது பெயர் வைத்ததாக சொல்வார்கள் " என்று. அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அதன் பின் என்னை பற்றி பேசுவதை விட்டுவிட்டு என் அம்மாவை பற்றி கேட்க ஆரம்பித்தார்.அம்மாவிடம் டெலிபோனில் இந்த தகவலை சொன்னேன். அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்.
அதே போல் என் அக்கா பையன் வினோத் எழுத்தாளர் பாலகுமாரனின் பரம ரசிகன் . அவரது புத்தகம் எதையும் அவர் படிக்காமல் விட்டதில்லை. அம்மாவும் பாலகுமாரன் படிப்பார் ஒரு முறை பாகுமாரனை அவரது இல்லத்தில் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் வினோத். அம்மாக்கும் பாலகுமாரன் பிடிக்கும் என்பதால் அம்மாவையும் அழைத்து போக முடிவு செய்திருந்தார் அப்போது அம்மா சென்னையில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். வினோத் தனது பாட்டியையும் அழைத்து வருவதாக அவருக்கு தொலைபேசியில் சொல்ல, அவருக்கு வயது எவ்வளவு என்று பாலகுமாரன்கேட்டிருக்கிறார். அப்போது அம்மாவுக்கு 70 வயது. "70 வயதுக்காரர் என்னை பார்க்க வரக் கூடாது, நான்தான் அவரை சென்று பார்க்க வேண்டும்" என்று சொல்லி பாலகுமாரனே எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவுடன் பேசி சென்றார். இதிலென்ன முக்கியமான விஷயம் என்றால் அப்போதுதான் பாலகுமாரனுக்கு பை பாஸ் சர்ஜரி ஆகி ஓய்வில் இருந்தார் . எங்கள் வீடு இருந்தது 3 வது மாடி. லிப்ட் இல்லை. அம்மா பதறி விட்டார்கள். அவர் வந்ததும் அம்மா ரொம்ப சங்கடத்துடன் சொன்னார்கள். ஆனால் அவர் அதை பொருட் படுத்தவில்லை. பாலகுமாரனின் உயர்ந்த பண்பை அம்மா ரொம்ப நாட்கள் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார்.
அம்மா கம்பீரம் மிக்கவர்.கெட்டிக்காரர். . கண்டிப்பான குரலில் ஒன்று அவர் சொன்னால் அதை யாராலும் மீற முடியாது. அம்மாவின் கம்பீரத் தோற்றமும் புத்திசாலித்தனமான பேச்சும் உறவுகளிடம் அவருக்கு மிகுந்த மரியாதை யை பெற்று கொடுத்தது. அதனால் எங்களுக்கும் உறவுகளிடம் நல்ல பெயர் உண்டு.
அம்மா சமையல் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அம்மாவின் சமையல் எங்கள் உறவினர்களிடம் ரொம்பவும் பெயர் பெற்றது. அம்மாவின் சுண்டைக்காய் , மணத்தக்காளி வத்தல் குழம்பும், கருணை கிழங்கு மசியலும் ...யாராலும் அது போல் செய்ய முடியாது. அம்மாவின் மிளகுக் குழம்பு...! "பாட்டி செய்யும் மிளகுக் குழம்பு எப்பிடி செய்வது என்று சொல்லி அதை வாட்ஸாப்ப் ஆடியோவாக அனுப்பும்மா" என்று நான் சென்னையில் இருக்கும்போது என் பெண் கேட்டிருக்கிறாள். என் சகோதரர் பாலாஜியின் நண்பர் ரவிக்குமார் என் அம்மா செய்யும் வேப்பம்பூ ரசத்திற்கு ரசிகர். நீண்ட ஆண்டுகள் கழித்து ஓராண்டுக்கு முன் அவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது . அப்போது கூட அவர் அம்மாவின் வேப்பம்பூ ரசம் பற்றி சிலாகித்தார்.
அம்மா அந்த காலத்து வார்த்தைகள் உவமானங்களை இன்னும் பயன்படுத்தினார். நாம் இப்போது நீ பெரிய அப்பாடக்கரா என்று சொல்லுகிறோமே, அதனை அம்மா அந்த காலத்து வார்த்தையில் சொல்லுவார் "ஊரை ஆளுகிற மகாராஜாவா நீ " என்பார். அதே போல, "பெரிய ஜில்லா கலெக்டர் !" என்பார்.
அம்மா தனது 86 வயதிலும் நோய் நொடிகள் ஏதும் இல்லாமல் தான் இருந்தார். அப்பாவின் மறைவுக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்ட 3 உயிர் இழப்புகள் அவரை மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பலவீனமாக்கின அப்படியும் அம்மா எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார். படிப்பதை நிறுத்தவில்லை . எனது வலை பூ கட்டுரைகளை படிப்பார். அது பற்றி என்னிடம் தொலைபேசியில் உரையாடுவார்.
இப்போது, அம்மா உன்னை பற்றி எழுதி இருக்கிறேன். இது பற்றிய கருத்துக்களை எப்போது அம்மா சொல்லுவாய்?
Seems like Paati is telling lively
ReplyDelete