ஸ்ரீரங்கம்
துலுக்க நாச்சியாரின் கதை
ஸ்ரீரங்கத்தில் மற்றும் ஒரு சுவாரசியம் துலுக்க நாச்சியார் சந்நிதி இருப்பது. வைணவக் கோயிலில் துலுக்க நாச்சியாரா என்று எல்லோரையும் போல நானும் ஆச்சர்யப் பட்டேன். கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் இருக்கிறது பீ பீ நாச்சியார் எனப்படும் துலுக்க நாச்சியார் சன்னதி.
துலுக்க என்றால் இஸ்லாமிய நம்பிக்கை என்று பொருள். துலுக்க நாச்சியார் எப்படி ஸ்ரீரங்கம் வந்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் 14 ஆம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டும்.
ஸ்ரீரங்கத்தில் சுல்தானிய படையெடுப்பு இருமுறை நடந்தது என்கிறது கோயில் வரலாறு. 1311இல் ஒரு முறையும் 1323 இல் அடுத்த முறையும் என்கிறது ஒரு வரலாறு. 1311 இல் நடந்த படையெடுப்பில் தான் துலுக்க நாச்சியார் ஸ்ரீரங்கம் வந்தார்.
ஸ்ரீரங்கம் பற்றி அதிகம் அறிந்திராத தில்லி சுல்தானின் தளபதி மாலிக் கஃபூர் தற்செயலாக காவிரி ஆற்றின் அருகே வர அங்கே இருந்த கோயிலை பார்த்து பிரமித்து போனானாம். இந்தியாவில் கோயில்கள் என்றாலே விலை மதிப்பு மிக்க ஆபரணங்களும் கடவுள் விக்கிரங்களும் இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறான். உடனே கோயிலை கொள்ளை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு தனது படைகளுடன் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டான். உள்ளூர் மக்களால் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை அரங்கனையும் காப்பாற்ற முடியவில்லை.
மாலிக் கஃபூர் கொள்ளையடித்த பொன் பொருள்களுடன் தில்லி திரும்பினான். ஆபரணங்கள் எல்லாம் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப் பட்டன . நம் பெருமாள் விக்கிரகம் மட்டும் அப்படியே வைத்திருந்தான். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவனது மகள் சுரதானிக்கு நம் பெருமாளை ரொம்ப பிடித்துவிட்டது. பிற ஆபரணங்களை போல விக்கிரகத்தை உருக்க வேண்டாம் என்றும் தனக்கு விளையாட பொம்மை வேண்டும் என்றாள். அவள் அரங்கன் விக்கிரகத்தை பொம்மை என்று நினைத்து விட்டாள். மாலிக் கஃபூருக்கு மகள் மீது கொள்ளை பிரியம். உடனே அரங்கனை அவள் கையில் கொடுத்து விட்டான். சுரதானி விக்கிரகத்தை தன்னுடனே வைத்துக் கொண்டாள்.
அதனை தனது பிரியத்திற்கு உரிய பொம்மையாக கருதினாள். அதனை விட்டு அவள் பிரியவே இல்லை. விக்கிரகத்திற்கு தானே குளித்து விடுவாள். புத்தாடைகள் அணிவிப்பாள். ஆபரணங்கள் போட்டு அழகு பார்ப்பாள். அதனுடன் விளையாடுவாள். சாப்பாடு ஊட்டி விடுவது போல் பாவனை செய்வாள். இரவு தான் படுக்கும்போது தன்னுடனேயே படுக்க வைத்துக் கொள்வாள். இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் தில்லி சுல்தான் நம் பெருமாளை கொள்ளை அடித்து சென்று விட்டானே அவனிடமே போய் கெஞ்சி கேட்டு வாங்கி வரலாம் என்று பக்தர்கள் குழு ஒன்று தில்லிக்கு சென்றது. அவர்கள் சுல்தானின் அரண்மனைக்கு கலாசாரக் குழு என்று சொல்லிக் கொண்டு நுழைந்தனர். அவர்களுடன் நடனமாடுபவர்களும் சென்றிருந்தார்கள். சுல்தான் முன்னிலையில் ஆடி பாடி அவனை மகிழ்வித்தார்கள்.
சுல்தானுக்கு பரம சந்தோஷம். அவர்களது ஆடல் பாடல்களில் மனமகிழ்ந்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமானாலும் தர தயாராக இருக்கிறேன், கேளுங்கள் என்றான் சுல்தான். அன்று வைகுண்ட ஏகாதசி. உடனே பக்தர்கள் குழு எங்களுக்கு பொன் பொருள் எதுவும் வேண்டாம். எங்களது நம் பெருமாள் உங்களிடம் இருக்கிறார். அந்த விக்கிரகத்தை மட்டும் கொடுங்கள். இன்று ஏகாதசி, நாங்கள் எங்கள் கடவுளை வழிபட எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றார்கள்.
அதற்கு சுல்தானோ, "ஓ அந்த கடவுள் பொம்மையை சொல்கிறீர்களா, அது என் மகள் சுரதானியிடம் இருக்கிறது, அதை அவள் தர மாட்டாளே, உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவளிடமிருந்து வாங்கி கொண்டு செல்லுங்கள், அவள் அதை கொடுக்க மாட்டாள்" என்று சொல்லி சேவகர்களை விட்டு சுரதானியை அழைத்து வர சொன்னார். நம் பெருமாள் விக்கிரகரத்தை அணைத்த படி வந்த சுரதானி அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டாள் . செய்வதறியாது திகைத்த பக்தர்கள் குழு இரவு அவளுக்கு தெரியாமல் அவள் இருக்கும் இடம் சென்று அவள் தூங்கும் போது நம் பெருமாளை அவளிடம் இருந்து மெதுவாக எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கி கிளம்பி விட்டார்கள். காலையில் எழுந்து பார்த்த போது தனது பொம்மை தன்னிடம் இல்லாதது கண்டு அழுது அவர்களிடம் சென்று பொம்மையை வாங்கியே தீருவேன் என்று தனது குதிரையில் ஏறி புறப்பட்டுவிட்டாள். அவள் புறப்பட்டவுடன் சுல்தான் ஒரு படையை அவளுக்கு துணையாக அனுப்பினான்.
நம் பெருமாளுடன் வந்த பக்தர்கள் குழு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து பெருமாளை கோயிலில் சேர்த்தார்கள். சில நாட்களில் சுரதானியும் வந்து சேர்ந்தாள் பெருமாள் விக்கிரகம் தன்னிடம் ஒப்படைக்கப் படவேண்டும் என்றும் அவர் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றும் சுரதானி அழுது புலம்பினாள் ஆனால் அவளை கோயிலுக்குள் விட பக்தர்கள் மறுத்து விட்டார்கள். அழுது புலம்பி அந்த இடத்தை விட்டு அகல மறுத்த சுரதானி இறுதியில் அப்படியே மயங்கி விழுந்து சில மணி நேரத்தில் இறந்தே போனாள். அவள் உடலிலிருந்து உயிர் பிரிந்த மறு வினாடி அவள் உடலிலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டு ரங்கநாதரிடம் சென்றடைந்தது.
"சுரதானிக்கு என் மீது இருக்கும் அளவு கடந்த பக்தியை கண்டோம். அவர் எனது நாச்சியார்களில் ஒருவராகிறார்" என்று பெருமாள் அசரீரியாக கூறினார்.
இதற்கிடையில் தனது மகள் இறந்து விட்டாள் என்பதை கேள்விப்பட்டு மாலிக் கஃபூர் ஸ்ரீரங்கத்தை நோக்கி அதி கோபத்துடன் தனது படைகளுடன் வந்தான் . மாலிக் கபூர் வருவதை அறிந்த பக்தர்களும் கோயில் பட்டாச்சாரியார்களும் அவசர அவசரமாக மூலவரையும் உத்சவரையும் வெளிப்புறத்திலிருந்து காண முடியாதபடி சுவர் எழுப்பினார்கள். இன்றும் அது இருக்கிறது. மூலவரை வெளிப்புறத்திலிருந்து காண முடியாது. பெருமாளை தரிசிக்க வேண்டுமானால் உள்ளே வந்தாக வேண்டும்.
கோபத்துடன் மாலிக் கஃபூர் படைகள் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் தில்லி திரும்ப வேண்டியதாயிற்று. அதற்கு பின் அடுத்து வந்த சுல்தான் 12 ஆண்டுகள் கழித்து 1323 ல் பழி வாங்கும் வகையில் ஸ்ரீரங்க படையெடுப்பை நிகழ்த்தினான். அது ஸ்ரீரங்கத்தில் சுல்தான்களின் இரண்டாம் படையெடுப்பு.
ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளின் விருப்பப்படி சுரதானிக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டது. பெருமாள் தலைமை பட்டரின் கனவில் வந்து சுரதானி தனது நாச்சியார்களில் ஒருவராக கருதப்படவேண்டும் என்றார். அதன் படியே அவர் துலுக்க நாச்சியார் என்றும் பீபீ நாச்சியார் என்றும் அழைக்கப் பட்டார். இரண்டாம் பிரகாரத்தில் அவருக்கு சந்நிதி அமைக்கப்பட்டது. இஸ்லாம் மதத்தினருக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் சந்நிதி சுவற்றில் துலுக்க நாச்சியாரின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். இஸ்லாம் பெண்கள் முகத்தை மூடிக் கொள்வது வழக்கம் என்பதால் துலுக்க நாச்சியாரின் ஓவியமும் அப்படியே அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் துலுக்க நாச்சியாருடன் பெருமாளுக்கு கல்யாண உத்சவம் நடத்தப படுகிறது. காலை உணவாக ரொட்டி, வெண்ணெய் மற்றும் சர்க்கரை முகலாய பாணியில் தயாரிக்கப்பட்டு முதலில் துலுக்க நாச்சியாருக்கும் அதன் பின்னர் பெருமாளுக்கும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
பக்திக்கு மதம் தடையில்லை என்பதை துலுக்க நாச்சியார் காட்டுவதாகவே எனக்கு தெரிகிறது
பக்திக்கு மதம் தடையில்லை என்பதை அழகாக விவரித்த விதம் அற்புதம் ,துலக்க நாச்சியாரின் முக்தி மெய் சிலிர்க்க வைத்தது. பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சந்திரா.
Delete