Total Pageviews

Saturday, 2 September 2017

Coffee Coffee everywhere, nor any cup to drink

     என்னை காபி பிரியை என்று சொல்ல மாட்டேன். நான் காபிக்கு அடிமையானவளும் அல்ல. காபி குடிக்காவிட்டால் தலைவலி வரும் ரகமும் இல்லை. எங்கள் வீட்டில் என்  அம்மா  அக்கா தங்கை அனைவரும் பிற்பகலில் எங்காவது செல்ல வேண்டும் என்றால் கூட   காபி  குடித்துவிட்டு கிளம்பு வோம் என்பார்கள். என் முதல் தம்பிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை காபி குடித்தாக வேண்டும். ஒரு இடத்தில் இருந்தாக வேண்டும்   என்று அவசரமாக கிளம்பினாலும் காபி குடிக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டாள் என்  தங்கை. ஆனால் நான்   இந்த வகை அல்ல  
       அதற்காக நான் காபியை தொடாதவளும்  இல்லை.. நல்ல காபி குடிக்கப் பிடிக்கும். நல்ல காபி மட்டுமே குடிக்கப் பிடிக்கும். அதனால்தான் வெளியில் எங்கும் காபி குடிக்க மாட்டேன். என் அம்மா போடும் காபி பிடிக்கும் . அடுத்து என் உடன் பிறப்புகள் வீட்டில் காபி குடிப்பேன். காரணம் என் அம்மாவின் கைமணம் அதில் இருக்கும். வேறு எங்கும் காபியை தவிர்த்து விடுவேன், பயம்,  நன்றாக இல்லாவிட்டால் ? திருமணங்களுக்கு சென்றால் அங்கும் காபி குடிக்க மாட்டேன். வெளியில் ஹோட்டல்களிலும் காபி குடிக்க மாட்டேன். ருசியில்லாத காபியை குடித்துவிட்டு நொந்து கொள்வதற்கு பதிலாக அந்தக் காபியை குடிக்காமல் இருப்பது நல்லது என்பது எனது கொள்கை. . பணியில் இருந்தபோது அலுவலகத்தில் தேநீர் தான் அருந்துவேன். சக பணியாளர்கள் லஞ்ச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே மறு கையால் இண்டர்காமில்  பேன்ட்ரியை  அழைத்து காபி கொண்டு வர சொல்லும்போது ஆச்சர்யபட்டிருக்கிறேன். இப்படியெல்லாம் காபி ரசிகர்கள்  இருக்கிறார்களா என்ன !
  இப்போது என்ன திடீர்ன்னு காபி பற்றிய ஞானோதயம் என்று நினைக்க வேண்டாம். கனடாவில் எனது காபி அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும்.
   காபூசினோ, ஐஸ்டு காபி ரகங்கள் பற்றி எனக்கு ஆர்வமும் இல்லை, அதனை பருகி பார்த்ததும் இல்லை. பிளாக் காபி குடிக்கும் ரகமும் இல்லை  நான் . நான் சொல்வது எல்லாம்  நமது ஊர் பாரம்பர்ய காபி . என்னை பொறுத்தவரை காபி என்றால் பிரவுன் கலர் தான்  .பில்டரில் இறங்கும் டிகாஷனில் பால் சர்க்கரை சேர்த்து ஆற்றி நுரையுடன் குடிப்பதுதான் காபி. சிலருக்கு நுரை வந்தால் பிடிக்காது என்பார்கள். அதனால் அதிகம் ஆற்ற மாட்டார்கள். அனால் எனக்கு நுரை இருக்க வேண்டும். என்னதான் இன்ஸ்டன்ட் காபிகள் வந்தாலும் எனது மார்க் பில்டர்  காபிக்கு தான். இன்ஸ்டன்ட்  காபி குடிப்பதில்லை. காபி டே தான் வாங்குவேன். கனடாவுக்கு டிக்கெட் வாங்கியதும்  என்பெண்  முதலில் சொன்ன வார்த்தை "அம்மா பில்டர் எடுத்துக்கொண்டு வர மறந்து விடாதே" . அத்துடன் காபி டே காபி பொடியும் ஒரு அரை கிலோ வாங்கி கொண்டேன்.. சூட்கேஸ் முழுவதும் காபி பொடியாக நிரப்பிக் கொள்ள முடியாதே. தீர்ந்து போனால் இங்கே வாங்கி கொள்ளலாம் என்றாள்  அவள் . கிடைக்குமா என்று கேட்டேன். "அம்மா உலகிலேயே அதிகம்  காபி  குடிப்பவர்கள் இருக்கும் 3 வது  நாடு கனடா " என்று பதில் வந்தது அவளிடமிருந்து .அத்துடன் "வால்மார்ட்டில் ஒரு செக்க்ஷன் முழுவதும் காபி பவுடர் தான்" என்றாள்.  சரி  என்று விட்டேன்.
     கொண்டு வந்த காபி பொடி குறைந்து கொண்டே வந்தது . அது முழுவதும் காலி ஆவதற்கு முன்பாகவே என்ன பிராண்டு வாங்குவது என்பதை முடிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.
   இதற்கு நடுவில் நான் வர போகிறேன் என்பது உறுதி ஆனதும் maxwell house என்கிற காபி பொடி ஒரு கிலோ வாங்கி வைத்து விட்டாள்  என்பெண். அவள் காபி குடிக்க மாட்டாள் என்பதால்  அவளுக்கு  காபி பற்றி அதிகம் தெரியாது . காபி என்று கூகுளை அணுக  maxwell பற்றிய தகவல்கள் அவளுக்கு பிடித்திருந்தது. எனவே வாங்கி வைத்து விட்டாள் . நான் வந்ததும் "maxwell ட்ரை பண்ணும்மா. உன் ருசிக்கு .ஏற்றதாக இருக்கிறதா என்று பார்க்கிறாயா , இது இன்ஸ்டன்ட் அல்ல" என்றாள்.
     சரி , கொண்டு வந்தது தீர்ந்ததும் இது மாதிரி ஒன்றைத்தானே தேர்வு செய்தாக வேண்டும் என்று பில்டரில் மாஸ்வ்ல் காபி பொடியை போட்டு வெந்நீரை ஊற்றிய அடுத்த வினாடி பொடியில் நீர் நிற்காமல் அப்படியே  பில்டரின் அடிக்கு மிக லேசாக நிறம் மாறி வந்து சேர்ந்தது. . ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு கிலோ  பொடி போட்டால் கூட நிறம்வராது போல. ஒன்றும் புரியவில்லை. கூகுலாண்டவரிடம் சரணடைந்தேன்.  திருப்திகரமாக எதுவும் கிடைக்கவில்லை. மாறாக பலரும் maxwell  தான் உலகிலேயே சிறந்தது என்கிற ரீதியில் அனுபவித்துஎழுதியிருந்தார்கள் . சரி வந்ததும் வராததுமாக இது எதற்கு இப்போது என்று சிறிது  நாளைக்கு அதனை ஒத்தி வைத்தேன்.
   இந்த இடத்தில் கனடாவில் மக்களின் காபி ஆர்வம் பற்றி சொல்லியே ஆக  வேண்டும்.Tim Hortons Star bucks,  Second cup  என்று பிரபல காபி ஷாப்கள் கனடா முழுவதும் இருக்கிறது. காலையில் அலுவலகம் செல்பவர்கள் Tim Hortonsசில் க்யூவில் நின்று காபி  வாங்கி கொண்டு அதை கையில் ஏந்தியபடி பஸ்சில் ஏறி அமர்ந்து அதனை ரசித்து குடித்துக்கொண்டு வருவது சகஜமான காட்சி. அதேபோல் மால்களிலும்   Tim Hortons Star bucks,  Second cup காபி அவுட்லேட் இல்லாமல் இல்லை . அங்கு சென்று காபி குடிக்காவிட்டாலும்  நாடு முழுவதும் காபி சகஜமாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.
         கொண்டு வந்த காபி பொடி  இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே வரும் என்கிற நிலையில் காபி பொடி தேடலை ஆரம்பித்தேன். காபி பொடி  தேடலின்போது காபி பற்றிய , எனக்கு தெரியாத பல பல தகவல்கள் எனக்கு தெரிய வந்தது. 1.நமது ஊர் போல  பாலும் காபி டிகாஷனும் கலந்ததுதான் காபி என்று நினைக்கக் கூடாது . 2. காபி என்றால் பிரவுன் நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்று எந்த மடையன் சொன்னான்? 3. வெறும் காபி டிகாஷனுக்கு பெயரும் காபி தான் .அதனை ரசித்து ரசித்து குடிக்க நிறையப் பேர் இருக்கிறார்கள்.
  கனடாவில் Tim Hortons காபி புகழ் பெற்றது. எங்கு சென்றாலும்  Tim Hortons அவுட்லெட்டை பார்க்காமல்  இருக்க முடியாது. என் பெண் "உனது காபி பொடி தேடலில் டிம் ஹார்ட்டன்ஸ்ம் இருக்கட்டும் , அங்கு காபி எப்படியிருக்கிறது என்று பார்" என சொல்லி டிம் ஹார்ட்டன்ஸ்  அழைத்து சென்றாள் . வழக்கம் போல் நீண்ட க்யூ . பொறுமையாக நின்று கொண்டிருந்தேன். க்யூ வில் நிற்கும்போது ஒவ்வொருவரும் எப்படி காபி ஆர்டர் செய்கிறார்கள் என்று கவனித்தேன். சிங்கள் , டபுள் டபுள் , ட்ரிபிள் ட்ரிபிள் ,என்றெல்லாம் சொன்னார்கள். அதாவது சிங்கள் என்றால் ஒரு க்ரீம் அல்லது பால் ஒரு சுகர். டபுள் டபுள் என்றால் 2 சுகர். 2 க்ரீம் அல்லது  2 பால் (க்ரீம்?) ட்ரிபிள் ட்ரிபிள் என்றால் 3 சுகர்.3 க்ரீம் அல்லது 3 பால். காபி என்று மட்டும் சொன்னால் நோ கிரீம் நோ மில்க் . டிகாஷன் மட்டும்  . பால் இல்லாமல் காபியா ?  க்ரீம் போட்டு காபியா ? எனக்கு ஒன்றும் புரிய வில்லை
   டபுள் டபுள்  என்று சொல்லி காபி வாங்கினோம். கப்பில்  மூடி கொடுத்துவிட்டார்கள். அது என்ன நிறத்தில் இருக்கிறது,  பால் எவ்வளவு விட்டார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வாங்கி கொண்டு நடந்துகொண்டு பேசிக்கொண்டு பஸ்ஸில் சென்றுகொண்டுதானே காபி அருந்துகிறர்கள்? , அதனால் எப்போதும் கப்பை  மூடிதான் கொடுக்கிறார்கள். எனக்கு அந்த சுவை சரிப்படவில்லை. நிறமும் இல்லை. (டிம் ஹார்ட்டன்ஸ்  காபி பிரியர்கள் என்னை மன்னிப்பார்களாக!)
       நம் மனதுக்கு பிடித்தபடி நல்ல காபி கிடைப்பது சற்று கஷ்டம்தானோ என்கிற நினைப்பு  முதல்முறையாக ஏற்பட்டது.  டொரோண்டோவில் இருக்கும் என்  அக்கா பெண்ணை  கேட்டேன். என்ன காபி பொடி வாங்குவது என்று. அவ 13 ஆண்டுகளாக கனடாவில் இருக்கிறாள். நமது பில்டர் காபியே அவளுக்கு மறந்துவிட்டது. கொலம்பியன் காபி பிபோல்கெர்ஸ் என்று சில பிராண்டுகளை சொன்னாள் . எதுவும் சரிப்படவில்லை
  வால்மார்ட் காபி பொடி பிரிவில் போய் நின்று கொண்டேன். ஏகப்பட்ட ரகங்கள். ஆனால் இவர்களது காபி வரையறை நமது பில்டர் காபிக்கு ஏதுவாக இல்லை. கடைசியில் வேறு வழியில்லை. இன்ஸ்டன்ட் காபி பொடியை வாங்கி கொண்டு வந்தேன். இன்ஸ்டன்டட் காபி எனது ருசிக்கு சரிப்படவில்லை. . .  வேறு வழியின்றி குடிக்க ஆரம்பித்தேன்.  பில்டர் காபி யை நினைத்துக்கொண்டு இன்ஸ்டன்ட் காபியை அருந்தினேன்  ஊஹும் ... எனக்கு சரிப்படவில்லை . சரி வேண்டாம் என்று நிறுத்தி விட்டேன். கேழ்வரகு கஞ்சி தான் இப்போது எனது காலை பானம் .  பில்டர் காபியை அடிக்கடி நினைத்து பார்க்கிறேன்.ஊரிலிருந்து கொண்டு வந்த பில்டர் பாவமாக கப் போர்டில் நின்று கொண்டிருக்கிறது
   ஒன்று கிடைக்கவில்லை  என்றால் அதனை ரொம்ப நினைப்போமோ?  அப்படியானால் இப்போது என்னை காபி பிரியை என்று   சொல்லி கொள்ளத்தான் வேண்டுமோ ?