நானும் திவ்ய தேசங்களும் - 1
சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் ஷம்ஷாத்பாத்தில் 216அடி உயரத்திற்கு வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜருக்கு சிலை நிறுவப்பட்டது. அது சமத்துவத்தின் சிலையாக கருதப்படுகிறது . இது அனைவரும் அறிந்த விஷயம்தான். 108 படிகள் கட்டப்பட்டு அதற்கு மேல் ராமானுஜர் சிலை அமைக்கப் பட்டிருக்கிறது. அதேபோல் அந்த வளாகத்தை சுற்றி 108 திவ்யதேச பெருமாள்களுக்கும் சந்நிதி கட்டப்பட்டிருக்கிறது. சிலை திறப்பு நடந்து முடிந்த சில நாட்களில் 108 பெருமாள்களுக்கும் திருக் கல்யாண வைபவமுமும் த்ருதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமிகள் நடத்தினார். அந்த வைபவத்தை நேரலையில் பார்த்த போது அதில் சில திவ்ய தேசங்களுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வந்தது நினைவுக்கு வந்தது. நாங்கள் சென்று தரிசனம் செய்துவந்த சில திவ்ய தேசங்கள் பற்றி இங்கு எழுதலாம் என்று நினைத்தேன். வரிசை கிரமாக இருக்காது.
திவ்ய தேசங்களில் முதலாவது ஸ்ரீரங்கம். 108 வது வைகுந்தம் . நம்மால் இந்த பூலோகத்தில் இருக்கும் 107 திவ்ய தேசங்களைத்தான் தரிசிக்க முடியும். இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டவுடன் தான் 108 வதை தரிசிக்கலாம். திவ்ய தேசங்களில் முதலாவதாகிய ஸ்ரீரங்கத்தில் நான் ஓராண்டு இருந்தேன். நான் வைணவ குடும்பத்தில் பிறந்தேன். திருமணம் ஆனது வீர வைணவ குடும்பத்தில். திருமணத்திற்கு பின் தான் வைணவம் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். கணவர் வீட்டில் அனைவரது பேச்சுகளிலும் ஆழ்வார்கள், ஆண்டாள், பிரபந்தம் , திவ்ய தேசங்கள் என்பது அதிகம் அடிபடும். வீட்டில் கைவேலைகள் ஏதாவது செய்யும் போது கூட ஆழ்வார் பாசுரங்களை தான் முணுமுணுப்பார்கள். அந்த அளவிற்கு வைணவ பக்தர்கள். அதனாலும் எனக்கு வைணவத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.
சென்னையில் இருந்த நான் வாழ்க்கையின் சூழலால் ஓராண்டு திருவரங்கத்தில் இருக்க நேரிட்டது. ஸ்ரீரங்கம் கோயில் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டேன். கோயில் பற்றி நிறைய புத்தகங்கள் படிக்கலானேன். தினமும் கோயிலுக்கு செல்வேன். ஸ்ரீரங்கம் கோயில் என்னை பிரமிக்க வைத்தது . வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் கோயிலைதான் குறிக்கும். பெரிய என்கிற அடைமொழி இதற்கு உண்டு. கோயில், பெரிய கோயில், மூலவர் ரங்கநாதர்: பெரிய பெருமாள், தாயார்: பெரிய பிராட்டியார், மண்டபம்: பெரிய திருமண்டபம், பெருமாளுக்கான நைவேதியம், பெரியவசரம் என்று எல்லாமே பெரிய என்கிற அடைமொழி தான். அனைத்து ஆழ்வார்களாலும் பாடல்பெற்ற ஸ்தலம் . நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீ ராமானுஜர் என்று ஆச்சார்யர்கள் வசித்த இடம் திருவரங்கம்.
பெரிய பெருமாள் திருவரங்கம் வந்தது சுவாரசியமானது. ராமாயண காலத்திற்கு முன்பு நடந்தது இது .சத்யலோகத்தில் வழிபடப் பட்டுவந்த பெரிய பெருமாளை பூலோகத்திற்கு அனுப்புமாறு கடும் தவம் செய்து அயோத்தி மன்னன் இஷுவாகு பிரம்மாவிடம் கேட்டான். இஷுவாகுவின் வேண்டுதலுக்கு ஏற்ப பிரம்மாவும் பெரிய பெருமாளை அனுப்பினார். ப்ரணவக்கார விமானத்துடன் பெரிய பெருமாள் அயோத்தி வர, இஷ்வாகு மன்னன் தினமும் பூஜிக்கலானார். இது ராமாயண காலத்திலும் தொடர்ந்தது. ராமரூம் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டார். இலங்கையில் போர் முடிந்ததும், அயோத்தி வந்த ராமரிடம் விபீஷணன் விடைபெற்று கொள்ளும் போது, ராமர் ரங்கநாதரை விபீஷணனிடம் கொடுத்து இலங்கைக்கு எடுத்து சென்று வழிபடுமாறு சொன்னார். மனமகிழிந்த விபீஷணன் ப்ரணவக்கார விமானத்துடன் பெரிய பெருமாளை வான் வாழியே எடுத்து வரும்போது காவேரி கொள்ளிடம் நடுவே பெருமாளை இறக்கி வைத்து பங்குனி உற்வசத்தை நடத்திகிறார்.முடிந்ததும் பெருமாளுடன் இலங்கை சொல்ல கிளம்பியபோது பெருமாள், எனக்கு இங்கிருக்க ரொம்ப பிடித்திருக்கிறது, நீ இலங்கைக்கு செல், நான் தெற்குபுறமாக சயனம் செய்கிறேன். நீ என்னை எப்போதும் வழிபடமுடியும் என்று சொல்ல, விபீஷணன் பெருமாளின் வார்த்தைக்கிணங்க இலங்கை திரும்பினார். அதனால் தான் பெருமாள் தெற்கு நோக்கி பார்த்தவாறு சயனக் கோலத்தில் இருப்பார்.
கோவிலில் 54 சன்னதிகள் உண்டு. சன்னதிகளின் வரலாற்றை அங்கிருக்கும் பட்டாச்சாரியார்களிடன் கேட்டு அறிந்து கொண்டேன். சக்கரத்தாழ்வார் சன்னிதி, ராமானுஜர் சன்னிதி, மேட்டழகிய சிங்கர் சன்னிதியின் படிகள், ஆயிரம் கால் மண்டபம், இங்கெல்லாம் அதிக நேரம் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருக்கிறேன். கம்பத்தடி ஆஞ்சனேயர் சன்னிதி அருகே நின்று ஹனுமன் சாலிசா சொல்வேன் (புத்தகம் பார்த்துதான்).
கோயில் ஒழுகு புத்தகம் வாங்கி ஸ்ரீரங்கம் கோயில் பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இங்கு கனடா வந்த பின் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் தவறாமல் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்து விடுவேன்.
இங்கு கனடாவில் நமது ஊர் போன்ற கோவில்களுக்கு போக முடியவில்லை என்கிற வருத்தம் நிறைய இருக்கிறது. இருந்தாலும் மனக்கண்ணில் அரங்கனை, ராமானுஜரை, சக்கரத்தாழ்வாரை, ஆஞ்சனேயரை தரிசித்து மகிழ்கிறேன்.
ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் தொண்டரடிபொடியாழ்வார் சன்னதியை கடக்கும் போது என்னையறியாமல் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதைத் தொகுப்பில் இருக்கும் 'திண்ணா' கதையும் எனக்கு நினைவுக்கு வரும். திண்ணா, தொண்டரடிபொடியாழ்வார் சந்நிதியில் அமர்ந்து திண்ணா உபந்யாசம் செய்வதை சுஜாதா அழகாய் வர்ணித்திருப்பார், அது எனக்கு நினைவுக்கு வரும்.
கோயில் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. அதை அடுத்தடுத்து பார்க்கலாம்.
சிறிய பதிவு ஆனால் அதில் பெரிய ,நிறைய ,தெரியாத விஷயங்கள் ,நல்ல பகிர்வு ,இறை பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteThank you so much chandra!!
Delete