Total Pageviews

Monday, 22 May 2017



சரணாகதம் மே மாத இதழில் வந்த ராமானுஜர் பற்றிய எனது கட்டுரை - 2 ஆம் பகு தி


ராமானுஜர் 2 ஆம் பகுதி


அரங்கனின் அருளில்


எழுதியவர் : பானுமதி கிருஷ்ணஸ்வாமி , சென்னை




லக்ஷ்மண முனி, யதிராஜன் , ஸ்ரீ பாஷ்யக்காரர் உடையவர் என்று பல பெயர்களில் அறியப்படும் ஸ்ரீராமானுஜர் பெரிய நம்பி காஞ்சிபுரம் வந்து யமுனாச்சாரியார் அழைத்து வர சொன்னதாக கூறியதும் ஸ்ரீரங்கத்திற்கு உடனே புறப்பட்டார் .ஆனால் அவரும் பெரிய நம்பியும் கொள்ளிடக் கரையை அடையும் போதே அவர்களை அந்த சோகமான தகவல் வந்தடைந்தது . ஆம் யமுனாச்சாரியார் வைகுண்டம் அடைந்துவிட்டார் . தனக்கு பின் ராமானுஜர் தலைமை பொறுப்பேற்று வைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்து பரப்பி வழி நடத்தி செல்ல வேண்டும் என்று யமுனாச்சாரியார் விரும்பினார். ராமானுஜரை பார்க்க வேண்டும் அவரிடம் சம்பிரதாய பணிகளை நேரிடையாக ஒப்புவிக்க வேண்டும் என்றல்லாம் யமுனாச்சாரியார் ஆசை பட்டார். ஆனால் இருவரும் நேரிடையாக சந்தித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது . வருங்கால ஆச்சர்யனை பார்க்காமலேயே தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பவிஷ்யதாசார்யன் எங்கிருக்கிறார் என்பதை அடையாளம் கண்டும் அவரை சந்திக்க முடியாமலேயே யமுனாச்சார்யாரின் காலம் முடிந்துவிட்டது. தனக்கு தெரியாமலேயே தன்னை வந்து ஆச்சர்யன் பார்த்தும் தன்னால் அவரை சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று ராமானுஜர் மிகவும் வருத்தப்பட்டார்.அவரிடம் நேரிடையாக உபதேசம் பெரும் பாக்யம் கிடைக்காமல் போய்விட்டது என்று கலங்கினார் கொள்ளிடக் கரையில் ஆளவந்தாரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததை பார்த்து கண்ணீர் விட்டார். அப்போதுதான் யாரும் பார்க்காத ஒரு விஷயத்தை ராமானுஜர் பார்த்தார். யமுனாச்சார்யரின் திருமேனியில் ஒரு கையில் மூன்று விரல்கள் மடங்கி இருந்தன . விரல்கள் மடங்கி இருக்கின்றனவே என்று அவர் கேட்ட போதுதான் அனைவரும் அதை பார்த்தார்கள். அப்போது ராமானுஜர் அவருக்கு நிறைவேறாத ஆசைகள் இருந்தனவா என்று கேட்ட பொது அவரது சிஷ்யர்கள் ஆமாம் என்று சொல்லி அந்த ஆசைகளை சொன்னார்கள்.






1. வேத வியாசரின் ப்ரம்ம சூத்திரத்திற்கு ஒரு விளக்க உரை எழுத வேண்டும்






2. பராசரர் வியாசர் ஆகியோரின் பங்களிப்பிற்கு நமது நன்றியை காட்டும் விதத்தில் சிறந்த வைணவ சிரேஷ்டருக்கு அவர்களது பெயரை சூட்ட வேண்டும்





3. சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத வேண்டும். .




இதை கேட்ட ராமானுஜர் ஆச்சார்யரின் இந்த மூன்று ஆசைகளையும் நான் நிறைவேற்றுவேன் என்று உறுதி சொல்ல யமுனாச்சார்யரின் மடங்கிய விரல்கள் நிமிர்ந்து கொண்டன. இதுவே அவருக்கு யமுனாச்சார்யாரின் அருள் இருந்தது என்பதை அனைவருக்கும் உணர்த்தியது. ஆச்சாரியாரின் மறைவால் ஏற்பட்ட துக்கத்தில் ராமானுஜர் திருவரங்கத்தில் அரங்கனை தரிசிக்காமலேயே காஞ்சிபுரம் திரும்பி வரதனுக்கு தீர்த்த கைகர்யத்தை தொடர ஆரம்பித்தார்.





ராமானுஜர் சமூக சீர்திருத்த கருத்துக்கள் உடையவராக இருந்தார். கடவுளின் முன்பு அனைவரும் சமம் என்று போதித்தார். ஆன்மீக ஈடுபாடும் இறை பக்தியும் ஒருவரை நல்ல குணம் உள்ளவராக்கும் என்றார். சாதி வேறுபாடு பார்க்காமல் கடவுள் பக்தி உள்ளவர்களை சரி சமமாக நடத்தினார். அவரது தாராள மனப்பான்மையும் ஜாதீய அடிப்படையிலான பிடிவாதங்களை ஒதுக்கி தள்ளியதும் தனது மன அமைதிக்கு பங்கம் வந்தாலும் பரவாயில்லை எல்லோருக்கும் உதவ வேண்டும் நலிவடைந்தவர்களை புறக்கணிக்காது அவர்களை அணைத்து செல்ல வேண்டும் என்கிற உயர்ந்த பண்புகளும் அவரது மாற்று சிந்தனைகளும் அவரை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்தி காட்டியது.


காஞ்சியம்பதியில் வரதராஜ பெருமாளுக்கு ஆல வட்டம் வீசி கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பிகள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அவரை தனது ஆசானாக கருதினார். அவர் அந்தண குலத்தை சேராதவர் என்று ஒரு நாளும் அவர் கருதியதில்லை அவரை தனது ஆச்சார்யனாகவே கருதி வந்தார். ஆனால் ராமானுஜரின் மனைவி அதை புரிந்துகொள்ளவில்லை


திருக்கச்சி நம்பிகளை ஒரு முறை சாப்பிட அழைத்திருந்தார் ராமானுஜர். அவரை தனது ஆசானாக அவர் கருதியதால் அவருக்கு தன கையால் உணவு பரிமாறி அவர் உண்ட மிச்சத்தை தான் பிரசாதமாக உண்ண வேண்டும் என்று என்று நினைத்திருந்தார். உணவு தயார் ஆகியும் திருக்கச்சி வரவில்லை என்பதால் அவரை அழைத்து வர அவர் எப்போதும் இருக்கும் வரதர் கோவிலுக்கு சென்றார் ராமானுஜர். ஆனால் அதற்குள் ராமானுஜர் வீட்டிற்கு வந்துவிட்டார் திருக்கச்சி. அவர் மனைவி தஞ்சமாம்பாள் திருக்கச்சி ஸ்வாமிகள் அந்தணர் அல்லாதவர் என்பதால் அவரை வீட்டுக்கு வெளியே திண்ணையில் அமர வைத்து சாப்பாடு போட்டு அவர் சாப்பிட்டு முடித்ததும் அவர் இலையை கொம்பு ஒன்றினால் எடுத்து வீசியெறிந்து தனது ஆச்சாரம் போய்விட்டது என்று மீண்டும் குளித்து ராமானுஜருக்கு உணவு தயாரிக்க ஆரம்பித்தார். இதனை பார்த்த ராமானுஜர் கடும் கோபம் கொண்டார். அதே போல் ஒரு நாள் பசி என்று சொல்லி வந்த ஒருவருக்கு வீட்டில் உணவு இருந்தும் இல்லை என்று தஞ்சமாம்பாள் சொல்ல அதனை அறிந்து மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார் ராமானுஜர். அவருக்கு இல்லறம் மீது வெறுப்பு வளர ஆரம்பித்தது. இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் யமுனாச்சார்யாரின் சிஷ்யர்கள் தங்கள் ஆசார்யன் விரும்பியபடி ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வர முடிவு செய்தார்கள்.





யமுனாச்சாரியார் தனது காலம் முடிவடைவதற்குள் ராமானுஜரை பார்க்க முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது என்று ராமானுஜருக்கு அவரது சிஷ்யர்கள் என்னவெல்லாம் சொல்லித்தந்து அவரை வைணவ சம்பிரயதத்திற்கு தலைமை ஏற்க தயார் படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். அந்தப் பணிகளை செவ்வனே முடிக்க ராமானுஜரை திருவரங்கம் அழைத்து வந்து விட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள் யமுனாச்சாரியார் இவ்வுலகை விட்டு செல்வதற்கு முன் தனது சிஷ்யர்களில் யார் யார் எந்தெந்த பணிகளை ராமானுஜருக்கு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். வருங்கால ஆசார்யன் ராமானுஜர் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவே திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்கு தான் உபதேசித்த ரகசியார்த்தங்களை ராமானுஜருக்கு தகுந்த காலத்தில் உபதேசிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார் யமுனாச்சாரியார். திருமலையாண்டான் திருவாய் மொழியையும் திருவரங்க அரையர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எஞ்சி இருக்கும் மூவாயிரம் பாடல்களையும் ராமானுஜருக்கு கற்பிக்க வேண்டும் மூத்த சிஷ்யரான பெரிய நம்பி அவருக்கு வைஷ்ண சம்பரதாயமான பஞ்ச சமஸ்காரத்தை செய்விக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். எனவே ஆளவந்தாரின் சிஷ்யர்கள் தங்களது ஆசார்யன் சொன்னவற்றை ராமானுஜருக்கு செய்விக்க அவர் திருவரங்கம் வந்தால்தான் நல்லது என்று கருதி பெரிய நம்பியை அனுப்பி ராமானுஜரை கூட்டி வர சொன்னார்கள். பெரிய நம்பி தனது மனைவி விஜயாம்பாளுடன் காஞ்சியம்பதிக்கு வந்தார்.


ஆனால் ராமானுஜர் ஆச்சாரமே தனது கொள்கையாகக் கொண்ட மனைவி மீது மிகவும் வருத்தத்தில் இருந்தார். அதனுடன் சேர்ந்து யமுனாச்சாரியாரின் மறைவும் அவரை மிகவும் பாதித்தது. அதனால் திருவரங்கம் செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினார். காஞ்சி வந்து கொண்டிருந்த பெரிய நம்பியும் திருவரங்கம் சென்று கொண்டிருந்த ராமானுஜரும் மதுராந்தகத்தில் சந்தித்துக் கொண்டார்கள். எதிர்பாராத இந்த சந்திப்பு இருவரையும் சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்தது.


உடனே ராமானுஜரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலிலேயே பெரிய நம்பிகள் அவருக்கு பஞ்ச சம்காரம் செய்து வைத்தார். {இந்த கோயிலில் இன்னும் பெரிய நம்பி ராமானுஜருக்கு சமார்ஷணம் செய்த சங்கும் சக்கரமும் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கிறது.} {வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பஞ்ச சமஸ்காரம் என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது . வைஷ்ணவ குலத்தில் ஒருவர் பிறக்காவிட்டாலும் பஞ்ச சமஸ்காரம் செய்து கொண்டால் அவர் பூரண வைஷ்ணவராகிறார் என்கிறது ஸ்ரீவைஷ்ணவம். அதன் படி ஸ்ரீமன் நாராயணின் திருவடிகளை பற்றிக்கொள்ள ஒருவர் தனது உடலை ஐந்து விதமானமுறைகளில் பரிசுத்தம் செய்துகொள்ள வேண்டும். 1. ஸ்ரீமன் நாராயணன் கையில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தியிருப்பர் என்பது அனைவரும் அறிந்தது. எனவே அந்த சங்கு மற்றும் சக்கரத்தை ஒரு ஆசார்யன் மூலம் வேத மந்திர உபதேசங்களுடன் அவர் தனது தோள்களில் பொரித்துக் கொள்ள வேண்டும். 2. அவர் உடலில் 12 திருமண் அணிந்து கொள்ள வேண்டும் 3.அவரது பெயருக்கு பின் "தாஸன் " என்கிற வார்த்தையை ஆச்சர்யன் சேர்ப்பார். அதாவது வைகுண்டத்தை அடைய ஒருவர் ராமானுஜரின் தாசனாக இருக்க வேண்டும், அவர் அவருக்கு மோக்ஷம் பெற்று தருவார் என்பது நம்பிக்கை. 4. .திருமந்திரம் த்வயம் சரம ஸ்லோகம் ஆகியமூன்று ரஹஸ்ய மந்திரங்களை ஆச்சர்யன் அவரது காதுகளில் சொல்வார்.5. கடவுளுக்கு திருவாராதனம் செய்யும் முறையை அதாவது கடவுளை சரியான முறையில் எப்படி வழிபடுவது என்பதை ஆசார்யன் விளக்குவார்.இதுதான் பஞ்ச சம்காரம் என்று சொல்லப்படுவது. }அங்கிருந்து இருவரும் காஞ்சிக்கு வந்தார்கள். காஞ்சியில் ராமானுஜர் வீட்டிலேயே பெரிய நம்பிகளும் அவர் மனைவியும் தங்கினார்கள். ராமானுஜருக்கு ஆசானாக இருந்து பெரிய நம்பி தான் ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்ட வேதாந்தங்களை கற்றுக் கொடுத்தார்.






ஆனால் ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாளுக்கும் பெரிய நம்பியின் மனைவி விஜயாம்பாளுக்கும் இடையே ஒரு முறை சண்டை ஏற்பட அதை அறிந்தால் ராமானுஜர் மனக் கஷ்டப்படுவார் என்று உணர்ந்து பெரிய நம்பி தனது மனைவியுடன் ராமாநுஜரிடம் சொல்லாமலேயே திருவரங்கம் திரும்பி விட்டார். சண்டை பற்றி கேள்வி பட்ட ராமானுஜர் தன மனைவி மீது கோபமும் வருத்தமும் அடைந்தார். வைணவ சம்பிரதாயங்களை தனக்கு கற்பித்து வந்த ஆசான் மனம் கோணும்படி சம்பவம் நடந்தது அவருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இல்லறம் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது . உடனே குளத்தில் நீராடி அணைத்து உறவுகளையும் பாசத்தையும் துறந்து காஷாய ஆடையை ஏற்று தத்துவங்கள் மூன்று என்று உணர்த்தும் த்ரிதண்டத்தை காஞ்சி வரதராஜ பெருமாளின் அருளால் ஏந்தினார். வரதராஜ பெருமாள் அவரை ராமானுஜ முனி யதிராஜன் என்று அழைத்து அவருக்கு அப்பெயர்களை சூட்டினார். துறவியான ராமானுஜர் யமுனாச்சாரியாரின் சிஷயர்கள் விருப்பப்படி ஸ்ரீரங்கம் கிளம்பினார்






திருவரங்கம் நுழைந்தவுடன் முதலில் கோயிலில் ஸ்ரீ ரங்கநாதரை ராமானுஜர் தரிசனம் செய்தார். அப்போது ரங்கநாதர் இந்த மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் உனது உடமை ஆக்குகிறேன், அதனால் இனி நீ உடையவர் என்று பெயர் பெறுவாய். இனி நீ தான் இந்த கோயில் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று அறிவித்தார் என்கிறது வைணவ வரலாறு.




ராமானுஜரின் வாழ்க்கையில் அவர் ஸ்ரீரங்கம் வந்த பின் நடந்த சம்பவங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு சிறந்த நிர்வாகியாக அவர் கோயிலை நிர்வகித்தது ய முனாச்சாரியாருக்கு செய்து கொடுத்த உறுதிகளை நிறைவேற்றியது சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட்டது பல நூல்கள் எழுதியது, அவரது சீர்திருத்தங்களால் பாதிக்கப் பட்டவர்கள் அவரை கொல்ல சதி செய்தது அதிலிருந்து அவர் மீண்டு வந்தது வைணவம் பரப்ப அவர் பாரத தேசம் முழுவதும் திக் விஜயம் செய்தது எல்லாமே அவற்றில் அடங்கும் இதனை கட்டுரையின் அடுத்த பகுதி விளக்கும்.



மூன்றாம் பகுதி ஜூன் மாத சரணாகததில் வெளிவரும்

1 comment:

  1. முற்போக்கு கருத்துக்கள் கொண்ட ராமானுஜரை மிகவும் பிடித்தது.உங்கள் எழுத்துநடை பிரவாஹமென மனம் எனும் ஓடையில் கலக்க கண்டேன்.நிறைய விஷயங்கள் ,தெரியாத விஷயங்கள் படிக்க கிடைத்த வாய்ப்பு மிக்க நன்றி பானு.பணி தொடர வாழ்த்துக்கள்.சந்திரா.

    ReplyDelete