Total Pageviews

Friday, 28 July 2017

நயாகரா ---எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது !!!

சிஎன் டவர் எப்படி என்னை பிரமிக்க வைத்ததோ அதே போல பிரமிக்க வைத்தது  நயாகரா நீர் வீழ்ச்சி.



Horseshoe falls: ஆவேசமாக கொட்டும் தண்ணீர்  



அருவியை அருகே சென்று ரசிக்க  அமெரிக்கா படகு சவாரி 
டொரொன்டோ அருகே இருக்கும் விட்பியிலிருந்து கிட்டத்தட்ட 185 கிலோ மீட்டரில் இருக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி.   உலகின் இயற்கையான அதிசயங்களில் 7 வது இடத்தை பெற்றிருக்கி றது .விட்பியில் இருக்கும் என் அக்கா பெண் மற்றும் அவர் கணவ ருடன் நாங்கள்   நயாகராவுக்கு காரில் பயணமானோம். வாரக்  கடைசியில் சென்னையிலிருந்து மஹாபலிபுரம் போய்  நாள் முழுவதும் அங்கு கழித்துவிட்டு மாலையில் திரும்புவது போல்தான் டொரோண்டோ நயாகரா பயணமும்.
  நாங்கள் காலை 9 மணிக்கு விட்பியிலிருந்து கிளம்பி இரவு 9 மணிக்கு திரும்பி வந்தோம். போகும் வழியில் நிறைய திராட்சை தோட்டங்களை பார்க்க முடிந்தது .  நயாகராவை நெருங்கும்போது சாலை இரண்டு பிரிவாக பிரிகிறது. ஒன்று அமெரிக்கா செல்வது . மற்றொன்று கனடா பக்கத்து நயாகரா செல்வது. பிரியும் இடத்தில அறிவிப்பு பலகை இருக்கிறது. பார்த்து செல்ல வேண்டும்.
நீர் வீழ்ச்சியில்  வானவில் 
  நயாகரா நதியின் மேற்கு பக்கம் இருப்பது கனடாவின் ஒண்டோரியோ  ப்ரோவின்சில இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி நகரம். கிழக்கு பக்கத்தில் இருப்பது நியூயார்க்.   நயாகரா நதி  அமெரிக்கா மற்றும் கனடாவின் சர்வதேச எல்லையாக இருக்கிறது.Horseshoe falls, American Falls, Bridal veil Falls  என்கிற மூன்று நீர்வீழ்ச்சிகள் சேர்ந்ததுதான் நயாகரா  நீர்வீழ்ச்சி. இதில் ஹார்ஸ் ஷூஸ் நீர்வீழ்ச்சி கனடா பக்கம் இருக்கிறது மற்ற இரண்டும் அமெரிக்கா பக்கம்.  நீர்வீழ்ச்சியை இரு பக்கத்திலிருந்தும் பார்க்க முடியும். சர்வதேச எல்லையை ரெயின்போ பிரிட்ஜ் என்று பெயருள்ள ஒரு பாலம் இணைக்கிறது. கனடா பக்கத்திலிருந்து  பார்ப்பவர்கள் அமெரிக்கா பக்கத்திலிருந்தும் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் பாலத்தை கடந்து செல்ல வேண்டும். அதே போல் அமெரிக்கா பக்கத்திலிருந்த்தும் பாலத்தை கடந்து வந்து பார்க்கலாம். ஆனால் இவ்வாறு இருத

ரப்பும்  மாறி சென்று  பார்ப்பதற்கு விசா தேவை. பாலத்தின் இரு பக்கத்திலும் இருக்கும் இமிகிரேஷன் அலுவலகத்தில் விசா பெற்றுத்தான் ஒரு தரப்பு அடுத்த தரப்பை ப்பார்க்க முடியும்.
  மூன்று நீர்வீழ்ச்சிகளில் மிகப் பெரியது மற்றும் நீளமானது கனடா பக்கத்தில் குதிரை லாட வடிவத்தில் இருக்கும் Horseshoe நீர்வீழ்ச்சி. ஒன்டோரியாவின் டேபிள் ராக் என்ற இடத்திலிருந்து நியூயார்க்கில் கோட் தீவு வரை  இது  நீண்டிருக்கிறது. கனடியன் பால்ஸ் என்றும் அறியப்படும் ஹார்ஸ் ஷூஸ் பால்ஸின்  உயரம் 188 அடி அஃலம் 2600 அடி . 188 அடியிலிருந்து தண்ணீர் அதிக சக்தியுடன் திறனுடன் கொட்டும்போது  கண்ணுக்கு தண்ணீர் தெரிவதில்லை புகை மண்டலமாக தெரிகிறது. வெயிலில் நிற பிரிகை ஏற்பட்டு நீரில் வானவில் தெரிவது கண்கொள்ளாக் காட்சி.
ரெயின்போ பாலம்,  கனடா  தரப்பின் படகு சவாரி 
  இரும்பு கம்பி தடுப்பு சுவர் அருகே நிற்கும் போது அருவியி லிருந்து கொட்டும் நீர் சாரலாக நம் மீது படும்போது நமக்கு உடம்பு சிலிர்க்கிறது. தண்ணீர் பச்சை நிறமாக இருக்கிறது. பல கனிமங்கள்  மற்றும் உப்புகள் நீருடன் சேர்த்து அடித்து வரப்படு வதால் நீரின் நிறம் பச்சை நிறமாக இருக்கிறது என்கி றார்கள் அருவியை மிக அருகில் பார்ப்பதற்கு Maid of the mist  என்கிற படகு சவாரி உண்டு. சாரலால் நனைந்துவிடுவோம் என்று படகு சவாரிக்கு மழை கோட்டு கொடுக்கி றார்கள். நயாகரா நதியில் கனடா பக்கத்து படகில் சிவப்பு நிற மழை கோட்டு அணிந்து கனடா தரப்பிலிருந்து செல்பவர்கள் அருவியின் அழகை ரசிப்பது போலவே அமெரிக்கா பக்கத்திலிருந்து வருபவர்கள் நீல நிற மழை கோட்டு அணிந்து அருவியின் அழகை ரசிக்கிறார்கள்.
நடைபாதை அருகே இருக்கும் புல்வெளியில் சாரல் பட்டு ஈரமாக இருக்கிறது    நம் ஊரை நினைத்துக்கொள்கிறேன். இந்த புல்வெளியைஇப்படி விட்டு வைப்பார்களா?  சுண்டல் விற்பார்கள்; பஜ்ஜி கடை போடுவார்கள். வண்டியில் ஐஸ் கிரீம் விற்பார்கள். மாங்காயை அழகாக அரை வட்டத்தில் கட்  பண்ணி விற்பார்கள். ஆனால் அது கூட நன்றாகத்தானே இருக்கும்.
  நயாகராவின் அழகை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. நேரம் ஆக ஆக சாரல் அதிகமாகிறது.தண்ணீர் கொட்டுவதில் அதிக .ஆவேசம் தெரிகிறது. இதனால் புகை மணடலம் இன்னும் பரவி  வியாபிக்கிறது. மனமின்றி கிளம்பிய பின் திரும்பி பார்த்தால் தண்ணீருக்கு பதில் நம் கண்ணுக்கு தெரிவது புகை மண்டலம் மட்டுமே

Wednesday, 26 July 2017

Sri Ramanujar - The Great Spiritual Personality-4th Part



ஸ்ரீ ராமானுஜர் பற்றி சரணாகதம் ஜூலை மாத இதழில் வெளிவநத எனது கட்டுரை(4 வதும் இறுதி பகுதியும் )




சரணாகதம் ---- கட்டுரை


ராமானுஜர் 4வது பகுதி

வாழி ராமானுஜர் வாழி எதிராசர்


எழுதியவர்: பானுமதி கிருஷ்ணஸ்வாமி சென்னை


ராமனுஜர்ஒன்பது நூல்கள் எழுதினார். அவை நவரத்தினங்கள் என்று அறியப்படுகின்றன. ஸ்ரீ பாஷ்யம் , வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதாந்த சங்க்ரஹம் , கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம் ஸ்ரீவைகுண்ட கத்யம், நித்ய க்ரந்தம் ஆகியவை அவை. இதில் ஸ்ரீ பாஷ்யம் தான் அவர் ஆளவந்தாருக்கு செய்து கொடுத்த முதல் சத்தியம். அதாவது பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதுவதாக செய்து கொடுத்த உறுதி. அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதுவதற்கு முன்பாக போதாயனர் விருத்தி நூலை படித்தால் நல்லது என்று சொல்லப்படவே அந்த நூலின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இருக்கும் காஷ்மீரத்து புத்தகசாலைக்கு செல்ல முடிவு செய்தார். அவருடன் அவரது சீடரான கூரத்தாழ்வான் சென்றார். காஷ்மீரத்தில் அங்கு இருந்த அரசரை பார்த்து அவரிடம் அனுமதி பெற்று போதாயனர் விருத்தியை அவர் வாங்கி கொண்டு வரும்போது அந்த அரசரின் சபையில் இருந்த அறிஞர்கள் அவரை துரத்தி வந்து வழியில் மடக்கி அந்த புத்தகத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் நினைவாற்றலுக்கு பெயர் பெற்ற கூரத்தாழ்வான் அந்த புத்தகத்தை தான் மனனம் செய்து விட்டதாக சொன்னார்.
     பின்னர் ஸ்ரீரங்கம் திரும்பி கூரத்தாழ்வானின் நினைவாற்றல் உதவியுடன் பிரம்ம சூத்திரத்திற்கு அவர் உரை எழுதினார். பிரம்ம சூத்திரத்திற்கு பலர் விளக்க உரை எழுதியிருந்த போதிலும் எழுதியிருந்த போதிலும் ராமானுஜரின் பாஷ்யமே சிறப்பானது என்று கருதப் பட்டு அது ஸ்ரீ பாஷ்யம் என்று போற்றப்பட்டது. அதிலிருந்து ஸ்ரீராமானுஜர் ஸ்ரீ பாஷ்யக்காரர் என்கிற திருநாமத்தை பெற்றார்.
       விஷிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்களை பரப்ப அவர் இந்தியா முழுவதும் திக்விஜயம் மேற்கொண்டார். வாதபோர்களில் கலந்து கொண்டு தனது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்களை பிரபலப்படுத்தினார். இவ்வாறு ஸ்ரீவைஷ்ணவத்தை ராமானுஜர் பரப்பி வந்தது அப்போது தஞ்சையை ஆண்ட சோழ மன்னனுக்கு பிடிக்கவில்லை. அந்த சோழ மன்னன் சைவ சமயத்தை சார்ந்தவர். மன்னனால் ராமானுஜருக்கு ஆபத்து என்பதை புரிந்து கொண்ட அவரது சீடர்கள் அவர் சிறிது காலம் ஸ்ரீரங்கத்தை விட்டு தலை மறைவாக இறுப்பது நல்லது என்று நினைத்தார்கள். அப்போதுதான் ராமானுஜர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மேலக்கோட்டை எனப்படும் திருநாராயணபுரத்திற்கு வந்து சேர்ந்தார். மேலக்கோட்டையில் அவர் 12 ஆண்டுகள் இருந்தார்.
      ராமானுஜருடன் அவரது சீடர்கள் பலரும் மேல்கோட்டைக்கு சென்றார்கள். திருநாராயணபுர கோயிலில் தனது சீடர்களுடன் சேர்ந்து பல பணிகளை ராமானுஜர் செய்தார். ஊர் மக்களுக்கு ராமானுஜரை ரொம்பவும் பிடித்து விட்டது. கோயிலின் உத்சவ மூர்த்தி ராமப்ரியன் டில்லி பாதுஷா படையெடுப்பின்போது கொள்ளையடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார் என்பதை கேள்விப்பட்ட ராமானுஜர் ராமப்பிரியனை மீட்க டில்லிக்கு சென்றார். அங்கு மன்னன் விக்ரகம் தனது பெண்னிடம் உள்ளது என்றும் அவள் கொடுத்தால் வாங்கி செல்லும்படியும் கூறிவிட்டார். இளவரசியும் இதே பதிலை சொல்ல ராமானுஜர் விக்கிரகத்தை பார்த்து 'செல்ல பிள்ளை வாராய்' என்று அழைக்க வீக்கம் ராமானுஜரின் மடியில் ஓடி வந்து அமர்ந்து கொண்டது . பின்னர் அதை எடுத்துக்கொண்டு ராமானுஜர் மேல்கோட்டைக்கு வந்தார். அன்றிலிருந்து திருநாராயணபுரத்து உத்சவர் செல்லப்பிள்ளை என்று அறியப்பட்டார் என்கிறது வைஷ்ணவ வரலாறு.
       12 ஆண்டுகள் ராமானுஜர் மேலக்கோட்டையில் இருந்தார். ஸ்ரீரங்கத்தில் சோழ மன்னன் இறந்து போய் அவரது மகன் பட்டத்துக்கு வந்து விட்டார் அவரால் வைஷ்ணவத்திற்கு ஆபத்து ஏதும் இல்லை என்கிற தகவல்களை ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்த அவரது சீடர்கள் அனுப்பினார்கள் . உடனே ராமானுஜர் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். 12 ஆண்டுகள் ராமானுஜருடன் இருந்து விட்ட மேலக்கோட்டை மக்கள் அவர் ஸ்ரீரங்கம் திரும்புவதை கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தார்கள். தங்களால் அவரது பிரிவை தாங்க முடியாது என்றார்கள் . அவரது திருமேனியை விக்ரக வடிவில் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களது விருப்பப் படியே ராமானுஜர் தனது விக்ரகம் ஒன்றை செய்ய சொன்னார். அது இன்றும் திருநாராயணபுரத்தில் 'தமர் உகந்த திருமேனி " என்று சொல்லப்படுகிறது . தமர் என்றால் பக்தர்கள் என்று பொருள். பக்தர்களுக்கான திருமேனி என்று பொருள்.
         ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் கோயிலின் நிர்வத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டார்.தினசரி உபன்யாசங்கள் செய்தார். அவரது பக்தர்கள் கூட்டம் அதிகமானது. மக்கள் அவர் காட்டிய இறை பணியை மேற்கொள்ள விரும்பினார்கள் . ராமானுஜருக்கு வயதாகி கொண்டே வந்தது. ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தை பரப்புவதற்கு 74 ஆச்சார்ய மையங்களை ஏற்படுத்தினார். மன்னர்கள் செல்வந்தர்களும் அவரை பின்பற்றினார்கள்.
          அவர் பிறந்த ஊர் ஸ்ரீபெரும்புதூர் என்றாலும் புகுந்த வீடான ஸ்ரீரங்கத்திலேயே ராமானுஜர் இருந்துவிட்டார் என்று ஸ்ரீபெரும்புதூர் பக்தர்கள் வருந்தினார்கள். அப்போது அவரது சீடரான முதலியாண்டானின் மகன் கந்தாடை ஆண்டான் ராமானுஜரிடம் வேண்டி வற்புறுத்தி அவரது விக்ரகம் ஒன்றை செய்ய அனுமதி பெற்றார். ராமானுஜர் தனது சக்தி முழுவதையும் அதில் அளிக்கும் வகையில் அந்த விக்ரகத்தை ஆரத் தழுவிக் கொண்டார். ராமானுஜரின் சக்தி அனைத்தும் அந்த விக்கிரகத்தில் ஏறியது. அந்த விக்கிரகம் அந்த ஆண்டு தை மாதம் பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜர் தனது சக்தியை இழந்து நடக்க முடியாமல் தள்ளாட ஆரம்பித்தார். இந்த விக்ரகம் தான் இன்றும் ஸ்ரீபெரும்புதூரில் "தானுகந்த திருமேனி" அதாவது அவரே விரும்பி ஏற்ற திருமேனியாய் இருக்கிறது.
      ராமானுஜருக்கு தள்ளாமை அதிகமானது. 120 வயதை அவர் எட்டிவிட்டார். . தனது வாழ்நாள் முடிய போகிறது என்பதை உணர்ந்து கொண்ட ராமானுஜர்அரங்கனிடம் சென்று தனது குற்றங்களை அவர் மன்னிக்க வேண்டும் என்றும் தனது சம்பந்தம் பெற்ற அடியவர்களுக்கு இப்போதும் வருங்காலத்திலும் முக்தி அளிக்க வேண்டும் என்றும் வேண்டினார். அரங்கன் ராமானுஜரின் பெருந்தன்மையை பார்த்து வியந்து போனார். பொதுவாக எவரும் தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் வேண்டுவார்கள் தவிர என்னை சார்ந்தவர்களுக்கும் முக்தி கொடு என்று வேண்டமாட்டார்கள். அதனால் ஆச்சரியமடைந்த நம்பெருமாள் அப்படியே ஆகட்டும் என்றார்.இந்த உலக வாழ்க்கை போதும், அடியேனுக்கு வைகுந்தத்தை அருள வேண்டும் என்று வேண்டினார்.அதனை ஏற்றுக்கொண்ட அரங்கன் இன்னும் 7 நாட்களில் அவர் உலக வாழ்வை நீத்து வைகுந்தம் அடைவார் என்று சொன்னார். மனமகிழ்ந்து ராமானுஜர் உடனே பல உபன்யாசங்கள் நடத்தினார். பல சீரிய கருத்துக்களை சீடர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியில் தனது 120 வது வயதில் தனது திருமேனியை துறந்து வைகுந்தம் சென்றார். . ராமானுஜருக்கு தன் மீது இருந்த அபிமானத்தையும் பக்தியையும் புரிந்துகொண்ட நம்பெருமாள் ராமானுஜரின் திருமேனி தனக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் அவரது திருமேனியை கோயில் வசந்த மண்டபத்திலேயே திருப்பள்ளி படுத்த சொன்னார். இன்று அந்த இடத்தில்தான் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் சந்நிதி இருக்கிறது. அவர் திருப்பள்ளி படுத்தப்பட்ட இடத்தில் கந்தாடை ஆண்டான் சந்தனம் குங்குமப்பூ கொண்டு ராமானுஜர் திருமேனியை எழுந்தருள பண்ணினார். அது தத்ரூபமாக ராமானுஜர் மீண்டும் வந்திருப்பது போல் இருப்பதால் "தானான திருமேனி" என்று அது கொண்டாடப் படுகிறது.
         ராமானுஜர்தனது வாழ்நாளில் பல அரிய பணிகளை செய்திருக்கிறார். வேதாந்தத்திற்கு விளக்கம் அளிக்கும் 9 நூல்களை எழுதினார். ஆழ்வார்களின் பாசுரங்களை பிரபலப்படுத்தினார். கோயில்களில் சீர்திருத்தங்களை செய்தார். முக்தி அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதி செய்தார். இறைவனின் திருவடிகளை பற்றியவர்கள் தங்களது எதிர்காலம் பற்றி அஞ்ச வேண்டாம் . பகவானுக்கும் அவரது பக்தர்களுக்கும் எப்போதும் கைங்கர்யம் செய்ய வேண்டும், ஆச்சார்யர்களுக்கும் நலிவடைந்தவர்களுக்கும் செய்யும் கைங்கர்யம் இறை பணிக்கு சமமானது என்று எளியோரும் புரிந்து கொள்ளும்படி உபதேசங்கள் செய்தார். 1017 ஆம் ஆண்டு பிறந்த ராமானுஜர் 1137 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் பிறந்து இந்த ஆண்டுடன் 1000 வருடங்கள் ஆகின்றன. 1000 ஆண்டுகள் ஆனாலும் அவரது உபதேசங்களும் தத்துவங்களும் இன்றைக்கும் பொருந்துபவையாக இருக்கின்றன. மக்கள் நலனையே அவர் முக்கியமாக கருதினார். சமத்துவத்தின் வடிவமாக அவர் இருந்தார். கடவுள் தனது குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை உணர்த்தினார். 1000 ஆண்டு காணும் ராமானுஜரின் வழி நடத்தல் நமது மனித சமூகம் உயர்வடைவதற்கான வழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
         ராமானுஜர் பற்றி நான்கு பகுதிகளாக வந்த இந்த கட்டுரைகளில் ராமானுஜர் பற்றிய பல முக்கிய சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் அவருடன் சம்பத்தப்பட்ட பலர் பற்றி இடமின்மை காரணமாக எழுத முடியவில்லை. ராமானுஜர் என்கிற பெருங் கடலிலிருந்து சில துளி நீரை மட்டுமே அடியேன் எடுத்து காட்டியிருக்கிறேன்.

வாழி ராமானுஜர் வாழி எதிராசன்

-----------------------------

Tuesday, 18 July 2017

கோபுர தரிசனம் ... கோடி அழகு


கடந்த வார கடைசி மிக சுவாரசியமாக கழிந்தது . கனடாவின் இரண்டு பிரமிப்புகளை பார்த்தேன். ஒன்று கனடா நேஷனல் டவர் அதாவது சி.என் .டவர். மற்றொன்று நயாகரா நீர்வீழ்ச்சி.

முதலில் சி.என் டவர் அனுபவம் பற்றி

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து தெரியும்
CN TOWER
கனடா செல்பவர் எவரும் தவறாமல் பார்த்து  பிரமிப்பதில்  CN Tower ஒன்று. டொரோண்டோ டௌன்டௌனில் ரயில்வே நிலையத்தை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடம் 1815.3 அடி அதாவது 553.3 மீட்டர் உயரமானது. கனடியன் நேஷனல் என்கிற ரயில்வே நிறுவனம் இதை 1976ல் கட்டி முடித்தபோது இதுதான் உலகின் மிக உயரமான கட்டிடம் என்கிற பெயரை பெற்றிருந்து. . ஆனால் 2010ல் துபையில் கட்டப்பட்ட பர்ஜ் கலீபா (2717 அடி ) உலகின் மிக உயரமான கட்டிடடம் என்கிற பெயரை தட்டி சென்றது.
Look out பகுதியிலிருந்து Toronto city 
டொரோண்டோ அருகே இருக்கும் ஏஜாக்ஸ் ரயில்வே நிலையத்திலிருந்து சி என் டவர் இருக்கும் டௌன்டவுன் பகுதிக்கு வர ரயில் பயணம் ஒரு மணி நேரம். நாங்கள் ரயிலில் பயணித்தோம். ரயிலே பார்ப்பதற்கு அவ்வளவு சுத்தமாக இருந்தது. அங்கும் மாற்று திறனாளி களுக்கென்று , குழந்தைகளை பிராமில் கூட்டிக்கொண்டு வருவோருக்கென்று தனியாக இருக்கைகள் ஒவ்வொரு பெட்டி யிலும் இருக்கிறது. ரயில், நிலையத்தில் நின்றதும் ரயில் பணியாளர் ஒரு பலகையை நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே வைக்கிறார். சக்கர நாற்காலியில் வருபவர்கள் குழந்தைகளை பிராமில் கூட்டிக்கொண்டு வருபவர்கள் முதியவர்கள் ஏறுவதற்கு  இறங்குவதற்கு இவ்வாறு வசதி செய்து தருகிறார்கள். இந்த வசதி ஒவ்வொரு ரயிலிலும் மூன்று இடங்களில் இருக்கிறது. அனைவரும் ஏறியதும் ஒரு அறிவிப்பு வருகிறது "இப்போது கதவு மூடப்படுகிறது. யாரும் கதவருகே நிற்க வேண்டாம் " . அறிவிப்பு முடிந்ததும் ரயில் கிளம்புகிறது.

SKYPAD பகுதியிலிருந்து தெரியும்
விண்ணைத்தொடும் கட்டிடங்கள்  
அழகான அந்த பயணம் ஒரு மணி நேரம் தொடர்ந்தது. ரயில் நீளமான ரோஜ் நதியை கடந்து நகரின் பல இடங்களை தாண்டி யூனியன் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. எனக்கு கனடாவின் ஒவ்வொரு பகுதி அழகையும் நேர்த்தியையும் பார்த்து அனுபவித்து ரசிக்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் பஸ், ரயில் நீண்ட தெருக்கள் வழியாக செல்வது என்பதையே நான் விரும்புகிறேன். சுத்தமாக இருக்கும் தெருக்களில் நடப்பதே ஒரு அனுபவம்

ரயிலில் இருந்து இறங்கியதும் ரயில் நிலை யத்தையும் சி.என் டவர் இருக்கும் பகுதியையும் இணைக்கும் SKYWALK என்கிற நடைபாதைக்கு செல்லும் வழி என்கிற அறிவுப்பு பலகையை பார்த்தாலும் அந்த வழியை திரும்பும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக சிஎன் டவர் செல்ல முடிவு செய்தோம். சாலையில் கால் வைத்ததுமே பிரமிப்பில் ஆழ்ந்து விட்டேன். யாரோ நீண்ட நீண்ட தூண்களை நட்டு வைத்து போல விண்ணை தொடும் கட்டிடங்கள். நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கிறது. பிரமிப்புடன் நடந்தோம். சில மீட்டர்கள் நடந்ததும் சிஎன் டவர் முழுமையாக தெரிந்தது. நடை பாதையில் நின்றுகொண்டு CN Tower பார்த்தால் தலை சுற்றுகிறது. டவர் லேசாக அசைவது போல் ஒரு உணர்வு வருகிறது.

அதன் பிறகு அங்கு சென்று உள்ளே செல்ல டிக்கெட் வாங்கினோம். வார கடைசி என்பதால் நல்ல கூட்டம். வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பாதுகாப்பு சோதனைகள் முடித்து Tower செல்லும் வரிசைக்கு வந்து லிப்ட் அருகே செல்லுவதற்கு மட்டும் இரண்டு மணி நேரம் ஆகிறது. Tower உள்ளே சென்று பார்க்க கண்ணாடி சுவர் கொண்ட 6 லிப்ட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு  லிப்ட்டிலும் டவர் பற்றிய தகவல்கள் சொல்ல ஒரு வழிகாட்டி நிற்கிறார். 1136 அடி அதாவது 346 மீட்டர் வரை லுக் அவுட் லெவல் . Tower வெளியே தெரியும் அழகான ரம்மியமான டொரோண்டோ நகரை அதன் வானுயர கட்டிடங்களை ஓடும் ரோஜர் நதியை, அருகே இருக்கும் உள்ளூர் சிறிய விமான நிலையத்தை, சாலைகளில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களை நதிக்கு நடுவே இருக்கும் குட்டி தீவை பார்க்கலாம். 1136வது அடியில் லிப்ட் நிற்கிறது. லிப்ட்டில் வரும்போது விமானம் கிளம்பும்போது நமக்கு காது அடைப்பு ஏற்படுவது போல காது அடைக்கிறது. லிபிட்டிலிருந்து பக்கவாட்டில்  பார்க்க  சற்று பயமாகவும் இருக்கிறது. லுக் அவுட் லெவல் வந்ததும் லிப்ட் திறந்துகொள்ள நாம் வெளி வருகிறோம். நம்மை சுற்றி கண்ணாடி சுவர்கள். சுவர்கள் அருகே நின்று அமர்ந்து பார்த்து பார்த்து ரசிக்கலாம்.மனிதன் எவ்வளவு அழகை உருவாக்கி ரசிக்க வைக்கிறான் என்று பிரமித்து போகலாம் . கண்ணாடி சுவர் வழியே வாகனங்கள் தீப்பெட்டி தீப்பெட்டிகளாக தெரிகின்றன. விமான நிலையத்தில் நிற்கும் விமானங்கள் குழந்தைகள் விளையாடும் விமான பொம்மைகள் போல் காட்சி அளிக்கின்றன. சுவர் அருகே சென்று பார்க்கும்போது கால்களில் நடுக்கம் வருகிறது. நமது ஊர் தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவர்கள் தேவையே இல்லாமல் அடிக்கடி பயன் படுத்துவார்களே , "mind blowing " என்று, அந்த mind blowing கின் உண்மையான அர்த்தம் இங்குதான் உணரப்படுகிறது. லிப்ட் மூலமாக லுக் அவுட் பகுதி செல்வதற்கு 58 வினாடிகள் ஆகின்றன.

ஒவ்வொரு கண்ணாடி சுவரின் எடையும் 448 கிலோ . ஏழு சுவர்கள் இருக்கின்றன. அங்கிருந்து ஒரு 10 படிகள் ஏறி சென்றால் கண்ணாடி தரை (glass floor ) இருக்கிறது அதாவது 256 சதுர அடிக்கு கண்ணாடியால் ஆனது 342 வது மீட்டரில் அதாவது 1122 வது அடியில். இருக்கிறது கண்ணாடி தரை. கண்ணாடி தரை மீது நின்று குனிந்து பார்ப்பதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். நான் பயந்து நடுங்கினேன். கண்ணாடி மீது கால் வைக்கவே பயமாக இருந்தது. சிறுவர்கள் இளம் வயதினருக்கு பயம் தெரியவில்லை. என் பெண் அதில் படுத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டாள் ,. சிறுவர்கள் குதித்தார்கள். சிலர் குழந்தைகளை அதில் விட்டு தவழ்ந்து வர வைத்தார்கள். கண்ணாடிக்கு கீழ் குனிந்து பார்த்தால் கட்டிடங்கள் சாலை, வாகனங்கள் நன்கு தெரிகிறது. சிலிகா அல்லது சிலிக்கன் dioxide இல் செய்யப்பட்ட கண்ணாடி என்பதால் அது அதிக வலுவானது: கட மான் என்று தமிழில் சொல்லப்படும் 35 moose விலங்குகள்   ஒரே நேரத்தில் ஏறி நின்றால் கூட அது தாங்கும் என்று இந்த கண்ணாடி தரை பற்றி அங்கு எழுதி போடப்பட்டிருக்கும் விளக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கண்ணாடி தரை பிரமிப்புடன் நின்று விடவில்லை சிஎன் டவர். அடுத்தது அதற்க்கு மேல் இருக்கும் skypod . 447 வது மீட்டரில் அதாவது 1465 வது அடியில் நின்று கொண்டு பார்க்கலாம் டொரோண்டோ நகரை. அது மட்டுமல்ல , வானிலை மோசமாக இல்லாவிட்டால் அங்கிருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நயாகரா நீர் வீழ்ச்சியையும் பார்க்கலாம் என்று சொன்னார்  அந்த வழிகாட்டி.. skypod செல்வதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கண்ணாடி தரை பார்த்தபின் அங்கிருந்து வேறொரு லிப்ட் மூலமாக skypod செல்ல வேண்டும். அங்கு இன்னும் சாய்வாக நின்று பார்க்கும்படி இருக்கிறது. கால்கள் இன்னும் நடுங்குகிறது.


GLASS FLOOR பகுதியில்
குழந்தைகள் ஜாலி 
சி என் டவர் என்றால் பல மாடிகள் கொண்ட கட்டிடம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன் . மாடிகள் அல்ல. தனி தனியாக மாடிகள் என்பது கிடையாது. எத்தனை மாடிக் கட்டிடம் என்று அதனை சொல்ல முடியாது. தனியாக தளங்கள் இல்லை. சி என் டவர் என்பது ஒரு structure , அதாவது வடிவம். அமைப்பு.உச்சிக்கு செல்ல படிகள் இருக்கின்றன. 1776 படிகள். லிப்ட் இல்லாமல் படிகளில் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும். லுக் அவுட் , கண்ணாடி தரை,  skypod பார்த்து மீண்டும் கீழே இறங்கி வருவதற்கு மொத்தம் 2 மணி நேரம் ஆகிறது. டவர் பார்த்துவிட்டு கீழே வந்து மீண்டும் மேலே அண்ணாந்து பார்த்தால் பிரமிப்பு கூடுகிறதே தவிர குறையவில்லை.

 அடுத்து நாயகராவில் சந்திப்போம்





Tuesday, 4 July 2017

Sri Ramanujar - The Great Spiritual Personality-




ஸ்ரீ ராமானுஜர் பற்றி சரணாகதம் ஜூன் மாத இதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை (3 வது பகுதி)






சரணாகதம் ---- கட்டுரை


ராமானுஜர் 3 வது பகுதி


வாழி ராமானுஜர் வாழி எதிராசர்


எழுதியவர்: பானுமதி கிருஷ்ணஸ்வாமி சென்னை


ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்ததையும் அரங்கன் அவரை கோவிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள சொன்னதையும் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.


ராமானுஜரை ஒரு சிறிய வட்டத்தில் அடக்க முடியாது. பன்முகம் கொண்டவர். அவர் ஒரு சிறந்த பக்தர், உயர்ந்த ஆச்சார்யர், சிறந்த நிர்வாகி. பேரறிஞர். தத்துவவாதி. சிறந்த வாதத்திறன் கொண்டவர். ஆன்மிக குரு. மக்களை தன் பக்கம் இழுக்கும் வசீகரமிக்க தலைவர். கருணையின் வடிவம். சிறந்த சமூகப் பணியாளர். சிறந்த சீர்திருத்த வாதி


இன்று சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றால் அவர் மேலாண்மை கல்லூரியில் படித்தவராக இருக்க வேண்டும். ஆனால் ராமானுஜர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே மிகப் பெரிய கோவிலை சிறப்பாக நிர்வகித்தார். அவர் கோயில் நிர்வாகத்தை எப்படி நடத்தினார் என்பது மிகவும் சுவாரசியமானது.

சாதி வேறுபாடுகள் பார்க்காத ராமானுஜர் அணைத்து சமுதாயத்தினரையும் கோயில் நிர்வாகத்தில் ஈடுபட வைத்தார். அது வரை கோயில் நிர்வாகம் திருவரங்கத்து அமுதனார் என்பவரிடம் இருந்து வந்தது. அவர்தான் பின்னர் ராமானுஜர் நூற்றந்தாதி இயற்றியவர். {அவருக்கு ஸ்ரீரங்கம் கோயிலின் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குள் சந்நிதி இருக்கிறது}. முதலில் ராமானுஜர் அணைத்து வேலைகளையும் மேற்பார்வையிட அகலங்கநாட் டாழ்வான் என்பவரை நியமனம் செய்தார். அவர் அந்தணர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து பத்து குழுக்களை அமைத்தார். இந்த குழுக்கள் கோயிலின் பல்வேறு பணிகளை நேரிடையாக கவனித்தது.


அர்ச்சகர்கள், விண்ணப்பம் செய்வார், ஆராதனத்திற்கு புனித நீர் கொண்டு வருவோர், பாராயணம் செய்வோர், பல்லக்கு எழுந்தருள செய்வோர், மாலை தொடுப்பவர், மடக் பள்ளியில் சமையல் செய்வோர்கள், வாத்தியம் வாசிப்பவர்கள், சமைப்பதற்கு மண்பானை செய்பவர்கள் துப்புரவு பணியாளர்கள், பெருமாளுக்கான ஆடைகள் தைப்பவர்கள் ஆடைகள் துவைப்போர், படகோட்டுபவர்கள் , சிற்பிகள், வாகனங்கள் பழுது பார்ப்பவர்கள், என்று பலரும் அந்த பத்து குழுக்களில் அடங்கினார்கள்.

அந்த காலத்தில் கடவுளுக்கு என்று பலரும் தங்களது நிலங்களை எழுதி வைப்பார்கள். அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து கோயில் நிர்வகிக்கப் படும் , நிலங்களிலிருந்து வரும் தானியங்கள் மிகப் பெரிய தானியக் களஞ்சியங்களில் கொட்டிவைக்கப் பட்டன. இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் கொட்டாரம் என்கிற பகுதியில் அந்த பிரமாண்ட களஞ்சியங்கள் இருப்பதை காண முடிகிறது. ராமானுஜர் நிர்வாக ப் பணிகளில் தனக்கு உதவ முதலியாண்டான் (அவரது சகோதரி புத்திரனான தாசரதிதான் முதலியாண்டான்} மற்றும் மற்றொரு சீடரான கூரத்தாழ்வானை அவர் வைத்துக் கொண்டார்


பெருமாளை காண வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் முறை இருந்தது. அதனால் உணவு தானியங்கள் சப்ளைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. . அரங்கனின் பெருமை பாட, ஆழ்வார் பாசுரங்கள் இசைக்க அவற்றிக்கு விளக்கம் அளிக்க , உபன்யாசங்கள் நடத்த பெரிய கூடங்கள் கட்டப்பட்டன. அதேபோல் பெருமாளுக்கு மாலை சாத்துவதற்கு பூந்தோட்டங்கள் அமைக்கப் பட்டன. கோயிலுக்கான பாலுக்காக கோ சாலைகள் அமைக்கப் பட்டன.

அனைத்து சமுதாயத்தினருக்கும் கோயில் நிர்வாகத்தில் பங்களித்து சாதி வேறுபாடுகளை களைந்தார் ராமானுஜர். அவர் அன்று எப்படி கோயிலை நிர்வகித்தாரோ அதே தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் பி ன்பற்றப்படுகிறது. இன்று நிர்வாகத்தை பகிர்ந்தளித்து சிறப்பான மேலாண்மை அதிகாரியாக திகழ்வது எப்படி என்று பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன ஆனால் ராமானுஜர் எந்த பயிற்சி வகுப்புக்கும் போகவில்லை மேலாண்மையில் பட்டம் பெறவில்லை . அவரது தலைமை பண்புகளும் மேலாண்மை சிறப்பும் இன்று அனைவரையும் ஆச்சர்யப் படுத்துகிறது. அது மட்டுமல்ல, மதம் என்பது பிரிக்கும் அம்சம் அல்ல அது அனைத்து சமுதாயத்தினரையும் இணைத்து வைத்திருக்கும் சக்தி என்பதையும் அவர் காட்டினார். பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவும் எந்த நேரத்திலும் அவர்களை அணுகவும் அவர்களுக்கு கோயில் அருகிலேயே வீடுகள் அளிக்கப் பட்டன. கோயில்களில் தினமும் ஆழ்வார் பாசுரங்கள் இசைக்கப் பட வேண்டும் என்று கொண்டு வந்தார் ராமானுஜர். . இதன் மூலம் வேதங்களின் சாரமான தமிழ் பாசுரங்களை சாமானியர்களாலும் எட்ட முடிந்தது. இன்றும் வைணவக கோயில்களில் தினமும் ஆழ்வார் பாசுரங்கள் இசைக்கப்படுகின்றன

இவ்வாறாக ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தை கவனித்து வந்தார். ஆளவந்தாரின் விருப்பத்தின் படி பெரிய நம்பி அவருக்கு த்வய மஹாமந்திரத்தை உபதேசித்தார். எட்டெழுத்து திருமந்திரத்தின் ஆழ்ந்த அர்த்தத்தை அவர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கேட்டரிய வேண்டும். அதற்காக அவர் திருக்கோஷ்டியூர் சென்றபோது நம்பிகள் அவர் மந்திரத்தை உபதேசமாக பெரும் தகுதியை பெற்றுக்கொண்டு வருமாறு சொல்லிவிட்டார். ஒரு முறை இரு முறை அல்ல. பதினேழு முறை ராமானுஜர் திருக்கோஷ்டியூர் சென்றார். ஒவ்வொரு முறையும் நம்பிகள் அவரை திருப்பி அனுப்பிவிட்டார். மனம் தளரவில்லை ராமானுஜர். இன்று போல் அந்த காலத்தில் பேருந்து வசதிகள் கிடையாது. எந்த இடத்திற்கும் நடந்தே செல்ல வேண்டும். அப்படியும் மனம் தளராமல் சலித்துக்கொள்ளாமல் திருக்கோஷ்டியூருக்கு நடையாய் நடந்தார் ராமானுஜர். கடைசியில் பதினெட்டாவது முறை திருக்கோஷ்டியூர் நம்பிகள் . ஓம் நமோ நாராயணா என்கிற எட்டெழுத்து மந்திரத்தையும் அதன் உட் பொருளையும் உபதேசித்தார். அத்துடன் அந்த மந்திரத்தை யாருக்கும் எளிதில் உபதேசிக்க கூடாது என்கிற நிபந்தனையும் விதித்தார்.


இறைவன் திருவடியை பற்றிக்கொண்ட சாதாரண தொண்டனும் முக்தி பெற வேண்டும் என்பது ராமானுஜரின் ஆசை. .நம்பிகளிடம் திருமந்திரம் உபதேசம் பெற்று திரும்பி வரும்போது அவர் திருமந்திரத்தின் வலிமை பற்றி நினைத்துக்கொண்டே நடந்து வந்தார். இந்த உலகில் இருக்கும் மக்களின் கஷ்டங்கள் பற்றி நினைத்தார். அப்போது அவருக்கு அவர்கள் மீது கருணை பெருகியது. உடனே மக்களுக்கு திருமந்திரத்தை உபதேசம் செய்து அவர்கள் பெருமாளின் கருணையையும் ஆசியையும் பெற வேண்டும் என்று ஆசை பட்டார் . உடனே அனைவரையும் கோயில் வளாகத்திற்குள் கூடுமாறு சொன்னார். ராமானுஜரை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த கூட்டம் பரவசம் அடைந்தது. தான் கூறுவது அனைவரின் காதுகளிலும் விழ வேண்டும் என்று விரும்பி ராமானுஜர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டார். "எனது உயிரை விட மேலானவர்களாக உங்களை கருதுகிறேன் . இந்த உலகின் துன்பங்கள் மற்றும் கஷ்டங்களிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். பெருமாளின் கருணையும் ஆசியும் உங்கள் மீது பட வேண்டும் என்று ஆசை படுகிறேன். நான் இப்போது திருமந்திரத்தை உங்களுக்கு உபதேசிக்க போகிறேன். நான் சொல்ல சொல்ல அதை நீங்கள் சொல்ல வேண்டும் " என்று முழங்கினார். பதினேழு முறை நடையாய் நடந்து பதினெட்டாவது முறையாக வந்து திருக்கோஷ்டி நம்பிகளிடம் தான் பெற்ற திரு மந்திர உபதேசத்தை அவர் மக்களுக்கு உபதேசித்தார். திருமந்திரம் அவர்களை அவர்களது கர்மாவிலிருந்து மீட்டு சொர்க்கத்திற்கு வழி காட்டும் என்றார். பரவசத்தில் திக்குமுக்காடிய மக்கள் அவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். கோயிலுக்கு வெளியே திருமந்திர உபதேசம் நடந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்கு கடும் சினம் ஏற்பட்டது . யாரிடமும் சொல்லக் கூடாது என்று தான் சொன்ன வார்த்தையை ராமானுஜர் மீறி விட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை


திருமந்திரம் உபதேசித்த குரு கடும் கோபத்தில் இருப்பதை அறிந்த ராமானுஜர் அவரை சென்று பார்த்தபோது தன கண் முன்னே நிற்க வேண்டாம் என்று நம்பிகள் அவரை பார்த்து சீறினார். "குருவின் வார்த்தைகளை மீறயதற்கு எனக்கு நரகம் தான் கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் தாங்கள் உபதேசித்த திருமந்திரம் இந்த மக்களுக்கு முக்தி பெற்று கொடுக்கும் . அது போதும் அடியேனுக்கு" என்று பதிலளித்தார். இதை கேட்டு நெகிழ்ந்து போன நம்பிகள் ராமானுஜரை "இப்படிப்பட்ட பரந்த நோக்கம் கொண்ட நீரே எம்பெருமானார்" என்று சொல்லி ராமானுஜருக்கு எம்பெருமானார் என்கிற பட்டத்தை வழங்கினார்.


திருமந்திரத்தை சாமானியருக்கும் உபதேசம் செய்ததன் மூலம் ராமானுஜர் இறை பக்தி இருந்தாலே ஆச்சார்யாரிடம் உபதேசம் பெறுவதற்கு அது தகுதியாகும் என்கிற புதிய வரம்பை ஏற்படுத்தினார். -

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதன் தொடர்ச்சி சரணாகதம் ஜூலை மாத இதழில் வெளிவரும் . அது வெளிவந்ததும் அதை பதிவு செய்கிறேன்