Total Pageviews

Thursday, 25 May 2017

பஸ் பயணம் - படு சுவாரசியம்




கனடா குளிர் பார்த்து முதலில் பயந்தேன். வந்து சில நாட்கள் 2 , 3 டிகிரி கூட போனது . வெளியில் போனாலே ஜாக்கெட்டும்  வார்மரும் உடலோடு இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நம்மூர் மாதிரி நினைத்தவுடன் செருப்பை மாட்டிக் கொண்டோம் வெளியே  போனோம் என்று இருக்கவில்லை. எப்போதும்  கவசங்களை மாட்டிக்கொண்டுதான் என்ற நிலை.  மே 20 தேதிக்கு பிறகு வானிலை மேம்பட்டிருக்கிறது. 20, 23, 28 வரை கூட  இருந்தது. எனக்குத்தான் ரொம்ப சந்தோஷம். 10 டிகிரி 12  டிகிரியின் போது  கூட சூரியன் வராமல் இல்லை வெயில் நன்றாகவே அடிக்கிறது சுள்ளென்று . ஆனால் குளிரும் இருக்கிறது. அதுவும் முகத்தில் காற்று ரொம்ப குளிர்ச்சியாக படுகிறது.
   இந்த நாட்டில் பேருந்தில் பயணிப்பது ஒரு சுகானுபவமாக இருக்கிறது. வேற்று நாட்டில்  பஸ்ஸில் செல்வது சுவாரசியமானது. அந்த ஊர் மக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஊர் பற்றி அறிந்து கொள்ள முடியும். பல இடங்கள் பற்றி தெரிய வரும். அதுவும் கனடா போன்ற வசதிகள் நிறைந்த நாட்டில் பஸ்ஸில் பயணிப்பது என்பது அருமையான அனுபவம் என்று சொல்ல முடியும்.  முதலில் புதிதாக தோற்றமளிக்கும் இருக்கைகள். பொறுமை காட்டும் டிரைவர்கள். அனைவரும் ஏறிவிட்டனர் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர்தான் பஸ்சை எடுக்கிறார். மாற்று திறனாளிகளுக்கு அவர்கள் வரும் கை வண்டிகளுடன் பஸ்ஸில் ஏறுவதற்கு வசதி இருக்கிறது. டிரைவர் படியை தாழ்வாக்கி  அவர்கள் ஏறியதும் சம நிலைக்கு கொண்டு வர அனைத்து பஸ்களிலும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன . ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் அந்த நிறுத்தத்தின் பெயர் ரெகார்டட்  குரலில் வருகிறது. அதனால் எந்த பஸ் நிறுத்தம் இது என்று குழப்பம் ஏற்படுவதில்லை. அதேபோல் உள்ளே இருக்கும் போர்டில் எழுத்திலும் அந்த நிறுத்தத்தின் பெயர் வருகிறது. நடத்துனர் என்பவர் கிடையாது. ஒவ்வொரு நிறுத்த்திலும் வரிசையாக பயணிகள் .ஏறுகிறார்கள்  டிரைவர் அருகே இருக்கும் ஒரு சிறிய எந்திரத்தில் காசு போட்டு டிக்கெட் கிழித்து கொள்கிறார்கள் . தினசரி செல்பவர்கள் ஓ .சி டிரான்ஸ்போர்ட் {ஆட்டோவா சிட்டி டிரான்ஸ்போ } கார்டு வாங்கி வைத்திருக்கிறார்கள். காசு போடும் மிஷின் அருகே கார்டு காட்டும் மிஷினும் இருக்கிறது. பஸ்ஸில் ஏறுபவர்கள் கார்டை பன்ச் செய்துவிட்டுத்தான் உள்ளே போய் அமர்கிறார்கள். "சீக்கிரம் சீக்கிரம்" என்கிற நமது ஊர்களில் கேட்கும்  குரல்களும்  "ஏங்க எவ்வளவு நேரமா மிஷின் கிட்டேயே நிற்பீர்கள் "என்கிற நமது ஊர் கோபக்  குரல்களும்   எனக்கு நினைவுக்கு வருகின்றன. . பொறுமை பொறுமை . எல்லா இடத்திலும் மக்கள் பொறுமை காட்டுகிறார்கள். சில டிரைவர்கள் ஹாய்  சொல்கிறார்கள் குட் மார்னிங் சொல்கிறார்கள்.

பஸ் பயணம் அருமையான அனுபவம்.




No comments:

Post a Comment