Total Pageviews

Saturday, 26 March 2022

ஸ்ரீரங்கம் துலுக்க நாச்சியாரின் கதை

       ஸ்ரீரங்கம் 
துலுக்க நாச்சியாரின் கதை 


                                                                        


        ஸ்ரீரங்கத்தில் மற்றும் ஒரு சுவாரசியம் துலுக்க நாச்சியார் சந்நிதி இருப்பது. வைணவக் கோயிலில் துலுக்க நாச்சியாரா என்று எல்லோரையும் போல நானும் ஆச்சர்யப் பட்டேன். கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் இருக்கிறது பீ பீ நாச்சியார் எனப்படும் துலுக்க நாச்சியார் சன்னதி.

       

         துலுக்க என்றால் இஸ்லாமிய நம்பிக்கை என்று பொருள். துலுக்க நாச்சியார் எப்படி ஸ்ரீரங்கம் வந்தார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் 14 ஆம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டும்.


        ஸ்ரீரங்கத்தில் சுல்தானிய படையெடுப்பு இருமுறை நடந்தது என்கிறது கோயில் வரலாறு. 1311இல் ஒரு முறையும் 1323 இல் அடுத்த முறையும் என்கிறது ஒரு வரலாறு. 1311 இல் நடந்த படையெடுப்பில் தான் துலுக்க நாச்சியார் ஸ்ரீரங்கம் வந்தார்.

        ஸ்ரீரங்கம் பற்றி அதிகம் அறிந்திராத தில்லி சுல்தானின் தளபதி மாலிக் கஃபூர் தற்செயலாக காவிரி ஆற்றின் அருகே வர அங்கே இருந்த கோயிலை பார்த்து பிரமித்து போனானாம். இந்தியாவில் கோயில்கள் என்றாலே விலை மதிப்பு மிக்க ஆபரணங்களும் கடவுள் விக்கிரங்களும் இருக்கும் என்று  கேள்விப் பட்டிருக்கிறான். உடனே கோயிலை கொள்ளை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு தனது  படைகளுடன் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டான். உள்ளூர் மக்களால் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை அரங்கனையும் காப்பாற்ற முடியவில்லை. 


        மாலிக் கஃபூர் கொள்ளையடித்த பொன் பொருள்களுடன் தில்லி திரும்பினான். ஆபரணங்கள் எல்லாம் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப் பட்டன . நம் பெருமாள் விக்கிரகம் மட்டும் அப்படியே வைத்திருந்தான். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவனது மகள் சுரதானிக்கு நம் பெருமாளை ரொம்ப பிடித்துவிட்டது. பிற ஆபரணங்களை போல விக்கிரகத்தை உருக்க வேண்டாம் என்றும் தனக்கு விளையாட பொம்மை வேண்டும் என்றாள். அவள் அரங்கன் விக்கிரகத்தை பொம்மை என்று நினைத்து விட்டாள். மாலிக் கஃபூருக்கு மகள் மீது கொள்ளை பிரியம். உடனே அரங்கனை அவள் கையில் கொடுத்து விட்டான். சுரதானி விக்கிரகத்தை தன்னுடனே வைத்துக் கொண்டாள்.


        அதனை தனது பிரியத்திற்கு உரிய பொம்மையாக கருதினாள். அதனை விட்டு அவள் பிரியவே இல்லை. விக்கிரகத்திற்கு தானே குளித்து விடுவாள். புத்தாடைகள் அணிவிப்பாள். ஆபரணங்கள் போட்டு அழகு பார்ப்பாள். அதனுடன் விளையாடுவாள். சாப்பாடு ஊட்டி விடுவது போல் பாவனை செய்வாள். இரவு தான் படுக்கும்போது தன்னுடனேயே படுக்க வைத்துக் கொள்வாள். இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் தில்லி சுல்தான் நம் பெருமாளை கொள்ளை அடித்து சென்று விட்டானே அவனிடமே போய் கெஞ்சி கேட்டு வாங்கி வரலாம் என்று பக்தர்கள் குழு ஒன்று தில்லிக்கு சென்றது. அவர்கள் சுல்தானின் அரண்மனைக்கு கலாசாரக் குழு என்று சொல்லிக் கொண்டு நுழைந்தனர். அவர்களுடன் நடனமாடுபவர்களும் சென்றிருந்தார்கள். சுல்தான் முன்னிலையில் ஆடி பாடி அவனை மகிழ்வித்தார்கள்.

        சுல்தானுக்கு பரம சந்தோஷம். அவர்களது ஆடல் பாடல்களில் மனமகிழ்ந்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமானாலும் தர தயாராக இருக்கிறேன், கேளுங்கள் என்றான் சுல்தான். அன்று வைகுண்ட ஏகாதசி. உடனே பக்தர்கள் குழு எங்களுக்கு பொன் பொருள் எதுவும் வேண்டாம். எங்களது நம் பெருமாள் உங்களிடம் இருக்கிறார். அந்த விக்கிரகத்தை மட்டும் கொடுங்கள். இன்று ஏகாதசி, நாங்கள் எங்கள் கடவுளை வழிபட எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றார்கள்.

        அதற்கு சுல்தானோ, "ஓ அந்த கடவுள் பொம்மையை சொல்கிறீர்களா, அது என் மகள் சுரதானியிடம் இருக்கிறது, அதை அவள் தர மாட்டாளே,  உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவளிடமிருந்து வாங்கி கொண்டு செல்லுங்கள், அவள் அதை கொடுக்க மாட்டாள்"  என்று சொல்லி சேவகர்களை  விட்டு சுரதானியை அழைத்து வர சொன்னார். நம் பெருமாள் விக்கிரகரத்தை அணைத்த படி வந்த சுரதானி அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டாள் . செய்வதறியாது திகைத்த பக்தர்கள் குழு இரவு அவளுக்கு தெரியாமல் அவள் இருக்கும் இடம் சென்று  அவள் தூங்கும்  போது நம் பெருமாளை அவளிடம் இருந்து மெதுவாக எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கி கிளம்பி விட்டார்கள். காலையில் எழுந்து பார்த்த போது தனது பொம்மை தன்னிடம் இல்லாதது கண்டு அழுது அவர்களிடம் சென்று பொம்மையை வாங்கியே தீருவேன் என்று தனது குதிரையில் ஏறி புறப்பட்டுவிட்டாள். அவள் புறப்பட்டவுடன் சுல்தான் ஒரு படையை அவளுக்கு துணையாக அனுப்பினான்.

        நம் பெருமாளுடன் வந்த பக்தர்கள் குழு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து பெருமாளை கோயிலில் சேர்த்தார்கள். சில நாட்களில் சுரதானியும் வந்து சேர்ந்தாள் பெருமாள் விக்கிரகம் தன்னிடம் ஒப்படைக்கப் படவேண்டும் என்றும் அவர் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றும் சுரதானி அழுது புலம்பினாள் ஆனால் அவளை கோயிலுக்குள் விட பக்தர்கள் மறுத்து விட்டார்கள். அழுது புலம்பி அந்த இடத்தை விட்டு அகல மறுத்த சுரதானி இறுதியில் அப்படியே மயங்கி விழுந்து சில மணி நேரத்தில் இறந்தே போனாள். அவள் உடலிலிருந்து உயிர் பிரிந்த மறு  வினாடி அவள் உடலிலிருந்து ஒரு ஜோதி  வெளிப்பட்டு ரங்கநாதரிடம்  சென்றடைந்தது.

         "சுரதானிக்கு என்  மீது இருக்கும் அளவு கடந்த பக்தியை கண்டோம். அவர் எனது நாச்சியார்களில்  ஒருவராகிறார்"  என்று பெருமாள் அசரீரியாக கூறினார்.

         இதற்கிடையில்  தனது மகள் இறந்து விட்டாள்  என்பதை கேள்விப்பட்டு மாலிக் கஃபூர் ஸ்ரீரங்கத்தை நோக்கி அதி  கோபத்துடன் தனது படைகளுடன் வந்தான் . மாலிக் கபூர் வருவதை அறிந்த பக்தர்களும் கோயில் பட்டாச்சாரியார்களும் அவசர அவசரமாக மூலவரையும் உத்சவரையும் வெளிப்புறத்திலிருந்து காண முடியாதபடி சுவர் எழுப்பினார்கள். இன்றும் அது இருக்கிறது. மூலவரை வெளிப்புறத்திலிருந்து காண முடியாது. பெருமாளை தரிசிக்க வேண்டுமானால் உள்ளே வந்தாக  வேண்டும்.

        கோபத்துடன் மாலிக் கஃபூர் படைகள் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் தில்லி திரும்ப வேண்டியதாயிற்று. அதற்கு பின்  அடுத்து வந்த சுல்தான் 12 ஆண்டுகள் கழித்து 1323 ல் பழி வாங்கும் வகையில்  ஸ்ரீரங்க படையெடுப்பை நிகழ்த்தினான். அது ஸ்ரீரங்கத்தில்  சுல்தான்களின் இரண்டாம் படையெடுப்பு.

         ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளின் விருப்பப்படி  சுரதானிக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டது. பெருமாள் தலைமை பட்டரின் கனவில் வந்து சுரதானி தனது நாச்சியார்களில் ஒருவராக கருதப்படவேண்டும் என்றார். அதன் படியே அவர் துலுக்க நாச்சியார் என்றும் பீபீ நாச்சியார் என்றும் அழைக்கப்  பட்டார். இரண்டாம் பிரகாரத்தில் அவருக்கு சந்நிதி அமைக்கப்பட்டது. இஸ்லாம் மதத்தினருக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் சந்நிதி சுவற்றில் துலுக்க நாச்சியாரின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். இஸ்லாம் பெண்கள் முகத்தை  மூடிக் கொள்வது வழக்கம் என்பதால் துலுக்க நாச்சியாரின் ஓவியமும் அப்படியே அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும்  துலுக்க நாச்சியாருடன் பெருமாளுக்கு கல்யாண உத்சவம்  நடத்தப படுகிறது. காலை உணவாக ரொட்டி, வெண்ணெய் மற்றும் சர்க்கரை முகலாய பாணியில் தயாரிக்கப்பட்டு முதலில் துலுக்க நாச்சியாருக்கும்  அதன் பின்னர் பெருமாளுக்கும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

        பக்திக்கு மதம் தடையில்லை என்பதை துலுக்க நாச்சியார் காட்டுவதாகவே எனக்கு தெரிகிறது


Sunday, 13 March 2022

வெள்ளாயியும் வெள்ளை கோபுரமும்




ஸ்ரீரங்கம் கோயில்


வெள்ளாயியும்  வெள்ளை கோபுரமும்  


வெள்ளை கோபுரம்
   வெள்ளை கோபுரம்



        ஸ்ரீரங்கம் கோயில் என்னை பிரமிக்க வைத்தது போலவே அதன் கோபுரங்களும் என்னை வியக்க வைத்திருக்கின்றன. தமிழ் நாட்டில் உள்ள பிரபல கோயில்கள் அனைத்துமே உயர்ந்த கோபுரங்களை உடையது தான். ஆனால் ஸ்ரீரங்கம் கோயில் கோபுர வரலாறு சற்றே வித்தியாசமானது. சுவாரசியமானது.  


        ஸ்ரீரங்கம் கோயில் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இருக்கிறது என்று எனது முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். அதில் இன்று நாம் பார்க்கப் போவது வெள்ளை கோபுரம் பற்றியது.
 
   
         ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்கள் இருக்கிறது. கோயிலின் தெற்கே இருக்கும் ராஜ   கோபுரமும்  கிழக்கே இருக்கும் வெள்ளை கோபுரமும் பல விதங்களில் வியப்பை ஏற்படுத்துபவை. நான் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது ஒரே வழியில் கோயிலுக்கு செல்ல மாட்டேன். ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வழியாக போவேன். அப்படி முதல் முறையாக வெள்ளை கோபுரம் வழியாக சென்றபோது  அந்த கோபுரம் ஏன் வெண்மையாக இருக்கிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆனால் எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. கோயில் ஒழுகு புத்தகமும் தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையும் எனது கேள்விக்கு சரியான பதிலை அளித்தன.

 
         இந்த நிகழ்வு 14 வது நூற்றாண்டில் நடந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 1323 ஆம் வருடம். அப்போது தான் தென் இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு நிகழ்ந்தது. தென் இந்திய கோயில்களில் சுத்த  தங்க வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பல பொக்கிஷங்கள் இருப்பதை கேள்விப்பட்டு அதை கொள்ளையடிக்க அப்போதைய  சுல்தான்கள் இங்கு படையெடுத்து வந்தார்கள். அவ்வாறு வந்த  சுல்தானிய  படையிடம் ஸ்ரீரங்கமும் வீழ்ந்தது. கோயிலில் பெரும் பொக்கிஷம் கொட்டிக் கிடைக்கிறது என்பதை புரிந்து கொண்டு கோயிலை சுற்றி வளைத்தன  சுல்தானிய படைகள். 


கம்பிரமான ராஜ கோபுரம்
வண்ணமயமான  ராஜ கோபுரம்



         பெருமாள் பக்தர்கள்  நிறைந்த ஸ்ரீரங்கத்தில் சுல்தானிய படைகளை உள்ளூர்வாசிகள் எதிர்க்க அவர்களை கொன்று குவித்தன படைகள். இதில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாண்டார்கள். ஸ்ரீரங்கம் முழுவதும் சுல்தானிய படைகளின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பொன்னையும் பொருளையும் கொள்ளை அடித்தும் கூட சுல்தானிய படைகளுக்கு திருப்தி இல்ல. சுல்தானிய படை தளபதிக்கு நம் பெருமாளை(உத்சவர்) எப்படியும் கொள்ளை அடித்து சென்று விட  வேண்டும் என்கிற தணியாத வேகம் இருந்தது. அதனுடன் மேலும் பல பொக்கிஷங்களும் கோயிலுக்குள் இருக்கிறது , அதனை முழுவதுமாக கொள்ளை அடித்தவுடன்தான் ஸ்ரீரங்கத்தை விட்டு செல்ல வேண்டும்  என்று தளபதி நினைத்திருந்தான்.


          ஸ்ரீரங்கம் கோயில் தாசி (அப்போது தேவதாசி முறை இருந்தது.)வெள்ளாயி  அம்மாள் என்பவர். நடனம் மூலம் இறை பணி செய்து வந்தவர். அரங்கனின் பரம பக்தை. சுல்தானிய படைகள்  நம் பெருமாளை நெருங்கி விடக்  கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார். அதனால் தினமும் படை தளபதி முன் நடனமாடி அவனது கவனத்தை சிதற அடித்தார். நன்கு பழகுவது போல் நடித்தார். இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்த வைணவ ஆச்சாரியரான பிள்ளை லோகாச்சாரியார் கோயிலுக்குள் நம் பெருமாள் விக்கரகம் இருந்தால் ஆபத்து அதனை எப்படியும் சுல்தானிய படைகள் திருடிவிடும் என்று கருதி   மிக ரகசியமாக நம் பெருமாளை கோயிலிலிருந்து  எடுத்துக்கொண்டு மதுரையை நோக்கி சென்றுவிட்டார். இதனை அறிந்த வெள்ளாயி  பிள்ளை லோகாச்சாரியார் விக்ரகத்தை  எடுத்து சென்றுவிட்டார் என்ற செய்தி சுல்தானிய படைகளுக்கு தெரிந்து விட்டால் அவரை விரட்டி பிடித்துவிடும் என்று  புரிந்து கொண்டு ஒரு ஐடியா செய்தார்.


        பிள்ளை லோகாச்சாரியார் நம் பெருமாளுடன் சென்றது கொஞ்சமும் சுல்தானுக்கு தெரியக்கூடாது என்று சுல்தானை திசை திருப்ப அன்று இரவு முழுவதும் சுல்தானை மகிழ்விக்கும் வகையில் நடனமாட ஆரம்பித்தார். சுல்தான் ஏற்கனவே வெள்ளாயியின் அழகில் மயங்கி இருக்கிறவன். வெள்ளாயி ஆட ஆட சுல்தான் மயங்கி விட்டான். இதுதான் தக்க தருணம் என்று வெள்ளாயி , சுல்தானிடம் கோயிலில் இன்னும் நிறைய தங்கமும் வைரமும் வைடூரியமும் இருக்கிறது , வாருங்கள் காட்டுகிறேன் , இந்த கோபுரத்தின் மேலே ஏறி  போய் அங்கிருந்து பார்த்தால் , ஆபரணங்களும் நம்பெருமாள் விக்கிரகம் இருக்கும் இடமும் தெரியும் வாருங்கள் என்று சொல்லி கிழக்கு கோபுரம் மேலே சுல்தானை கூட்டி சென்றாள் . சுல்தானும் ஆசையுடன் சென்றான். இதோ இங்கு பாருங்கள் , இங்கே இங்கே என்று சொல்லி சுல்தானை கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளி விட்டாள் . 
சுல்தான் தலை குப்புற விழுந்து இறந்தான். சுல்தான் இறந்து விட்டது தெரிந்தால் சுல்தானிய படைகள் தன்னை சும்மா விடமாட்டார்கள் என்பது வெள்ளாயிக்கு  நன்கு தெரியும். உடனே ரங்கா ரங்கா என்று அரங்கனின் பெயரை ஜபித்தபடியே அவளும் கிழக்கு கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தாள் .


         செய்தி அறிந்த உள்ளூர் மக்கள் ஓடி வந்தனர். வெள்ளாயியின் தியாகம் அவர்களை மெய்  சிலிர்க்க வைத்தது  தலைவனை இழந்த சுல்தானிய  படை செய்வதறியாது திகைத்து நிற்கையில் விஜய நகர படைகள் அவர்களை விரட்டி அடித்தன. வெள்ளாயியின் தியாகம் பற்றி அறிந்த விஜய நகர படையின் தலைவர் கெம்பண்ணா  கிழக்கு கோபுரத்தை வெள்ளாயியின் நினைவாக வெள்ளை கோபுரம் என்று அழைக்கலாம் என்று அறிவித்தார்.  கிழக்கு கோபுரத்திற்கு வெள்ளை நிற பெயிண்ட் அதிலிருந்து அடிக்கப்பட்டது.  இன்றும் கிழக்கு கோபுரம்  வெள்ளாயியின் நினைவாக, தியாகத்தின் அடையாளமாக, வெண்மையாக உயர்ந்து நிற்கிறது.  1323யில்  ஸ்ரீரங்கத்திலிருந்து சென்ற நம்பெருமாள் விக்கிரகம் 1371இல் மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு சொல்கிறது.

Wednesday, 9 March 2022

நேரம் நம் வசப்படும்

     கனடாவில் 

நேரம் நம் வசப்படும் 



கனடாவில் குளிர் காலம் முடிந்து வசந்த காலம் எனப்படும் spring  சீசன் ஆரம்பிக்கப் படவிருக்கிறது. இப்போது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடக்கும். அதாவது கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னதாக வைப்பார்கள். குழப்பமாக இருக்கிறதா ? விளக்குகிறேன்.

     குளிர் காலத்தில் இங்கு மிக விரைவில் இருட்டி விடும். அதாவது மதியம் 3.30 க்கே இருட்டிவிடும். 3 மணிக்கே லேசாக இருட்ட  ஆரம்பித்து 3.30க்கு நன்கு இருட்டி விடும். 3.30 மணிக்கே வீடுகளில், சாலைகளில்  கட்டிடங்களில் மின் விளக்குகள் போட்டாக வேண்டிய நிலை. ஆனால் குளிர் காலம் முடிந்து ஸ்ப்ரிங் ஆரம்பிக்கும் போதே வெளிச்ச நேரம் அதிகரிக்க ஆரம்பமாகும். ஸ்ப்ரிங் முடிந்து கோடை  ஆரம்பிக்கும்போது சூரிய அஸ்தமனம் இரவு 9 லிருந்து 9.15 க்குள் இருக்கும்.

     ஸ்ப்ரிங் ஆரம்பம் ஆகும்போது பகல் நேரம் அதிகரிக்க துவங்குகிறது என்பதால் daylight saving time என்பதை பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். தமிழில் பகலொளி சேமிப்பு நேரம் என்று சொல்லலாம். பகல் நேரம் அதிகரித்து இரவு நேரம் குறைகிறது. அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் 7 மணி 8 மணி 9 மணி என்று கோடை நெருங்க நெருங்க அதிகரிக்கும். இரவு 9 மணி வரை  சூரிய வெளிச்சம் இருப்பதால் நாம் மின் விளக்கை 9 மணிக்கு மேல் பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு நேரம் குறைந்து பகல் நேரம் அதிகரிப்பதை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் கடிகாரத்தை ஒருமணி நேரம் முன்னதாக வைத்துக் கொள்கிறார்கள். அதே போல் கோடை முடிந்து, இலையுதிர் காலம் துவங்கி முடிகையில் அதாவது  நவம்பரில், கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின்னதாக வைத்துக் கொள்கிறார்கள். முன்னதாக வைக்கப் படுவது spring  forward  என்றும்  பின்னதாக வைக்கப் படுவது Fall back என்றும் அழைக்கப் படுகிறது.

       இந்த நடைமுறை தனி மனித முடிவல்ல. அரசாங்கம்,  சட்டம் இயற்றி  நடைமுறைக்கு வந்தது.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறு கிழமை அன்று, daylight  saving time துவங்கும். அதிகாலை 2 மணியிலிருந்து  இது துவங்கும். மார்ச் மாதம் இரண்டாவது ஞாயிறு, இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வருகிறது. எனவே மார்ச் 13  அன்று அதிகாலை 2 மணிக்கு  அனைத்து  கடிகாரங்கள் , செல் போன்கள் , கம்ப்யூட்டர்கள்  மற்றும் மின்னனு சாதனங்கள் அனைத்திலும் நேரம் தானாகவே மாறிவிடும். அதாவது அதிகாலை 1.59 க்கு பின் 2 மணி என்று மாறுவதற்கு பதில் 3 என்று மாறிவிடும். நாம் அதை பற்றி யோசிக்க வேண்டிய தேவை இல்லை. காலை 6 மணிக்கு நாம் எப்போதும் போல் எழுவோம்.  அப்போது உண்மையில் மணி 5 தான் இருக்கும். அது  நமது கட்டுப்பாட்டில் இல்லாததால் நம்மை இது பாதிப்பதில்லை. ஆனால் மின்னணு கடிகாரம் அல்லாத கடிகாரங்களில் நாம் நேரத்தை முன்னோக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

     சுருக்கமாக சொன்னால் தூங்கும் நேரம் ஒரு மணி நேரம் குறைகிறது.

     இது கனடாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா , பிரிட்டன் ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் பின்பற்றப் படுகிறது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் இல்லை. காரணம் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் பூமத்திய ரேகை அருகே இருப்பதால் குளிர் மற்றும் கோடை கால வித்யாசம் அதிகம் இருப்பதில்லை. பெரும்பாலும் இந்த நாடுகள் வெப்பம் அதிகம் உள்ள நாடுகள்.

    daylight saving  time  மூலம் என்ன ஆதாயம் இந்த நாடுகளுக்கு? மின் சக்தி சேமிப்பு ஆகிறது, குளிர் காலத்தில் பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபட முடியாத மக்களால் கோடையில் நன்கு அனுபவிக்க முடியும். வியாபார  இடங்கள் இரவு 9 மணி வரை திறந்து இருப்பதால் வியாபாரம் நன்கு நடக்கும். (குளிர் காலத்தில் மால்கள் 5 மணிக்கே மூடி விடுவார்கள்.)

     மின் சக்தி சேமிப்புக்காக daylight saving time முதல் உலகப் போரின்போது முதல் முதலாக ஜெர்மனியால் கொண்டு வர பட்டது. முதலாம் உலகப் போர் சமயத்தில் எரி  சக்தி சேமிப்பு ஜெர்மனிக்கு அதிகம் தேவை பட்டதால்  daylight  saving  time யை  அது அமல் படுத்தியது.  இரண்டே  வாரங்களில் பிரிட்டனும் இதில் சேர்ந்து கொண்டு, தனது  நாட்டில் நடை முறைக்கு கொண்டு வந்தது. 1918இல் அமெரிக்கா இவர்களை பின்பற்றியது. பிறகு வேறு சில குளிர் நாடுகளும் இதனை பின்பற்ற ஆரம்பித்தன. ஆனால் அதற்கு முன்னதாகவே கனடாவில் கொண்டு வர பட்டுவிட்டது என்கிறது இதன் வரலாறு.  

    உலகில் இப்போது 40 சதவீத  நாடுகள் daylight  saving  time  பின்பற்றுகின்றன. இதனை நடைமுறை படுத்தியிருந்த ரஷ்யா 2014 இல் இந்த பழக்கத்தை நிறுத்திக் கொண்டது. 

      பல நாடுகள் இதனை பின்பற்றினாலும்  பொது மக்களை  கேட்டால் இதனை விரும்பவில்லை என்றே சொல்கிறார்கள்.  இன்னும் பல நாடுகளில் இது தேவையா தேவையற்றதா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக மூத்த குடி மக்களுக்கு இது பிடிக்கவில்லை. தூக்க நேரம் குறைவதை  அவர்கள் விரும்பவில்லை. 

      மின்னணு  சாதனங்களில் daylight  saving  time  ஆரம்பிக்கும்போதும்  நவம்பரில்  fallback  எனப்படும் ஒருமணி நேரத்தை  பின்னால்  வைக்கும் நிகழ்வும் தானியக்கமாக  நடந்து விடுகிறது. கடிகாரங்களில் நாம்தான் வைக்க வேண்டும். 

      பிரிட்டனில் ராணியின் அரண்மனையில்  1000  சுவர் கடிகாரங்கள் இருக்கின்றனவாம். இதனை   பணியாளர்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி வைக்க 50  மணி நேரம் ஆகிறதாம்.  நவம்பரில் பின்னோக்கி வைக்கவும்  இதே கதைதான். 

        இந்த இடத்தில் ஒரு சின்ன flashback . சென்னையில் நான் பனி புரிந்து கொண்டிருந்த  சமயம். என் பெண்  பள்ளியில் படித்து கொண்டிருந்தாள். நானும்  கணவரும் அலுவலகம் செல்ல வேண்டும். காலையில் வீடு படு பிஸி யாக இருக்கும். பெண்ணுக்கு காலை உணவு, கையில் கொடுத்து விட மதிய உணவு தயார் செய்ய வேண்டும். அவளை கணவர் பள்ளியில் கொண்டுபோய் விட்டு விட்டு வருவதற்குள் எங்களுக்கு உணவு தயார் செய்ய வேண்டும். அதன்பின் இருவரும் அலுவலகத்திற்கு தயாராக வேண்டும். நேரம் சிட்டாய் பறக்கும். திரும்பிப் பார்ப்பதற்குள் மணி ஆகிவிடும். மூவரும் பள்ளி மற்றும் அலுவலகம் சரியான  நேரத்திரத்திற்கு செல்ல நாங்கள் எங்கள் வீட்டு சுவர் கடிகாரத்தை ஒரு மணிநேரம் முன்னதாக  அதாவது fast  ஆக வைத்திருப்போம்.நேரம் அதிகமாகிவிட்டது என்கிற உணர்வில் சீக்கிரம் அலுவலகம் செல்வோம் என்கிற  நம்பிக்கையில்.

     நாங்கள் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னதாக வைத்திருப்பதை என் தம்பிகள் எங்கள்  வீட்டிற்கு வரும்போதெல்லாம் கிண்டல் செய்வார்கள். 5 நிமிடம் 10 நிமிடம் fast  வைப்பார்கள்  கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் இப்படி ஒரு மணி நேரம் யாராவது வைப்பார்களா  என்று  பரிகாசம் செய்வார்கள். எங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே கடிகாரத்தில் மணி வைத்துப் பழக்கம் ஏற்பட்டுவிட்டதால்  எங்கள் வீட்டு கடிகார நேரத்தை நம்ம clock  நேரம் என்போம். எங்காவது செல்ல வேண்டும் என்றால் நம்ம clock இல் இத்தனை  மணி ஆகும் போது கிளம்ப வேண்டும் என்று பேசிக் கொள்வோம். என்  கணவர் இதற்கு ஒரு படி மேல். எங்கள் சொந்த ஊர்  மஹாபலிபுரம் அருகே உள்ளது.  ஒரு முறை அங்கு சென்றிருந்த என் கணவர் அங்கிருந்து எங்களுக்கு phone  செய்து 'நம்ம clock இல் time  என்னம்மா?' என்று கேட்டார். எங்கள் வீட்டு கடிகாரத்தில் ஒரு மணி நேரம் fast என்பது எங்கள் உறவு மற்றும் சுற்று வட்டத்தில் பிரபலம் .

       அன்று நாங்கள் வீட்டில் ஒரு மணி நேரம் கடிகாரத்தை முன்னதாக வைத்தோம். ஆனால் இங்கு கனடாவில் நாடே ஒரு மணி நேரம் கடிகாரத்தை முன்னதாக வைக்கிறது. 

Sunday, 6 March 2022

நானும் திவ்ய தேசங்களும் - 1

    நானும் திவ்ய தேசங்களும் - 1


பெரிய பெருமாள்


        சில நாட்களுக்கு முன்  ஹைதராபாத்தில் ஷம்ஷாத்பாத்தில் 216அடி உயரத்திற்கு வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜருக்கு சிலை நிறுவப்பட்டது. அது சமத்துவத்தின் சிலையாக  கருதப்படுகிறது . இது அனைவரும் அறிந்த விஷயம்தான். 108 படிகள் கட்டப்பட்டு அதற்கு  மேல் ராமானுஜர் சிலை அமைக்கப் பட்டிருக்கிறது. அதேபோல் அந்த வளாகத்தை  சுற்றி 108 திவ்யதேச பெருமாள்களுக்கும் சந்நிதி கட்டப்பட்டிருக்கிறது. சிலை திறப்பு நடந்து முடிந்த சில நாட்களில் 108 பெருமாள்களுக்கும் திருக் கல்யாண  வைபவமுமும் த்ருதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமிகள் நடத்தினார். அந்த வைபவத்தை நேரலையில்  பார்த்த போது அதில் சில திவ்ய தேசங்களுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வந்தது நினைவுக்கு வந்தது. நாங்கள் சென்று தரிசனம் செய்துவந்த சில திவ்ய தேசங்கள் பற்றி இங்கு எழுதலாம் என்று நினைத்தேன். வரிசை கிரமாக இருக்காது. 

       திவ்ய தேசங்களில் முதலாவது ஸ்ரீரங்கம். 108 வது வைகுந்தம் . நம்மால் இந்த பூலோகத்தில் இருக்கும் 107 திவ்ய தேசங்களைத்தான்  தரிசிக்க முடியும். இந்த  உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டவுடன் தான் 108 வதை தரிசிக்கலாம். திவ்ய தேசங்களில் முதலாவதாகிய ஸ்ரீரங்கத்தில் நான் ஓராண்டு இருந்தேன். நான் வைணவ குடும்பத்தில் பிறந்தேன். திருமணம் ஆனது வீர வைணவ குடும்பத்தில். திருமணத்திற்கு பின் தான் வைணவம் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். கணவர் வீட்டில் அனைவரது பேச்சுகளிலும் ஆழ்வார்கள், ஆண்டாள்,  பிரபந்தம் , திவ்ய தேசங்கள் என்பது அதிகம் அடிபடும். வீட்டில்  கைவேலைகள் ஏதாவது செய்யும் போது கூட ஆழ்வார் பாசுரங்களை தான் முணுமுணுப்பார்கள். அந்த அளவிற்கு வைணவ பக்தர்கள். அதனாலும் எனக்கு வைணவத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. 


          சென்னையில் இருந்த நான் வாழ்க்கையின் சூழலால் ஓராண்டு திருவரங்கத்தில் இருக்க நேரிட்டது.  ஸ்ரீரங்கம் கோயில் பற்றி அதிகமாக  தெரிந்து கொண்டேன். கோயில் பற்றி நிறைய புத்தகங்கள் படிக்கலானேன். தினமும் கோயிலுக்கு செல்வேன். ஸ்ரீரங்கம் கோயில் என்னை பிரமிக்க வைத்தது . வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம் கோயிலைதான் குறிக்கும். பெரிய என்கிற அடைமொழி இதற்கு உண்டு. கோயில், பெரிய கோயில், மூலவர் ரங்கநாதர்: பெரிய பெருமாள், தாயார்: பெரிய பிராட்டியார், மண்டபம்: பெரிய திருமண்டபம், பெருமாளுக்கான நைவேதியம், பெரியவசரம் என்று எல்லாமே பெரிய என்கிற அடைமொழி தான். அனைத்து  ஆழ்வார்களாலும் பாடல்பெற்ற ஸ்தலம் . நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீ ராமானுஜர் என்று ஆச்சார்யர்கள் வசித்த இடம் திருவரங்கம். 


ரங்கா ரங்கா மண்டபம்

         பெரிய பெருமாள் திருவரங்கம் வந்தது சுவாரசியமானது. ராமாயண காலத்திற்கு முன்பு நடந்தது இது .சத்யலோகத்தில் வழிபடப்  பட்டுவந்த பெரிய பெருமாளை பூலோகத்திற்கு அனுப்புமாறு கடும் தவம் செய்து அயோத்தி  மன்னன் இஷுவாகு பிரம்மாவிடம்  கேட்டான். இஷுவாகுவின் வேண்டுதலுக்கு ஏற்ப பிரம்மாவும் பெரிய பெருமாளை அனுப்பினார். ப்ரணவக்கார விமானத்துடன் பெரிய பெருமாள் அயோத்தி வர, இஷ்வாகு மன்னன் தினமும் பூஜிக்கலானார். இது ராமாயண காலத்திலும் தொடர்ந்தது. ராமரூம்  தினமும் பெருமாளுக்கு பூஜை செய்து வழிபட்டார். இலங்கையில் போர் முடிந்ததும், அயோத்தி வந்த ராமரிடம் விபீஷணன் விடைபெற்று கொள்ளும் போது, ராமர் ரங்கநாதரை விபீஷணனிடம் கொடுத்து இலங்கைக்கு எடுத்து சென்று வழிபடுமாறு சொன்னார். மனமகிழிந்த விபீஷணன் ப்ரணவக்கார  விமானத்துடன் பெரிய பெருமாளை  வான் வாழியே எடுத்து வரும்போது காவேரி கொள்ளிடம் நடுவே பெருமாளை இறக்கி வைத்து பங்குனி உற்வசத்தை நடத்திகிறார்.முடிந்ததும் பெருமாளுடன் இலங்கை சொல்ல கிளம்பியபோது பெருமாள், எனக்கு இங்கிருக்க ரொம்ப பிடித்திருக்கிறது, நீ இலங்கைக்கு செல், நான் தெற்குபுறமாக சயனம் செய்கிறேன். நீ என்னை எப்போதும் வழிபடமுடியும் என்று சொல்ல, விபீஷணன் பெருமாளின் வார்த்தைக்கிணங்க இலங்கை திரும்பினார். அதனால் தான் பெருமாள் தெற்கு நோக்கி பார்த்தவாறு சயனக் கோலத்தில் இருப்பார்.


விமானம்


        கோவிலில் 54 சன்னதிகள் உண்டு. சன்னதிகளின் வரலாற்றை அங்கிருக்கும் பட்டாச்சாரியார்களிடன் கேட்டு அறிந்து கொண்டேன். சக்கரத்தாழ்வார் சன்னிதி, ராமானுஜர் சன்னிதி, மேட்டழகிய சிங்கர் சன்னிதியின் படிகள், ஆயிரம் கால் மண்டபம், இங்கெல்லாம் அதிக நேரம் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருக்கிறேன். கம்பத்தடி ஆஞ்சனேயர் சன்னிதி அருகே நின்று ஹனுமன் சாலிசா சொல்வேன் (புத்தகம் பார்த்துதான்).

        கோயில் ஒழுகு புத்தகம் வாங்கி ஸ்ரீரங்கம் கோயில் பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இங்கு கனடா வந்த பின் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் தவறாமல் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்து விடுவேன்.

        இங்கு  கனடாவில் நமது ஊர் போன்ற கோவில்களுக்கு போக முடியவில்லை என்கிற வருத்தம் நிறைய இருக்கிறது. இருந்தாலும் மனக்கண்ணில் அரங்கனை, ராமானுஜரை, சக்கரத்தாழ்வாரை, ஆஞ்சனேயரை தரிசித்து மகிழ்கிறேன்.

        ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் தொண்டரடிபொடியாழ்வார் சன்னதியை கடக்கும் போது என்னையறியாமல் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' கதைத்  தொகுப்பில் இருக்கும் 'திண்ணா' கதையும் எனக்கு நினைவுக்கு வரும். திண்ணா, தொண்டரடிபொடியாழ்வார் சந்நிதியில் அமர்ந்து திண்ணா உபந்யாசம் செய்வதை சுஜாதா அழகாய் வர்ணித்திருப்பார், அது எனக்கு நினைவுக்கு வரும்.

        கோயில் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. அதை அடுத்தடுத்து பார்க்கலாம்.