Total Pageviews

Saturday, 27 May 2017

திருக்கச்சி நம்பிகளும் டூலிப் மலர்களும்




தலைப்பை பார்த்து ஆச்சர்யமாக இருக்கலாம். ஸ்ரீ ராமானுஜர் ஆச்சார்யனாக கருதிய திருக்கச்சிக்கும் கனடாவின் டூலிப் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம் என்று.
  ராமானுஜர் காலத்தில் திருக்கச்சி  நம்பிகள் தினமும் காஞ்சி பேரருளாளனுக்கு புஷ்பக் கைங்கர்யம் செய்து வந்தார் என்பது வைணவ வரலாறு பற்றி அறிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். தினமும்  பூவிருந்தவல்லியிலிருந்து .காஞ்சிபுரம்  சென்று காஞ்சி வரதராஜ பெருமானுக்கு பூமாலை சாற்றி ஆளவட்டக் கைங்கர்யம் செய்து வந்தவர். பூவிருந்தவல்லியில் அவருக்கு ஒரு பெரிய நந்தவனம் இருந்தது. அதில் பல விதமான மலர்களை வளர்த்து அதை தினமும் மாலைகளாகக் கட்டி காஞ்சிக்கு எடுத்து செல்வார். அவரது பூவிருந்தவல்லி நந்தவனம் புகழ்பெற்றது.
இப்போது கனடாவின் டூலிப் பெஸ்டிவல் பற்றி.. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்த டுலிப் பெஸ்டிவல் இங்கு கொண்டாடப் படுகிறது. மணி போல் தோற்றமளிக்கும் இந்த பூக்கள் பல வண்ணங்களில் பூக்கிறது. இந்த பூ தான் கனடாவின் தேசிய பூ. சர்வதேச நட்பை காட்டும் பூவாகவும் இது  கருதப் படுகிறது .இரண்டாவது உலக போரின்போது நெதர்லாந்து நாட்டு இளவரசி ஜூலியானா கனடா நாட்டில் வந்து தங்கி இருக்கும்போது அவருக்கு குழந்தை பிறக்கிறது. ஆட்டோவா சிவிக் மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறக்கிறது. கனடா அரசு அந்த குழந்தை நெதர்லாந்து பிரஜையாக இருக்க வேண்டும் என்று விரும்பி குழந்தை பிறந்த அந்த அறையை மட்டும் நெதர்லாந்து பகுதி என்று அறிவிக்கிறது. மனம் நெகிழ்ந்த நெதர்லாந்து அரச குடும்பம் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்த 2 லட்சம் டுலிப் மலர்களை நட்புணர்வு அடையாளமாக அளிக்கிறது. அதிலிருந்து கனடா அரசு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் துலிப் திருவிழா கொண்டாடுகிறது. நகரின் முக்கிய பூங்காக்களில் அரசு துலிப் பூக்களை வளர்க்கிறது. அது மட்டுமின்றி சாலைகளின் ஓரங்களிலும் பூக்கள் வளர்க்கப் படுகிறது. ஊரே பூக்கோலத்தில் வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. வீடுகளிலும் வெளியே துலிப் மலர்களை வளர்க்கிறார்கள். மே மாத இரண்டாம் வாரத்திலிருந்து மூன்றாம் வாரம் வரை ஊரே பூக்கோலம் பூண்டிருக்கிறது.
  இந்த ஆண்டு டூலிப் திருவிழாவின் போது நான் இங்கிருப்பதால் நானும் என் பெண்ணும் சென்றோம். டோஸ் ஏரியில் நடந்த டூலிப் திருவிழாவுக்கு. அன்று வெயில் நன்கு அடித்தாலும் வெப்ப நிலை 12 டிகிரிதான். ஏரியை ஒட்டிய பூங்காவில் உள்ளே நுழைந்ததும் ஆச்சர்யப் பட்டுபோனேன். பலவித வண்ணங்களில் மணி போன்ற தோற்றத்தில் டூலிப் மலர்கள். பூத்து குலுங்கியிருந்தன.
Tulips- @Dows Lake,Ottawa

  நானும் என்  பெண்ணும் எல்லா விஷயங்கள் பற்றியும் பேசுவோம். அரசியல், சினிமா, fashion , கலாச்சாரம் ஆன்மிகம், புத்தகங்கள்  என்று அனைத்து பற்றியும் பேசுவோம். அவள் படித்தவைகளை என்னிடம் ஷேர் செய்வாள் , நான் படித்தவைகளை நான் அவளிடம் ஷேர் செய்வேன். அப்படித்தான் ஸ்ரீ ராமானுஜர் பற்றியும் சொல்லியிருந்தேன். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ராமானுஜர் தொடரை இருவரும் சேர்ந்து யூ டியூபில் பார்ப்போம் . நடு நடுவே அது பற்றி விவாதிப்போம். அதில் திருக்கச்சி நம்பிகளை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் தான். அந்த தொடரில் திருக்கச்சியாக நடிக்கும்  அந்த தொடரின் இயக்குனர் தனுஷ் அருமையாக நடித்திருப்பார். உண்மையில் திருக்கச்சி நம்பிகள் இப்பிடித்தான் இருந்திருப்பார் என்று நினைக்கும் வகையில்   அவரது நடிப்பு இருந்தது
   டோஸ் ஏரியை ஒட்டிய பூங்காவில் டூலிப்  மலர்களைப் பார்த்ததும் இருவரும் ரொமப ரசித்தோம். பூங்கா முழுவதும் சுற்றி மலர்களை பார்த்து பரவசப் பட்டோம். புகைப்படங்கள் எடுத்தோம்.  "அம்மா இந்த மலர்களை பார்க்கும்போது பார்க்  முழுவதும் கலர் கலராய் பூக்களை பார்க்கும்போது உனக்கு என்ன நினைவுக்கு வருகிறது" என்று கேட்டாள் . "ஊட்டி மலர் கண்காட்சியா? " என்று கேட்டேன். "இல்லை அம்மா , திருக்கச்சி நம்பிகள் உனக்கு நினைவுக்கு வரவில்லை? பூக்கள் நிறைந்த அவரது நந்தவனம் நினைவுக்கு வரவில்லை ? என்று கேட்டாள் .
  ஆமாம் , திருக்கச்சி நம்பிகளின் நந்தவனமும் இப்படித்தானே இருந்திருக்கும்!!!


Thursday, 25 May 2017

பஸ் பயணம் - படு சுவாரசியம்




கனடா குளிர் பார்த்து முதலில் பயந்தேன். வந்து சில நாட்கள் 2 , 3 டிகிரி கூட போனது . வெளியில் போனாலே ஜாக்கெட்டும்  வார்மரும் உடலோடு இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நம்மூர் மாதிரி நினைத்தவுடன் செருப்பை மாட்டிக் கொண்டோம் வெளியே  போனோம் என்று இருக்கவில்லை. எப்போதும்  கவசங்களை மாட்டிக்கொண்டுதான் என்ற நிலை.  மே 20 தேதிக்கு பிறகு வானிலை மேம்பட்டிருக்கிறது. 20, 23, 28 வரை கூட  இருந்தது. எனக்குத்தான் ரொம்ப சந்தோஷம். 10 டிகிரி 12  டிகிரியின் போது  கூட சூரியன் வராமல் இல்லை வெயில் நன்றாகவே அடிக்கிறது சுள்ளென்று . ஆனால் குளிரும் இருக்கிறது. அதுவும் முகத்தில் காற்று ரொம்ப குளிர்ச்சியாக படுகிறது.
   இந்த நாட்டில் பேருந்தில் பயணிப்பது ஒரு சுகானுபவமாக இருக்கிறது. வேற்று நாட்டில்  பஸ்ஸில் செல்வது சுவாரசியமானது. அந்த ஊர் மக்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஊர் பற்றி அறிந்து கொள்ள முடியும். பல இடங்கள் பற்றி தெரிய வரும். அதுவும் கனடா போன்ற வசதிகள் நிறைந்த நாட்டில் பஸ்ஸில் பயணிப்பது என்பது அருமையான அனுபவம் என்று சொல்ல முடியும்.  முதலில் புதிதாக தோற்றமளிக்கும் இருக்கைகள். பொறுமை காட்டும் டிரைவர்கள். அனைவரும் ஏறிவிட்டனர் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர்தான் பஸ்சை எடுக்கிறார். மாற்று திறனாளிகளுக்கு அவர்கள் வரும் கை வண்டிகளுடன் பஸ்ஸில் ஏறுவதற்கு வசதி இருக்கிறது. டிரைவர் படியை தாழ்வாக்கி  அவர்கள் ஏறியதும் சம நிலைக்கு கொண்டு வர அனைத்து பஸ்களிலும் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன . ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் அந்த நிறுத்தத்தின் பெயர் ரெகார்டட்  குரலில் வருகிறது. அதனால் எந்த பஸ் நிறுத்தம் இது என்று குழப்பம் ஏற்படுவதில்லை. அதேபோல் உள்ளே இருக்கும் போர்டில் எழுத்திலும் அந்த நிறுத்தத்தின் பெயர் வருகிறது. நடத்துனர் என்பவர் கிடையாது. ஒவ்வொரு நிறுத்த்திலும் வரிசையாக பயணிகள் .ஏறுகிறார்கள்  டிரைவர் அருகே இருக்கும் ஒரு சிறிய எந்திரத்தில் காசு போட்டு டிக்கெட் கிழித்து கொள்கிறார்கள் . தினசரி செல்பவர்கள் ஓ .சி டிரான்ஸ்போர்ட் {ஆட்டோவா சிட்டி டிரான்ஸ்போ } கார்டு வாங்கி வைத்திருக்கிறார்கள். காசு போடும் மிஷின் அருகே கார்டு காட்டும் மிஷினும் இருக்கிறது. பஸ்ஸில் ஏறுபவர்கள் கார்டை பன்ச் செய்துவிட்டுத்தான் உள்ளே போய் அமர்கிறார்கள். "சீக்கிரம் சீக்கிரம்" என்கிற நமது ஊர்களில் கேட்கும்  குரல்களும்  "ஏங்க எவ்வளவு நேரமா மிஷின் கிட்டேயே நிற்பீர்கள் "என்கிற நமது ஊர் கோபக்  குரல்களும்   எனக்கு நினைவுக்கு வருகின்றன. . பொறுமை பொறுமை . எல்லா இடத்திலும் மக்கள் பொறுமை காட்டுகிறார்கள். சில டிரைவர்கள் ஹாய்  சொல்கிறார்கள் குட் மார்னிங் சொல்கிறார்கள்.

பஸ் பயணம் அருமையான அனுபவம்.




Tuesday, 23 May 2017

கனடா தரும் சுவாரசியமும் ஆனந்தமும் 



தற்போது எனது இருப்பிடம் கனடா. ஆறு மாத காலத்திற்கு. என் பெண்ணுடன் பல இடங்களுக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். என்  பெண்ணை பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சி என்னை பிராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியதிலிருந்தே அதிகம் ஆட்கொண்டது. ஆனால் மாண்ட்ரியலில் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது ஒட்டாவா (இங்கு ஆட்டோவா என்கிறார்கள். எனவே நானும் ஆட்டோவா என்றே குறிப்பிடுகிறேன். சொந்த ஊர்க்காரர்கள் எப்படி அவர்களது ஊரை குறிப்பிடுகிறார்களோ அப்பிடித்தான் நாமும் குறி.  ப்பிட வேண்டும் !!!} விமானத்திற்காக. கண்ணுக்கெட்டிய தூரத்தில் ரன்வே .அங்கு பார்த்த காட்சி என்னை எழுத்தாளர் சுஜாதாவிடம் இழுத்து சென்றது. ஆம். ப்ரொபெல்லர் விமானங்கள் அங்கு நின்று கொண்டிருந்தன. சுஜாதா தனது ப்ரியா நாவலில் ப்ரொபெல்லர் விமானம் பற்றி குறிப்பிட்டிருப்பார். ப்ரியாவை கடத்தி சென்றவர்கள் ப்ரியா பேசிய ஆடியோ கேசட் அனுப்பியிருப்பார்கள். (1970 ல் வந்த நாவல். அப்போதெல்லாம்  ஆடியோ கேசட் டேப் ரெகார்டர்த்தான்} அதை போட்டு கேட்டு பிரியா எங்கிருக்கிறாள் என்பதை அறிய முயல்வார் கணேஷ்.. கண்டுபிடிக்க முடியாது. அப்போது பிரியா குரலை விடுத்து பின்னணியில் கேட்க்கும் சத்தத்தை கேட்பதில் கவனம் செலுத்துவார். ப்ரோபெல்லோர் விமானம் பறக்கும் சத்தம் கேட்கும். "இந்த ஜெட் யுகத்தில் ப்ரோபெல்லோர் விமானமா" என்று ஆச்சர்யப்பட்டு ப்ரோபெல்லோர்  வி மானம் பறக்க அனுமதிக்கப் பட்டிருக்கும் விமான நிலையங்கள் எவையெவை என்று கண்டுபிடிக்குமாறு ஸ்காட்லான்ட்யாரிடம் சொல்லுவார். லேட்டரல் திங்கிங் பற்றியும் சுஜாதா இந்த இடத்தில் குறிப்பிட்டிருப்பார் எனக்கு அந்த விமானங்களை பார்த்ததும் சுஜாதாவும், அவரது ப்ரியா கதையும் அதை நான் பல தடவைகள் படித்ததும் தான் நினைவுக்கு வந்தன.

  அதே போல் மாண்ட்ரியலில் ஆட்டோவா வந்தடைய காத்துக்கொண்டிருந்ததை பார்த்தபோது பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும்போது சென்ட்ரல் ரயில் நிலையம் நெருங்கி விட்டது என்று சந்தோஷப படும்போது பேசின்பிரிட்ஜ் வந்ததும் பல சமயங்களில் 15 அல்லது 20 நிமிடம் ரயிலை நிறுத்திவிடுவார்கள். சிக்னல் கிடைக்க வேண்டும் என்று. பொறுமையே போய்விடும் நமக்கு. அதுபோலத்தான் ஆயிற்று மாண்ட்ரியலில் காத்திருந்தது. 40 நிமிட விமானப் பயணத்திற்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் விமான நிலையத்தில் அங்கு சென்று கொண்டிருந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்ததே படு சுவாரசியமாக இருந்தது. 

Monday, 22 May 2017



சரணாகதம் மே மாத இதழில் வந்த ராமானுஜர் பற்றிய எனது கட்டுரை - 2 ஆம் பகு தி


ராமானுஜர் 2 ஆம் பகுதி


அரங்கனின் அருளில்


எழுதியவர் : பானுமதி கிருஷ்ணஸ்வாமி , சென்னை




லக்ஷ்மண முனி, யதிராஜன் , ஸ்ரீ பாஷ்யக்காரர் உடையவர் என்று பல பெயர்களில் அறியப்படும் ஸ்ரீராமானுஜர் பெரிய நம்பி காஞ்சிபுரம் வந்து யமுனாச்சாரியார் அழைத்து வர சொன்னதாக கூறியதும் ஸ்ரீரங்கத்திற்கு உடனே புறப்பட்டார் .ஆனால் அவரும் பெரிய நம்பியும் கொள்ளிடக் கரையை அடையும் போதே அவர்களை அந்த சோகமான தகவல் வந்தடைந்தது . ஆம் யமுனாச்சாரியார் வைகுண்டம் அடைந்துவிட்டார் . தனக்கு பின் ராமானுஜர் தலைமை பொறுப்பேற்று வைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்து பரப்பி வழி நடத்தி செல்ல வேண்டும் என்று யமுனாச்சாரியார் விரும்பினார். ராமானுஜரை பார்க்க வேண்டும் அவரிடம் சம்பிரதாய பணிகளை நேரிடையாக ஒப்புவிக்க வேண்டும் என்றல்லாம் யமுனாச்சாரியார் ஆசை பட்டார். ஆனால் இருவரும் நேரிடையாக சந்தித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது . வருங்கால ஆச்சர்யனை பார்க்காமலேயே தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பவிஷ்யதாசார்யன் எங்கிருக்கிறார் என்பதை அடையாளம் கண்டும் அவரை சந்திக்க முடியாமலேயே யமுனாச்சார்யாரின் காலம் முடிந்துவிட்டது. தனக்கு தெரியாமலேயே தன்னை வந்து ஆச்சர்யன் பார்த்தும் தன்னால் அவரை சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று ராமானுஜர் மிகவும் வருத்தப்பட்டார்.அவரிடம் நேரிடையாக உபதேசம் பெரும் பாக்யம் கிடைக்காமல் போய்விட்டது என்று கலங்கினார் கொள்ளிடக் கரையில் ஆளவந்தாரின் திருமேனி வைக்கப் பட்டிருந்ததை பார்த்து கண்ணீர் விட்டார். அப்போதுதான் யாரும் பார்க்காத ஒரு விஷயத்தை ராமானுஜர் பார்த்தார். யமுனாச்சார்யரின் திருமேனியில் ஒரு கையில் மூன்று விரல்கள் மடங்கி இருந்தன . விரல்கள் மடங்கி இருக்கின்றனவே என்று அவர் கேட்ட போதுதான் அனைவரும் அதை பார்த்தார்கள். அப்போது ராமானுஜர் அவருக்கு நிறைவேறாத ஆசைகள் இருந்தனவா என்று கேட்ட பொது அவரது சிஷ்யர்கள் ஆமாம் என்று சொல்லி அந்த ஆசைகளை சொன்னார்கள்.






1. வேத வியாசரின் ப்ரம்ம சூத்திரத்திற்கு ஒரு விளக்க உரை எழுத வேண்டும்






2. பராசரர் வியாசர் ஆகியோரின் பங்களிப்பிற்கு நமது நன்றியை காட்டும் விதத்தில் சிறந்த வைணவ சிரேஷ்டருக்கு அவர்களது பெயரை சூட்ட வேண்டும்





3. சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத வேண்டும். .




இதை கேட்ட ராமானுஜர் ஆச்சார்யரின் இந்த மூன்று ஆசைகளையும் நான் நிறைவேற்றுவேன் என்று உறுதி சொல்ல யமுனாச்சார்யரின் மடங்கிய விரல்கள் நிமிர்ந்து கொண்டன. இதுவே அவருக்கு யமுனாச்சார்யாரின் அருள் இருந்தது என்பதை அனைவருக்கும் உணர்த்தியது. ஆச்சாரியாரின் மறைவால் ஏற்பட்ட துக்கத்தில் ராமானுஜர் திருவரங்கத்தில் அரங்கனை தரிசிக்காமலேயே காஞ்சிபுரம் திரும்பி வரதனுக்கு தீர்த்த கைகர்யத்தை தொடர ஆரம்பித்தார்.





ராமானுஜர் சமூக சீர்திருத்த கருத்துக்கள் உடையவராக இருந்தார். கடவுளின் முன்பு அனைவரும் சமம் என்று போதித்தார். ஆன்மீக ஈடுபாடும் இறை பக்தியும் ஒருவரை நல்ல குணம் உள்ளவராக்கும் என்றார். சாதி வேறுபாடு பார்க்காமல் கடவுள் பக்தி உள்ளவர்களை சரி சமமாக நடத்தினார். அவரது தாராள மனப்பான்மையும் ஜாதீய அடிப்படையிலான பிடிவாதங்களை ஒதுக்கி தள்ளியதும் தனது மன அமைதிக்கு பங்கம் வந்தாலும் பரவாயில்லை எல்லோருக்கும் உதவ வேண்டும் நலிவடைந்தவர்களை புறக்கணிக்காது அவர்களை அணைத்து செல்ல வேண்டும் என்கிற உயர்ந்த பண்புகளும் அவரது மாற்று சிந்தனைகளும் அவரை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்தி காட்டியது.


காஞ்சியம்பதியில் வரதராஜ பெருமாளுக்கு ஆல வட்டம் வீசி கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பிகள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அவரை தனது ஆசானாக கருதினார். அவர் அந்தண குலத்தை சேராதவர் என்று ஒரு நாளும் அவர் கருதியதில்லை அவரை தனது ஆச்சார்யனாகவே கருதி வந்தார். ஆனால் ராமானுஜரின் மனைவி அதை புரிந்துகொள்ளவில்லை


திருக்கச்சி நம்பிகளை ஒரு முறை சாப்பிட அழைத்திருந்தார் ராமானுஜர். அவரை தனது ஆசானாக அவர் கருதியதால் அவருக்கு தன கையால் உணவு பரிமாறி அவர் உண்ட மிச்சத்தை தான் பிரசாதமாக உண்ண வேண்டும் என்று என்று நினைத்திருந்தார். உணவு தயார் ஆகியும் திருக்கச்சி வரவில்லை என்பதால் அவரை அழைத்து வர அவர் எப்போதும் இருக்கும் வரதர் கோவிலுக்கு சென்றார் ராமானுஜர். ஆனால் அதற்குள் ராமானுஜர் வீட்டிற்கு வந்துவிட்டார் திருக்கச்சி. அவர் மனைவி தஞ்சமாம்பாள் திருக்கச்சி ஸ்வாமிகள் அந்தணர் அல்லாதவர் என்பதால் அவரை வீட்டுக்கு வெளியே திண்ணையில் அமர வைத்து சாப்பாடு போட்டு அவர் சாப்பிட்டு முடித்ததும் அவர் இலையை கொம்பு ஒன்றினால் எடுத்து வீசியெறிந்து தனது ஆச்சாரம் போய்விட்டது என்று மீண்டும் குளித்து ராமானுஜருக்கு உணவு தயாரிக்க ஆரம்பித்தார். இதனை பார்த்த ராமானுஜர் கடும் கோபம் கொண்டார். அதே போல் ஒரு நாள் பசி என்று சொல்லி வந்த ஒருவருக்கு வீட்டில் உணவு இருந்தும் இல்லை என்று தஞ்சமாம்பாள் சொல்ல அதனை அறிந்து மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார் ராமானுஜர். அவருக்கு இல்லறம் மீது வெறுப்பு வளர ஆரம்பித்தது. இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் யமுனாச்சார்யாரின் சிஷ்யர்கள் தங்கள் ஆசார்யன் விரும்பியபடி ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வர முடிவு செய்தார்கள்.





யமுனாச்சாரியார் தனது காலம் முடிவடைவதற்குள் ராமானுஜரை பார்க்க முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது என்று ராமானுஜருக்கு அவரது சிஷ்யர்கள் என்னவெல்லாம் சொல்லித்தந்து அவரை வைணவ சம்பிரயதத்திற்கு தலைமை ஏற்க தயார் படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். அந்தப் பணிகளை செவ்வனே முடிக்க ராமானுஜரை திருவரங்கம் அழைத்து வந்து விட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள் யமுனாச்சாரியார் இவ்வுலகை விட்டு செல்வதற்கு முன் தனது சிஷ்யர்களில் யார் யார் எந்தெந்த பணிகளை ராமானுஜருக்கு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். வருங்கால ஆசார்யன் ராமானுஜர் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவே திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்கு தான் உபதேசித்த ரகசியார்த்தங்களை ராமானுஜருக்கு தகுந்த காலத்தில் உபதேசிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார் யமுனாச்சாரியார். திருமலையாண்டான் திருவாய் மொழியையும் திருவரங்க அரையர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எஞ்சி இருக்கும் மூவாயிரம் பாடல்களையும் ராமானுஜருக்கு கற்பிக்க வேண்டும் மூத்த சிஷ்யரான பெரிய நம்பி அவருக்கு வைஷ்ண சம்பரதாயமான பஞ்ச சமஸ்காரத்தை செய்விக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். எனவே ஆளவந்தாரின் சிஷ்யர்கள் தங்களது ஆசார்யன் சொன்னவற்றை ராமானுஜருக்கு செய்விக்க அவர் திருவரங்கம் வந்தால்தான் நல்லது என்று கருதி பெரிய நம்பியை அனுப்பி ராமானுஜரை கூட்டி வர சொன்னார்கள். பெரிய நம்பி தனது மனைவி விஜயாம்பாளுடன் காஞ்சியம்பதிக்கு வந்தார்.


ஆனால் ராமானுஜர் ஆச்சாரமே தனது கொள்கையாகக் கொண்ட மனைவி மீது மிகவும் வருத்தத்தில் இருந்தார். அதனுடன் சேர்ந்து யமுனாச்சாரியாரின் மறைவும் அவரை மிகவும் பாதித்தது. அதனால் திருவரங்கம் செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினார். காஞ்சி வந்து கொண்டிருந்த பெரிய நம்பியும் திருவரங்கம் சென்று கொண்டிருந்த ராமானுஜரும் மதுராந்தகத்தில் சந்தித்துக் கொண்டார்கள். எதிர்பாராத இந்த சந்திப்பு இருவரையும் சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்தது.


உடனே ராமானுஜரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயிலிலேயே பெரிய நம்பிகள் அவருக்கு பஞ்ச சம்காரம் செய்து வைத்தார். {இந்த கோயிலில் இன்னும் பெரிய நம்பி ராமானுஜருக்கு சமார்ஷணம் செய்த சங்கும் சக்கரமும் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கிறது.} {வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பஞ்ச சமஸ்காரம் என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது . வைஷ்ணவ குலத்தில் ஒருவர் பிறக்காவிட்டாலும் பஞ்ச சமஸ்காரம் செய்து கொண்டால் அவர் பூரண வைஷ்ணவராகிறார் என்கிறது ஸ்ரீவைஷ்ணவம். அதன் படி ஸ்ரீமன் நாராயணின் திருவடிகளை பற்றிக்கொள்ள ஒருவர் தனது உடலை ஐந்து விதமானமுறைகளில் பரிசுத்தம் செய்துகொள்ள வேண்டும். 1. ஸ்ரீமன் நாராயணன் கையில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தியிருப்பர் என்பது அனைவரும் அறிந்தது. எனவே அந்த சங்கு மற்றும் சக்கரத்தை ஒரு ஆசார்யன் மூலம் வேத மந்திர உபதேசங்களுடன் அவர் தனது தோள்களில் பொரித்துக் கொள்ள வேண்டும். 2. அவர் உடலில் 12 திருமண் அணிந்து கொள்ள வேண்டும் 3.அவரது பெயருக்கு பின் "தாஸன் " என்கிற வார்த்தையை ஆச்சர்யன் சேர்ப்பார். அதாவது வைகுண்டத்தை அடைய ஒருவர் ராமானுஜரின் தாசனாக இருக்க வேண்டும், அவர் அவருக்கு மோக்ஷம் பெற்று தருவார் என்பது நம்பிக்கை. 4. .திருமந்திரம் த்வயம் சரம ஸ்லோகம் ஆகியமூன்று ரஹஸ்ய மந்திரங்களை ஆச்சர்யன் அவரது காதுகளில் சொல்வார்.5. கடவுளுக்கு திருவாராதனம் செய்யும் முறையை அதாவது கடவுளை சரியான முறையில் எப்படி வழிபடுவது என்பதை ஆசார்யன் விளக்குவார்.இதுதான் பஞ்ச சம்காரம் என்று சொல்லப்படுவது. }அங்கிருந்து இருவரும் காஞ்சிக்கு வந்தார்கள். காஞ்சியில் ராமானுஜர் வீட்டிலேயே பெரிய நம்பிகளும் அவர் மனைவியும் தங்கினார்கள். ராமானுஜருக்கு ஆசானாக இருந்து பெரிய நம்பி தான் ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்ட வேதாந்தங்களை கற்றுக் கொடுத்தார்.






ஆனால் ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாளுக்கும் பெரிய நம்பியின் மனைவி விஜயாம்பாளுக்கும் இடையே ஒரு முறை சண்டை ஏற்பட அதை அறிந்தால் ராமானுஜர் மனக் கஷ்டப்படுவார் என்று உணர்ந்து பெரிய நம்பி தனது மனைவியுடன் ராமாநுஜரிடம் சொல்லாமலேயே திருவரங்கம் திரும்பி விட்டார். சண்டை பற்றி கேள்வி பட்ட ராமானுஜர் தன மனைவி மீது கோபமும் வருத்தமும் அடைந்தார். வைணவ சம்பிரதாயங்களை தனக்கு கற்பித்து வந்த ஆசான் மனம் கோணும்படி சம்பவம் நடந்தது அவருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இல்லறம் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது . உடனே குளத்தில் நீராடி அணைத்து உறவுகளையும் பாசத்தையும் துறந்து காஷாய ஆடையை ஏற்று தத்துவங்கள் மூன்று என்று உணர்த்தும் த்ரிதண்டத்தை காஞ்சி வரதராஜ பெருமாளின் அருளால் ஏந்தினார். வரதராஜ பெருமாள் அவரை ராமானுஜ முனி யதிராஜன் என்று அழைத்து அவருக்கு அப்பெயர்களை சூட்டினார். துறவியான ராமானுஜர் யமுனாச்சாரியாரின் சிஷயர்கள் விருப்பப்படி ஸ்ரீரங்கம் கிளம்பினார்






திருவரங்கம் நுழைந்தவுடன் முதலில் கோயிலில் ஸ்ரீ ரங்கநாதரை ராமானுஜர் தரிசனம் செய்தார். அப்போது ரங்கநாதர் இந்த மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் உனது உடமை ஆக்குகிறேன், அதனால் இனி நீ உடையவர் என்று பெயர் பெறுவாய். இனி நீ தான் இந்த கோயில் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று அறிவித்தார் என்கிறது வைணவ வரலாறு.




ராமானுஜரின் வாழ்க்கையில் அவர் ஸ்ரீரங்கம் வந்த பின் நடந்த சம்பவங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு சிறந்த நிர்வாகியாக அவர் கோயிலை நிர்வகித்தது ய முனாச்சாரியாருக்கு செய்து கொடுத்த உறுதிகளை நிறைவேற்றியது சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட்டது பல நூல்கள் எழுதியது, அவரது சீர்திருத்தங்களால் பாதிக்கப் பட்டவர்கள் அவரை கொல்ல சதி செய்தது அதிலிருந்து அவர் மீண்டு வந்தது வைணவம் பரப்ப அவர் பாரத தேசம் முழுவதும் திக் விஜயம் செய்தது எல்லாமே அவற்றில் அடங்கும் இதனை கட்டுரையின் அடுத்த பகுதி விளக்கும்.



மூன்றாம் பகுதி ஜூன் மாத சரணாகததில் வெளிவரும்


2017 ஏப்ரல் மாதம் சரணாகதத்தில் வந்த ராமானுஜர் பற்றிய எனது கட்டுரை :(text reproduced from my contribution in saranagatham)

ஸ்ரீ ராமானுஜர் --ஒரு அறிமுகம்
Ramanujar- An Introduction



இந்தியா ஒரு பணக்கார நாடு என்பேன் . என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் ஆன்மீகத்தில் நாம் பணக்காரர்கள் தான். உயர்ந்த உன்னதமான மகான்களும் ஆச்சாரியார்களும் அவதரித்த புண்ணிய பூமி இது.மேலை நாடுகள் தொழில் நுட்ப விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கலாம். .மே லை நாட்டினர் நமது வேத தத்துவங்களையும் நமது கலாசாரத்தையும் அறிந்து கொள்ள இந்தியா வருகிறார்கள். நமது நாகரீகத்தில் பல் வேறு சமயங்களில் மஹான்கள் தோன்றி இருக்கிறார்கள் . உபதேசங்கள் செய்து மக்களை நல் வழிபடுத்தியிருக்கிறார்கள் .இன்றும் மேலை நாட்டினர் அமைதி ஆன்மீகத் தேடலில் உந்தப் பட்டுதான் இங்கு வருகிறார்களே தவிர பொன்னோ பொருளோ தேடி இங்கு வருவதில்லை இந்த அளவு உன்னதம் வாய்ந்த நமது நாட்டில் தோன்றிய மஹான் தான் ஸ்ரீ ராமானுஜர் .





இந்த ஆண்டுடன் ராமானுஜர் தோன்றி ஆயிரம் ஆண்டுகளாகின்றன. 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கேசவ சோமயாஜி - காந்திமதி தம்பதிக்கு புத்திரனாக அவதரித்தார் அவர். வைஷ்ணவ வரலாற்றின் படி நம்மை போன்ற சாதாரண மானுடப் பிறவியில்லை அவர். திருமாலின் குடையாக படுக்கையாக பாதுகையாக இருந்து பெருமாளுக்கு அனைத்து தொண்டுகளையம் புரியும் ஆதி சேஷனின் அவதாரம் என்று அவர் கருதப் படுகிறார் .முதல் யுகமான க்ருத யுகத்தில் அனந்தனாக, த்ரேதா யுகத்தில் ராமனின் தம்பி லட்சுமணனாக , த்துவாபர யுகத்தில் பலராமனாக கலியுகத்தில் ஸ்ரீராமானுஜனாக அவதரித்தவர் ஆதிசேஷன் என்று நம்பப் படுகிறது.






ராமானுஜன அவதார தேவை என்ன என்கிற கேள்வி பலருக்கும் எழலாம். கலியுகத்தில்கொடுமைகள் அதிகரித்ததை பார்த்த வைகுண்ட ராஜனான நாராயணன் மக்களிடம் பக்தியைப் பெருக்கி அவர்களை நல்வழிப்படுத்த சமஸ்கிருத வேதத்தை தமிழ் பாசுரங்களாக பாடி மக்களிடம் அதை எளிதில் கொண்டு செல்வதற்காக ஆழ்வார்களை அனுப்பி வைத்தார் என்கிறது வைணவ மரபு வழி கதைகள் .பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் தான்ஆழ்வார்கள்.ஆழ்வார்கள் 12 பேர். பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார் , பேயாழ்வார் திருமழிசையாழ்வார் ,திருமங்கையாழ்வார் தொண்டரடிபொடியாழ்வார் திருப்பாணாழ்வார் ,குலசேகரஆழ்வார் பெரியாழ்வார் , நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார் ஆண்டாள் ஆகியோர் ஆனால் பன்னிரு ஆழ்வார்கள் உபதேசத்தை இரண்டாம் பட்சமாக்கி கடவுள் அனுபவத்தில் மூழ்கினார்கள். பகவானை அனுபவித்து பாசுரங்கள் பாடினார்கள் அனுபவத்தில் ஆழ்ந்தார்கள். அனுபவிக்கும்போது உபதேசம் எங்கிருந்து வரும்?உபதேசம் என்பது இரண்டாம் பட்சமானது .என்னை இந்த உலகத்தில் வைக்காதீர்கள் உந்தன் திருவடிக்கு என்னை அழைத்துக்கொள்ளுங்கள் என்று நெக்குருகினார்கள். அவர்கள் பாடிய பாசுரங்கள் மக்களை சென்றடையவில்லை. சமஸ்கிரதத்தில் இருந்த வேதம் சொன்னதை சாமானியனும் புரிந்து கொள்ளும் விதத்தில் தமிழ் பாசுரமாக அவர்கள் பாடியும் மக்களை எட்டவில்லை அது. வைகுண்ட பெருமாள் எதற்காக ஆல்வார்களை அனுப்பி வைத்தாரோ அது நடக்கவில்லை என்கிறது மரபு வழி கதைகளும் வைணவ வரலாறும்.






வேத சாஸ்திரங்கள் சொல்ல வேண்டிய அர்த்தங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் தொகை பெருகப் பெருக வேத சாஸ்திரங்களை பலர் கேள்விக்குறியாக்கினார்கள், பலர் அதற்கு தவறான அர்த்தங்களை கற்பித்தார்கள் , கற்பித்துக்கொண்டார்கள். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி அர்த்தங்களை சொல்ல ஆரம்பித்தார்கள். வேத சாஸ்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணர்ந்து கொண்டார் பெரிய பெருமாள். இந்த ஜகத்தை காக்க வேண்டும், மக்களை காப்பாற்ற வேண்டும் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் பக்தி சாஸ்திரத்தை மக்களிடம் பரப்ப வேண்டும் அதன் உன்னதத்தை எடுத்துரைக்க வேண்டும் கலியுகத்திற்கு சரணாகதி தான் சிறந்தது அதை மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டும் அதற்கு தேவை ஒரு ஆசார்யன் . எனவே ஆதிசேஷனை ராமானுஜனாக வருங்கால ஆச்சார்யனாக அனுப்பலாம் என்று முடிவு செய்கிறார் . பெரிய பெருமாள் என்கிறது வைணவ வரலாறு. ஆழ்வார்கள் சொன்ன வழியை பின்பற்றி வைணவ கருத்துக்களை நா ட்டில் பரப்பி நல்வாழ்வுக்கு வழி காட்டியவர்கள்தான் ஆச்சாரியர்கள்






நம் பெருமாள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை செயல் படுத்துவார் நம்மாழ்வார் என்கிறது வைணவ குரு பரம்பரை கதை .வைணவத்தின் முதல் ஆச்சார்யரான நாத முனிகள் கிபி 823 ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோயில் என்ற ஊரில் அவதரித்தார், ஸ்ரீ ராமானுஜரின் வருங்கால அவதாரத்தை நம்மாழ்வார் முன்னமேயே குறிப்பால் உணர்த்திவிட்டார். ஆழ்வார்களின் பாசுரங்களை தேடி அலைந்த நாதமுனிகள் முன்பு தோன்றிய நம்மாழவார் அவருக்கு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உபதேசித்ததுடன் ஒரு விக்கரகத்தை கொடுத்து "இவரே பவிஷ்யதாசார்யன் [வருங்கால ஆச்சாரியார்] இவரே கலியின் கொடுமையை தீர்ப்பார் " என்றார் . அந்த விக்கரகம் நாதமுனிகளின்பேரனின் கைக்கு செல்ல வேண்டும் என்றும் அவரே வருங்கால ஆச்சார்யனை அடையாளம் காண்பார் என்றும் சொல்லி மறைந்து விட்டார்.வருங்கால ஆச்சார்யான் விக்கரகத்தை வைத்துக் கொண்டிருந்த நாதமுனிகள் அதை தனது சிஷ்யரான உய்யக் கொண்டானிடம் கொடுத்து தனது பேரனிடம் ஒப்படைக்க சொன்னார். நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிகளின் மகனான யமுனைத்துறைவன் ஒரு அரசரிடம் ஏற்பட்ட போட்டியில் வெற்றிபெற்று ராஜ்யத்தை பரிசாக பெற்று ஆளவந்தார் என்கிற பெயரில் ஆட்சி புரிந்து வந்தார். யமுனை துறைவனை அடையாளம் காண எடுத்த முயற்சிகள் முழுமை அடையாமல் போகவே உய்யக்கொண்டான் விக்கரகத்தை அவரது சிஷ்யர் மணக்கால் நம்பிகளிடம் கொடுத்து யமுனைத்துறைவனை அடையாளம் காண வேண்டிய பொறுப்பை ஒப்படைத்தார்.மணக்கால் நம்பியும் தீவிர முயற்சிகளுக்கு பின் ஆளவந்தாரை நேரில் சந்தித்து அனைத்து விஷயங்களையும் கூற ஆளவந்தார் நாட்டை துறந்து துறவறம் பூண்டு யமுனாச்சாரியார் என்கிற திருப்பெயரில் வைணவ மூத்த ஆசார்யன் ஆனார். பவிஷ்யதாசார்யன் விக்கரகம் அவரிடம் வந்து சேர்ந்தது






யமுனாச்சாரியார் ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு வைஷ்ணவ சம்ப்ரதாயங்களை பரப்பிக் கொண்டிருந்தார். தனது பாட்டனார் நாதமுனிகள் தனது ஆச்சர்யனிடம் அளித்த , அவர் மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த விக்கிரக வடிவத்தில் இருக்கும் மகான் உலகில் தோன்றி விட்டாரா அவரை அடையாளம் காண வேண்டுமே , அவரிடம் சம்பிரதாயங்களை பரப்பும் ப்பணியை ஒப்படைக்க வேண்டுமே என்கிற கவலை இருந்தது. யமுனாச்சாரியாருக்கு பல சிஷயர்கள் இருந்தார்கள். பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கத்து அரையர், மலராண்டான் , மாறனேர் நம்பி, ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் பெரிய திருமலை நம்பி திருவேங்கடத்தில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தீர்த்த கைங்கரியம் செய்து கொண்டிருந்தார். இவரது இளைய சகோதரி தான் காந்திமதி , அதாவது ஸ்ரீராமாநுஜரின் தாயார் . ஆளவந்தார் ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ ஆச்சார்யனாக தனது பணிகளில் ஈடுபட்டிருக்கையில் தான் ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதரித்தார்.பெரிய திருமலை நம்பி தனது சகோதரிக்கு பிறந்த குழந்தைக்கு இளையாழ்வார் என்று பெயரிட்டார். இளையாழ்வார் தான் ராமானுஜர். தனது சிஷ்யர் பெரிய திருமலை நம்பி மூலம் ராமானுஜர் பற்றி அடிக்கடி கேட்டறிந்து கொள்வார் யமுனாச்சாரியார். ராமானுஜரை பார்த்ததில்லை என்றாலும் அவரை பற்றிய ஒரு ஆர்வம் இருந்தது அவரிடம்.






ராமானுஜர் சிறுவயதிலேயே வைஷ்ணவத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பால பாடத்தை தனது தந்தை கேசவ சோமயாஜியிடம் பயின்றார். ஆரம்ப கல்வியை மயூர வண்ணர் என்கிற குருவிடம் படித்தார் .. சிறு வயதிலேயே ராமானுஜருக்கு சமூக சீர்திருத்தங்கள் மீது அக்கறை இருந்தது. ஜாதி அடிப்படையில் சமூகத்தில் நிலவி வந்த பல விதமான வேறுபாடுகளை களைய வேண்டும் என்று விரும்பினார். அந்தக் காலத்தில் சில சமூகத்தினர் கோயிகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப் பட்டிருந்தார்கள் . அதனை எதிர்த்தார் ராமானுஜர். படிப்பறிவு இல்லாததால்தான் சில சமூகத்தினர் இன்னும் கீழ் நிலையில் இருக்கிறார்கள் நல்ல விஷயங்களை அவர்களிடம் எடுத்து சொன்னால் அவர்கள் வாழ்க்கை மேம்படும் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். குடிசை பகுதிகளுக்கு சென்று பாசுர வகுப்புகள் நடத்தினார். பின்னர் வேதம் உபநிஷத்துக்களை பயில்வதற்காக காஞ்சிபுரம் அருகே இருக்கும் திருப்புக்குழி என்கிற ஊருக்கு சென்றார். அங்கு அவர் யாதவ பிரகாசர் என்கிற அத்வைத குருவிடம் மாணவனாக சேர்ந்தார்






பெரிய திருமலை நம்பி மூலம் ராமானுஜரின் புலமை அவருக்கு வைணவத்தின் மீது இருக்கும் ஈடுபாடு அவரது சமூக சீர்திருத்த கருத்துக்கள் அவரது பண்புகள் ஆகியவற்றை கேள்விப்பட்டுக்கொண்டிருந்த யமுனாச்சாரியாருக்கு இவர்தான் தான் தேடும் வருங்கால ஆசார்யனோ என்கிற நினைப்பு அடிக்கடி ஏற்பட்டது. ராமானுஜர் பற்றி திருமலை நம்பி சொல்லும் போதெல்லாம் தனக்கு ஏற்படும் பிரமிப்பு அதீத ஆர்வம் அவரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா குறித்து அவரே ஆச்சர்யம் அடைந்தார். இருந்தாலும் தன்னிடம் இருக்கும் வருங்கால ஆச்சர்யனை இன்னும் அடையாளம் காண முடியவில்லையே என்கிற கவலையும் அடிக்கடி அவருக்கு ஏற்பட்டது






திருப்புக்குழியில் யாதவ பிரகாசரிடம் மாணவனாக சேர்வதற்கு முன்பாகவே ராமானுஜருக்கு தஞ்சமாம்பாள் என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாத ராமானுஜர் அவரது தாயின் வார்த்தையை தட்டக் கூடாது என்பதற்காக திருமணம் செய்து கொண்டார். யாதவ ப்ரகாசரிடம் படிக்கும்போது உபநிஷத்களுக்கு பொருள் சொல்லும் போது குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே கருத்து வேற்றுமைகள் வந்தன . குரு சொல்லும் அர்த்தங்கள் ஏற்க முடியாததாக இருக்கும் போது அதை யாதவ பிரகாசரிடம் ராமானுஜர் எடுத்துரைக்கும் சமயங்களில் யாதவ பிரகாசருக்கு கோபம் வரும். சிஷ்யன் தன்னைமீறி பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை. தனது கோபத்தை பல விதங்களில் அவர் காட்டினார்.இருந்தும் குருபக்தியால் ராமானுஜர் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து அவரிடமே கல்வி பயின்றார்.


ஸ்ரீரங்கத்தில் யமுனாச்சாரியார் தனக்கு வயதாகிக் கொண்டே வருகிறது இன்னும் வருங்கால ஆசார்யனை அடையாளம் காண முடியவில்லையே தனக்கு பின் வைணவ சம்பிரதாயத்தை யார் வளர்க்கப் போகிறார்கள் என்கிற கவலையில் அடிக்கடி ஆழ ஆரம்பித்தார் , ஒரு முறை திருவரங்கத்து அரங்கனிடம் அவர் கண்ணீர் விட்டு புலம்ப, வருங்கால ஆச்சர்யனை ரங்கநாதர் அவருக்கு காட்டுவது போல் கனவு கண்டார். சரி ராமானுஜரை காஞ்சியில் சென்று பார்த்து வந்துவிடலாம் என்று காஞ்சியம்பதிக்கு வருகை தந்தார் . . காஞ்சியம்பதியில் யமுனாச்சார்யாரின் சீடர் திருக்கச்சி நம்பி என்று ஒருவர் இருந்தார். அவரை ராமானுஜர் தனது குருவாக கருதி மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டி வந்தார். திருக்கச்சி நம்பிகள் தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து காஞ்சியம்பதிக்கு நடந்து வந்து புஷ்ப்பங்களை மாலையாகக் தொடுத்து காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு அணிவித்து அவருக்கு ஆலவட்டம் வீசி கைங்கர்யம் செய்து வந்தார். காஞ்சி வந்த ஆளவந்தார் திருக்கச்சியிடம் ராமானுஜரை தான் பார்க்க விரும்புவதாக சொன்னார். அப்போது ராமானுஜர் தனது சக மாணவர்கள் சூழ ஆசிரியருடன் வரவிருக்கும் தகவலை கூறினார் திருக்கச்சி ராமானுஜரை தான் அழைத்து வருவதாக திருக்கச்சி கூறியபோது அதை யமுனாச்சார்யார் மறுத்து விட்டார். தனக்கு ராமானுஜரை பார்க்க தோன்றியது போல ராமானுஜருக்கு தன்னை பார்க்க தோன்றும் போதுதான் சந்திப்பு நிகழ வேண்டும் என்று சொல்லிவிட்டார் எனவே தொலை தூரத்திலிருந்து ராமானுஜரை பார்த்தார் ஆசார்யன். தனது கனவில் அரங்கன் காட்டியவரே அவர் என்பதை யமுனாச்சாரியார் உறுதி செய்து கொண்டார்.






வருங்கால ஆச்சர்யனை அடையாளம் கண்டுகொண்டுவிட்ட திருப்தியில் யமுனாச்சாரியார் ஸ்ரீரங்கம் திரும்பினார். ராமானுஜர் தான் தனக்கு பின் வைஷ்ணவ சம்பிரதாயத்தை பரப்ப வேண்டும் வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த யமுனாச்சாரியாருக்கு ராமானுஜர் யாதவ பிரகாசருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் படிப்பை நிறுத்தி விட்டு காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து வருவ்து தெரிய வந்தது . அந்த சமயத்தில் யமுனாச்சாரியாரின் உடல்நிலை மோசமடைய உடனடியாக காஞ்சி சென்று ராமானுஜரை அழைத்து வருமாறு பெரிய நம்பியை காஞ்சிக்கு அனுப்பினார்.






ராமானுஜரை யமுனாச்சாரியார் சந்தித்தாரா? அரங்கனின் சித்தம் என்னவாக இருந்தது என்பதை அடுத்த பகுதி விளக்கும்
கண்டுகொண்டேன் என் ராமானுஜனை 


இந்த சமயத்தில்தான் கலைஞர் தொலைக்காட்சியில் ராமானுஜர் தொடர் வந்து கொண்டிருந்தது. முதலில் சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தவள் அதன் பின் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்க்க ஆரம்பித்தேன். டிவியிலும் பார்த்துவிட்டு  யூ  டுப்பிலும் பார்ப்பேன். ராமானுஜர் சந்நிதிக்கு செல்வதை எனக்கு அமைதியை கொடுத்தது. அரங்கன் கோவிலில் நடந்து போகும்போது இங்குதான் ராமானுஜர் நின்றிருப்பார் இங்குதான் பிரசங்கம் செய்திருப்பார் என்றெல்லாம் நினைத்து கொள்வேன். சயன திருக்கோலத்தில் இருக்கும் அரங்கன் என்னுடன் பேசுவது போலிருக்கும். அரங்கனும்  ராமானுஜரும் என்  சிந்தனையில் அதிகம் இடம் பெற்றார்கள். ராமானுஜர் பற்றி அதிகம் படிக்க ஆரம்பித்ததால் அந்த தொடரை அதிக ஈடுபாட்டுடன் பார்தததால் யாரிடம் பேசினாலும் அதில் ராமானுஜர் பற்றி எப்படியாவது குறிப்பிட்டு விடுவேன். என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென்று ரொம்ப ஆன்மிகம் பேசுகிறாள் தத்துவம் பேசுகிறாள் என்று என்னை  பற்றி சிலர் கிண்டலடிப்பதும் எனக்கு தெரிந்தது.  ஆனால் அதை பற்றி நான் கவலை படவில்லை

  ஒரு வருடம் ஸ்ரீரங்கத்தில் இருந்த நான் பிறகு மீண்டும் சென்னைக்கு குடி வந்தேன்..திருவண்ணாமலையில்    எனது பகவான் யோகி ராம்சுரத்குமாரை வழிபட சென்றபோது     ஆஸ்ரமத்தில் விஜயலக்ஷ்மி அம்மாவுடன் பிரதான் மந்திரில் பகவான் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ராமானுஜர் பற்றி பேச்சு வந்தது. அப்போது அம்மா சரணாகததில் ராமானுஜர் பற்றி எழுத வேண்டும், மூன்று இதழ்களில் தொடர்ந்து கட்டுரை இடம் பெறவேண்டும் , யாராவது தெரியுமா என்று கேட்டார்கள். பகவானே என்னிடம் சொல்வது போயலி ருந்தது உடனே நான் அம்மா, நானே எழுதுகிறேன் என்றேன். அம்மா உடனே சரி என்றார்கள். மூன்று தொடர்களும் எப்படி இடம் பெற வேண்டும் என்று இருவரும் பேசினோம் . சென்னை வந்ததும் அதற்கான பணிகளில் ஈடுபட்டேன்.
  ராமானுஜர் பற்றி நான் அறிந்த கொண்டதில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு அதிக பங்கு உண்டு. அவருடைய பிரசங்கங்களை அதிகம் கேட்க ஆரம்பித்தேன். சென்னையில் அவருடைய பிரசங்கம் எங்கு நடந்தாலும் உடனே போய்  விடுவேன். ராமானுஜர் பற்றி எழுத அது எனக்கு மிகவும் உதவியது.

  எழுத்து எனக்கு புதிதல்ல .30 ஆண்டுகள் பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறேன் எவ்வளவோ  கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் ராமானுஜர் கட்டுரைகளை நான் சரணாகதத்திற்கு எழுதியது என்னை பரவசப் படுத்தியது. எனது வாழ்க்கையில் பெரும் சோகம் ஏற்பட்டதிலிருந்து நான் எழுதுவதையே நிறுத்தியிருந்தேன் என்னால் எழுத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது.  எழுத வேண்டும் என்கிற நினைப்பே எனக்கு இல்லாமல் இருந்தது. எனது பத்திரிகை தோழி உமா சக்தி தினமணி டாட் காமிற்கு எழுதுங்கள் என்று சொன்ன போது முயல்கிறேன்  என்று சொன்னேனே தவிர எழுதவிலை. ஆனால் ராமாநுஜர் பற்றி எழுத வேண்டும் அதுவும் சரணகதத்தில் என்றதும் எழுதும் ஆர்வம் என்னை மீண்டும் பற்றிக் கொண்டது.

  இரண்டு மாத இதழ்களில் கட்டுரை வெளிவந்து விட்டது. அடுத்த மாதம் முன்றாவது கட்டுரை வெளிவரும்.

   இதுதான் வெளிவந்த கட்டுரை 

Saturday, 20 May 2017

திருவரங்கமும் அரங்கநாதனும் 

2015  ஜூலையில் என்  வாழ்க்கை மாறிப்போனது. என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோகம் என்னை மாற்றியது . கடவுளை என்னை அதிகம் நினைக்க வைத்தது. ஆன்மீகப் பாதையின் பக்கம் என்னை போக வைத்தது. அமைதி இழந்திருந்த என்னை எனது பகவான்  திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார்  என்னை  சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் செல்ல சொன்னார். .சென்றேன். அந்த திவ்ய தேசத்தில் காலடி எடுத்து வைத்தாலே எல்லோருக்கும் ஆன்மீகத்தன் மீது ஆர்வம் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.  அந்த  சயனப் பெருமான் எனக்கு வைணவத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தினான். ஸ்ரீரங்கம் கோவில் எனது அமைதியின் புகலிடமானது. தினம் தினம் செல்வேன் அந்த சயனப் பெருமானை சேவிக்க.

   கோவிலை  சுற்றி பார்ப்பேன் ஒவ்வொரு சன்னிதிக்கும் செல்வேன். ஒவ்வொரு சன்னதியின் பின்னணி பற்ற தெரிந்து கொள்வேன். அந்த பின்னணிகளை பற்றி தெரிந்து கொள்ள கொள்ள ஸ்ரீரங்கம் பற்றி வைணவம் பற்றி வியந்து போனேன். அது என்னை வைணவம் பற்றி அதிக தேடலில் ஈடுபடவைத்தது.

இந்த இடத்தில் ஒரு சின்ன தகவல்

  என்னை அதிகம் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் திரு.சுஜாதா. அந்த ஸ்ரீரங்கம் வீதிகளில் நடக்கும்போது பலர் எனது நினைவில் வந்து போவார்கள். அவர்களில் சுஜாதாவும் உண்டு. அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகளை எத்தனை முறை படித்திருப்பேன் என்று நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை . சந்தோஷமாக இருந்தாலும் அதை எடுத்துக் படிப்பேன் மனம் கஷ்டத்தில் இருக்கும்போதும் அதை படிப்பேன். அதனால் அதில் வரும் வீதிகள் பாத்திரங்கள்  அனைத்தும் எனக்கு அத்துப்படி .ரங்கு விலாஸ் கடை இங்கு தான் இருந்திருக்குமோ, குண்டு ரமணி  .இந்த வீதி வழியாகத்தான் சென்றிப்பாளோ, திண்ணா தொண்டரடி பொடியாழ்வார் சந்நிதியில்  தானே அமர்ந்து உபன்யாசம் செய்வான் என்று நினைத்துக்கொள்வேன்.

வைணவம் பற்றிய தேடுதலில் எனக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் ராமானுஜர். சமூக சீர்திருத்தங்கள் அந்தக் காலத்திலேயே செய்த அந்த மகானை பற்றி படிக்க படிக்க வியந்து போனேன்.