Total Pageviews

Saturday, 27 May 2017

திருக்கச்சி நம்பிகளும் டூலிப் மலர்களும்




தலைப்பை பார்த்து ஆச்சர்யமாக இருக்கலாம். ஸ்ரீ ராமானுஜர் ஆச்சார்யனாக கருதிய திருக்கச்சிக்கும் கனடாவின் டூலிப் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம் என்று.
  ராமானுஜர் காலத்தில் திருக்கச்சி  நம்பிகள் தினமும் காஞ்சி பேரருளாளனுக்கு புஷ்பக் கைங்கர்யம் செய்து வந்தார் என்பது வைணவ வரலாறு பற்றி அறிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். தினமும்  பூவிருந்தவல்லியிலிருந்து .காஞ்சிபுரம்  சென்று காஞ்சி வரதராஜ பெருமானுக்கு பூமாலை சாற்றி ஆளவட்டக் கைங்கர்யம் செய்து வந்தவர். பூவிருந்தவல்லியில் அவருக்கு ஒரு பெரிய நந்தவனம் இருந்தது. அதில் பல விதமான மலர்களை வளர்த்து அதை தினமும் மாலைகளாகக் கட்டி காஞ்சிக்கு எடுத்து செல்வார். அவரது பூவிருந்தவல்லி நந்தவனம் புகழ்பெற்றது.
இப்போது கனடாவின் டூலிப் பெஸ்டிவல் பற்றி.. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்த டுலிப் பெஸ்டிவல் இங்கு கொண்டாடப் படுகிறது. மணி போல் தோற்றமளிக்கும் இந்த பூக்கள் பல வண்ணங்களில் பூக்கிறது. இந்த பூ தான் கனடாவின் தேசிய பூ. சர்வதேச நட்பை காட்டும் பூவாகவும் இது  கருதப் படுகிறது .இரண்டாவது உலக போரின்போது நெதர்லாந்து நாட்டு இளவரசி ஜூலியானா கனடா நாட்டில் வந்து தங்கி இருக்கும்போது அவருக்கு குழந்தை பிறக்கிறது. ஆட்டோவா சிவிக் மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறக்கிறது. கனடா அரசு அந்த குழந்தை நெதர்லாந்து பிரஜையாக இருக்க வேண்டும் என்று விரும்பி குழந்தை பிறந்த அந்த அறையை மட்டும் நெதர்லாந்து பகுதி என்று அறிவிக்கிறது. மனம் நெகிழ்ந்த நெதர்லாந்து அரச குடும்பம் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்த 2 லட்சம் டுலிப் மலர்களை நட்புணர்வு அடையாளமாக அளிக்கிறது. அதிலிருந்து கனடா அரசு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் துலிப் திருவிழா கொண்டாடுகிறது. நகரின் முக்கிய பூங்காக்களில் அரசு துலிப் பூக்களை வளர்க்கிறது. அது மட்டுமின்றி சாலைகளின் ஓரங்களிலும் பூக்கள் வளர்க்கப் படுகிறது. ஊரே பூக்கோலத்தில் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. வீடுகளிலும் வெளியே துலிப் மலர்களை வளர்க்கிறார்கள். மே மாத இரண்டாம் வாரத்திலிருந்து மூன்றாம் வாரம் வரை ஊரே பூக்கோலம் பூண்டிருக்கிறது.
  இந்த ஆண்டு டூலிப் திருவிழாவின் போது நான் இங்கிருப்பதால் நானும் என் பெண்ணும் சென்றோம். டோஸ் ஏரியில் நடந்த டூலிப் திருவிழாவுக்கு. அன்று வெயில் நன்கு அடித்தாலும் வெப்ப நிலை 12 டிகிரிதான். ஏரியை ஒட்டிய பூங்காவில் உள்ளே நுழைந்ததும் ஆச்சர்யப் பட்டுபோனேன். பலவித வண்ணங்களில் மணி போன்ற தோற்றத்தில் டூலிப் மலர்கள். பூத்து குலுங்கியிருந்தன.
Tulips- @Dows Lake,Ottawa

  நானும் என்  பெண்ணும் எல்லா விஷயங்கள் பற்றியும் பேசுவோம். அரசியல், சினிமா, fashion , கலாச்சாரம் ஆன்மிகம், புத்தகங்கள்  என்று அனைத்து பற்றியும் பேசுவோம். அவள் படித்தவைகளை என்னிடம் ஷேர் செய்வாள் , நான் படித்தவைகளை நான் அவளிடம் ஷேர் செய்வேன். அப்படித்தான் ஸ்ரீ ராமானுஜர் பற்றியும் சொல்லியிருந்தேன். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ராமானுஜர் தொடரை இருவரும் சேர்ந்து யூ டியூபில் பார்ப்போம் . நடு நடுவே அது பற்றி விவாதிப்போம். அதில் திருக்கச்சி நம்பிகளை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் தான். அந்த தொடரில் திருக்கச்சியாக நடிக்கும்  அந்த தொடரின் இயக்குனர் தனுஷ் அருமையாக நடித்திருப்பார். உண்மையில் திருக்கச்சி நம்பிகள் இப்பிடித்தான் இருந்திருப்பார் என்று நினைக்கும் வகையில்   அவரது நடிப்பு இருந்தது
   டோஸ் ஏரியை ஒட்டிய பூங்காவில் டூலிப்  மலர்களைப் பார்த்ததும் இருவரும் ரொமப ரசித்தோம். பூங்கா முழுவதும் சுற்றி மலர்களை பார்த்து பரவசப் பட்டோம். புகைப்படங்கள் எடுத்தோம்.  "அம்மா இந்த மலர்களை பார்க்கும்போது பார்க்  முழுவதும் கலர் கலராய் பூக்களை பார்க்கும்போது உனக்கு என்ன நினைவுக்கு வருகிறது" என்று கேட்டாள் . "ஊட்டி மலர் கண்காட்சியா? " என்று கேட்டேன். "இல்லை அம்மா , திருக்கச்சி நம்பிகள் உனக்கு நினைவுக்கு வரவில்லை? பூக்கள் நிறைந்த அவரது நந்தவனம் நினைவுக்கு வரவில்லை ? என்று கேட்டாள் .
  ஆமாம் , திருக்கச்சி நம்பிகளின் நந்தவனமும் இப்படித்தானே இருந்திருக்கும்!!!


No comments:

Post a Comment