கனடாவில்
நேரம் நம் வசப்படும்
கனடாவில் குளிர் காலம் முடிந்து வசந்த காலம் எனப்படும் spring சீசன் ஆரம்பிக்கப் படவிருக்கிறது. இப்போது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடக்கும். அதாவது கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னதாக வைப்பார்கள். குழப்பமாக இருக்கிறதா ? விளக்குகிறேன்.
குளிர் காலத்தில் இங்கு மிக விரைவில் இருட்டி விடும். அதாவது மதியம் 3.30 க்கே இருட்டிவிடும். 3 மணிக்கே லேசாக இருட்ட ஆரம்பித்து 3.30க்கு நன்கு இருட்டி விடும். 3.30 மணிக்கே வீடுகளில், சாலைகளில் கட்டிடங்களில் மின் விளக்குகள் போட்டாக வேண்டிய நிலை. ஆனால் குளிர் காலம் முடிந்து ஸ்ப்ரிங் ஆரம்பிக்கும் போதே வெளிச்ச நேரம் அதிகரிக்க ஆரம்பமாகும். ஸ்ப்ரிங் முடிந்து கோடை ஆரம்பிக்கும்போது சூரிய அஸ்தமனம் இரவு 9 லிருந்து 9.15 க்குள் இருக்கும்.
ஸ்ப்ரிங் ஆரம்பம் ஆகும்போது பகல் நேரம் அதிகரிக்க துவங்குகிறது என்பதால் daylight saving time என்பதை பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். தமிழில் பகலொளி சேமிப்பு நேரம் என்று சொல்லலாம். பகல் நேரம் அதிகரித்து இரவு நேரம் குறைகிறது. அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் 7 மணி 8 மணி 9 மணி என்று கோடை நெருங்க நெருங்க அதிகரிக்கும். இரவு 9 மணி வரை சூரிய வெளிச்சம் இருப்பதால் நாம் மின் விளக்கை 9 மணிக்கு மேல் பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு நேரம் குறைந்து பகல் நேரம் அதிகரிப்பதை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் கடிகாரத்தை ஒருமணி நேரம் முன்னதாக வைத்துக் கொள்கிறார்கள். அதே போல் கோடை முடிந்து, இலையுதிர் காலம் துவங்கி முடிகையில் அதாவது நவம்பரில், கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின்னதாக வைத்துக் கொள்கிறார்கள். முன்னதாக வைக்கப் படுவது spring forward என்றும் பின்னதாக வைக்கப் படுவது Fall back என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த நடைமுறை தனி மனித முடிவல்ல. அரசாங்கம், சட்டம் இயற்றி நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறு கிழமை அன்று, daylight saving time துவங்கும். அதிகாலை 2 மணியிலிருந்து இது துவங்கும். மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறு, இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வருகிறது. எனவே மார்ச் 13 அன்று அதிகாலை 2 மணிக்கு அனைத்து கடிகாரங்கள் , செல் போன்கள் , கம்ப்யூட்டர்கள் மற்றும் மின்னனு சாதனங்கள் அனைத்திலும் நேரம் தானாகவே மாறிவிடும். அதாவது அதிகாலை 1.59 க்கு பின் 2 மணி என்று மாறுவதற்கு பதில் 3 என்று மாறிவிடும். நாம் அதை பற்றி யோசிக்க வேண்டிய தேவை இல்லை. காலை 6 மணிக்கு நாம் எப்போதும் போல் எழுவோம். அப்போது உண்மையில் மணி 5 தான் இருக்கும். அது நமது கட்டுப்பாட்டில் இல்லாததால் நம்மை இது பாதிப்பதில்லை. ஆனால் மின்னணு கடிகாரம் அல்லாத கடிகாரங்களில் நாம் நேரத்தை முன்னோக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாக சொன்னால் தூங்கும் நேரம் ஒரு மணி நேரம் குறைகிறது.
இது கனடாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா , பிரிட்டன் ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் பின்பற்றப் படுகிறது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் இல்லை. காரணம் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் பூமத்திய ரேகை அருகே இருப்பதால் குளிர் மற்றும் கோடை கால வித்யாசம் அதிகம் இருப்பதில்லை. பெரும்பாலும் இந்த நாடுகள் வெப்பம் அதிகம் உள்ள நாடுகள்.
daylight saving time மூலம் என்ன ஆதாயம் இந்த நாடுகளுக்கு? மின் சக்தி சேமிப்பு ஆகிறது, குளிர் காலத்தில் பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபட முடியாத மக்களால் கோடையில் நன்கு அனுபவிக்க முடியும். வியாபார இடங்கள் இரவு 9 மணி வரை திறந்து இருப்பதால் வியாபாரம் நன்கு நடக்கும். (குளிர் காலத்தில் மால்கள் 5 மணிக்கே மூடி விடுவார்கள்.)
மின் சக்தி சேமிப்புக்காக daylight saving time முதல் உலகப் போரின்போது முதல் முதலாக ஜெர்மனியால் கொண்டு வர பட்டது. முதலாம் உலகப் போர் சமயத்தில் எரி சக்தி சேமிப்பு ஜெர்மனிக்கு அதிகம் தேவை பட்டதால் daylight saving time யை அது அமல் படுத்தியது. இரண்டே வாரங்களில் பிரிட்டனும் இதில் சேர்ந்து கொண்டு, தனது நாட்டில் நடை முறைக்கு கொண்டு வந்தது. 1918இல் அமெரிக்கா இவர்களை பின்பற்றியது. பிறகு வேறு சில குளிர் நாடுகளும் இதனை பின்பற்ற ஆரம்பித்தன. ஆனால் அதற்கு முன்னதாகவே கனடாவில் கொண்டு வர பட்டுவிட்டது என்கிறது இதன் வரலாறு.
உலகில் இப்போது 40 சதவீத நாடுகள் daylight saving time பின்பற்றுகின்றன. இதனை நடைமுறை படுத்தியிருந்த ரஷ்யா 2014 இல் இந்த பழக்கத்தை நிறுத்திக் கொண்டது.
பல நாடுகள் இதனை பின்பற்றினாலும் பொது மக்களை கேட்டால் இதனை விரும்பவில்லை என்றே சொல்கிறார்கள். இன்னும் பல நாடுகளில் இது தேவையா தேவையற்றதா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக மூத்த குடி மக்களுக்கு இது பிடிக்கவில்லை. தூக்க நேரம் குறைவதை அவர்கள் விரும்பவில்லை.
மின்னணு சாதனங்களில் daylight saving time ஆரம்பிக்கும்போதும் நவம்பரில் fallback எனப்படும் ஒருமணி நேரத்தை பின்னால் வைக்கும் நிகழ்வும் தானியக்கமாக நடந்து விடுகிறது. கடிகாரங்களில் நாம்தான் வைக்க வேண்டும்.
பிரிட்டனில் ராணியின் அரண்மனையில் 1000 சுவர் கடிகாரங்கள் இருக்கின்றனவாம். இதனை பணியாளர்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி வைக்க 50 மணி நேரம் ஆகிறதாம். நவம்பரில் பின்னோக்கி வைக்கவும் இதே கதைதான்.
இந்த இடத்தில் ஒரு சின்ன flashback . சென்னையில் நான் பனி புரிந்து கொண்டிருந்த சமயம். என் பெண் பள்ளியில் படித்து கொண்டிருந்தாள். நானும் கணவரும் அலுவலகம் செல்ல வேண்டும். காலையில் வீடு படு பிஸி யாக இருக்கும். பெண்ணுக்கு காலை உணவு, கையில் கொடுத்து விட மதிய உணவு தயார் செய்ய வேண்டும். அவளை கணவர் பள்ளியில் கொண்டுபோய் விட்டு விட்டு வருவதற்குள் எங்களுக்கு உணவு தயார் செய்ய வேண்டும். அதன்பின் இருவரும் அலுவலகத்திற்கு தயாராக வேண்டும். நேரம் சிட்டாய் பறக்கும். திரும்பிப் பார்ப்பதற்குள் மணி ஆகிவிடும். மூவரும் பள்ளி மற்றும் அலுவலகம் சரியான நேரத்திரத்திற்கு செல்ல நாங்கள் எங்கள் வீட்டு சுவர் கடிகாரத்தை ஒரு மணிநேரம் முன்னதாக அதாவது fast ஆக வைத்திருப்போம்.நேரம் அதிகமாகிவிட்டது என்கிற உணர்வில் சீக்கிரம் அலுவலகம் செல்வோம் என்கிற நம்பிக்கையில்.
நாங்கள் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னதாக வைத்திருப்பதை என் தம்பிகள் எங்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் கிண்டல் செய்வார்கள். 5 நிமிடம் 10 நிமிடம் fast வைப்பார்கள் கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் இப்படி ஒரு மணி நேரம் யாராவது வைப்பார்களா என்று பரிகாசம் செய்வார்கள். எங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே கடிகாரத்தில் மணி வைத்துப் பழக்கம் ஏற்பட்டுவிட்டதால் எங்கள் வீட்டு கடிகார நேரத்தை நம்ம clock நேரம் என்போம். எங்காவது செல்ல வேண்டும் என்றால் நம்ம clock இல் இத்தனை மணி ஆகும் போது கிளம்ப வேண்டும் என்று பேசிக் கொள்வோம். என் கணவர் இதற்கு ஒரு படி மேல். எங்கள் சொந்த ஊர் மஹாபலிபுரம் அருகே உள்ளது. ஒரு முறை அங்கு சென்றிருந்த என் கணவர் அங்கிருந்து எங்களுக்கு phone செய்து 'நம்ம clock இல் time என்னம்மா?' என்று கேட்டார். எங்கள் வீட்டு கடிகாரத்தில் ஒரு மணி நேரம் fast என்பது எங்கள் உறவு மற்றும் சுற்று வட்டத்தில் பிரபலம் .
அன்று நாங்கள் வீட்டில் ஒரு மணி நேரம் கடிகாரத்தை முன்னதாக வைத்தோம். ஆனால் இங்கு கனடாவில் நாடே ஒரு மணி நேரம் கடிகாரத்தை முன்னதாக வைக்கிறது.
நேரம் நம்மை ஆட்கொள்வது சகஜமான
ReplyDeleteவிஷயம் , நாம் நேரத்தை ஆட்கொள்வது அதிசயமான விஷயம்.
உபயோகமான ,சுவாரசியமான தகவல்.
நல்ல பதிவு .சந்திரா.
மிக்க நன்றி சந்திரா.
Deleteஅப்போ நேரம் சிட்டாய் பறந்தது
ReplyDeleteஇப்போ வயதான காலத்தில்
ஆமையாய் ஊற்கிறது
லலிதா
ReplyDeleteஆம் லலிதா. பணிச் சுமை இல்லாவிட்டால் நேரம் ஊர்வது போலத்தான் இருக்கும்.
Deleteஉங்கள்.commentககு மிக்க நன்றி லலிதா. இன்றிலிருந்து.இங்கு கனடாவில் daylight saving time துவங்கி விட்டது.