Total Pageviews

Thursday, 29 June 2017

கற்றுக்கொள்ள நிறையவே இருக்கு .......

கடந்த வாரம் ஆட்டோவா பேங்க் தெருவில் இருக்கும் துர்க்கை கோவிலுக்கு போயிருந்தோம். வட இந்தியர்கள் நிர்வாகத்தில் இருக்கும் கோவில். வீட்டை கோவிலாக மாற்றியிருக்கிறார்கள். பெரிய ஹால் ஒன்றில் பிராதன கடவுளாக  துர்க்கை , அருகில் கண்ணன் ருக்மிணி, சிவன் பார்வதி, ஆஞ்சநேயர் என்று கடவுள்கள். உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்து முடிந்ததும் கோவிலில் இருக்கும் வட  இந்திய நிர்வாகி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் நீங்கள் , இங்கு எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டுவிட்டு என் பெண்ணை பார்த்து படிக்கிறாயா என்று கேட்டார். இல்லை , வேலை பார்க்கிறேன் என்றாள் அவள்.எங்கு படித்தாய் , என்ன படித்தாய்  என்று விபரங்கள் கேட்ட அவர் , கனடாவுக்கு நீ  வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன , நீ இந்த 2 ஆண்டுகளில் இந்த மக்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டாய் என்று கேட்டார். பதிலுக்கு காத்திராமல் அவர் சொன்னார், "சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் இவர்களிடம்"
       உண்மைதான். சிரிக்க மட்டுமல்ல , இங்குள்ளவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. முதலில் நட்புணர்வு.  சாலைகளில் நடக்கும்போது எதிரில் வருபவர் நம்மை கடக்கும்  போது ஹாய் சொல்லி புன் முறுவல் பூக்கிறார்கள் . முதலில் எனக்கு புரியவில்லை. அதன் பின் என்  பெண் விளக்கினாள் , நட்பு காட்ட அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதை அழகாக வலியுறுத்துகிறார்கள். அதேபோல் தான் கடைகளுக்கு சென்றாலும். அங்கு நிற்கும் விற்பனை பிரதிநிதிகள் அனைவரும் ஹாய் , குட் டே ,ஹொவ் ஆர் யு என்கிறார்கள். கடைக்குள் நுழைபவர்கள் எல்லோருமே அவர்களது வணக்கங்களை ஏற்று கொண்டு பதிலளிக்கிறார்கள்.
  இந்த இடத்தில் நம்மூர்  பற்றி சொல்லியே தீர வேண்டும். சென்னையில் தி நகரில் சரவணா ஸ்டோர்ஸ் சென்னை சில்க்ஸ் ஷோரூம்களில் நுழைவிடம் அருகே கடை விற்பனை  பிரதிநிதிகள் நின்று கொண்டிருப்பார்கள். "வாங்க மேடம், வணக்கம்  மேடம், என்ன பார்க்கப் போகிறீர்கள் மேடம்" என்று பவ்யமாக கேட்பார்கள். அவர்களுக்கு எத்தனை பேர் நின்று பதில் சொல்லியிருக்கிறோம்? பதில் சொல்ல வேண்டாம், ஒரு புன்முறுவல்? பெரும்பாலும் ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு என்ன வாங்கப் போறேன்னு உன்கிட்டே சொல்லனுமா, எனக்கு தெரியும் எங்கு எது இருக்கும்னு என்று சொல்லுவது போல ஒரு லுக் விட்டு செல்லுவோம். அப்பிடி யாராவது நின்று பதிலளித்தால் , "நின்னு பதில் சொல்றியா அவர்களுக்கு,  நீ பதிலுக்கு விஷ் பண்றியா, ரொம்ப முக்கியம்" என்று பெரும்பாலும் பலர் சொல்லி  கிண்டலடிப்பார்கள். அலுவலகங்களிலேயே கூட  ஒருவர் விஷ்  பண்ணினால் , பதிலுக்கு சிலர் விஷ்  பண்ண மாட்டார்கள். மேலதிகாரிகளில் பலர் இப்படி இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு இங்கு இது  ஆச்சர்யமாக இருந்தது.
  சாலைகள் கடைகள் மட்டுமல்ல; அபார்ட்மெண்ட்களிலும்இதை  பார்க்கிறேன்.  நாங்கள் இருக்கும் அபார்ட்மெண்டில் பல நாட்டை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். லிப்ட்டிலோ அல்லது லாபி கதவு அருகிலோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள நேர்ந்தால்,  ஹாய் என்று  சொல்லி ஒரு புன்முறுவல் அவர்களிடமிருந்து நிச்சயம் வரும்.
  அடுத்தது வரிசை . எங்கு சென்றாலும் வரிசைதான். இடித்துக்கொண்டு முன்னால் செல்வது என்பது அறவே கிடையாது.ஆட்டோவாவில் எனது பஸ் பயணங்கள் பற்றி ஆரம்ப பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.   பஸ் நிறுத்தத்தில் பஸ் வரும் வரை நின்றுகொண்டு , அங்கிருக்கும் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு இருப்பவர்கள் பஸ் வந்து நிறுத்தத்தில் நின்றதும் ஒரு வினாடியில் வரிசையாக நின்றுவிடுகிறார்கள் பஸ்ஸில் ஏறுவதற்கு, இறங்குபவர்கள் இறங்கும் வரை பொறுமையாக வரிசையில் நின்று கொண்டிருந்துவிட்டு அதன் பின் ஒருவர் பின் ஒருவராக ஏறி டிக்கெட் மிஷினில் கார்டை பன்ச் செய்து அல்லது காசு போடும் மிஷினில் காசு போட்டு டிக்கெட் கிழித்து எடுத்துக்கொண்டு இருக்கையில் சென்று அமர்கிறார்கள்.
   இந்த இடத்திலும் நமது ஊர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது. சென்னையாக இருந்தாலும் சரி, பிற ஊர்களாக இருந்தாலும் சரி . பஸ்சில் ஏறுவதற்கென்று ஒரு தனி சாமர்த்தியம் தேவை. எனக்கு அந்த சாமர்த்தியம் இல்லை என்பதால்தான் எப்போதும் ஆட்டோவில் பயணிப்பேன். அதுவும் திருச்சியில் நான் இருந்த ஒரு ஆண்டில் பஸ்சை பார்த்து பயந்தே இருக்கிறேன். திருவானைகாவலிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பயணிக்கும், பின் அங்கிருந்து திரும்பி வரும் பயணம் எனக்கு மிகுந்த சோதனை மிகுந்ததாக அமைந்ததால் சென்னையை போலவே ஆட்டோவையே அங்கும் பயன்படுத்திக்கொண்டேன். பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், ஏறுபவர்கள் பஸ் படிக்கட்டை சூழ்ந்து கொள்வார்கள். இறங்குபவர்கள் "இறங்க விடுங்க, தள்ளி நில்லுங்க" என்று குரல் கொடுப்பார்கள் . ஏறுபவர்களில் சிலர், "இறங்கறதுக்கெல்லாம் காத்துகொண்டு இருக்க முடியாது, ஏறு ஏறு  என்று தன்னுடன் சேர்ந்து ஏறுபவர்களை அவசர படுத்துவார்கள். ஆக ஏறுவதும் இறங்குவதும் ஒரே சமயத்தில் அந்த குறுகிய இடத்துக்குள் நடக்கும். விழுந்து விடாமல், தடுமாறாமல் ஏறி இறங்கி விட்டால் நீங்கள் சாமர்த்திய சாலிகள்தான். அதற்குள் பஸ் நடத்துனர் விசில் ஊதிவிட்டால் அவ்வளவுதான்,
     இதேபோல்தான் திருவண்ணாமலை ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களிலும் நான் பஸ் ஏறுவதில் அவதி பட்டிருக்கிறேன். திருவண்ணாமலைக்கு பகவான் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமம் செல்லும்போது கோயம்பேட்டில் பிரச்னை இருக்காது. சென்னைக்கு திரும்பும்போது திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் சென்னை  பஸ்களில் ஏறுவதற்கு போட்டியே நடக்கும். அதனால் டோக்கன்  வாங்கும் முறையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். அப்படியும் போட்டா போட்டி இல்லாமல் இல்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிடும் ஸ்ரீபெரும்புதூர். . ஸ்ரீ ராமா நுஜரையும்  ஆதிகேசவ பெருமாளையும் சேவித்துவிட்டு   ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிறுத்தம் வந்தால் ஒரு பெரும் ஓட்டப்  பந்தயத்தையே பார்க்கலாம். அதுவும் பள்ளிக்கூடம் விடும் சமயமாக இருந்துவிட்டால் அதாவது பிற்பகல் 4 மணிக்கு மேல் என்றால் பஸ்ஸில் ஏறும்  சாமர்த்தியம் இல்லாதவர்கள் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இதனை வேடிக்கை பார்க்கலாம். பள்ளி மாணவர்கள் பஸ்சை பார்த்ததும் அது நிற்பதற்குள் ஓடி வந்து முண்டியடித்துக்கொண்டு ஏறுவதும் பல  மாணவர்கள் படிக்கட்டில் அனாயசமாக தொங்கிக்கொண்டு நிற்பதும், சிலர் வெளியில் இருந்துகொண்டே பஸ் ஜன்னல் மூலம் பையை இருக்கையில் தூக்கி போட்டு இருக்கையை "புக்" செய்து கொள்வதும் கண்கொள்ளா காட்சி. இதையெல்லாம் பார்த்து பழக்கப் பட்டதால் தான் கனடாவின் வரிசை கலாசாரம் எனக்கு ரொம்ப பிடித்துப்போனது. ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. ஏன் நம்மாலும் வரிசையாக நின்று ஏற முடியாதா?  ஏன் முடியாது? ஆனால் நமக்கு மனமில்லை.
    வரிசை கலாசாரம் என்பது கனடாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. பல்பொருள் அங்காடிகளில்   வாடிக்கையாளர்கள் அவரவர் வாங்கும் சாமான்களுக்கான பில்லை  அவர்களேதான்  போட்டுக்கொள்ள வேண்டும்.  எல்லோருமே கார்டு வைத்திருக்கிறார்கள். ஒரு வாடிக்கையாளர் அவர் வாங்கிய சாமான்களுக்கு  பில் போடுகிறார் என்றால், அவர் சாமான்களை ஸ்கேனில் காட்டி கம்ப்யூட்டரில் விலை வந்து மொத்தம் எவ்வளவு பணம் என்று வந்ததும், அருகில் இருக்கும் மிஷினில் கார்டு சொருகி பணம் எடுக்கப்பட்டதும், சாமான்களை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி அந்த இடத்தை விட்டு நகர ஆரபித்ததும் தான் வரிசையில் இருக்கும் அடுத்த வாடிக்கையாளர் அங்கு வருகிறார். வரிசையில் நில்லுங்கள் என்று யாரும் அங்கு நின்று யாருக்கும் சொல்வதில்லை .  நேரம் ஆகிவிட்டது, எவ்வளவு  நேரமாக பில் போடுகிறீர்கள் என்று நிறைய சாமான் வாங்கி பில் போடுபவரை பார்த்து யாரும்  முகம் சுளிப்பதில்லை. பொறுமை .பொறுமை காட்டுகிறார்கள்.
  அதே போல் தான் சிக்னல்களிலும். ஒரு போக்குவரத்து விதி மீறல்கள் இல்லை. எந்த சிக்னல்களிலும் போலீஸ்காரர்கள் இல்லை. சிக்னலுக்கு அருகில் போலீசும் நிற்கும் ஒரே இடம் சென்னை  மட்டும்தான் என்று நினைக்கிறேன். அப்படியும் எத்தனை விதி மீறல்கள் ; எத்தனை "சாவுகிராக்கி, வீட்டுல சொல்லுகினு வந்துட்டியா " என்கிற வசைகள் திட்டுக்கள்.
   ஒருவரை நட்புடன் பார்ப்பதும்  பொறுமை காப்பதும் வரிசை கலாசாரத்தை  பின்பற்றுவதும் ராக்கெட் அறிவியல் அல்ல. இதற்கு மனம் இருந்தால் மட்டும் போதும் . பின்பற்றலாம்.

   . 

Tuesday, 20 June 2017

இந்தியர்கள் என்றாலே பெருமைதான் !

இன்று ஆட்டோவா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாண்டு பட்ட மேற்படிப்பை ஒன்றரை ஆண்டிலேயே ( இங்குள்ள பல்கலைக்கழகங்களில் இந்த மாதிரி முடிக்க முடியும்)  என் பெண் முடித்து விட்டாள் . அதாவத ஒரு செமஸ்டர் பேப்பர்களை முந்தைய செமஸ்டரியியே கூடுதலாக எடுத்து படித்து தேர்வு எழுதலாம். அதனால் கடந்த ஆண்டே அவள்   முடித்து .பட்டம் பெற்று விட்டாள் . ஆனால் அவள் பட்டம் பெறுவதை பார்க்க என்னால் வர இயலவில்லை. இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவளது தோழிகள் பட்டம் பெற்றார்கள். விழாவுக்கு வரவேண்டும் என்று அவளது தோழிகள் நுழைவு சீட்டு கொண்டு வந்து கொடுத்து போயிருந்தார்கள். அதனால் நானும் என்  பெண்ணும்  சென்றோம். .        கடந்த ஆண்டு என் பெண் பட்டம் வாங்கியதை பார்க்க முடியாமல் போய்விட்டது என்கிற மனக் குறை எனக்கு இருந்தது. இன்று சென்ற போது கடந்த ஆண்டு விழா எங்கெல்லாம் நடந்தது என்று என்  பெண் எனக்கு ஒவ்வொரு இடங்களையும் காட்டி விளக்கினாள் . இந்திய மாணவர்களுக்கு பெரும்பாலும் அவர்களது பெற்றோர்கள் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருதார்கள் என்பது தெரிந்தது.  இன்று  Master of engineering , master of computer science, மற்றும் என்ஜினீரிங்கில் ஆராய்ச்சி பட்ட படிப்பு    மு டித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ஒரு நாளைக்கு நான்கைந்து துறைகளுக்கு என்று பட்டமளிப்பு விழா நான்கு நாட்களுக்கு மேல் நடக்கிறது. இன்றைய பட்டமளிப்பு விழாவில் அதிக இந்திய மாணவ ,மாணவியர்கள் இருந்தது தெரிந்தது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம். அடுத்து ஆந்திர மாணவர்கள். தமிழ் ஒரு 10 பேர் இருப்பார்கள். வந்திருந்த பெற்றோர்களில் சிலர் புடவை அணிந்து இருந்ததை வைத்து அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்ததது.
  என்  பெண் அவளது தோழிகளுக்கு என்னை அறிமுகப் படுத்தி வைத்தாள் . அவர்களது பெற்றோர்களும் அறிமுகமாக ,கை  குலுக்கல்கள், வாழ்த்துக்கள் புகைப்படங்கள் என்று அரங்கத்திற்கு வெளியே ஒரே கலகலப்பு. அவளுடன்  ஒன்றாக படித்த மாணவர்கள் என்னை அறிமுகப் படுத்தியதும் கை குலுக்கியதும் தடக் தடக்கென்று குனிந்து  என் காலைத்தொட்டு வணங்கியது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது . வயதில் பெரியவர்களை சிறியவர்கள் காலை தொட்டு வணங்கி ஆசி பெறுவது சகஜம்தான். ஆனால் இந்த மாதிரி பலரும் கூடியிருக்கும் இடத்தில்கல்வி நிறுவனத்தில்  தயக்கமின்றி அவர்கள் மரியாதை காட்டியது , வெளிநாட்டில் படித்தாலும் நமது கலாச்சாரத்தை  அவர்கள் மறக்கவில்லை என்பதை காட்டியது. எனக்கு நம் இந்தியாவை நினைத்து பெருமையாக இருந்தது. என் பெண்ணின் தோழிகளில் ஒருத்தி  நான் எனது பெண்ணின் பட்டமளிப்பு விழாவிற்கு வர முடியாததால் அங்கி அணிந்து அவளை நான் பார்க்கவில்லையே என்று தான் அணிந்திருந்த அங்கியை என்  பெண்ணுக்கு அணிவித்து "ஆன்டி இப்படித்தான் போன வருடம் அக்ஷ்யா அணிந்து பட்டம் பெற்றாள்  என்று சொல்லி எங்கள் இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்து தள்ளி விட்டார்கள்.பின் சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு நாங்கள் கிளம்பினோம்.
  லிப்ட்டில் நாங்கள் உள்ளே நுழைந்தபோது பல்கலைக்கழக டீனும் அங்கிருந்தார். .ஹய்  என்றவர் , என்னை பார்த்து நீங்கள் இவளது அம்மாவா என்றார். ஆம் என்றேன். எப்பிடி இருந்தது  விழா /என்று கேட்டவர் நீ எந்த துறையில் பட்டம் பெற்றாய் என்று ஏன் மகளிடம்  கேட்டார்.. "அவள் நான் சென்ற ஆண்டே பட்டம் பெற்று விட்டேன், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்றாள் . அப்படியா, இப்போது வேலை பார்க்கிறாயா, குட்  என்றவர், என்னை பார்த்து நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா என்று கேட்டார். ஆம் என்றேன். எந்த கூட்டத்திலும் நம்மை எளிதில் கண்டு பிடித்துவிட முடியும் !!!!
  

Thursday, 15 June 2017

cooking is fun

கனடாவில் எனது குக்கிங் அனுபவங்களை பற்றி சொல்லியே தீர வேண்டும். சமையல் அனுபவம் வேடிக்கையானதாக இருக்கிறது இங்கு. அபார்ட்மெண்ட்களில் எல்லா வீடுகளிலும்  மேல் கூரையில் தீ எச்சரிக்கை மணி எனப்படும் Alarm இருக்கிறது. அடுப்பு மின்சார அடுப்பு . அடுப்பில் வைத்திருக்கும் பாத்திரத்திலிருந்து கொஞ்சம் புகை வந்தால் போதும் , அலாரம் அடித்துவிடும். வீட்டிலிருக்கும் அலாரம் அபார்ட்மெண்ட் கட்டுப்பாடு அறையுடன் இணைக்கப் பட்டிருக்கும். நாம் அடுப்பை அணைக்காமல் (அல்லது அலாரம் அருகே சென்று  ஒரு துண்டை  வைத்து அதற்க்கு வீசி விடுவது போல் வீசினால் அது அடிப்பதை நிறுத்தி விடும் . சில நிமிடங்கள் கழித்து அடுப்பில் நமது வேலையை மீண்டும் தொடரலாம்).  தொடர்ந்து பாத்திரத்திலிருந்து புகையோ ஆவியோ வந்து கொண்டிருந்தால் அலாரம் தொடர்ந்து அடிக்கும் அபார்ட்மெண்ட்டிலிருந்து தீ அணைக்கும் மைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுவிட்டால் அடுத்த  ஐந்தாவது நிமிடத்தில் டிங் டிங் என்று மணி அடித்தவாறு 3 தீ அணைக்கும் வாகனங்கள் தீ அணைப்பு வீரர்களுடன் வந்து விடும் . இதை என்  பெண் முதலிலேயே சொல்லியிருந்தாள் . பல்கலை கழக மாணவியாக இருந்த சமயத்தில் பிற மாணவிகளுடன் வீட்டை பகிர்ந்துகொண்ட காலத்தில் ஒருவர் சமைக்கும்போது மற்றொருவர் அலாரத்தை கவனித்து கொள்வார்கள் ;அதற்கு வீசி சிச்ருஷை செய்வார்கள் என்பதை என்  பெண் சொல்லியிருந்தாள் .
   இருந்தாலும் நேரிடை அனுபவம் இப்போதுதான்.  என் பெண்  அலுவலகம் சென்ற பின் நான்  சமைக்க ஆரம்பித்த போது தான் சிரமம் தெரிந்தது. இப்போது இந்த சிரமம் வேடிக்கையாகிவிட்டது. குழம்பு நன்கு கொதிக்கட்டும் என்று விட்டால் நல்ல வாசனையுடன் கொதிக்கும்போது "பிங்   பிங் " என்று அலாரம் அடித்து விடும். இத்தனைக்கும் புகைபோக்கி எனப்படும் சிம்னியை "ஆன்" செய்துவிட்டுத்தான் சமையல் ஆரம்பிக்கிறேன்.துண்டை எடுத்து அதற்கு  வீசி விட்டால் அலாரம் நின்று விடும். இருந்தாலும் அந்த பிங்  பிங்  சப்தம் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துவது உண்மைதான். அதிலும் குறிப்பாக கடுகு தாளித்து விடுவது ஒரு பெரிய காமெடி. கடாயை காய விட்டு அடுப்பை அணைத்து பின் எண்ணெய் விட்டு சில வினாடிகள் கழித்து அடுப்பை அணைத்து அதன் பின் கடுகு , இன்ன பிற சாமான்கள் போட்டு அது சரியாக வெடிக்காவிட்டால் மீண்டும் அடுப்பை ஆன் செய்து ... முதலில் சலிப்பாக இருத்தது இப்போது வேடிக்கையாகிவிட்டது. இதே போல்தான் தோசை வார்த்தலும் . இரண்டு தோசை வார்த்து முடிக்கும்போது பிங் ..பிங் அடித்துவிடும். அடுப்பை அணைத்துவிட்டு ஒரு நிமிடம் கழித்து மீண்டும்  அடுப்பை ஆன் செய்து அடுத்த 2 தோசைகளை வார்க்க வேண்டும்.அதற்கு  பேசாமல் இட்லி செய்து விடலாம் என்று தோன்றும். சப்பாத்தி கேட்கவே வேண்டாம். ஒருவர் சப்பாத்தி பண்ணவேண்டும், மற்றொருவர் அலாரம் பக்கத்தில் அதற்கு "சிச்ருஷை" செய்ய தயாராக நிற்க வேண்டும்.
     இந்த இடத்தில் அரசாங்கத்தின் பொறுப்புணர்வு எச்சரிக்கை உணர்வை சொல்லியே ஆக வேண்டும் கட்டிட கட்டுமாணத்தில் அதிகம் மரங்கள் பயன்படுத்தப்படுவதால்  கட்டிடங்களில் தீ பிடித்துவிடக் கூடாது என்பதில் அரசு ரொம்ப கவனமாக இருக்கிறது. அனைத்து வீடுகளிலும் தீ எச்சரிக்கை மணி பொறுத்த வேண்டும் என்பது கட்டாயம். 5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து தீ எச்சரிக்கை மணி அடித்தால் உடனே தீயணைப்பு வண்டிகள் தீயணைப்பு வீரர்களுடன் வந்து   விடுகிறது என்பது அரசாங்கம் எவ்வளவு எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த இடத்தில் நம்மூர் சென்னை சில்க்ஸ் கட்டிட தீ விபத்து பற்றி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
  வீடுகளில் புகை வரக் கூடாது என்பதால் வீட்டுக்குள் யாரும் சிகரெட் புகைக்க முடியாது. புகை பிடிப்பவர்கள் பால்கனியில் அல்லது கட்டிடத்திற்கு வெளியேதான் வந்துதான் புகைக்க முடியும்.
   வீடுகளில் கடவுள் படங்களுக்கு முன் ஊதுபத்தி தசாங்கம் ஏற்ற முடியாது. ஏற்றினால் பிங் .. பிங்  தான். ஆனால் விளக்கு ஏற்ற முடிகிறது. வசந்த காலம் ,கோடை காலத்தில் சாலையோரங்களில், அபார்ட்மெண்ட் களுக்கு வெளியே பசுமை பசுமை அப்படியொரு பசுமை. பல நிறங்களில் இலைகள் இருக்கும் செடிகளையும் பார்க்க முடிகிறது. அதை தவிர பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சாலைகளில் அரசாங்கமும்  அபார்ட்மெண்ட்களில் ரெண்டல் நிர்வாகமும் இந்த செடிகள் பூக்கள் வளர்ப்பு பணியை செய்கின்றன. அழகுக்காக வளர்க்கப்படும் பராமரிக்கப்படும் செடிகள் ,பூக்கள்.  பூக்களை  பறிக்கக் கூடாது என்பது விதி .பூக்களை பறிக்காதீர்கள்  என்றெல்லாம் எழுதி போடவில்லை . எல்லோரும் விதிமுறைகளை மதிக்கிறார்கள்.
 பல வண்ண இலைகளுடன் கூடிய  சாலையோர செடிகள் 

      வீட்டில் கடவுள் படங்களுக்கு  பூக்கள் வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை  .அபார்ட்மென்ட்டாக இல்லாமல் தனி வீடாக இருந்தால் நாமே  வீட்டுக்கு வெளியே  செடி வளர்த்துக்கொள்ளலாம். .அபார்ட்மெண்டில் அது  முடியவில்லை. வீட்டை சுற்றி எங்கும் பூக்கள் . ஆனால் அந்த பூக்களை தொட முடியாது. இதை பார்க்கையில் எனக்கு ஆங்கில கவிஞர் சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ்ஜின் "The Rime of the Ancient Mariner"   செய்யுளில்  வரும் "water water everywhere, nor any drop to drink" என்கிற வரிகள் தான்  நினைவுக்கு வருகிறது!!!!!!

Sunday, 11 June 2017

Visit to the university----ஆட்டோவா(வ்) !!!

பள்ளிக்கூடமோ, கல்லூரியோ பல்கலைக்கழகமோ - கல்வி நிறுவனங்களுக்கு செல்ல எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் நாம் படித்த கல்வி நிறுவனம் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படிதான் ஒரு முறை தேவகோட்டை சென்றபோது நான் படித்த பெத்தாள் ஆச்சி பெண்கள் உயர் நிலை  பள்ளிக்கு சென்றேன். நான் படித்தபோது எனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் அங்கு இருக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் இன்று நான் நல்ல  நிலையில் இருக்க எனக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த அந்த பள்ளியை பார்க்க வேண்டும் , என் பெண் மற்றும் கணவரிடம் அந்த பள்ளியை  காட்ட வேண்டும் என்கிற ஆசையில் அங்கு   சென்றேன். பள்ளி ரொம்பவும் மாறிஇருந்தது. இருந்தாலும் அவர்களுக்கு காட்டினேன், இங்குதான் எங்கள் வகுப்பு இருத்தது, இங்குதான் கணித வகுப்பு நடக்கும், இங்குதான் ஆண்டுவிழாவுக்கு நடன பயிற்சி செய்வோம்  என்று எல்லா இடங்களையும் சுற்றி காட்டினேன். அதுபோல இங்கு கனடாவில்  என் பெண் தான் படித்த கல்லூரியை எனக்கு காட்ட என்னை ஆட்டோவா பல்கலைக்கழகத்திற்கு அழைத்து  சென்றாள் .
   ஆட்டோவா பல்கலைக்கழகம் பற்றி அவள் சென்னையில் இருக்கும்போது விண்ணப்பிக்கும்போது அவர்களது இணைய தளத்தில் பார்த்தது. நேரில் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. பல்கலைக்கழகம் பெரியது . பரந்து விரிந்து காணப்படும் பல்கலைக்கழக வளாகத்தில் கிட்டத்தட்ட 40 கட்டிடங்களுக்கு மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட 40000 மாணவர்கள் படிக்கிறார்கள். அவள் சேர்க்கைக்காக விண்ணப்பித்த போது இணையத்தில் அந்த பல்கலைக்கழகத்தை நாங்கள் பார்த்திருந்தோம். இப்போது  நே ரில் பார்த்த போது வியந்து நின்றேன். முதலில் அவள் படித்த வகுப்புகளுக்கு கூட்டி கொண்டு போய்  காட்டினாள். ஒவ்வொரு தளத்திலும் வகுப்புகளுக்கு வெளியே வராண்டாவில் நான்கு இடங்களில் காசு போட்டால் கோக் பெப்சி போன்ற குளிர் பானங்கள் வரும் மிஷின் நான்கு இடங்களில் இருக்கிறது அதேபோல் சாப்பாடு கையில் கொண்டு வருபவர்கள்  சாப்பிடுவதற்கு ஓரத்தில் வரிசையாக நீண்ட மேசை நாற்காலி போடப்பட்டிருக்கிறது. அமைதியாக படிக்க வெளியே இயற்கை சூழலில் ஸ்டோன் பெஞ்சுகள் இருந்தாலும் உள்ளே வராண்டா அருகே அறைகள் இருக்கின்றன. ஆனால்  முதலிலேயே பதிவு செய்து கொள்ள வேண்டும். இரண்டரை மணி நேரம் வரை எந்த  கவன சிதறலும் இல்லாமல் படிக்கலாம். நூலகம் இருக்கும் கட்டிடத்தில் 24x 7 ஹால் என்று ஒன்று இருக்கிறது. அங்கு இரவு பகல் முழுவதும் அமர்ந்து படிக்கலாம்.
ஆட்டோவா பல்கலைக்கழகம் 

  குளிர் காலத்தில் தேர்வுகள் நெருங்கும் சமயத்தில்  என்  பெண் சொல்லுவாள் , "இன்று பல்கலைக்கழகத்தில் 24x 7 ல் இரவு தங்கி படிக்கப் போகிறேன் "என்று. இது  பாதுகாப்பான இடம், பலரும் இரவு இங்கு தங்கி படிப்பார்கள்  என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அதனால் ஆரம்பத்தில் "வேண்டாம்மா, இரவு எதற்கு தங்க வேண்டும், வீட்டுக்கு போய்விடு என்று சொல்லுவோம். பின் அவள் அந்த இடம் பற்றி விளக்கி எங்களுக்கு புரிய வைத்தாள் .அதன் பின் தான் சரி இங்கே இரவு தங்கி படி என்றோம். அந்த இடத்தை என் பெண் எனக்கு காட்டி "அம்மா இ ங்கு நான் தங்க  நீயும் அப்பாவும்  பயந்தீர்கள் " என்று காட்டி  சிரித்தாள்.
  பல்கலைக்கழகத்தில் 24X 7 சாப்பாட்டு அறை  இருக்கிறது. அங்கு இந்தியா உள்பட உலக  நாடுகளின் உணவு வகைகள் கிடைக்கும். ஒருதடவை 9 டாலர் கொடுத்து உள்ளே போய்விட்டால் எந்த நாட்டு உணவையும் சாப்பிடலாம். சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் .ஆனால் ஒரு தடவை வெளியே வந்து விட்டால் இந்த 9 டாலர் முடிந்துவிடும் . மீண்டும் உள்ளேபோய் சாப்பிட  மற்றொரு 9 டாலர் கொடுக்க வேண்டும். very interesting place.
  பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவ மாணவிகளின் வாழ்க்கை ஒன்றும் எளிதல்ல. இந்தியா அதிலும் தமிழ் நாடு வாழ்க்கை சூழலில் வளர்ந்த மாணவிகள் அதாவது காலையில் வீட்டில் அம்மா சாப்பாடு செய்து கையில் காட்டிக்கொடுத்து, மீண்டும் மாலை கல்லூரியில் இருந்து வந்தவுடன் சாப்பாடு கொடுத்து, படிக்கும் பெண்ணை ஒரு வேலையும் செய்ய சொல்லாமல் சொகுசாக வளர்த்து விடுகிறார்கள். இங்கு வந்ததும் முதலில் தங்குமிடம், மூன்று அல்லது நான்கு மாணவிகளுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்க வேண்டும். அட்ஜஸ்ட்மென்ட் மிக அவசியம் அவரவரே சமைத்து கொள்ள வேண்டும். வேலைக்கு ஆட்கள் என்பதே இல்லாத நாடு .கடையில் சாமான் வாங்கினால் எவ்வளவு சுமையாக இருந்தாலும் கையில் தூக்கிக்கொண்டுதான் வரவேண்டும். வீட்டில் வந்து டெலிவெரி செய்வது என்பது இல்லை. பெரும்பாலும் பகுதி நேர வேலை பார்க்கிறார்கள் மாணவிகள். பீசா கடைகள் , பல்பொருள் அங்காடிகளில் வேலை . தேர்வு சமயமாக இருந்தாலும் தானே சமைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தது குளிர்.  குளிர்காலத்தில் மைனஸ்  40 வரை தட்பவெப்பம் போகிறது. ஆட்டோ கிடையாது. பஸ் ஸ்டாப் எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்துதான் போக வேண்டும். சாலையெங்கும் ஸ்நோவாக இருக்கும். பனிப்பொழிவு இருந்துகொண்டே இருக்கும். பஸ் நிறுத்தம் உள்ளே ஹீட்டர் இருந்தாலும் பஸ் நிறுத்தம் வரை நடந்துதான் போக வேண்டும். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு படிக்கிறார்கள். கஷ்டப்பட்டுதான் எல்லா மாணவ மாணவிகளும் படிக்கிறார்கள் .பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் மீது எனக்கு அதிக மரியாதை வருகிறது
  பல்கலைக்கழகத்தில் இரவு 11 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன என்பது மற்றொரு சுவாரசியமான விஷயம். சில வகுப்புகள் இரவு எட்டிலிருந்து 11 மணி வரை நடக்கிறது. அதன் பின் மாணவ மாணவிகள் பஸ் பிடித்து வீடு திரும்புகிறார்கள். எந்த பயமும் இல்லை.
  ஆட்டோவா பல்கலைக்கழகத்தை  சுற்றி பார்த்தபோது அதுவும் அந்த வகுப்புகளை பார்த்தபோது எனக்கு இந்த பல்கலைக்கழகத்தில்  படிக்க வேண்டும் என்பதை விட ஆசிரியராக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று ஆசை வந்தது உண்மை. 

Saturday, 3 June 2017

'பறவைகள்' பலவிதம்

இன்று  மிகவும் சுவாரசியமான ஒரு  இடத்திற்கு போய் வந்தோம்  நானும் என்  பெண்ணும். . அதாவது கனடா விமான மற்றும்விண்வெளி   அருங்காட்சியகத்திற்கு. ஜூலை 1 ஆம் தேதி கனடா பிறந்து 150 ஆண்டுகளாகிறது. அதற்கான கொண்டாட்டங்கள் இந்த மாதமே துவங்கிவிட்டன. அதன் ஒரு அங்கமாக ஆட்டோவா கதவுகள் திறக்கின்றன "Doors open Ottawa"என்கிற தலைப்பில் நகரில் இருக்கும் வரலாறு கலாச்சார , நினைவு சின்ன மையங்களை மக்கள் இலவசமாக கண்டு களிக்க  வாய்ப்பு அளிக்கப் பட்டது .அதனால் அந்த அருங்காட்சியகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது காரில் செல்பவர்கள் நெடுஞசாலை வழியே சென்று விடுகிறார்கள். பஸ்சில் செல்பவர்களுக்கு நேரிடை பஸ் கிடையாது ஒரு  குறிப்பிட்ட இடத்தில் இறங்கி கிட்டத்தட்ட ஒருகிலோமீட்டர்  நடக்க வேண்டும். அதில் 10 நிமிடம் இரு புறமும் மரங்களும் செடிகளும் அடர்த்தியாக வளர்ந்து நடுவில் செல்லும் ஒற்றையடி பாதையில் நடக்க வேண்டும். அழகான கிராமத்து சூழலில்  அந்த இடம் இருந்தாலும் தனியாக நடக்க சற்று பயமாக இருந்தது வாஸ்தவம்தான். இதன்  நடுவே ஒரு சிறு மரப் பாலம் வேறு. மரப்  பாலத்தை கடந்து பறவைகளின் கீச் கீச் சத்தத்தின் நடுவில் நடக்கையில் ஒரு நாட்டின் தலைநகர் நடுவே இப்படி இயற்கை அழகு கொஞ்சமும் குன்றாமல் ஒரு இடம் எப்படி இருக்கிறது என்று ஆச்சர்யமாக இருத்தது. என்  பெண் கையில் கூகுள் மேப்பை வைத்துக்  கொண்டு அது காட்டும் வழியில் நடந்தாலும் நான் எனது நச்சரிப்பை நிறுத்தவில்லை . இது சரியான வழியா ? அது எப்பிடி ஒரு அருங்காட்சியகம் காட்டு வழி மாதிரியான இடத்தை கடக்க கூடியதாக இருக்கும்? இல்லை நாம்   தப்பான வழியில் வந்து விட்டோம் என்று புலம்பிக் கொண்டே  நடந்தேன். என் பெண்ணோ "அம்மா கூகுள் தப்பாக வழி காட்டாது , நான் நடக்க நடக்க நீ பாட்டுக்கு என் பின்னால் வா, " என்றாள் .10 நிமிடம் அந்த ஒற்றியடிப்பாதையில் நடந்து அதை கடந்து வந்தால் நெடும்சாலை. சாலையை கடந்தவுடன் நம்மை வரவேற்கிறது கனடா விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்.அதில் reserve Hangar என்கிற இடம் தான் பார்வையாளர்களுக்கு திறந்து விடப் பட்டிருந்தது. உள்ளே நுழைந்த அடுத்த வினாடி நான் பிரமித்து போனேன் .நமது விக்ரம் படத்தில் ஏவுகணை நிறுத்தி வைத்திருப்பார்களே அது மாதிரி பல மடங்கு பெரிய ஹால். நம்மை சுற்றியும் விமானங்கள் .  கிட்டத்தட்ட 60 விமானங்கள் அங்கு பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கிறது . முதல் உலகப் போர் , இரண்டாம் உலகப் போரில் பயன்டுத்தப்பட்ட விமானங்கள் ,  1930களில் தயாரிக்கப்பட்ட விமானத்திலிருந்து இப்போது வரையிலான அரிய விமானங்கள் அங்கிருந்தன சிறியதும் பெரியதுமாய். .என்னதான் விமானம் என்பது இன்று சகஜமாகி விட்டாலும் எழுத்தாளர் சுஜாதா வார்த்தையில் அந்த "அலுமினிய பறவை" யை அதிலும் நிறைய ப றவைகளை  மிக அருகில் பார்க்கும்போது ஒரு வியப்பும் பிரமிப்பும் ஏற்படாமல் இருப்பதில்லை.
அருங்காட்சியகத்தில் விமானங்கள் 
பிரம்மாண்டமான அந்த மாபெரும் ஹாலில்  உலகப் போரில் சாகசம் செய்த விமானங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தன. ஓய்வு பெற்ற  விமானிகள் அந்த விமானங்கள் பற்றி விளக்கி கொண்டிருந்தார்கள்.Canadair என்கிற விமானம் ஒரு முறை எரி பொருள் நிரப்பினால் 31 மணி நேரம் ஓடுமாம்.அதுவும்  அங்கிருந்தது . அந்த விமானம் 1957 ல் வடிவமைக்கப் பட்டதாம். அதே போன்ற மற்றொரு விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்துவிட்டது என்று அங்கிருந்த ஓய்வு பெற்ற விமானி விளக்கி கொண்டிருந்தார்.. விமானிகள்  தொழில் நுட்பங்கள் பற்றி அதிகம் விளக்கினார்கள் .  .  எனக்கு அந்த இடத்தில் என் தங்கையின் குடும்பம் தான் நினைவுக்கு வந்தது. விமானங்கள் பற்றிய ஆர்வமும் ஏரோமாடலிங்கில் வல்லுனரும் ஆகிய என்தங்கை கணவர் திரு .பார்த்தசாரதி அங்கிருந்தால் அந்த விமானிகளிடம் பல கேள்விகள் கேட்டு ஏகப்பட்ட விஷயங்களை அறிந்து கொண்டிருப்பார். விமானி பயிற்சி பெற்ற என் தங்கையின் பெண்ணோ   பல தொழில்நுட்ப  விளக்கங்களைக் கேட்டு  தெரிந்து கொண்டிருப்பாள் என்று நானும் என்  பெண்ணும் பேசிக் கொண்டோம்.
     
கனடாவின் முன்னாள் பிரதமர் பியர் த்ருடோ(இந்நாள் பிரதமர் ஜஸ்டின் த்ருடோ வின் தந்தை)  எட்டு பேர் பயணம் செய்யக் கூடிய Lockheed விமானம் வைத்திருந்தாராம். அப்போது சிறுவனாக இருந்த   இப்போதைய பிரதமர் ஜஸ்டின் அதில்  தன து நண்பர்களுடன் புளோரிடாவில் இருக்கும் டிஸ்னி லாண்டுக்கு  செல்வாராம். அந்த எட்டு பேர் அமரும் விமானமும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றிருந்தது.
      கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் விமானங்களுக்கு நடுவே இருந்துவிட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பி வர மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம் .
   கார் வாங்க வேண்டும் என்று சில நாட்களாக சொல்லிக்  கொண்டிருந்த எனது பெண் அருங்காட்சியகத்தை விட்டு வெளி  வந்த போது "அம்மா கார் வேண்டாம்மா ....8 seater  விமானம் தான் வாங்க வேண்டும்மா " என்றாளே பார்க்கலாம்!!!!!! 

Thursday, 1 June 2017

நடை பாதை நடக்க மட்டுமே !!

கனடாவின் தலைநகரான ஆட்டோவாவில்  சில விஷயங்கள் என்  கவனத்தை ஈர்த்தன . கனடா குளிர் பற்றி குறிப்பிட்டிருதேன் வெயிலும் வெப்பமும் நிறைந்த கோடை இவர்களுக்கு ஏப்ரல்  மாதத்திலிருந்து ஆகஸ்ட்  வரை தான். குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வற்கான ஜாக்கெட் வார்மர் கையுறை போட்டுக் கொள்ளாமல் பிரீயாக அவர்கள் நடமாடுவது இந்த சமயத்தில்தான். (இந்த முறை சில நாட்களில் வானிலை மோசமாவதும் மழை பெய்வதும் நடக்காமல்  இல்லை) அதனால் சூரியனும் வெப்பமும் இவர்களை குஷி படுத்துவதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. வெப்பம் 20 டிகிரி ஆகிவிட்டால் அவர்களது சந்தோஷம் வீதியில் தெரிகிறது. ஆண்களும் பெண்களும் ஷாட்ஸ்  பனியன் அணிந்து வாக்கிங் ஜாகிங் ஸ்கேட்டிங் செல்வது சகஜம். இதென்ன புதிய விஷயமா என்று யாரும் சலித்துக்கொள்ள வேண்டாம். வாக்கிங்கும் ஜாகிங்கும் காலையில் இல்லை. மதியம். 12மணியிலிருந்து 4 மணி வரை சாலைகளில் ஜாகிங் செல்வோரை பார்க்க முடிகிறது. நடை பாதை நடப்பதற்கு மட்டுமே என்பதை யாரும் மீறுவதில்லை என்பதால் வாக்கிங் ஜாகிங் செல்வது போக்குவரத்தை பாதிப்பதில்லை. கார் வருகிறதா பஸ் வருகிறதா என்று பார்த்து ஜாக்கிரதையாக   நடக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. பஸ்கள் கார்கள் செல்லும் சாலையை ஒட்டி தனியாக இருக்கும் நடை பாதையில்தான் நடக்க வேண்டும் என்பது விதி. அதனால்தான் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் சமயத்திலும் நடை பாதையில் ஸ்கேட்டிங்கும் ப்ராக்டிஸ் செய்கிறார்கள் .அதே போல் சைக்கிளிங்கும் .ஆனால் சைக்ளிங் உடல்  பயிற்சிக்கு மட்டுமே. யாரும் அதை போக்குவத்துக்கு பயன்படுத்துவதில்லை. மைதானங்களில் சைக்ளிங் பயிற்சி செய்ய விரும்புபவர்கள் சைக்கிளை பஸ்ஸில் எடுத்து செல்கிறார்கள். சைக்கிள் வைப்பதற்கு என்று பஸ்ஸில் இடம் இருக்கிறது .
   இதை போல மற்றொரு விஷயமும் என் கவனத்தை ஈர்த்தது . அதுதான் கைக்குழந்தையுடன் பெண்கள் வருவது. குழந்தையுடன் பெண்கள்வருவதில் என்ன இருக்கிறது என்று  இதை  படிப்பவர்கள் நினைக்கலாம். இரண்டு குழந்தைகளை பிராமில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து பஸ்ஸில் பிராமை  ஏற்றி பயணம் செய்யும் பெண்களை பார்ப்பது சகஜம்.வீட்டில் வேலைக்கு ஆட்கள் வைத்துக்கொள்வது அறவே   இல்லை என்பதால் பெண்கள் வெளியே போக வேண்டி இருந்தால் யாரையும் சார்ந்திராமல் குழந்தையை பிராமில் வைத்து தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார்கள். பிறந்து ஒரு மாதம் ஆன கை  குழந்தையைக்கூட  பிராமில் வைத்துக்கொண்டு மால்களுக்கு அவர்கள் வருவது மிக சஜமான ஒரு விஷயம் .
   எந்த வேலைக்கும் யாரையும் சாராமல் சுதந்திரமாக பெண்கள்  இங்கு செயல்  படுவது  மகிழ்ச்சி தருகிறது