Total Pageviews

Friday, 1 April 2022

திருமங்கை மன்னனும் வேடுபறியும்

      


 ஸ்ரீரங்கம் 

 திருமங்கை மன்னனும் வேடுபறியும் 


                                      நடித்து காட்டப்படும் வேடுபறி 

         ஸ்ரீரங்கம் கோயில் சுவாரசியம் குறித்து எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் நான் தரிசனம் செய்திருக்கும் பிற திவ்ய தேசங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் இன்றைய பதிவுடன் ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய தகவல்களை முடித்துக்கொண்டு அடுத்த பதிவிலிருந்து பிற திவ்ய தேசங்களை பார்க்கலாம்.


        ஸ்ரீரங்கத்தில் ஆண்டு  முழுவதும் உத்சவம்தான். ஸ்ரீரங்கம் கோயில் உத்சவங்கள் பற்றி அதிகம் அறியாதவர்களுக்கு இந்த தகவல்கள் சுவாரசியமாக இருக்கும். அத்துடன் நான் ஆச்சர்யத்துடன் பார்த்து, ரசித்த உத்சவங்களும் இவை என்று சொல்லலாம்.


முதலில் வேடுபறி  உத்சவம்.


        வைகுண்ட ஏகாதசி ஏகாதசியை அடுத்து நடக்கும் இராப்  பத்தின்போது நடப்பது  இது. அதாவது இராப்  பத்தின் எட்டாவது நாள்  நடக்கும்  நிகழ்வு. ஆயிரம் கால் மண்டபம் அருகே இருக்கும் மணல்வெளியில் தான் இது நடக்கும்.

       

        வேடுபறி என்றால் வழிப்பறி  என்று அர்த்தம். திருமங்கை ஆழ்வார், ஆழ்வார் ஆவதற்கு முன் திருமங்கை மன்னனாக இருந்தபோது அவர் பெருமாளை வழிப்பறி செய்த  சம்பவம்தான் வேடுபறி  உத்சவத்தின் கதை.

     

        வேடுபறி ஆரம்பிப்பதற்கு முன்பு  நான் மணல்வெளியில் காலை நீட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டு வருபவர்கள் போகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பேன். மனிதர்களை  வேடிக்கை பார்த்து  ரசிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். 


                                  குதிரை வாகனத்தில் நம்பெருமாள்


  

வேடுபறி  உத்சவம் என்றால் என்ன ?

        

        இது  திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் ஆவதற்கு முன்பு நடந்தது. பிற ஆழ்வார்கள் பெருமாள் முன்   பக்தி பரவசத்துடன் உருகி நின்றார்கள் என்றால் திருமங்கை ஆழ்வார் அப்படியல்ல. பெருமாளிடமே திருடனாக வந்து  நகைகளை திருடி சென்றார்.

         

        திருமங்கை மன்னனின் நிஜ பெயர் கலியன். அவரது தந்தை சோழ அரசரின் தளபதியாக இருந்தார். அப்போதே கலியன் வில் வித்தைகள் கற்று தேர்ந்து சிறந்த வீரனாக திகழ்ந்தார். அவரது வீரத்தை பாராட்டி ஆலி நாடு என்ற இடத்தை அவருக்கு பரிசாக அளித்த சோழ அரசன் அந்த இடத்தின் மன்னனாக அவரை அறிவித்தார். ஆலிநாட்டின் தலைநகர் திருமங்கை. அதனால் கலியன் திருமங்கை மன்னன் என்று அழைக்கப் பட்டார். திருமங்கை மன்னனுக்கு அன்னான் கோயிலை சேர்ந்த குமுதவல்லியை ரொம்ப பிடித்து போனது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். குமுதவல்லி வைணவத்தி ன் மீது தீவிர பற்று கொண்டவள். திருமங்கை மன்னனையும் வைணவத்திற்கு மாற்ற விரும்பினாள் . அதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் திருமங்கை தினமும் 1008 வைணவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தாள்.


         குமுதவல்லியை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானமாக இருந்த திருமங்கை அவள் போட்ட நிபந்தனைகளை ஒப்புக்கொண்டார். அதாவது தினமும் 1008  வைணவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை நிறைவேற்றலானார் . அதனால் அவரது செல்வம் கரைந்தது. இருந்தாலும் அவர் அதை நிறுத்தவில்லை. ஒரு நிலையில் கையில் பணமில்லாமல் திருட ஆரம்பித்தார். அவருக்கு இதில் சில கூட்டாளிகளும் உதவ ஆரம்பித்தார்கள். காட்டு பகுதிகளில் சென்று அங்கு வருபவர்களிடம்  பணம்  நகைகளை கொள்ளையடித்து அவற்றை விற்று 1008 வைணவர்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதை தொடர்ந்தார்.

       

         அவ்வாறு திருட்டும், கொள்ளையும் அன்னதானமும் தொடர்ந்து நடந்து வருகையில் ஒருநாள்  திருமங்கைக்கு புதிதாக திருமணமான ஒரு பணக்கார தம்பதி அருகில் இருக்கும் காட்டு பகுதியில் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வந்தது. ஆஹா பணக்கார தம்பதி என்றால்  பெண்ணும் மாப்பிள்ளையும் நிறைய நகை போட்டிருப்பார்கள் , நிறைய கொள்ளை அடிக்கலாம் என்று திருமங்கை மன்னன் குழு, காட்டு பகுதிக்கு சென்றது. அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த புதுமண தம்பதி அப்பகுதி வழியாக வந்தார்கள். இருவரும்  நிறைய ஆபரணங்கள் அணிந்து வந்தனர். திருமங்கை குழு அவர்களை வழி மறித்து  ஈட்டி கம்புகளை காட்டி மிரட்டி நகைகளை பறித்துக் கொண்டார்கள். அதை ஒரு துணியில் கட்டி அந்த மூட்டையை தூக்கும்போது அதனை திருமங்கையால் தூக்க முடியவில்லை. ஏதேதோ செய்து பார்த்த திருமங்கையால் அதனை தூக்க முடியவில்லை என்றதும் சற்று பயத்துடன் அந்த மாப்பிள்ளை பையனை பார்த்தார். அங்கு நின்றது சாட்சாத் ரெங்கநாதரும் அமிர்தவல்லி தாயாரும். அப்போதுதான் திருமங்கைக்கு தான் கொள்ளை அடித்தது பெருமாளையும் தாயாரையும் என்பது  தெரிந்தது.  உடனே அவர் பெருமாளையும் தாயாரையும் விழுந்து சேவிக்க பெருமாள் அவருக்கு அருளினார். அன்றிலிருந்து திருமங்கை, திருமங்கை ஆழ்வாரானார்.


        
        இந்த சம்பவம் தான் வேடுபறி  அன்று நடித்துக் காட்டப்படும். ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாள் அன்று, மாலை மணல்வெளியில் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். மணல் வெளி பகுதி முழுவதும் நல்ல கூட்டம் இருக்கும். கோண வையாளி நடக்கும். அதன் பிறகு பெருமாள் ஆயிரம் கால் மண்டபம் அருகே சென்ற சில வினாடிகளில், ஒரு கூட்டம் (இவர்கள் தான் வழி வழியாக இதனை நடித்து காட்டுபவர்கள். இவர்கள் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. பெருமாள் பக்தர்கள்.) கையில் கம்புகளுடன் ஓடி வருவார்கள் பெருமாளை துரத்துவார்கள். அவரது ஆபரணங்களை திருடுவது போல் நடிப்பார்கள். இது பார்ப்பதற்கு  மிக நன்றாக இருக்கும். இறுதியில் திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாராக காட்சி அளிப்பார். பெருமாள் அனைவருக்கும் அருள் செய்வார்.  இதுதான் வேடுபறி  உத்சவம்.


        நான் ஓராண்டுதான் ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். அதனால் ஒருமுறைதான் வேடுபறி  உத்சவம் பார்த்திருக்கிறேன்.
  
இவ்வாறு ஒவ்வொரு உத்சவமும் ஸ்ரீரங்கத்தில் சுவாரசியமானது.
   
   
  

   

 

 

5 comments:

  1. அற்புதம் பானு தெரியாத பல விஷயங்கள் விவரித்த விதம் அருமை பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க.நன்றி. இன்னும் பல.சுவாரசியமான தகவல்கள் ஶ்ரீரங்கம் பற்றி இருக்கின்றன. ஶ்ரீரங்கம் மட்டுமல்ல. நமது நாட்டில் எல்லா கோயில்கள் பற்றியும் சுவாரசிய தகவல்கள் உள்ளன. அனைத்தையும் அறிய வேண்டும் என்பது எனது அவா.

      Delete
  2. சுவாரஸ்யமாக உள்ளது.இம்மாதிரி தகவல்களை தினசரி பகிர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமாக உள்ளது.இம்மாதிரி தகவல்களை தினசரி பகிர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி sir,
      நான் தரிசனம் செய்த திவ்ய தேசங்கள் பற்றி தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு திவ்ய தேசங்கள் பற்றியும் நிறைய தகவல்கள் உள்ளன. அவற்றை எழுத ஆசை. பகவான் அருளால் எழுதுகிறேன்.
      நீங்கள் வாசித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றிகள்.sir
      இந்த வலைப் பூவில் மேலும் சில.ஆன்மீக கட்டுரைகள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் நேரம் கிடைத்தால் படித்தீர்கள் என்றால் சந்தோஷப் படுவேன்

      Delete