2017 ஏப்ரல் மாதம் சரணாகதத்தில் வந்த ராமானுஜர் பற்றிய எனது கட்டுரை :(text reproduced from my contribution in saranagatham)
ஸ்ரீ ராமானுஜர் --ஒரு அறிமுகம்
Ramanujar- An Introduction
இந்தியா ஒரு பணக்கார நாடு என்பேன் . என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் ஆன்மீகத்தில் நாம் பணக்காரர்கள் தான். உயர்ந்த உன்னதமான மகான்களும் ஆச்சாரியார்களும் அவதரித்த புண்ணிய பூமி இது.மேலை நாடுகள் தொழில் நுட்ப விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கலாம். .மே லை நாட்டினர் நமது வேத தத்துவங்களையும் நமது கலாசாரத்தையும் அறிந்து கொள்ள இந்தியா வருகிறார்கள். நமது நாகரீகத்தில் பல் வேறு சமயங்களில் மஹான்கள் தோன்றி இருக்கிறார்கள் . உபதேசங்கள் செய்து மக்களை நல் வழிபடுத்தியிருக்கிறார்கள் .இன்றும் மேலை நாட்டினர் அமைதி ஆன்மீகத் தேடலில் உந்தப் பட்டுதான் இங்கு வருகிறார்களே தவிர பொன்னோ பொருளோ தேடி இங்கு வருவதில்லை இந்த அளவு உன்னதம் வாய்ந்த நமது நாட்டில் தோன்றிய மஹான் தான் ஸ்ரீ ராமானுஜர் .
இந்த ஆண்டுடன் ராமானுஜர் தோன்றி ஆயிரம் ஆண்டுகளாகின்றன. 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கேசவ சோமயாஜி - காந்திமதி தம்பதிக்கு புத்திரனாக அவதரித்தார் அவர். வைஷ்ணவ வரலாற்றின் படி நம்மை போன்ற சாதாரண மானுடப் பிறவியில்லை அவர். திருமாலின் குடையாக படுக்கையாக பாதுகையாக இருந்து பெருமாளுக்கு அனைத்து தொண்டுகளையம் புரியும் ஆதி சேஷனின் அவதாரம் என்று அவர் கருதப் படுகிறார் .முதல் யுகமான க்ருத யுகத்தில் அனந்தனாக, த்ரேதா யுகத்தில் ராமனின் தம்பி லட்சுமணனாக , த்துவாபர யுகத்தில் பலராமனாக கலியுகத்தில் ஸ்ரீராமானுஜனாக அவதரித்தவர் ஆதிசேஷன் என்று நம்பப் படுகிறது.
ராமானுஜன அவதார தேவை என்ன என்கிற கேள்வி பலருக்கும் எழலாம். கலியுகத்தில்கொடுமைகள் அதிகரித்ததை பார்த்த வைகுண்ட ராஜனான நாராயணன் மக்களிடம் பக்தியைப் பெருக்கி அவர்களை நல்வழிப்படுத்த சமஸ்கிருத வேதத்தை தமிழ் பாசுரங்களாக பாடி மக்களிடம் அதை எளிதில் கொண்டு செல்வதற்காக ஆழ்வார்களை அனுப்பி வைத்தார் என்கிறது வைணவ மரபு வழி கதைகள் .பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் தான்ஆழ்வார்கள்.ஆழ்வார்கள் 12 பேர். பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார் , பேயாழ்வார் திருமழிசையாழ்வார் ,திருமங்கையாழ்வார் தொண்டரடிபொடியாழ்வார் திருப்பாணாழ்வார் ,குலசேகரஆழ்வார் பெரியாழ்வார் , நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார் ஆண்டாள் ஆகியோர் ஆனால் பன்னிரு ஆழ்வார்கள் உபதேசத்தை இரண்டாம் பட்சமாக்கி கடவுள் அனுபவத்தில் மூழ்கினார்கள். பகவானை அனுபவித்து பாசுரங்கள் பாடினார்கள் அனுபவத்தில் ஆழ்ந்தார்கள். அனுபவிக்கும்போது உபதேசம் எங்கிருந்து வரும்?உபதேசம் என்பது இரண்டாம் பட்சமானது .என்னை இந்த உலகத்தில் வைக்காதீர்கள் உந்தன் திருவடிக்கு என்னை அழைத்துக்கொள்ளுங்கள் என்று நெக்குருகினார்கள். அவர்கள் பாடிய பாசுரங்கள் மக்களை சென்றடையவில்லை. சமஸ்கிரதத்தில் இருந்த வேதம் சொன்னதை சாமானியனும் புரிந்து கொள்ளும் விதத்தில் தமிழ் பாசுரமாக அவர்கள் பாடியும் மக்களை எட்டவில்லை அது. வைகுண்ட பெருமாள் எதற்காக ஆல்வார்களை அனுப்பி வைத்தாரோ அது நடக்கவில்லை என்கிறது மரபு வழி கதைகளும் வைணவ வரலாறும்.
வேத சாஸ்திரங்கள் சொல்ல வேண்டிய அர்த்தங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் தொகை பெருகப் பெருக வேத சாஸ்திரங்களை பலர் கேள்விக்குறியாக்கினார்கள், பலர் அதற்கு தவறான அர்த்தங்களை கற்பித்தார்கள் , கற்பித்துக்கொண்டார்கள். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி அர்த்தங்களை சொல்ல ஆரம்பித்தார்கள். வேத சாஸ்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டார் பெரிய பெருமாள். இந்த ஜகத்தை காக்க வேண்டும், மக்களை காப்பாற்ற வேண்டும் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் பக்தி சாஸ்திரத்தை மக்களிடம் பரப்ப வேண்டும் அதன் உன்னதத்தை எடுத்துரைக்க வேண்டும் கலியுகத்திற்கு சரணாகதி தான் சிறந்தது அதை மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டும் அதற்கு தேவை ஒரு ஆசார்யன் . எனவே ஆதிசேஷனை ராமானுஜனாக வருங்கால ஆச்சார்யனாக அனுப்பலாம் என்று முடிவு செய்கிறார் . பெரிய பெருமாள் என்கிறது வைணவ வரலாறு. ஆழ்வார்கள் சொன்ன வழியை பின்பற்றி வைணவ கருத்துக்களை நா ட்டில் பரப்பி நல்வாழ்வுக்கு வழி காட்டியவர்கள்தான் ஆச்சாரியர்கள்
நம் பெருமாள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை செயல் படுத்துவார் நம்மாழ்வார் என்கிறது வைணவ குரு பரம்பரை கதை .வைணவத்தின் முதல் ஆச்சார்யரான நாத முனிகள் கிபி 823 ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் அவதரித்தார், ஸ்ரீ ராமானுஜரின் வருங்கால அவதாரத்தை நம்மாழ்வார் முன்னமேயே குறிப்பால் உணர்த்திவிட்டார். ஆழ்வார்களின் பாசுரங்களை தேடி அலைந்த நாதமுனிகள் முன்பு தோன்றிய நம்மாழவார் அவருக்கு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உபதேசித்ததுடன் ஒரு விக்கரகத்தை கொடுத்து "இவரே பவிஷ்யதாசார்யன் [வருங்கால ஆச்சாரியார்] இவரே கலியின் கொடுமையை தீர்ப்பார் " என்றார் . அந்த விக்கரகம் நாதமுனிகளின்பேரனின் கைக்கு செல்ல வேண்டும் என்றும் அவரே வருங்கால ஆச்சார்யனை அடையாளம் காண்பார் என்றும் சொல்லி மறைந்து விட்டார்.வருங்கால ஆச்சார்யான் விக்கரகத்தை வைத்துக் கொண்டிருந்த நாதமுனிகள் அதை தனது சிஷ்யரான உய்யக் கொண்டானிடம் கொடுத்து தனது பேரனிடம் ஒப்படைக்க சொன்னார். நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிகளின் மகனான யமுனைத்துறைவன் ஒரு அரசரிடம் ஏற்பட்ட போட்டியில் வெற்றிபெற்று ராஜ்யத்தை பரிசாக பெற்று ஆளவந்தார் என்கிற பெயரில் ஆட்சி புரிந்து வந்தார். யமுனை துறைவனை அடையாளம் காண எடுத்த முயற்சிகள் முழுமை அடையாமல் போகவே உய்யக்கொண்டான் விக்கரகத்தை அவரது சிஷ்யர் மணக்கால் நம்பிகளிடம் கொடுத்து யமுனைத்துறைவனை அடையாளம் காண வேண்டிய பொறுப்பை ஒப்படைத்தார்.மணக்கால் நம்பியும் தீவிர முயற்சிகளுக்கு பின் ஆளவந்தாரை நேரில் சந்தித்து அனைத்து விஷயங்களையும் கூற ஆளவந்தார் நாட்டை துறந்து துறவறம் பூண்டு யமுனாச்சாரியார் என்கிற திருப்பெயரில் வைணவ மூத்த ஆசார்யன் ஆனார். பவிஷ்யதாசார்யன் விக்கரகம் அவரிடம் வந்து சேர்ந்தது
யமுனாச்சாரியார் ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு வைஷ்ணவ சம்ப்ரதாயங்களை பரப்பிக் கொண்டிருந்தார். தனது பாட்டனார் நாதமுனிகள் தனது ஆச்சர்யனிடம் அளித்த , அவர் மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த விக்கிரக வடிவத்தில் இருக்கும் மகான் உலகில் தோன்றி விட்டாரா அவரை அடையாளம் காண வேண்டுமே , அவரிடம் சம்பிரதாயங்களை பரப்பும் ப்பணியை ஒப்படைக்க வேண்டுமே என்கிற கவலை இருந்தது. யமுனாச்சாரியாருக்கு பல சிஷயர்கள் இருந்தார்கள். பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கத்து அரையர், மலராண்டான் , மாறனேர் நம்பி, ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் பெரிய திருமலை நம்பி திருவேங்கடத்தில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தீர்த்த கைங்கரியம் செய்து கொண்டிருந்தார். இவரது இளைய சகோதரி தான் காந்திமதி , அதாவது ஸ்ரீராமாநுஜரின் தாயார் . ஆளவந்தார் ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ ஆச்சார்யனாக தனது பணிகளில் ஈடுபட்டிருக்கையில் தான் ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதரித்தார்.பெரிய திருமலை நம்பி தனது சகோதரிக்கு பிறந்த குழந்தைக்கு இளையாழ்வார் என்று பெயரிட்டார். இளையாழ்வார் தான் ராமானுஜர். தனது சிஷ்யர் பெரிய திருமலை நம்பி மூலம் ராமானுஜர் பற்றி அடிக்கடி கேட்டறிந்து கொள்வார் யமுனாச்சாரியார். ராமானுஜரை பார்த்ததில்லை என்றாலும் அவரை பற்றிய ஒரு ஆர்வம் இருந்தது அவரிடம்.
ராமானுஜர் சிறுவயதிலேயே வைஷ்ணவத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பால பாடத்தை தனது தந்தை கேசவ சோமயாஜியிடம் பயின்றார். ஆரம்ப கல்வியை மயூர வண்ணர் என்கிற குருவிடம் படித்தார் .. சிறு வயதிலேயே ராமானுஜருக்கு சமூக சீர்திருத்தங்கள் மீது அக்கறை இருந்தது. ஜாதி அடிப்படையில் சமூகத்தில் நிலவி வந்த பல விதமான வேறுபாடுகளை களைய வேண்டும் என்று விரும்பினார். அந்தக் காலத்தில் சில சமூகத்தினர் கோயிகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப் பட்டிருந்தார்கள் . அதனை எதிர்த்தார் ராமானுஜர். படிப்பறிவு இல்லாததால்தான் சில சமூகத்தினர் இன்னும் கீழ் நிலையில் இருக்கிறார்கள் நல்ல விஷயங்களை அவர்களிடம் எடுத்து சொன்னால் அவர்கள் வாழ்க்கை மேம்படும் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். குடிசை பகுதிகளுக்கு சென்று பாசுர வகுப்புகள் நடத்தினார். பின்னர் வேதம் உபநிஷத்துக்களை பயில்வதற்காக காஞ்சிபுரம் அருகே இருக்கும் திருப்புக்குழி என்கிற ஊருக்கு சென்றார். அங்கு அவர் யாதவ பிரகாசர் என்கிற அத்வைத குருவிடம் மாணவனாக சேர்ந்தார்
பெரிய திருமலை நம்பி மூலம் ராமானுஜரின் புலமை அவருக்கு வைணவத்தின் மீது இருக்கும் ஈடுபாடு அவரது சமூக சீர்திருத்த கருத்துக்கள் அவரது பண்புகள் ஆகியவற்றை கேள்விப்பட்டுக்கொண்டிருந்த யமுனாச்சாரியாருக்கு இவர்தான் தான் தேடும் வருங்கால ஆசார்யனோ என்கிற நினைப்பு அடிக்கடி ஏற்பட்டது. ராமானுஜர் பற்றி திருமலை நம்பி சொல்லும் போதெல்லாம் தனக்கு ஏற்படும் பிரமிப்பு அதீத ஆர்வம் அவரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா குறித்து அவரே ஆச்சர்யம் அடைந்தார். இருந்தாலும் தன்னிடம் இருக்கும் வருங்கால ஆச்சர்யனை இன்னும் அடையாளம் காண முடியவில்லையே என்கிற கவலையும் அடிக்கடி அவருக்கு ஏற்பட்டது
திருப்புக்குழியில் யாதவ பிரகாசரிடம் மாணவனாக சேர்வதற்கு முன்பாகவே ராமானுஜருக்கு தஞ்சமாம்பாள் என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாத ராமானுஜர் அவரது தாயின் வார்த்தையை தட்டக் கூடாது என்பதற்காக திருமணம் செய்து கொண்டார். யாதவ ப்ரகாசரிடம் படிக்கும்போது உபநிஷத்களுக்கு பொருள் சொல்லும் போது குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே கருத்து வேற்றுமைகள் வந்தன . குரு சொல்லும் அர்த்தங்கள் ஏற்க முடியாததாக இருக்கும் போது அதை யாதவ பிரகாசரிடம் ராமானுஜர் எடுத்துரைக்கும் சமயங்களில் யாதவ பிரகாசருக்கு கோபம் வரும். சிஷ்யன் தன்னைமீறி பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை. தனது கோபத்தை பல விதங்களில் அவர் காட்டினார்.இருந்தும் குருபக்தியால் ராமானுஜர் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து அவரிடமே கல்வி பயின்றார்.
ஸ்ரீரங்கத்தில் யமுனாச்சாரியார் தனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது இன்னும் வருங்கால ஆசார்யனை அடையாளம் காண முடியவில்லையே தனக்கு பின் வைணவ சம்பிரதாயத்தை யார் வளர்க்கப் போகிறார்கள் என்கிற கவலையில் அடிக்கடி ஆழ ஆரம்பித்தார் , ஒரு முறை திருவரங்கத்து அரங்கனிடம் அவர் கண்ணீர் விட்டு புலம்ப, வருங்கால ஆச்சர்யனை ரங்கநாதர் அவருக்கு காட்டுவது போல் கனவு கண்டார். சரி ராமானுஜரை காஞ்சியில் சென்று பார்த்து வந்துவிடலாம் என்று காஞ்சியம்பதிக்கு வருகை தந்தார் . . காஞ்சியம்பதியில் யமுனாச்சார்யாரின் சீடர் திருக்கச்சி நம்பி என்று ஒருவர் இருந்தார். அவரை ராமானுஜர் தனது குருவாக கருதி மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டி வந்தார். திருக்கச்சி நம்பிகள் தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து காஞ்சியம்பதிக்கு நடந்து வந்து புஷ்ப்பங்களை மாலையாகக் தொடுத்து காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு அணிவித்து அவருக்கு ஆலவட்டம் வீசி கைங்கர்யம் செய்து வந்தார். காஞ்சி வந்த ஆளவந்தார் திருக்கச்சியிடம் ராமானுஜரை தான் பார்க்க விரும்புவதாக சொன்னார். அப்போது ராமானுஜர் தனது சக மாணவர்கள் சூழ ஆசிரியருடன் வரவிருக்கும் தகவலை கூறினார் திருக்கச்சி ராமானுஜரை தான் அழைத்து வருவதாக திருக்கச்சி கூறியபோது அதை யமுனாச்சார்யார் மறுத்து விட்டார். தனக்கு ராமானுஜரை பார்க்க தோன்றியது போல ராமானுஜருக்கு தன்னை பார்க்க தோன்றும் போதுதான் சந்திப்பு நிகழ வேண்டும் என்று சொல்லிவிட்டார் எனவே தொலை தூரத்திலிருந்து ராமானுஜரை பார்த்தார் ஆசார்யன். தனது கனவில் அரங்கன் காட்டியவரே அவர் என்பதை யமுனாச்சாரியார் உறுதி செய்து கொண்டார்.
வருங்கால ஆச்சர்யனை அடையாளம் கண்டுகொண்டுவிட்ட திருப்தியில் யமுனாச்சாரியார் ஸ்ரீரங்கம் திரும்பினார். ராமானுஜர் தான் தனக்கு பின் வைஷ்ணவ சம்பிரதாயத்தை பரப்ப வேண்டும் வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த யமுனாச்சாரியாருக்கு ராமானுஜர் யாதவ பிரகாசருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் படிப்பை நிறுத்தி விட்டு காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து வருவ்து தெரிய வந்தது . அந்த சமயத்தில் யமுனாச்சாரியாரின் உடல்நிலை மோசமடைய உடனடியாக காஞ்சி சென்று ராமானுஜரை அழைத்து வருமாறு பெரிய நம்பியை காஞ்சிக்கு அனுப்பினார்.
ராமானுஜரை யமுனாச்சாரியார் சந்தித்தாரா? அரங்கனின் சித்தம் என்னவாக இருந்தது என்பதை அடுத்த பகுதி விளக்கும்
எப்படி எங்கிருந்து இவ்வளவு தகவல் சேகரித்தீர்கள்? மலைப்பாக உள்ளது.ஆனால் மிக சுவாரசியமாக இருக்கிறது. ஆர்வத்தை தூண்டும் வகையில் முடிக்கப்பட்டது அருமை.மொத்தத்தில் இந்த பகிர்வு அனுபவித்து படிக்க வேண்டிய ஒன்று.பணி தொடர வாழ்த்துக்கள்.சந்திரா.
ReplyDeleteநீ ரசித்து அனுபவித்து படித்திருக்கிறாய் என்பது தெரிகிறது. மிக்க நன்றி!
Delete